ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் அதிகமாக விற்கும் புத்தகமாக கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்திருக்கிறது. அது திரைப்படமாக முதல் பாகம் வரும்போதே போடு போடு என்று போட்டது. பல வாசகர்கள் அப்புத்தகத்தை வருடம் ஒருமுறை வாசிப்பது என்று ராமாயணம் படிப்பது போல் படிக்கவும் செய்வதை நானறிவேன்.
இந்நிலையில் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு எனும் புத்தகத்தைப் பார்த்ததும் எனக்குப் பெரிதாக ஒன்றும் ஈர்ப்பு ஏற்படவில்லை. ஏற்கெனவே இணையத்தில் வந்தது என்பதையும் பார்த்தேன். அதில் முன்னுரையில் என் அலுவலக நண்பரும், தீவீர வாசிப்பாளருமான சுரேஷ் வெங்கடாத்திரியின் பெயர் வந்ததைப் பார்த்து மகிழ்ந்து அதைப் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பினேன்.
அப்புறம்? இதில் என்ன பெரிதாக இருந்து விடப்போகிறது? அதுதான் கல்கி எழுதிவிட்டாரே. புதிதாக இன்னொரு புத்தகத்தை ஏன் படிக்கவேண்டும்? இந்தக் கேள்விகளோடு மிகுந்த தயக்கத்துடன், மெதுவாகப் படிக்கத் தொடங்கினேன்.
முதலில் தினமும் காலை சில பக்கங்கள் என்றுதான் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. அடடா, அலுவலகம் கிளம்ப வேண்டுமே. இதை அப்படியே வைக்க வேண்டுமா என்று தோன்றத் தொடங்கியது. இன்று வேறு ஒரு வேலையாக விடுப்பு எடுத்து வேலையை முடித்து வீடு திரும்பியதும் எடுத்தேன், படித்தேன், முடித்தேன். பிரமித்தேன். அவ்வளவுதான். பிரமிப்பு மீளாமலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள்தான் ஆதித்த கரிகாலரைப் பழிதீர்ப்பதற்காகக் கொன்றனர் என்பது ஒரு பார்வை. பிராமணர்கள்தான் கொன்றனர் என்பதை மறைக்கவே இப்படிக் கல்கி எழுதினார் என்று எதிர்க்கருத்து. இதையெல்லாம் அன்றைய, இன்றைய அரசியலுடன், காதலுடன், ஈர்ப்புடன் எழுதிவிட முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளார் சரவணகார்த்திகேயன்.
முதலில் இந்த விஷயம் பற்றி எழுதியிருக்கும் வரலாற்றுப் புனைவு எழுத்தாளர்கள் கல்கிக்கும், சாண்டில்யனுக்கும் புகழ் சேர்க்கும் விதமாக இரண்டு ஒற்றர்களை நுழைத்திருக்கிறார். அவர்கள் போகும் போக்கில் கதை செல்கிறது. வேறு ஒரு ரூபத்தில் நந்தினி, காமம், காதல், களிப்பு என்று ஆதித்த கரிகாலரின் குதிரை தேவதத்தனின் வேகத்தில் செல்கிறது கதை. அடுத்தடுத்து முடிச்சுகள். முறுகுகின்றன, இறுகுகின்றன, அனைவரையும் சந்தேகத்தின் நிழலுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு சிறந்த மர்ம எழுத்தாளரின் கதையைப் படிக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.
ஓரிடத்தில் மார்க்ஸ் வருகிறார், ஒரு இடத்தில் பெரியார் வருகிறார், ஒரு இடத்தில் சார்வாகம், சில இடங்களில் பழந்தமிழ், பைந்தமிழ், ஆங்காங்கே வரலாற்றுச் செய்திகள் என்று எல்லாத் திசைகளிலும் கவர்ந்து ஈர்க்கிறது. இலக்கணமும் பேசுகிறார்கள், இலக்கியமும் பேசுகிறார்கள் அதில் வரும் பாத்திரங்கள்.
ஏகப்பட்ட சிடுக்கு முடிச்சுகள் போட்டு, அவற்றை அவிழ்க்கும் போது நாம் சிடுக்கில் மாட்டிக் கொள்கிறோம். அப்பப்பா, எவ்வளவு முடிச்சுகள்! ஓர் அற்புதமான புனைவைப் படித்தேன் என்ற நிறைவு. தமிழ் உலகம் ஒரு சிறந்த மர்மக்கதை எழுத்தாளரை, புனைவிலக்கிய எழுத்தாளரைப் பெற்றிருக்கிறது. மனமார்ந்த பாராட்டுகள், திரு.சரவணகார்த்திகேயேன்!
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
சி. சரவணகார்த்திகேயேன்
நூலைப் பெற: Amazon | FlipKart | Dial for Books