Skip to content
Home » முதல் பெண் மருத்துவர்கள்

முதல் பெண் மருத்துவர்கள்

பெண் மருத்துவர்கள்

“Man is defined as a human being and woman as a female – whenever she behaves as a human being she is said to imitate the male.”

– Simone de Beauvoir, The Second Sex

வரலாற்றில் பெண் குரல் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படிச் சிந்தித்தார்கள், எப்படிப்பட்ட போராட்டங்களைச் சந்தித்தார்கள் போன்றவற்றையெல்லாம் நம் வரலாற்று நூல்களில் தேடினால் எதுவுமே கிடைக்காது என்பதே உண்மை. காணாமல் போன பெண் குரலைத் தேடியெடுத்துப் பதிவு செய்யும் போக்கு மிகச் சமீபத்தில்தான் தொடங்கியிருக்கிறது.

கவிதா ராவ் எழுதி சமீபத்தில் வெளியான ‘லேடி டாக்டர்ஸ்’ அந்த வகையில் ஒரு முக்கியமான வரவு. மேற்குலகில் பெண்கள், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அனுமதிக்கப்படவில்லை. ஆண் வேடமிட்டு மருத்துவம் பயின்ற நிகழ்வெல்லாம் நடந்துள்ளது. சிலர் மருத்துவம் படித்து முடித்த பிறகும் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படவில்லை. பலருக்கு மருத்துவம் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. பெண்கள் மருத்துவத்துறைக்குள் நுழைந்த பிறகுதான் உலகம் முழுக்க பெண்களின் சுகாதாரம் முன்னேற்றம் காண ஆரம்பித்தது. தொடக்கத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் பின்னாட்களில் அவர்கள் ஏற்கப்பட்டனர்.

மேற்குலகிலேயே இதுதான் நிலைமை என்னும்போது இந்தியாவில் பெண்கள் எதிர்கொண்ட இன்னல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கவிதா ராவின் புத்தகம் இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு பொது வாழ்வில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஆறு பெண் ஆளுமைகளை அறிமுகம் செய்கிறது. அவர்கள் ஆனந்திபாய் ஜோஷி, காதம்பிணி கங்குலி, ருக்மாபாய் ரவுத், ஹைமாபதி சென், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் மேரி பூனன் லூகோஸ். இவர்களில் ருக்மாபாய், முத்துலட்சுமி தவிர்த்து அனைவரும் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட முற்போக்கு இயக்க நடவடிக்கைகள் காரணமாகவே கல்வி பயிலும் ஆர்வம் பெண்களிடையே பரவியது. அது முறையே மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களிலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இந்தச் சீர்திருத்த நடவடிக்கை அதிகளவில் நடேந்தேறியது. ஒரு பெண்ணால் அதிகபட்சம் ஆசிரியராகவோ செவிலியராகவோ மட்டுமே மாறமுடியும் என்னும் நிலையை மாற்றி பல பெண்கள் மருத்துவம் படிக்க முன்வந்தார்கள். அத்துறையின் முன்னோடிகளாகவும் இவர்கள் மாறினார்கள். முத்துலட்சுமி, மேரி பூனன் இருவரும் புதுக்கோட்டை, திருவிதாங்கூர் சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வரலாறு சுவாரஸ்யமாக விரிகிறது. (சுதேச சமஸ்தான்களின் வரலாற்றை மேற்கொண்டு விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் மனு பிள்ளை எழுதிய False Allies நூலை நாடலாம்). இவர்கள் இருவரும் மருத்துவம் படிப்பதற்கு மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், மூலம் திருநாள் ஆகிய சமஸ்தான மன்னர்களே காரணமாக இருந்துள்ளார்கள். இன்றைய கேரளாவின் ஆகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பிற்கு திருவிதாங்கூர் மகாராணி சேது லஷ்மி பாய், மேரி பூனன் ஆகியோரின் பங்களிப்புகள் இன்றியமையாதவை.

அவ்வை இல்லம், அடையார் புற்றுநோய் மையம் ஆகியவற்றுக்கு பின்னால் முத்துலட்சுமியின் கனவு அடங்கியுள்ளது. தேவதாசி முறையை ஒழித்ததில் தொடங்கி தனது கொள்கைக்காக காங்கிரஸ் இயக்கத்தில் இருபெரும் தலைவர்களான ராஜாஜியையும் சத்தியமூர்த்தியையும் பகைத்துக்கொண்டது வரை இவர் வாழ்வில் துணிகரச் செயல்களுக்குப் பஞ்சமில்லை. தேசிய இயக்கத்தை ஆதரித்தாலும் சமுகக் காணோட்டத்தில் முத்துலட்சுமி அம்மையாரின் சிந்தனைகளில் திராவிட இயக்கக்கூறுகள் இருந்தன. ஆனால் எந்தக் காரணத்தாலோ ராஜகோபாலாச்சாரியின் குலக்கல்வித் திட்டத்தை (மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்) முத்துலட்சுமி ரெட்டி ஆதரித்துள்ளார்.

ஆனந்திபாய் ஜோஷிதான் இந்தியாவிலிருந்து மருத்துவம் பயில வெளிநாடு சென்று பட்டம் பெற்ற முதல் பெண். ஆனால் அவரால் மருத்துவப் பயிற்சியில் ஈடுபடமுடியவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக இளமையிலேயே மறைந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பல பெண்கள் மருத்துவம் பயின்றார்கள்.

தனது இந்து அடையாளத்தைக் கைவிடாமல் இருந்ததற்காக பால கங்காதர திலகரால் பாராட்டப்பட்டவர் ஆனந்திபாய் ஜோஷி. கேசரி உள்ளிட்ட திலகரின் பத்திரிகைகளில் இவருக்குப் புகாழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை விமரிசித்து ராமாபாய் எழுதிய புத்தகத்துக்கு (The High-Caste Hindu Woman) எதிர்வினை புரியும் வகையில் தேசியவாதிகள் பலரும் பிராமணப் பெண்ணான ஆனந்திபாயைத்தான் முன்னிறுத்தினார்கள். (இதே திலகரிடமிருந்து மோசமான எதிர்வினைகளையும் அவதூறுகளையும் தனது சாதி அடையாளத்துக்காகச் சந்தித்தார் ருக்மாபாய்).

ஆனந்திபாய் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணாக இருந்தாலும் பட்டம் பெற்று, மருத்துவச் சேவை செய்த முதல் பெண்ணாக வரலாற்றில் நிலைத்தவர் காதம்பிணி கங்கூலி. வங்காள மறுமலர்ச்சி இயக்கமான பிரம்ம சமாஜ் இவருக்கு ஆதரவாக இருந்தது. ஃபெரோஸ்ஷா மேத்தா தலைமையில் வங்காளத்தில் நடைபெற்ற காங்கிரஸின் 6வது மாநாட்டில் பேசிய முதல் பெண்ணும் இவர்தான்.

1891இல் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்ட முன்வரைவுக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் ருக்மாபாய். இச்சட்டத்திற்குப் பின்னர்தான் ஒரு பெண்ணின் திருமண வயது 10இல் இருந்து 12ஆக உயர்த்தப்பட்டது. பல சீர்திருத்தவாதிகள் 16 வயதாக உயர்த்தச் சொல்லி கோரிக்கை வைத்தாலும் அந்தக் காலகட்டத்தில் இதுவே புரட்சிகரமான சட்டமாகப் பார்க்கப்பட்டது. பழமைவாதிகளிடமிருந்து மோசமான எதிர்வினைகளை இச்சட்டமும் ருக்மாபாயும் சந்திக்கவேண்டியிருந்தது.

இந்தியாவில் விவாகரத்து வாங்கிய முதல் இந்து பெண் ருக்மாபாய் ரவுத். நவீன ஆடை அணிபவர் என்பது இவர்மீது திலகர் வைத்த குற்றச்சாட்டு. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதாலும் இந்த விமரிசனம் இவர்மீது வைக்கப்பட்டுள்ளது.

மனைவியை இழந்த 45 வயது ஆணுக்கு 9 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு சிறுவயதிலேயே கணவனை இழந்தவர் ஹைமாபதி சென். 1953இல் கல்கத்தாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் எண்ணிக்கை 12,718. அவர்களில் பெரும்பாலானோர் குழந்தை திருமணம் செய்துகொண்டவர்கள், கணவனை இழந்தவர்கள். 400க்கும் மேற்பட்ட இத்தகைய பெண்களுக்குப் பின்னாட்களில் காப்பரணாகச் செயல்பட்டார் ஹைமாபதி. ஓர் ஆணின் உலகில் பெண் எப்படியெல்லாம் சுரண்டப்படுவாள் என்பதற்கு இவர் வாழ்க்கை மாபெரும் சாட்சி. இவரது புகழ்பெற்ற சுயசரிதையான ‘Because I Am a Woman’ இன்று பல மொழிகளில் படிக்கக் கிடைக்கிறது.

மேற்கூறிய ஆறு பேரிடமிருந்தும் நாம் பலவற்றைக் கற்றுக்கொள்ளமுடியும், ஊக்கம் பெறமுடியும். கவிதா ராவின் புத்தகம் தரவுகளால் நிரம்பியிருக்கிறது. சுவாரசியமான எழுத்து நடை. பல்வேறு விஷயங்களைக் கோர்த்து எழுதும் பாங்கைப் படிக்கும்போது ஆ.இரா. வேங்கடாசலபதியின் நூல்கள் நினைவுக்கு வந்தன. நிவேதிதா லூயிஸ் எழுதிய ‘முதல் பெண்கள்‘ நூலும் இப்படியொரு முயற்சிதான். சமூகத் தடைகளை தாண்டி பல துறைகளில் வெற்றி பெற்ற பெண் ஆளுமைகளை அவர் இந்நூலில் பதிவு செய்திருப்பார்.

இத்தகைய நூல்கள் மேலும் பல வெளிவந்தால்தான் நம் பார்வை விரிவடையும்.

Lady Doctors

Lady Doctors: The Untold Stories of India’s First Women in Medicine,
Kavitha Rao, Westland

 

பகிர:
கெளதம் ராஜ்

கெளதம் ராஜ்

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரி. முதுகலை அரசியல் அறிவியல் மாணவர். அரசியல், தத்துவம், பொருளியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு மிக்கவர். ஆய்வுப் புத்தகங்களைப் பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்.View Author posts

1 thought on “முதல் பெண் மருத்துவர்கள்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *