Skip to content
Home » அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்திலுள்ள ‘அஞ்சன்வாரா’ என்னும் பழங்குடிகளின் கிராமம் பல நூற்றாண்டுகளாக மலையையும் கானகத்தையும் நர்மதை நதியையும் சார்ந்து இயங்கி வந்திருக்கிறது. பில்லாலா பழங்குடி மக்களின் இந்தக் கிராமம் பிற பழங்குடிகளின் கிராமங்களைப் போல பெரிய முக்கியத்துவமோ, பிற ஆரவாரமோ இல்லாமல் இருந்த ஒன்றுதான். ஆனால் 1980களின் பிற்பகுதியில் ஒரு பெரும் போராட்டக்களத்தில் இந்தக் கிராமமும் அதன் மக்களும் இணைகிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய அணைத் திட்டமான சர்தார் சரோவர் அணை கட்டுமானத்தால் நீரில் மூழ்கும் பகுதியில் இந்தக் கிராமமும் அமைந்திருந்ததுதான் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணம். 30 பெரிய அணைகள், 135 நடுத்தர அணைகள் மற்றும் 3000 சிறிய அணைகளை நர்மதை நதியில் கட்டும் பெரும் திட்டம் அது. இந்த அணையின் கட்டுமானம் 1961இல் தொடங்கிவிட்டாலும் 1985இல் உலக வங்கி நிதிவழங்க ஒப்புக்கொண்ட பின்புதான் துரிதமாக நடைபெற்றது. இதை எதிர்த்து நர்மதா பச்சாவ் அந்தோலன் என்னும் போராட்டம் 1985ஆம் ஆண்டு மேதா பட்கர் உள்ளிட்டோரால் துவங்கப்பட்டது. தற்போது இந்த அணைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, அதன் வெற்றிச் சின்னமாக ‘Statue of Unity’ வானளாவ உயர்ந்து நிற்கையில், மேற்படி கிராமம் நீரின் அடியில் மூழ்கி இருக்கிறது.

அணையின் கட்டுமானத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நெடுங்காலமாக நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி மக்கள் போராட்டமான இது நடந்த சமயத்தில் அஞ்சன்வாரா கிராமத்திற்கு நேரில் சென்று பேராசிரியர் அமித்தா பாவிஸ்கர் செய்த ஆய்வுதான் In the Belly of the River என்னும் புத்தகம்.

முதலாளித்துவ அமைப்பில் வளர்ச்சிக் கொள்கைகள் பெரிதும் குறிப்பிட்ட உயர்குடிகளின் லாபத்துக்கு வடிவமைக்கப்படுவதால், வளர்ச்சித் திட்டங்கள் இருக்கும் இடங்களில் அதற்கான எதிர்ப்புகளும் எப்போதும் இருக்கும். ஆனால் பாதிப்படையும் எல்லா மக்களும் போராட வருவதில்லை. அல்லது நர்மதா பச்சாவ் ஆந்தோலன் போன்ற பெரும் போராட்டமாக மாறுவதில்லை. இதன் அடிப்படையில் அஞ்சன்வாராவில் நடைபெற்ற பழங்குடிப் போராட்டம் எந்த அளவு ‘வளர்ச்சி – எதிர்ப்பு இருமை’ கோட்பாட்டில் பொருந்துகிறது என்பதுதான் பேராசிரியர் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட முதல் கருதுகோள்.

பழங்குடிகளின் வாழ்வியல் இயல்பிலேயே ‘நீடித்து நிலைக்கக்கூடிய’ அல்லது ‘வளங்குன்றா’ (Sustainable) வாழ்வியல் முறையாக இருப்பதாகவும் சமத்துவம் நிலவும் சமூகமாக அவர்கள் திரண்டிருப்பதாகவும் ஒரு கருத்து நிலவி வந்தது. இதனால் தற்போது சூழலைப் பெரிதும் மாசுபடுத்தும் சமூக அமைப்பிற்குப் பதிலாக பழங்குடிகளின் சமூக அமைப்பிற்கு நாம் செல்ல வேண்டும். அல்லது அது போன்றதோர் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்தக் கருத்தினை உடையோர் நர்மதை ஆற்றின் பழங்குடிகளின் போராட்டம் என்பது ‘முதலாளித்துவ அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக, பழங்குடி மக்களின் சமூக, கலாசார, உற்பத்தி அமைப்புகளைப் பாதுகாக்க அவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்’ என்று வரையறுக்கின்றனர். இதையும் கேள்விக்குட்படுத்தும் ஆய்வுதான் இந்தப் புத்தகம்.

ஓர் ஆண்டு காலம் அஞ்சன்வாரா கிராமத்திலேயே தங்கி இருந்து ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். இது தவிர அங்கு நடைபெற்ற போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். ஆய்வாளர்கள் ஆய்வுக்களத்தில் நடைபெறும் எதிலும் பங்கு பெறக்கூடாது என்னும் மேட்டிமைவாத சிந்தனையைப் புறக்கணித்துவிட்டு, களப்போராட்டத்தில் தீவிரப் பங்காற்றியுள்ளார். அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்கு மருத்துவம், குழந்தைகளுக்கு கல்வி, அவர்களின் வழக்குகளில் தேவைப்படும் சேவைகள் போன்றவையும் அவர்களுக்குக் கிடைக்கச்செய்துள்ளார்.

அஞ்சன்வாரா பில்லாலா பழங்குடி மக்களின் கிராம அமைப்பு, நிலப்பகிர்வு, தந்தை வழி சமூக அமைப்பு, சமூகத்தில் பெண்களின் நிலை, திருமணம், சமூகத்தில் ‘கெளரவம்’ போன்றவற்றின் மதிப்பு, குறியீட்டு மூலதனம், மோதல்கள், கூடி உழைக்கும் தன்மை போன்ற பலவற்றைப் பற்றி மிகவும் விரிவாகத் தனது நூலில் பேசுகிறார். இவை அனைத்தையும் தினசரி எடுக்கப்பட்ட குறிப்புகள் மூலம் ஆவணம் செய்துள்ளார். காட்டுக்கும் ஆண்களுக்கும் உள்ள தொடர்பு, காட்டுக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு, அவர்களின் வாழ்வில் நர்மதை நதியின் முக்கியத்துவம் போன்றவை அவர்கள் எவ்வாறு இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. அதே நேரம் அவர்களின் சமூக அமைப்பு வளங்குன்றாத நிலையில் இல்லை என்பதையும் கூறுகிறார்.

உதாரணமாக, பில்லாலா பழங்குடிகள் இரண்டு விதமாக விவசாயம் செய்கின்றனர். ஒன்று அவர்களின் வீட்டின் அருகிலேயே இருக்கும் நிலத்தில் செய்கின்றனர். இதில் அவர்களுக்கு தேவையான காய்கள், கனிகள், கூரை வேயும் புற்கள், பிற மருத்துவ தாவரங்கள் போன்றவற்றை வளர்க்கின்றனர். ஆனால் இவை அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் காடுகளில் குறிப்பிட்ட இடங்களை நெருப்பிட்டு அழித்து, அதில் தானியங்கள் விளைவிக்கின்றனர். இதனை ‘Nevad’ நிலங்கள் என்கின்றனர்.

இவை ஒப்பீட்டளவில் அரசும் பிற கார்ப்பரேட்களும் செய்யும் காடழிப்பைக் காட்டிலும் மிகவும் சொற்பம்தான். ஆனால் இவர்கள் மத்தியில் ‘காடும் நதியும் தீர்ந்து போகாது’ என்ற நம்பிக்கை மிக ஆழமாக உள்ளது என்கிறார் ஆசிரியர். இது ‘sustainable’ என்னும் கோட்பாட்டிற்கு அடிப்படையிலேயே எதிரானது. ஏனென்றால் இயற்கையின் வளங்கள் தீர்ந்துபோகும் தன்மையுடையதாய் இருப்பதால், அதனை பல நூற்றாண்டுகள் நீடித்துநிற்கும் வண்ணம் அதன் அறிவியலை புரிந்துகொண்டு உபயோகிப்பதுதான் ‘sustainable’ எனப்படும் ‘வளங்குன்றா’ வளர்ச்சியின் அடிப்படை.

இந்த ‘Nevad’ நிலங்களை அதிகரிக்கும் முடிவினை ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்துதான் எடுக்கின்றனர். ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் போதும் சரி, பின்பு வந்த இந்திய தேசிய அரசின் ஆட்சியிலும் சரி; இந்தக் காடுகள் மிக தீவிரமான காடழிப்பைச் சந்தித்துள்ளன. தற்போது முதலாளித்துவ நலன்களுக்காகவும் இந்த காடுகள் அழிக்கப்படுகின்றன. பழங்குடி மக்கள் செய்யும் காடழிப்பு காலனிய, தேசிய, முதலாளித்துவ காடழிப்பை விட சிறியதுதான் என்றாலும்; மேற்கூறிய பெரும் அமைப்புகளின் வரலாற்று அழிப்பினால் இந்தக் காடுகள் பழங்குடி மக்களின் சிறிய காடழிப்பினாலே கூட பெரிய அளவில் பாதிக்கப்படும் (Highly Vulnerable) நிலையில் உள்ளது. இதன் காரணமாக அதிகம் பாதிக்கப்படப் போவதும் இதே பழங்குடிகள்தான். அதனால் அறிவியல் பூர்வமான, நீடித்து நிலைக்கும் உற்பத்தி முறைகளை இந்தப் பழங்குடிகளிடம் கொண்டு சேர்க்கும் தேவையும் உள்ளது.

சகோதரத்துவம், கூடி உழைக்கும் தன்மை, நில உடைமை போன்றவற்றில் சமத்துவமாக இருப்பினும் சமூகத்தில் பெண்களின் நிலை, கெளரவம் போன்ற மதிப்பீடுகளில் அவ்வாறு இருப்பதில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறார். இதனால் பழங்குடி சமூக அமைப்பைச் சமத்துவ அமைப்பாக வரையறுப்பதும், முதலாளித்துவ அமைப்பில் இருந்து பழங்குடி சமூக அமைப்பிற்குச் செல்வதும் தீர்வாகாது என்கிறார். மூட நம்பிக்கைகள் பல்வேறு தளங்களில் நிறைந்த சமூகமாகவே பில்லாலா சமூகம் இருப்பதையும் குறிப்பிடுகிறார். இதனால் அறிவியலின் பங்களிப்பு பழங்குடிச் சமூகங்களுக்கும் தேவை என்று வலியுறுத்துகிறார்.

வரலாற்று ரீதியில் அணுகினால் அலிராஜ்பூர் மாவட்டத்தின் பழங்குடி மக்கள் நெடுங்காலமாக ஒடுக்குமுறையைச் சந்தித்து வந்திருக்கின்றனர். இது ராஜபுத்திரர்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள், விடுதலைக்குப் பின்பான இந்திய அரசு என்று பலரால் வரலாற்று நெடுகிலும் நடந்துள்ளது. வெளியாட்களான இவர்களை இந்தப் பழங்குடிகள் தொடர்ச்சியாக எதிர்த்துள்ளனர். நவீன காலத்தின் ‘வளர்ச்சி’ என்னும் கருத்து பரவலாகப் பேசப்படும் முன்னரே இவர்களின் எதிர்ப்பு இருந்துள்ளது. இதனால் ‘வளர்ச்சி – எதிர்ப்பு’ என்னும் இருமைக்குள் மட்டும் பழங்குடிகளின் எதிர்ப்பு அடங்காது என்கிறார் பேராசிரியர் அமித்தா பாவிஸ்கர்.

இது தவிர ‘ஒன்றிணைந்த பழங்குடி மக்கள்’ என்ற உணர்வு இயல்பிலேயே இருக்கவில்லை. அதனை உருவாக்க அந்தப் பிராந்தியத்தில் இயங்கி வந்த பாட்டாளி அமைப்பான ‘சங்கத்’ (Peasant and Workers Consciousness Union) பத்தாண்டுகளுக்கு மேலாக உழைக்க வேண்டியிருந்தது. அப்படி உருவான உணர்வை நர்மதா பச்சாவ் போராட்டக் களப்போராளிகள் ‘சர்தார் சரோவர் அணைத்திட்டத்தில்’ ஒன்று குவித்தனர். மொத்தத்தில் ‘பல்பரிமாண அரசியலாக’ இருக்கும் பழங்குடிகள் போராட்டத்தை இருமைக்குள் சுருக்க முடியாது எனும் முக்கியமான கண்டுபிடிப்பையும் இந்த ஆய்வில் பேராசிரியர் நிகழ்த்தியிருக்கிறார்.

இப்படிப் பல்வேறு தளங்களில் நிகழும் ஒரு போராட்டத்தை அதன் அடிப்படையில் புரிந்து கொண்டால்தான், தற்போதைய சூழ்நிலையில் போராட்டங்களைப் புரிந்துகொள்ளமுடியும் என்பது அவரின் வாதம்.

ஒரு போராட்டம் உருவாக வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் மக்களின் வரலாறு, அவர்கள் இருக்கும் இடத்தின் முக்கியத்துவம், அவர்களது சமூகத்தின் அமைப்பு முறை, அவர்களின் தொழில், மதம், மொழி போன்ற பல்வேறு தளங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை பாவிஸ்கரின் புத்தகம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இருமையும் முரணும் அந்தப் போராட்டத்தின் அடிப்படைத் தளத்தை அமைத்துக் கொடுக்குமே தவிர, போராட்டத்தை முழுமையாக நடத்தி முடிக்காது.

1985இல் துவங்கப்பட்டு 90களின் முதல் பாதியில் வெற்றிக்கு மிக அருகில் சென்றது சர்தார் சரோவர் அணை எதிர்ப்புப் போராட்டம். 1993இல் இந்த அணை கட்டுமானத்திற்கு தர வேண்டிய தொகையினை உலக வங்கி நிறுத்திவைத்தது. சில அரசியல் மாற்றங்களினால் 1999இல் மீண்டும் துவங்கிய கட்டுமானம், 2006இல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. அதன் உயரம் 138இல் இருந்து 163 ஆக உயர்த்தப்பட்டது. அஞ்சன்வாரா உட்பட 200க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், சிறுநகரங்கள் போன்றவை நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்த்தப்பட்டனர், இன்னும் இடப்பெயர்வு நடைபெறாமல் வெள்ளம் சூழ வாழும் கிராமங்களும் உண்டு. ஏன் இப்படி தலைகீழ் மாற்றம் உண்டானது?

இவற்றை முழுமையாக புரிந்துகொள்ள இன்னும் பல்வேறு காரணிகளை ஆராய வேண்டும் என்ற பார்வையை இந்நூல் அளிக்கிறது. மக்களுக்கான போராட்டக்களத்தில் போராளிகளாக நிற்போர் அவசியம் படிக்க வேண்டிய நூல். ஏனென்றால், போராட்டங்களையும் அவற்றின் தன்மையையும் புரிந்துகொள்ளாமல் அவற்றை நடத்திடவோ வழிநடத்திடவோ முடியாது.

In the Belly of the River

In the Belly of the River: Tribal conflicts over Development in the Narmada Valley
Amita Baviskar
Oxford University Press

 

பகிர:
nv-author-image

ஹரி பாரதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டமும் லயோலா கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தற்போது ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். சூழல், சமூகப் போராட்டங்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்துவருகிறார்.View Author posts

2 thoughts on “அணை எதிர்ப்புப் போராட்டங்களும் பழங்குடி மக்களும்”

  1. உங்களது இந்த புத்தக அறிமுகம் படிக்க படிக்க ஆர்வமாகவும், பழங்குடி மக்கள் மீது கவலையையும் ஏற்படுத்தியது. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாது

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *