6. பனாலா கோட்டை முற்றுகை, 1701.
மொகலாயர்களின் அடுத்த தாக்குதல் இலக்காக பனாலா கோட்டை இருந்தது. 9, மார்ச், 1701 வாக்கில் ஆலம்கீர் அங்கு சென்று சேர்ந்தார். 14 மைல் நீளத்துக்கு பனாலா கோட்டையையும் பவன்கர் கோட்டையையும் சுற்றிலும் படையை நிறுத்தினார். ‘எங்கெல்லாம் கொள்ளையர்கள் தலை தூக்குகிறார்களோ அவர்களை அடித்து விரட்டு’ என்ற ஒளரங்கஜீபின் உத்தரவின் பேரில் நஸ்ரத் ஜங் தலைமையில் நில்லாமல் நகரும் படை அனுப்பப்பட்டது. பாறைப்பாங்கான அந்தப் பகுதியில் சுரங்கம் அமைப்பது, பதுங்குகுழி அமைப்பதெல்லாம் மிகவும் சிரமமாக இருந்தது. மழைக்காலம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. நஸ்ரத் ஜங், ஃபிரோஸ் ஜங் என ஆலம்கீரின் புகழ் பெற்ற இரண்டு தளபதிகளுக்கிடையே பெரும் பகைமை இருந்ததால் இருவரையும் ஒரே இடத்தில் போரிடவைக்க முடியாமல் இருந்தது. இது போதாதென்று அனுபவமும் திறமையும் மிகுந்த தர்பியத் கானுக்கும் ஃபதுல்லா கானுக்கும் இடையிலும் பொறாமையும் கசப்பும் வெளிப்படத் தொடங்கியது. குஜராத்தில் முஹம்மது முராதும் கலகக் குரல் எழுப்ப ஆரம்பித்தார். முக்கிய மொகலாயத் தளபதிகளின் இப்படியான பொறாமைகளினால் மொகலாயப் படை ஒற்றுமையாக இணைந்து, கூட்டு முயற்சியாகத் தாக்குதல் நடத்துவது சாத்தியமற்றுப் போனது. இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் திட்டங்களை முடக்கினர். இதனால் ஆலம்கீருடைய முற்றுகைத் திட்டம் வெற்றி பெறாமல் நீண்டுகொண்டே சென்றது. தாக்குதல் நடத்தும்படி தர்பியத் கானுக்கு உத்தரவிடப்பட்டபோது, அவர் ‘எல்லா தயாரிப்பு ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன; புயல் வேகத்தில் தாக்குதல் நடத்தும் நாளில் இதுபோன்ற சாகஸங்களில் அதிகம் ஈடுபட்ட முஹம்மது முராதையும் எங்களுக்கு உதவும்படி தயவு செய்து நீங்கள் உத்தரவிடவேண்டும்’ என்று எப்போதும் இல்லாதவகையில் பதில் கடிதம் அனுப்பினார்.
ஒளரங்கஜீபின் தளபதிகளுக்கிடையே இப்படியான பகைமை இருந்ததால் போரில் வெற்றிகிடைக்காமல் முற்றுகை இரண்டு மாதங்களுக்கு மேல் நீண்டுகொண்டே சென்றது. எப்போது முடிவுக்குவரும் என்றும் எதுவும் தெரியாத நிலையே இருந்தது. மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே பனாலா கோட்டையைக் கைப்பற்றியாகவேண்டும் என்று முடிவு செய்து திரியம்பகுக்கு மிகுதியான தொகை கையூட்டாகத் தரப்பட்டது. 28, மே, 1701-ல் பனாலா கோட்டை மொகலாயர் வசம் வந்தது. பனாலா கோட்டையை மீட்க மராட்டிய தளபதிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். தன யாதவ், ராமுஜி கோர்படே, ராமச்சந்திரர், கிருஷ்ண மல்ஹர் முதலான தளபதிகள் எல்லாம் முற்றுகையிட்ட மொகலாயப் படைகளைத் தொடர்ந்து சுற்றி வளைத்து நெருக்கடி தந்துவந்தனர். உணவு தானியங்கள் கொண்டுவரச் செல்லும் மொகலாயப் படைகளைத் தடுத்து நிறுத்தினர். மராட்டிய நகரும் படைகள் மிகத் தீவிரமாகப் போரிட்டன. இதனால் நஸ்ரத் ஜங், ஹமீத் உத் தீன் போன்ற மொகலாயத் தளபதிகளின் நகரும் படைகள் என்னதான் ரத்தம் சிந்திப் போரிட்டாலும் இறுதி வெற்றி கிடைக்கவே இல்லை.
பனாலா கோட்டை கையூட்டின் மூலம் கைப்பற்றதைத் தொடர்ந்து (29, மே, 1701) வளமான, பாதுகாப்பான காடெள பகுதிக்குப் பின்வாங்கி அங்கு ஒளரங்கஜீப் முகாமிட்டார். அது சத்ரா கோட்டைக்கு கிழக்கே 25 மைல் தொலைவில் யர்லா நதியின் இடதுபக்கக்கரையில் இருந்தது. அதி விரைவாகத்தான் புறப்பட்டிருந்தார். ஆனால் அதற்குள் புயல் மழைக்காற்று வீசத் தொடங்கிவிட்டிருந்தது. கூடாரங்கள் எல்லாம் காகிதக் குப்பைகள் போல் வீசி எறியப்பட்டன. ‘பாதுஷாக்களும் பாவப்பட்ட ஏழைகளும் திறந்த வெளியில் நிராதரவாக நிற்க நேர்ந்தது. பர்தாக்கள் எல்லாம் வீசி எறியப்பட்டு அனைவரும் பார்க்கும்படியாகப் பெண்கள் நிற்க நேர்ந்தது’.
ஃபதுல்லா கானுக்கு பதவி உயர்வு தரப்பட்டு பஹாதுர் ஆக்கப்பட்டார். காடெள பகுதிக்கு எட்டு மைல் வட மேற்கே இருந்த வர்தான்கர் கோட்டையையும் அருகே இருந்த சந்தன், நந்தகிர், வந்தன் ஆகிய மூன்று கோட்டைகளையும் கைப்பற்ற அனுப்பிவைக்கப்பட்டார்.
7. கேல்னா கோட்டை முற்றுகை
கேல்னா அல்லது விஷால்கர் கோட்டையைக் கைப்பற்ற ஆலம்கீர் புறப்பட்டார். பனாலா கோட்டையிலிருந்து 30 மைல் மேற்கே சஹ்யாத்ரி மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்தில் அது அமைந்திருக்கிறது. அதன் மேற்கே கொங்கண் சமவெளி அமைந்திருக்கிறது. இந்த மாவட்டம் மிகவும் ஈரப்பதம் மிகுந்தது. குளுமையானது. மலைகளில் அடர்த்தியாக மரங்கள் வளர்ந்திருக்கும் (17-ம் நூற்றாண்டில்). வடக்கே ஐந்து மைல் தொலைவில் இருக்கும் அம்பா கணவாய் வழியாக இந்தக் கோட்டைக்கு எளிதில் செல்லமுடியும். கோட்டையைச் சென்று சேர எட்டு மைல் ஏறிச் செல்லவேண்டியிருக்கும். அன்று அங்கு காளை வண்டிகள் செல்ல சரியான பாதை வசதியும் இருந்திருக்கவில்லை. ஏற்ற இறக்கமாக இருக்கும் மலைப்பாதை பல இடங்களில் மிகவும் குறுகலாகவும் இருக்கும். குதிரைகள் கூட எளிதில், பாதுகாப்பாக ஏறிச் செல்ல முடியாத நிலையே இருந்தது.
வர்தான்கர் பகுதியில் இருந்து 7, நவம்பர், 1701-ல் புறப்பட்ட பேரரசர் 12 இடங்களில் நின்று நின்று மல்காபூருக்கு அருகே வந்து சேர்ந்தார். இங்கு ஒரு வாரம் முகாமிட்டார். முன்னணிப் படையினர் முன்னேறிச் சென்றனர். ராணுவப் படை முன்னேறிச் செல்லும்படியாக அம்பா கணவாயை இன்னும் வெட்டி சரி செய்திருக்கவில்லை. ஃபதுல்லா கான் தலைமையில் பாறைகளை வெட்டுபவர்கள், மரங்களை வெட்டுபவர்கள் ஆகியோரைக் கொண்டு ஒருவார காலம் மிகக் கடினமான முயற்சிகள் மேற்கொண்ட பின்னர் ஒரு வழியாகப் பாதை சரியானது. 26 டிசம்பர் வாக்கில் ஆஸாத் கான் முற்றுகையை ஆரம்பிக்க அனுப்பிவைக்கப்பட்டார். 16, ஜன, 1762-ல் கேல்னாவுக்கு ஒரு மைல் தொலைவில் பாதுஷாவுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. அவருடன் வந்தவர்கள் கணவாயைக் கடந்து வருவதற்குள் பெரும் சிரமங்களையும் இழப்பையும் சந்திக்க நேர்ந்தது. கோட்டை அடிவாரத்துக்கு அனைவரும் வந்து சேரவும் ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்து சேர்க்கவும் மிக மிக சிரமப்படவேண்டியிருந்தது.
1702 ஜனவரி – ஜூன் வரை முற்றுகை சில மாதங்கள் நீடித்தது. நஸ்ரத் ஜங் நகர்ந்துகொண்டே இருக்கும் மராட்டியப் படைகளைத் துரத்தியபடி இந்த ஆண்டு மட்டும் சுமார் 6000 மைல் பயணம் செய்யவேண்டியிருந்தது. பேரார் மற்றும் தெலங்கானாவில் மிகக் கடுமையான 19 பேர்களில் ஈடுபடவேண்டியிருந்தது.கோட்டைக் கற்சுவரை மொகலாயப் படையால் தகர்க்கவே முடியவில்லை. ஒரு சில கற்களை மட்டுமே பெயர்க்க முடிந்தது. வெற்றிக்கான வாய்ப்பு எங்குமே கண்ணில் தென்படவில்லை. மாறாக கோட்டைக்கு மேல் இருந்த மராட்டியப் படையினர் மேலேற முயற்சி செய்யும் மொகலாயப் படைகள் மீது கவண்களைக் கொண்டு பெரிய பெரிய கற்களால் இடைவிடாமல் தாக்கி வீழ்த்தினர். இரவு நேரங்களிலும் யாரும் எதிர்பாராத நேரங்களிலும் கோட்டையைவிட்டு வெளியேறி வந்து பதுங்குகுழியில் இருக்கும் மொகலாயப் படைகளைத் தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்றனர்.
ஃபதுல்லா கான் வடக்குப் பக்கமிருந்து எடுத்த அத்தனை கடின முயற்சிகளும் பாறையில் முட்டிய தலைபோல் வீணாகிப் போயின. கொங்கணி அல்லது மேற்குக் கோட்டை வாசலிலும் எந்தப் பெரிய சாதகமான அம்சமும் நடந்திருக்கவில்லை. அங்கு 4 மார்ச்சில் முஹம்மது அமீன் கான் தன் படையுடன் கோட்டைச்சுவருக்கு வெளியே இருக்கும் தற்காப்புச் சுவரைத் தகர்க்க (ரெளணி சுவர்) தாக்குதல் முயற்சியை மேற்கொண்டார். அமீன் கானை விலக்கிவிட்டு, ஆம்பர் பகுதியின் இளவயது மன்னரான ஜெய் சிங்கின் தலைமையில் பிதார் பக்ஷ் 27 ஏப்ரலில் இன்னொரு தாக்குதலை மேற்கொண்டார். பெரும் இழப்புக்குப் பின் ரெளணி சுவரைத் தகர்த்தார். அடுத்தகட்டமாக பீரங்கிகளை அங்கு நிறுத்தி கொங்கணி கோட்டை வாசலைத் தகர்க்கத் தயாரானார். ஆனால், பம்பாய் கடலோரப் பகுதியில் மையம் கொண்ட மழை மேகங்கள் மொகலாயப் படை மீது புயல் மழையைப் பொழிந்து தள்ளியது. பிதார் பக்ஷ் கொடுக்க முன்வந்த பெரும் தொகையை கோட்டை நிர்வாகி பரசுராம் திரியம்பக் 4, ஜூன் வாக்கில் பெற்றுக்கொண்டார். மொகலாய இளவரசரின் கொடி கோட்டை மேல் பறக்கவிடப்பட்டது. ஜூன் 7 வாக்கில் மராட்டியப் படைகள் அங்கிருந்து வெளியேறின.
கேல்னா கோட்டையைக் கைப்பற்றிவிட்டுத் திரும்பிய மொகலாயப் படைக்கு மிக மிகப் பெரிய சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. 10 ஜூனில் வெகு விரைவாக ஆலம்கீர், அந்தக் கோட்டை கைப்பற்றப்பட்ட மூன்றே நாட்களில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். மழை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதால் மொகலாயப் படை அம்பா கணவாயைக் கடப்பதற்குள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானது. ஒட்டகங்கள் சேற்று நிலத்தில் கால் வைக்க அஞ்சின. யானைகள் தன்னுடைய எடை மிகுதியினால் சேற்றில் கால் வைத்தால் கழுதைகள் போல் புதைந்துவிட்டன. சுமை தூக்கிகளால் சுமக்க முடிந்தவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு திரும்ப வேண்டியிருந்தது. வழியில் நலா நதி பந்தயக் குதிரைபோல் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. அது மொகலாயப் படையை இரண்டு பிரிவாகப் பிரித்துப் போட்டது. பலர் நதி வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். திரும்பி வரும் மொகலாயப் படையின் பயண வழியை நலா நதி மூன்று இடங்களில் இதுபோல் குறுக்கிட்டு நெருக்கடியைத் தந்தது.
ஒரு சேர் தானியம் ஒரு ரூபாய் (இன்ரைய மதிப்பில் ஒரு கிலோ சில 1000 ரூபாய்) என்ற அளவுக்கு விற்றது. கால்நடைத் தீவனமும் விறகுகளும் எங்கு தேடினாலும் கிடைக்காத நிலையிலேயே இருந்தது. பெரு மழை, கடுங்குளிர், கூடாரம் எதுவும் இல்லாத நிலை… மாற்று உடுப்பு இல்லாத நிலை என நீடித்த நெருக்கடியிலேயே பலர் இறந்தனர். ஆலம்கீருக்குத் தேவையான கூடாரத்துணி மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருந்தது. 30 மைல் தொலைவை 38 நாட்களில் கடந்து மொகலாயப் படை பனாலா கோட்டைக்கு அருகே 17, ஜூலை, 1702 வாக்கில் வந்து சேர்ந்தது.
பீமா நதியின் வட கரையில் இருக்கும் பஹதூர்கர் அல்லது பேட்காவ் பகுதிக்கு 13, நவம்பர் 1702-ல் வந்து சேர்ந்தனர்.
8. கோண்டானா (சிங்க கர்), ராஜ்கர், தோர்ணா கோட்டைகள் முற்றுகை
வெறும் 18 நாட்கள் மட்டுமே ஓய்வெடுத்துவிட்டு ஆலம்கீர் 2, டிசம்பரில் கேண்டானா கோட்டையைக் கைப்பற்றப் புறப்பட்டார். 27-ம் தேதியன்று அங்கு சென்று சேர்ந்தார். இஸ்லாமாபுரியில் முகாமிட்டிருந்த ஆலம்கீரின் குடும்பத்தினர், உடமைகள், நிர்வாக அலுவலகக் குழு அனைத்தும் பஹாதுர்கர் பகுதிக்கு மாற்றப்பட்டன. இஸ்லாமாபுரி நஸ்ரத் ஜங்கின் பொறுப்பில் விடப்பட்டது. ஒளரங்காபாதுக்கு பிதார் பக்த் ஆட்சியாளராக அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் கந்தேஷ் பகுதியின் சுபேதாரி உரிமையும் அவருக்குச் சேர்த்துத் தரப்பட்டது (பிப் 1703). முற்றுகை தொடங்கியது. ஆனால் எந்தப் பணியும் சுறுசுறுப்புடன் நடக்கவில்லை. மூன்று மாத காலம் வெறுமனே வீணாக்கப்பட்டது. மீண்டும் மழைக்காலம் வரவிருந்தது. எனவே தாக்குதல் எண்ணத்தைக் கைவிட்டு ஆலம்கீர் அந்தக் கோட்டை நிர்வாகிக்கு மிக மிக அதிகமான தொகையைக் கொடுத்து 8, ஏப், 1703 வாக்கில் அதை விலைக்கு வாங்கிக் கொண்டார்.
கோண்டானாவிலிருந்து புறப்பட்டு புனேக்கு ஒரு வார காலத்தில் 1, மே வாக்கில் மொகலாயப் படை திரும்பியது. அங்கு ஏழு மாத காலத்தைக் கழித்தனர். 1702-ல் பெரு மழை பெய்தது. ஆனால் 1703-04 வாக்கில் பெரும் வறட்சி தாக்கியது. மஹாராஷ்டிரா முழுவதுமே பஞ்சம் தலைவிரித்தாடியது. கூடவே நோய்த்தொற்று பெருகி இழப்புகள் அதிகரித்தன. நலிவடைந்த நிலையில் இருந்தவர்கள் பெருமளவில் இறந்தனர். மனூச்சியின் கணக்கின்படி சுமார் 20 லட்சம் பேர் அந்தப் பஞ்சத்தில் இறந்திருக்கக்கூடும்.
புனேயிலிருந்து புறப்பட்டு 18 நாட்கள் பயணம் செய்து ராஜ்கர் கோட்டையைச் சென்றடைந்து 2, டிசம்பர் வாக்கில் முற்றுகையை ஆரம்பித்தது. சுமார் இரண்டு மாத காலம் பீரங்கியால் தாக்கி 6, பிப், 1704 வாக்கில் முதல் கோட்டை வாசலைக் கைப்பற்றினர். வெளிக்கோட்டைப் பகுதியில் இருந்து தாக்குதல் மேற்கொண்ட ஹமன் ஜியும் ரங்கஜியும் உள் கோட்டைப் பக்கம் நகர்ந்தனர். மேலும் பத்து நாட்களுக்கு தாக்குதலைச் சமாளித்தனர். இறுதியாக கோட்டை நிர்வாகி தோல்வியை ஒப்புக்கொண்டார். அந்தக் கோட்டை மீது மொகலாயக் கொடி பறக்கவிடப்பட்டது. மராட்டியப் படையினர் 16 பிப் இரவில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அடுத்ததாக ஒளரங்கஜீப் அங்கிருந்து எட்டு மைல் தொலைவில் இருந்த தோர்ணா கோட்டையை 23, பிப்ரவரியில் முற்றுகையிட்டார். 10 மார்ச் இரவில் அமனுல்லா கான் வெறும் 23 மால்வா காலாட்படையினருடன் ரகசியமாக கோட்டை மேல் கயிற்று ஏணி வீசி ஏறிச் சென்று வெற்றி முழவுகளை முழக்கியபடி மராட்டியர்களைத் தாக்கினார். எதிர்த்தவர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். எஞ்சியவர்கள் தப்பி ஓடினர். இந்தப் படையெடுப்பில் பணம் கொடுக்காமல், தாக்குதல் நடத்தி ஒளரங்கஜீப் கைப்பற்றிய கோட்டை இது மட்டுமே.
தோர்ணா கோட்டையிலிருந்து புறப்பட்டு சக்கன் பிராந்தியத்துக்கு ஏழு மைல் வடக்கே இருந்த கேத் பகுதிக்குச் சென்று சேர்ந்த மொகலாயப் படை 17, ஏப் – 21, அக்டோபர், 1704 வரை ஆறு மாத காலம் முகாமிட்டது. 22 அக்டோபரில் ஆலம்கீர் இங்கிருந்து புறப்பட்டு பேரட் தலைநகரான வாகின்கெரே நோக்கிப் புறப்பட்டார். மூன்றரை மாத காலம் மெதுவாகப் பயணம் செய்து சென்று சேர்ந்தவர்கள் 8, பிப், 1705-ல் அங்கிருந்த கோட்டையை முற்றுகையிட்டனர். இதுவே ஒளரங்கஜீபின் இறுதிப் படையெடுப்பு.
9. பேரட் மக்களும் நகரமும் அதன் தலைவரும்.
பீஜப்பூருக்கு கிழக்கே இருக்கும் நிலப்பரப்பு பேரட். பீமா நதியாலும் கிருஷ்ணா நதியாலும் சூழப்பட்ட இந்த நிலப்பரப்பே பேராட்களின் தாயகம். கர்நாடக பூர்வகுடிகளான இவர்கள் தேட்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஹிந்து சமூக அடுக்கில் கடைசிப்படியில் இருப்பவர்கள். முரட்டுத்தனமும் திட சித்தமும் கொண்டவர்கள். நகர வாழ்க்கைக்குப் பழக்கப்படாதவர்கள். ஹிந்து சமூகத்தின் மேலடுக்கில் இருந்தவர்கள்போல் மிதமான அணுகுமுறை கொண்டவர்கள் அல்ல. ஆடு, மாடு, பன்றி, கோழிகள் போன்றவற்றை உண்பார்கள். மிகுதியாக மது அருந்துவார்கள்.. கறுப்பு நிறம், கம்பீரமான தோற்றம், மிதமான உயரம், வட்ட முகம், தட்டையான கன்னங்கள், மெல்லிய உதடுகள், நீண்டு தொங்கும் தலைமுடி கொண்ட பேரட்கள் எந்தக் கடினமான சூழலையும் தாங்கும் வலிமை கொண்டவர்கள். முறையான உழைப்பு அல்லது அமைதியான கலைகள் இவையெல்லாம் அதிகம் தெரியாது. குடும்பத் தலைவர்களை உறுப்பினராகக் கொண்ட குல வழி வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். தலைமைப் பதவி வாரிசுரிமையாகக் கைமாறும். தலைவரே அவர்களிடையே ஒழுங்கையும் கட்டுப்பாடையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்துவார்.
17-18-ம் நூற்றாண்டுகளில் மிகவும் வலிமையும் துல்லியமும் மிகுந்த துப்பாக்கிகளை இவர்களே உருவாக்கித் தந்தனர். உயிரைத் துச்சமாக மதித்து போரிடுவார்கள். இவர்களுடைய ஆக்ரோஷமும் அச்சமற்ற தன்மையும் எதிர்பாராத தாக்குதல்களுக்கு உகந்தவையாக இருந்தன. ஆநிரை கவர்பவர்களிடம் இருக்கும் திடீர் தாக்குதல் திறமை இவர்களிடமும் காணப்பட்டது. அன்றைய சமகால பாரசீக வரலாற்றாசிரியர்கள் இவர்களை பே-டர் (பயமற்றவர்கள்) என்று அவர்களுடைய பெயரை வைத்து வேடிக்கையாக அழைப்பார்கள்.
பேரட்களின் பூர்விகம் மைசூர். அங்கிருந்து இவர்கள் ராய்ச்சூர் டோப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கிருந்து வடக்கே கிருஷ்ணா நதி மற்றும் பீமா நதிவரையிலும் கூட பரவிச் சென்றனர். கிருஷ்ணா நதிக்கும் பீமா நதிக்கும் இடையே இடுக்கிப்பிடியில் இருக்கும் ஷோராபூரின் பேரட் நாயக்கர்கள் பீஜப்பூரிக்கு 72 மைல் தொலைவில் இருந்த சாகர் பகுதியைத் தமது தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். இது 1687-ல் மொகலாயர் வசம் வீழ்ந்ததும் சாகருக்கு தென் மேற்கே 12 மைல் தொலைவில் இருந்த வாகின்கெரேயில் இன்னொரு தலைநகரை பேரட்கள் அமைத்துக்கொண்டனர். ஒளரங்கஜீபின் இறுதிக் காலகட்டத்தில் இந்தப் பகுதியும் மொகலாயர் வசம் போய்விடவே ஷோராபூருக்குத் தன் தலைநகரை இந்த நாயக்கர் மாற்றிகொண்டார். வாகின்கெரே போலவே மலைப்பகுதியில் கிழக்குப் பக்கம் நான்கு மைல் தொலைவில் இது அமைந்திருக்கிறது.
1687-ல் மொகலாயர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிகாரம் இழந்த பேரட் நாயக்கத் தலைவர்களுக்கு போராடி, கலகம் செய்து தம்மை நிலைநிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் இருந்திருக்கவில்லை. மலைப் பகுதியில் வலிமையான தளங்களை அமைத்துக் கொண்டு மராட்டியர்களைப் போலவே மொகலாய ஆக்கிரமிப்புப் பகுதிகளைச் சூறையாடத் தொடங்கினர். விரைவிலேயே மராட்டியர்களுடன் நட்புறவையும் உருவாக்கிக்கொண்டனர். குல்பர்கா மாவட்டம் எப்போதும் போரும் கூச்சலும் நிரம்பியதாகவே இருந்தது. அதை ஒட்டிய சாலைகளில் வணிகக் குழுக்களுக்கு சாகர் வீழ்ந்த பின்னரும் யார் கைக்கும் எளிதில் சிக்காத பேரட் குதிரைப்படை வீரர்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் நீடித்தவண்ணம் இருந்தன.
பாம நாயக்கரின் சகோதரியின் மகனும் வாரிசாக அறிவிக்கப்பட்டவருமான பிடியா நாயக்கர் 1683 வாக்கிலேயே ஒளரங்கஜீபைச் சென்று சந்தித்திருக்கிறார். மொகலாயப் படையில் அவருக்கு ஒரு பதவியும் தரப்பட்டிருந்தது. சாகர் பகுதியை மொகலாயர் வென்றதும் தன் மாமா இறந்ததையடுத்து வாகின்கெரேவைப் பலப்படுத்திக்கொண்டு அங்கு தனக்கென ஒரு படையை உருவாக்க ஆரம்பித்தார். தனது குலத்தினரிடமிருந்து சுமார் 12,000 அற்புதமான துப்பாக்கிகளை பெற்றுக்கொண்டு தன் படை பலத்தை மெள்ளப் பெருக்கிக் கொண்டார்.
குல்பர்கா மாவட்டத்தில் இவருடைய குழுவினர் தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதல்களினால் இவர்களை இனியும் புறக்கணிக்க முடியாது என்ற நிலை உருவானது. இறுதியாக 27, மே, 1691-ல் ஆலம்கீர் பீஜப்பூரில் இருந்த தன் மகன் காம் பக்ஷை வாகின்கெரேயைத் தாக்கச் சொல்லி அனுப்பினார். அவரும் பராமண்ட் கான் தலைமையில் ஒரு படையுடன் புறப்பட்டார். 20, ஜூலையில் இளவரசரை மதராஸ் கர்நாடகா பகுதிக்கு அனுப்பிய ஆலம்கீர் பேரட்களுக்கு எதிரான தாக்குதல் பொறுப்பை ரஹதுல்லா கானிடம் ஒப்படைத்தார். ரஹ்மதுல்லா கானினால் வெற்றி பெறமுடியவில்லை. இரண்டு முறை பேரட்கள் மொகலாயத் தடுப்பரண்கள், பதுங்குகுழிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துவிட்டனர். மொகலாயர் தரப்பில் பலர் கொல்லப்பட்டனர். புகழ் பெற்ற ரன்மஸ்த் கானும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் ரஹ்மதுல்லா கான் பேரட்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர்களுக்கு கையூட்டும் சமானமும் தந்து அமைதிப்படுத்தினார். ரஹ்மதுல்லா கானை அங்கிருந்து அகற்றிவிட்டு இளவரசர் ஆஸம் 8 டிசம்பர் 1691-ல் அங்கு நியமிக்கப்பட்டார்.
ஒரு வருடத்துக்கு மேல் இளவரசர் அங்கு முகாமிட்டு சூறையாடி பேரட் கலக நடவடிக்கைகளை முடக்கிவைத்தார். பிடியா நாயக்கர் சரணடைந்தார். இளவரசரிடம் கருணையை யாசித்தார். இரண்டு லட்சம் சன்மானம் கொடுத்ததோடு மொகலாய ஆலம்கீருக்கு ஏழு லட்சம் கப்பம் கட்டவும் சம்மதித்தார். ஆனால் டிசம்பர் 1692-ல் ஆலம்கீர் சாகர் பகுதியில் இருந்து முஹம்மது ஆஸமை விலக்கிக் கொண்டுவிடவே பிடியா நாயக்கர் மீண்டும் தன் படையைப் பலப்படுத்திக்கொண்டு அந்தப் பகுதியைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். ஏப் 1696-ல் ஃபிரோஸ் ஜங் தலைமையில் ஒரு படை அனுப்பப்பட்டது. நாயக்கர் வழக்கமான நரித் தந்திரம் காட்டி ஒன்பது லட்சம் கப்பம் கட்டுவதாகச் சொல்லி அழிவில் இருந்து தப்பிவிட்டார்.
10. வாகின்கெரேயை ஒளரங்கஜீப் கைப்பற்றுதல், 1705.
1704-ன் இறுதிவாக்கில் மராட்டியர்களின் அனைத்து முக்கியமான, வலிமையான கோட்டைகள் அனைத்தையும் கைப்பற்றிய பின்னர் ஆலம்கீர், வாகின்கெரேயை 8, பிப், 1705-ல் முற்றுகையிட்டார்.
கோட்டைக்கதவுகளைப் பார்த்தபடி இருக்கும் தென்பக்கச் சமவெளியில் களிமண் சுவரால் பாதுகாப்புப் பெற்ற தல்வார்கெரே என்றொரு கிராமம் இருக்கிறது. கோட்டையில் இருப்பவர்களுக்கான உணவுப் பொருட்கள் விற்கும் சந்தையும் இங்கு இருந்தது. அதன் அருகில் குடிசை வீடுகள் நிறைந்த தேத்புரா என்ற சிறிய குடியிருப்பும் இருந்தது. அங்குதான் பேரட் குலத்தினர் வசித்துவந்தனர். அங்கிருந்த நிலங்களில் உழவுத்தொழிலும் செய்துவந்தனர். அங்கு மக்கள் வசிக்கும் மூன்று நிலப்பகுதிகள் இவை மட்டுமே. கோட்டைக்குக் கிழக்கிலும் வடக்கிலும் பல்வேறு மலை உச்சிகள் இருந்தன. அவையெல்லாம் முற்றுகையிடும் படைகளுக்கு சாதகமாக அமையக்கூடியவை. அந்த மலை உச்சிகளில் ஒன்றின் பெயர் லால் திக்ரி (சிவந்த நிற மண்கொண்டது). கோட்டையைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றும் பகுதி அது. ஆனால், பேரட்கள் இந்தப் பகுதிகளைப் பாதுகாத்து தம்மை பலப்படுத்திக் கொள்வதில் எந்த அக்கறையும் காட்டியிருக்கவில்லை.
வாகின்கெரேயின் பலம் என்பது அதன் ராணுவ சாதக அம்சம் கொண்ட இட அமைப்பில் இல்லை. செயற்கையான காப்பரண்கள் அமைக்கவும் போதிய வசதிகள் இல்லை. அதன் வலிமை முழுவதும் பேரட்களின் வீரத்திலும் அவர்களுடைய துப்பாக்கி சுடும் அதி துல்லிய திறமையிலும், போதிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் கையிருப்பில் எப்போதும் இருப்பதிலும்தான் இருக்கிறது.
முற்றுகை ஆரம்பித்துப் பல வாரங்கள் ஆன பின்னரும் மொகலாயப் படையால் எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை. தினமும் பேரட்கள் திடீர் தாக்குதல் செய்து மொகலாயப் படையினரை நிலைகுலையவைத்துவந்தனர். கோட்டைக்குள் இருந்தபடி தொடர்ந்து குண்டுமழை பொழிந்துவந்தனர். மொகலாயர்கள் கோட்டைக்கு அருகில் பதுங்குகுழிகள், பாதுகாப்பு அரணகள் அமைக்கவோ பீரங்கித் தாக்குதலில் ஈடுபடவோ எந்த வழியும் இல்லாமல் போயிருந்தது.
ஒரு நாள் பேரட்களின் படையில் பலவீனமான பகுதியைக் கண்காணித்துவந்த மொகலாயப் படையினர் திடீரென்று லால் திக்ரி மலை உச்சி மீது பாய்ந்து ஏறி அந்தப் பகுதியைக் கைப்பற்றினர். ஆனால் அங்கு அவர்கள் தம்மை மறைவிடங்களில் நிலைநிறுத்திக்கொள்வதற்குள் பேரட்கள் எறும்புக் கூட்டம் போல் ஈசல்போல் பெருமளவில் அங்கு படையெடுத்து வந்துவிட்டனர். அவர்களுடைய துப்பாக்கிகளாலும் கவண்களில் கற்களைப் பொருத்தியும் உச்சியை எட்டிய மொகலாயப் படையைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். அப்படியாக மொகலாயர்களுக்குக் கிடைத்த தற்காலிக வெற்றி பெரும் இழப்புடன் முடிவுக்கு வந்தது.
லால் திக்ரி மலை உச்சிக்கும் தல்வார்கெரேவுக்கு எதிரில் இருக்கும் மலை உச்சிக்கும் இடையே மொகலாயர்கள் பதுங்கு குழிகள், தற்காப்பு அரண்கள் அமைத்துக் கொண்டிருந்தனர். முஹம்மது அமின் கான் தலைமையில் லால் திக்ரிக்கும் இந்த பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையில் ஒரு எல்லைக் காவல் அரண் ஒன்றையும் பேரட்களின் தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் அமைத்தனர். தல்வார்கெரேவுக்கு எதிரில் இருக்கும் மலை உச்சியை காம் பக்ஷின் படையினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். அருகில் இருந்த இன்னொரு குன்றில் பகார் கான் தன் படையுடன் தயார் நிலையில் இருந்தார்.
ஆனால், 26 மார்ச் வாக்கில் தன யாதவ் மற்றும் சந்தா கோர்படேயின் சகோதரர் ஹிந்து ராவின் தலைமையில் சுமார் 5000-6000 மராட்டிய வீரர்கள் தமது நட்பு சக்திகளான பேரட்களுக்கு உதவ வந்து சேர்ந்தனர். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஏராளமான மராட்டிய வீரர்களின் குடும்பத்தினர் பேரட் பகுதியில் அடைக்கலம் தேடியிருந்தனர். தமது குடும்பத்தினரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்பதே மராட்டியப் படையின் முதல் நோக்கமாக இருந்தது. மராட்டியப் படை பெரும் கூச்சலிட்டு மொகலாயப் படையைத் தம் பக்கம் திருப்பிக் கொண்டபோது பேராட்கள் கோட்டை மீதிருந்து தாக்கவும் செய்தனர். இப்படியான களேபரத்தினூடே தமது குடும்பத்தினரையும் மராட்டியக் குடும்பத்தினரையும் வாகின்கெரே கோட்டையின் பின் வாசல்வழியாக 2000 துப்பாக்கி வீரர்களின் பாதுகாப்புடன் பத்திரமான இடத்துக்கு வேகமாக சீறிப் பாய்ந்து ஓடும் குதிரைகளில் கொண்டுசென்றுவிட்டனர். இந்தக் குழுவினருக்குப் பாதுகாப்பாக கோட்டையில் இருந்து இன்னொரு பெரிய படையும் பின் பக்கத்தில் பாதுகாப்புக் கவசமாகச் சென்றது.
மராட்டியப் படைகளுக்கு நாளொன்றுக்கு சில ஆயிரம் ரூபாய் தருவதாகவும் தமது தலைநகரக் கோட்டையைப் பாதுகாத்துத் தரவேண்டும் என்றும் பிடியா நாயக்கர் கேட்டுக்கொண்டார். மராட்டியப்படையும் அதற்கு சம்மதம் தெரிவித்து கோட்டையின் அருகில் முகாமிட்டுத் தங்கியிருந்து மொகலாயர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்திவந்தது. கிட்டத்தட்ட மொகலாயப் படை இப்போது முற்றுகைக்கு உள்ளானதுபோல் ஆகிவிட்டது. உணவுப் பொருட்கள், கால்நடை தீவனங்கள் எல்லாம் மிகவும் பற்றாக்குறையாகிவிட்டன. ஆலம்கீர் தன் தளபதிகளைக் கடிந்துகொண்டார். ஆனால் அவர்களால் எதுவும் செய்யமுடியாத நிலையே நீடித்தது.
பிடியா நாயக்கர் இப்போது ஆலம்கீரிடம் சமாதான உடன்படிக்கைக்கு முன்வந்தார். உண்மையில் அது போரைத் தள்ளிப் போடும் தந்திரமே. அருகமை மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இருந்து அவருக்கான படைகள் வந்து சேரப் போதிய கால அவகாசம் பெறவே அவர் திட்டமிட்டிருந்தார்.
காஷ்மீரத்தைச் சேர்ந்தவரும் தந்திரமாகப் பேசும் நாவன்மை மிகுந்தவருமான அப்துல் கனி மொகலாய ஒற்றர் பிரிவின் தலைவரான ஹிதேயத் கேஷிடம் பிடியா நாயக்கர் எழுதிய அமைதி ஒப்பந்தக் கடிதத்தைக் கொடுத்தார். ஒளரங்கஜீப் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். பிடியா நாயக்கர் அடுத்ததாகத் தன் சகோதரர் சோம சிங்கை மொகலாய முகாமுக்கு அனுப்பிவைத்தார். கோட்டையை விட்டுத் தரத் தயார் என்றும் தனது சகோதரருக்கு ஜமீந்தாரி உரிமை, மன்சப் உரிமை, குலத் தலைமைப் பதவி ஆகியவற்றைத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சோம சிங் மொகலாயர் முகாமிலேயே தங்கவைக்கப்பட்டார். பிடியா நாயக்கருக்கு புத்தி பேதலித்துவிட்டது; மராட்டியர்களுடன் தப்பி ஓடிவிட்டார் என்று வதந்தியை பேரட்கள் பரப்பினர். பேரட் தலைவரின் தாயாரிடமிருந்து காஷ்மீரி மூலம் இன்னொரு கடிதம் வந்து சேர்ந்தது. சோம சிங்கை மொகலாயர் விடுவித்துவிடவேண்டும்; ஏழு நாட்களில் கோட்டையை ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடுவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆலம்கீர் அதற்கும் சம்மதம் தெரிவித்தார்.
உண்மை விரைவிலேயே வெளிவந்தது. இதுவரை நடந்தவை அனைத்துமே ஏமாற்றுவேலையே. பிடியா நாயக்கருக்கு எந்த மன நலக் குறைவும் இல்லை. அவர் மராட்டியர்களுடன் தப்பி ஓடவில்லை. கோட்டைக்குள்ளேயே இருந்தார். சரணடைய மறுத்து தாக்குதலைத் தொடர்ந்தார். ஆலம்கீருக்குத் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் அவமானத்தில் ஆத்திரம் தலைக்கேறியது.
இதனிடையில் அவர் திறமை வாய்ந்த தளபதிகள் பலரை அங்குவந்து சேரும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். 27 மார்ச்சில் நஸ்ரத் ஜங் வந்து சேர்ந்தார். லால் திக்ரி மலை உச்சி மீது அவர் மறு நாளே படையுடன் ஏறினார். ஆரம்ப கட்ட முற்றுகையின்போது மொகலாயப் படை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. மலை மீது ஏறி பேரட்களை விரட்டியடித்தார். தல்வார்கெரே கிராமத்துக்குத் தப்பி ஓடிய பேரட் படையினர் அங்கிருந்த களிமண் சுவர்களுக்குப் பின்னால் இருந்தபடி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். மொகலாயப் படையில் இருந்த பல ராஜபுத்திரர்கள் லால் திக்ரியிலும் தல்வார்கெரே கிராமத்திலும் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். பேரட்கள் வசமிருந்த அருகமைக் குன்றைக் கைப்பற்ற தல்பத் பந்தேலாவை நஸ்ரத் ஜங் அனுப்பிவைத்தார். இந்த மலைக்குன்றிலிருந்தும் பேரட்கள் விரட்டியடிக்கப்படவே அவர்கள் தேத்புரா கிராமத்தில் அடைக்கலம் தேடினர். தல்பத் ராவின் யானை மீது 21 துப்பாக்கி குண்டுகளும் ஒரு ராக்கெட்டும் தாக்கின. நஸ்ரத் ஜங்கின் கொடியில் முதலையின் தோல் போல் பொத்தல்கள் விழுந்தன. அவருடைய இரண்டு யானைப் பாகர்கள் தாக்கப்பட்டனர். ஒருவர் கொல்லப்பட்டார்.
மொகலாயப் படையின் நடு மற்றும் பின்வரிசையில் இருந்த வீரர்களில் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் நஸ்ரத் ஜங் தனக்குக் கிடைத்த சாதகமான பகுதியை ஏராளமான ரத்தம் சிந்தியும் கைவிடாமல் காப்பாற்றிக்கொண்டார். மலைப்பகுதியில் இருந்த சில கிணறுகளை கான் கைப்பற்றினார். பேரட்கள் அங்கிருந்துதான் தமக்கான தண்ணீரைப் பெற்றுக்கொண்டிருந்தனர். 27 ஏப்ரல் வாக்கில் தல்வார்கெரே மீது இன்னொரு தாக்குதலை முன்னெடுத்தார். மதிலால் சூழப்பட்ட பேட் கிராமத்துக்குள் நுழைந்த மொகலாயப் படை எதிர்த்தவரகளையெல்லாம் வெட்டிக் கொன்றது. மற்றவர்கள் உயிர் தப்பி ஓடினர்.
இனியும் போரிடுவதில் பலனில்லை என்று பேரட்கள் புரிந்துகொண்டனர். இரவில் பிடியா நாயக்கர் பின்வாசல் வழியாக மராட்டிய நண்பர்களுடன் தப்பிச் சென்றார். கோட்டைக்குள் இருந்து துப்பாக்கி சத்தம் எதுவும் கேட்காமல் போகவே மொகலாயர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒருவருமே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டனர். அதன்பின் கண்மூடித்தனமான குழப்பம் உருவானது. மொகலாய அதிகாரிகள் வந்து அங்கு இருப்பவற்றையெல்லாம் கைப்பற்றும் முன் கிடைத்ததையெல்லாம் கொள்ளையடிக்கத் தீர்மானித்தவர்கள், கடை நிலைப் படை வீரர்கள் எல்லாரும் கோட்டைக்குள் புயல் போல் பாய்ந்தனர். கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டனர். எடுக்க முடியாதவற்றுக்குத் தீவைத்தனர். அப்படி வைத்த தீ குடிசைக் கூரைகளில் பற்றி அப்படியே வெடிமருந்து கிடங்குக்கும் பரவியது. பெரும் சத்தத்துடன் அது வெடித்துப் பலர் உடல் சிதறி இறந்தனர். ஒருவழியாக வாகின்கெரே கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதன் தலைவர் தப்பிவிட்டார். எப்போது வேண்டுமானாலும் அவர் மூலம் மீண்டும் நெருக்கடிகள் வர ஆரம்பிக்கும். அப்படியாக மூன்று மாதங்கள் கஷ்டப்பட்டு கோட்டையைப் பிடித்த பின்னரும் ஒளரங்கஜீபின் முயற்சிகள் ஒருவகையில் தோல்வியாகவே முடிந்தது.
(தொடரும்)
___________
Sir Jadunath Sarkar எழுதிய “A Short History of Aurangzeb” நூலின் தமிழாக்கம்.