Skip to content
Home » மனதை உலுக்கியவர்கள்

மனதை உலுக்கியவர்கள்

Transgenders in India

பெண்கள் படிப்பதோ வேலைக்குப் போவதோ அரிதாக இருந்த எழுபதுகளில் பெண் அதிகாரியாகத் தமிழகத்தில் தமது நற்குணம் மற்றும் சேவைக்காகப் பெயர் பெற்றவர் டாக்டர் சி.கே. கரியாலி ஐஏஎஸ். இவர் தன் மகள் பிரியதர்ஷணி ராஜ்குமாருடன் இணைந்து எழுதியுள்ள

‘Transgenders in India : Achievers and survivors – An Ode to Transwoman’ என்னும் நூல் என் மனசாட்சியை உலுக்கிவிட்டது.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த சாதனையாளர் மற்றும் சாதிக்க முயன்றவர்களின் தடங்களைப் பதிவு செய்யும் நூல் இது. பரத நாட்டியக் கலைஞர், மதபோதகர், முதல் வழக்கறிஞர், முதல் காவல்துறை ஆய்வாளர், பொறியாளர், ’மாடலிங்’ மற்றும் நடிப்புத் தொழிலில் உயரம் தொட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களை இந்நூலில் தரிசிக்கமுடிகிறது.

இதில் இடம்பெறுபவர்களிடையே காணப்படும் சில பொதுவான அம்சங்கள் பின்வருமாறு :

  • நிராகரிப்பு, அவமானம், காயம் அனைத்தையும் தங்கள் குடும்பங்களிலிருந்தே மூன்றாம் பாலித்தனவர் முதலில் சந்திக்கிறார்கள்.
  • குடும்பத்தைத் தொடர்ந்து சமூகம் அவர்களை நிராகரிக்கிறது. நிராகரிப்பும் கட்டாயங்களும் சேர்ந்து அனேகரைப் பாலியல் தொழிலுக்குத் தள்ளிவிடுகிறது. தாற்காலிகமாகப் பாலியல் தொழில் செய்து வயிற்றைக் கழுவியவர்கள் பெரும்பான்மையினர்.
  • இவர்களில் அநேகமானவர்கள் பெண்பாலுக்கு மாறுவதற்காகப் பணம் சேர்த்தவர்கள்.
  • சிறு உதவிகள்கூடப் பிற திருநங்கையினரிடமிருந்தே இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
  • நிரந்தரமான வாழ்க்கைத் துணையாக ஓர் ஆண் இவர்களில் பலருக்கு அமையவே இல்லை.
  • கல்வி நிறுவனங்களில் சக மாணவர்களால் இவர்கள் பெரிதும் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள்.
  • நீதிமன்றங்களின் தலையீட்டால் மட்டுமே அரசுத் துறையில் இவர்களால் கால் பதிக்க முடிந்திருக்கிறது.

ஒவ்வொருவரின் கதையும் மிகச் சுருக்கமாகவே விவரிக்கப்பட்டுள்ளது.  இருந்தாலும் அவர்களுடைய வலி அழுத்தமாக, நம் மனச்சாட்சியை உலுக்கும் அளவுக்கு இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் யார் என்பதை மட்டுமல்ல, நாம் யார் என்பதையும் இந்நூலிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.  நாம் எந்த அளவுக்குக் குரூரமானவர்களாகவும் புறந்தள்ளுவோராகவும் இருக்கிறோம் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.

நம் குடும்பங்களிலிருந்தும் சமூக அமைப்புகளிலிருந்தும் மனிதநேயமும் அரவணைப்பும் மறைந்தே போய்விட்டன. ஊனமுற்றோர், மாற்றுப் பாலினத்தவர் போன்றோரை நாம் எவ்வாறு நடத்துகிறோம், அவர்களிடமிருந்து எவ்வாறு விலகிப்போகிறோம் என்பது அவர்கள் யார் என்பதை அல்ல, நாம் யார் என்பதையே காட்டுகிறது

சாதி, குடும்பம், சமூகம் என்று எந்தவொரு அமைப்பும் உடற்கூறு அல்லது மனநலத்தில் வலியோராக இருப்பவர்களுக்கு மட்டுமே இடம் தருகிறது. சரித்திர ஆதாரங்களின் படி இஸ்லாத்தில் மூன்றாம் பாலினத்தவரே பல புனிதத் தலங்களின் பாதுகாவலர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த வழக்கம் இன்றும் சில தலங்களில் உண்டு.

இந்து மதத்திலும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒதுக்கப்படவில்லை. இவர்களிடமிருந்து ஆசி பெறுவது நல்லது என்னும் நம்பிக்கை இன்றும் வட இந்திய மக்களிடம் நிலவுகிறது. இருப்பினும் சமூகம் இவர்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளவோ பிறருக்குச் சமமாக நடத்தவோ எந்த முனைப்பையும் காட்டவில்லை என்பதே கசப்பான உண்மை.

இரு பெண் எழுத்தாளர்கள் அக்கறையுடனும் சேவை மனத்துடனும் எழுதியிருக்கும் இந்நூல் நம் அனைவருக்குமானது.

____

Transgenders in India : Achievers and survivors – An Ode to Transwoman, Saraswathi Educational and Cultural Trust.

பகிர:
சத்யானந்தன்

சத்யானந்தன்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இயற்பெயர் முரளிதரன் பார்த்தசாரதி. காலச்சுவடு, தீராநதி, கணையாழி, உயிர்மை, புதிய கோடாங்கி போன்ற அச்சு இதழ்களிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. கிழக்கு, காலச்சுவடு உள்ளிட்ட பதிப்பகங்களில் இவருடைய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தற்சமயம் ஆங்கிலத்தில் அதிகம் எழுதி வருகிறார். தொடர்புக்கு: sathyanandhan.mail@gmail.comView Author posts

1 thought on “மனதை உலுக்கியவர்கள்”

  1. புத்தக எலி

    மூன்றாம் பாலினத்தவர்கள் படும் துயரத்தை சொல்லி மாளாது. அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் குடும்பத்தாலும், சமூகத்தாலும் துன்பப்படுத்தபடுகிறார்கள்.

    இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது அவர்கள் படும் துன்பத்தையும், கேலிக்கைகளையும் நேரில் கண்ட அனுபவம் என் கண்முன் வந்துபோகிறது…..

    இதுபோன்ற புத்தகத்தை அனைவரும் ஒருமுறையேனும் வாசிப்பார்கள் என்றால் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய தங்கள் எண்ணபோக்கை மற்றிக்கொள்ள வாய்ப்புண்டு….

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *