Skip to content
Home » மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

மனிதகுலம்

‘மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்குக் காட்டினால், அவன் மேம்படுவான்’ – ஆன்டன் செக்கோவ்

தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் இழிவான குணம் கொண்ட எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழுமுற்றாகக் கெட்டவன் என்று முத்திரை குத்த இயலாது. அக்கதாபாத்திரத்தின் கடந்த கால வாழ்க்கைச் சூழல் எவ்வாறு இருந்தது என்பதைச் சித்தரிப்பதன் வழியாகவோ, இதயத்தைத் தொடும் ஒரே ஒற்றை நிகழ்வின் மூலமாகவோ அந்த ஈவிரக்கமற்ற மனதுக்குள்ளும் மனிதநேயம் எஞ்சியிருக்கத்தான் செய்கிறது என்று ஒருகட்டத்தில் நம்மை இரக்கம்கொள்ள வைத்து விடுவார் (பச்சாதாபம் அல்ல).

உதாரணமாக குற்றமும் தண்டனையும் நாவலில் ஸ்விட்ரிகைலோவ் என்ற கதாபாத்திரம் கதையில் வரும்போதெல்லாம் விலகி இருந்து அவதானிக்கும் வாசகருக்கு ஒரு வகையான அசௌகரியமான உணர்வே ஏற்படும். கதையின் இறுதியில் ஒரு நோய்மையுற்ற சிறுமியின் முன்பு தனக்கான மீட்சியை அக்கதாபாத்திரம் அடையும். விலைமாதுவாக வரும் சோனியாவிடம் தனது கொலைகளுக்கான பாவமன்னிப்பு கோரி நிற்கும் ரஸ்கோல்நிக்கவ்வைவிட, ஸ்விட்ரிகைலோவ்வின் மீட்சி குற்றமும் தண்டனையும் நாவலில் குறிப்பிடத்தக்கது. கரமாஸவ் சகோதரர்கள் நாவலில் எல்லோராலும் வெறுக்கப்படும் தந்தை கதாபாத்திரமான கரமாஸவ் தன் இளைய மகனான அல்யோஷாவிடம் கொள்ளும் உண்மையான அப்பழுக்கற்ற வாஞ்சையைச் சந்தேகிக்க முடியாது.

மனித குலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு என்ற இந்த அபுனைவு நூலை வாசித்துக்கொண்டிருந்த அனேக தருணங்களில் எனக்குத் தோன்றியது, தஸ்தயேவ்ஸ்கி தன் வாழ்நாளில் ஒரு நாவலளவுக்கு விரிவாக, செறிவாக ஓர் அபுனைவு நூலை எழுதியிருந்தால் அது இப்படி இருந்திருக்கக்கூடும் என்பதுதான்.

இந்நூல் வெறுமனே நன்னெறி உபதேசங்களைப் பிரசங்கப்படுத்தும் ஒற்றைக் கண்ணோட்டம் கொண்டு எழுதப்பட்டது அல்ல. இந்நூலின் ஆசிரியர் மனித மேன்மைக்குணங்கள் மீது அவநம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறாரோ என்று ஒரு சில இடங்களில் நமக்குத் தோன்றலாம். ஆனாலும் அப்படி நினைப்பு வரும் அடுத்த கணமே தன் எண்ணங்களை வெளிப்படையான விவாதத்திற்கு முன்வைத்து, சார்பற்ற நடுநிலைக் கண்ணோட்டத்தில் நிகழ்வுகளின் பின்னணிகளை ஆராய்ந்து பார்க்க நமக்கு வாய்ப்பு அளிக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை இந்நூல் தொய்வின்றிச் சுவாரசியமாகச் செல்வதற்கு முக்கிய காரணம், வாசகரால் மானசீகமாக ஆசிரியரோடு உறவாடியபடியே இருப்பதுபோன்ற நெருக்கத்தை உணரமுடிவதால்தான்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வேட்டையாடிச் சமூகமாக இருந்து, பின் ஒரே இடத்தில் தங்கி வாழும் வேளாண்மைச் சமூகமாக ஆனது தொடங்கி, மனித நாகரிகத்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகளை நிகழ்கால நவீனச் சமூகப் பொருளாதார அரசியல் கட்டமைப்புகளோடு ஆதாரப்பூர்வமான தகவல்களோடு ஒப்பிட்டு மனித இனத்தின் அடிப்படை குண இயல்புகளை ஆராய்கிறார் பிரெக்மன்.

லட்சக்கணக்கான மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்த இரண்டு உலகப்போர்களில் அவர்களை அவ்வாறு இயக்கிய மனிதத்தன்மையற்ற உள்ளார்ந்த விசை என்னவாக இருக்கும்? இயற்கைப் பேரழிவுகள், போர், நோய்த்தொற்று போன்ற நெருக்கடிச்சூழல் என்று வரும்போது எதார்த்தத்தில் மனிதர்கள் தன்னலப்போக்கு உடையவர்கள்தானா?

போர்களில் நேரடியாகப் பங்குபெற்றவர்களின் பதிவுசெய்யப்பட்ட நேர்காணல்களைத் தீர அலசி பாரபட்சமற்ற விவாதங்களுக்கு உட்படுத்துகிறார் பிரெக்மன். நினைப்பதற்கு மாறாக போர்ச்சூழல்களும் இயற்கைப் பேரழிவுகளும் சாதாரண மனிதர்களின் குரூரமான குணங்களை வெளிக்கொணர்வதில்லை. மாறாக, இக்கட்டான சூழ்நிலைகளில் பாகுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கும்படியே மனித மனம் இயங்குகிறது. அத்தியாவசியத் தேவைகளைக் கையில் இருப்பவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளும் தோழமையுணர்வும், ஒன்றிணைந்து செயல்படுவதில் கிடைக்கும் அனுகூலமும், அமைதியான காலகட்டத்தில் இருந்ததைவிட இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்த காலகட்டத்தில் ஒவ்வொரு சாமானியரிடத்தும் வலுவாக வேறூன்றி இருந்துள்ளது.

போர்க்களங்களில் துப்பாக்கிகளால் நேருக்கு நேராகச் சுட்டுக் கொல்லப்பட்ட சிப்பாய்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே. அதிலும் உலகப்போர்களில் சிப்பாய்கள் பயன்படுத்திய பல துப்பாக்கிகள் ஒருபோதும் குண்டுகளை வெடிக்காமலேயே இருந்துள்ளன!

இரண்டாம் உலகப் போரில் நாஜிப்படை அவ்வளவு மூர்க்கமாகத் தொடர்ந்து போரிடுவதற்காக வீரர்களின் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்யும் போதை மாத்திரைகள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஜெர்மன் வீரர்களை எழுச்சிக்கொள்ள வைக்கும் ஹிட்லரின் உணர்ச்சிப்பெருக்கான ஆவேசமான பேச்சும், போரில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் தாங்கள் போரில் ஈடுபடுவது வரலாற்றில் நிகழும் பிழையைச் சரிசெய்யத் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பே என்ற நேர்மறைக் கண்ணோட்டமும் அவர்கள் சிந்தனையில் வேரூன்ற காரணமாக அமைந்தது.

கொத்துக் கொத்தாக லட்சக்கணக்கான மனித உயிர்களின் பலி சாத்தியமானது எவ்வாறு என்றால், போர்வீரர்களால் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியாத தொலைவில் இருந்து, அடுக்கதிகார அரசாங்க அமைப்பிலிருந்து தங்களை வந்தடையும் கட்டளைகளுக்கு இணங்கி வான்வழியாக எறியப்பட்ட குண்டுகளால்தான். அதற்குத் தேவையான மிருகக் குணம் எவ்வாறு ஆழமாக மனித மனதில் விதைக்கப்படுகிறது?

‘நரகத்திற்கான பாதை நல்ல நோக்கங்களுடன்தான் அமைக்கப்படுகிறது. தீமை நம்முள் மேலோட்டமாக இல்லை. அது மிகவும் ஆழமாகப் புதைந்திருக்கிறது. அதைத் தூண்டி வெளியே கொண்டுவருவதற்குப் பெரும் முயற்சி தேவை. மிக முக்கியமாக, தீமை உண்மையிலேயே நல்லது செய்யவிருப்பதைப்போல அதற்கு மாறுவேடம் புனையப்பட வேண்டும்.’ பக்கம் – 234

அடிப்படையில் நேருக்கு நேராகச் சக மனிதன் மீது நீடித்த விரோதம் கொள்வது மனித இன (ஹோமோ சேப்பியன்ஸ்) இயல்புக்குப் புறம்பான ஒன்று என்று தீர்மானத் தரவுகளுடன் விவாதிக்கிறார் பிரெக்மன்.

நாம் நம்பிக்கொண்டிருப்பதுபோல் அல்லாது மனிதன் எப்போது ஒரே இடத்தில் தங்கி தனக்கென குடும்பம், விவசாயம், சமுதாயம் என்று தன்னைச் சுற்றிய எல்லையை உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்தானோ அதுவே நாகரிகத்தின் தவிர்க்க முடியாத போர்களுக்கு வித்திடக் காரணமாக அமைந்தது என்று வரலாற்று நிகழ்வுகளை ஆதாரப்படுத்துகிறார்.

நாடோடிகளாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்த காலத்தில் மனிதர்களுக்குள் போட்டி பொறாமைகள் நிலவுவதற்கான அவசியங்கள் குறைவு. மனிதர்கள் தங்களுக்குள் உறவாட அதிக நேரம் இருந்தது. விரும்பினால் செல்லும் வழியில் சந்திக்கும் வேறொரு குழுவினருடன் இணைந்துகொள்ளச் சுதந்திரம் இருந்தது. அப்படி ஒருவர் தங்கள் குழுவில் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் அவர்கள் கையாண்ட உத்தி, குறிப்பிட்ட அந்த ஒருவரை அவமானப்படுத்தி அவர் தன்னை தானே நினைத்து வெட்கிக்கொள்ளச் செய்வதாகவோ, அல்லது அவரைத் தங்கள் குழுவிலிருந்து விலக்கி வைப்பதாகவோ மட்டுமே இருந்திருக்கிறது. இதனை வரலாற்றில் பலதரப்பட்ட பழங்குடி குழுக்களிடம் காணப்படும் இயல்புகளைச் சான்றுகளாகக் கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்.

வலுவான மனித சமூகத்திற்கு அடிப்படை குணமாக ‘சமூகக் கற்றல்’ என்று நூல் எடுத்துரைக்கிறது. ஜனநாயக ஆட்சி என்பது நடைமுறையில், ‘அதிகாரம் மக்களின் கையில் இல்லை. மாறாக, நம்மீது யார் அதிகாரம் செலுத்தலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு மட்டுமே நாம் அனுமதிக்கப்படுகிறோம்.’ (பக்கம் 320).

பிறப்பு, சூழல் ஆகியவற்றின் காரணமாக அறிமுகமாகி ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உறவினர்-நட்பு வட்டங்களுக்கு வெளியே சென்று அந்நியர்களிடமும் இணக்கமான நல்லுறவை மேம்படுத்துவதற்குச் சமூகக் கற்றல் அவசியம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். தன்னுடைய அந்த வாதத்தையும் வேட்டையாடி சமூகமாக இருந்த காலகட்ட வாழ்க்கை முறையை முன்வைத்தே எடுத்துரைக்கிறார். உடல் வலிமையிலும் புத்திக் கூர்மையிலும் சிம்பன்சி குரங்குகளில் இருந்தும் ஏனைய உயிரினங்களில் இருந்தும் ஹோமோ சேப்பியன்ஸ் அடுத்தகட்ட பரிணாம நகர்வை நோக்கி முன்னேற முக்கியமான காரணியாக இருந்ததும் இந்த ‘சமூகக் கற்றல்’ செயல்பாடு என்பதே இந்த நூல் வைக்கும் கூற்று.

சமூகக் கற்றல் என்று வரும்போது அடித்தட்டு மக்கள் வரை தான் சார்ந்த சமுதாயத்தின் பொருளாதார நிர்வாக அமைப்பு பற்றிய புரிதலை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்புணர்வு அவசியமாகிறது. அதனால் தன்னுடைய ரத்த உறவுகள் நண்பர்களுக்கு அப்பால் தனக்கு நேரடியாக அறிமுகமாகாத மனிதர்களிடேயும் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற முடிகிறது. எந்த ஒரு முடிவையும் குழுவாக இணைந்து விவாதிக்க நல்ல ஓர் அனுகூலமாக இச்சந்தர்ப்பம் அமைகிறது. இதன்மூலம் ஒவ்வொரு சாமானிய மனிதரும் இச்சமுதாய வளர்ச்சிக்கான பாதையில் பங்களிப்பாற்றும் பொறுப்புணர்ச்சியைக் கற்பித்தல் மூலமாக அல்லாமல் நடைமுறை அனுபவத்தினூடாகவே அடையமுடிகிறது.

பரவலான மக்கள் தொகையில் ஒரு கட்டுக்கோப்பான வளர்ச்சிக்கு அனைவரையும் வழிநடத்தும் தலைமைத்துவம் தேவை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. அதேசமயம் தவறான தலைமை-அதிகாரத்தை எதிர்த்து புரட்சி, கலகம் ஆகியவற்றை மேற்கொண்டு ஆட்சிக்கு வரும் புதிய தலைவர், அதிகாரம் கிடைத்ததும் அதே மக்களைத் தனது சுய கருத்துக்களின் பாற்பட்டு ஒடுக்கவே செய்கிறார் என்று சீன, பிரெஞ்சு, ரஷ்யப் புரட்சிகள் நிரூபிக்கின்றன.

எனில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அதிகாரத்துவம் இருந்திராத நாடோடி சமூகமாக அலைந்து திரிந்து கொண்டிருந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில், மக்கள் தங்களுக்கிடையே பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்பட ஆதார நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வி வருகிறது. இதற்கு விடையாக வேளாண்மைச் சமூகம் உருவாகியிராத பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக துருக்கியில் கட்டப்பட்ட பழைமையான ‘கோபெக்லி டெபே’ கோயில் சான்றாக இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறையினரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு இன்றி இப்படி ஒரு கட்டுமானம் சாத்தியமே இல்லை என்று தொல்லியலாளர்களால் உறுதி செய்யப்பட்ட கோயில் அது. அதேபோல ஈஸ்டர் தீவுகளில் ஆதி மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட சிலைகளும் ஆசிரியரால் சான்றாக முன்வைக்கப்படுகிறது.

மனிதர்களிடம் போட்டி பொறாமை சுயநலம் போன்ற எதிர்மறை குணங்கள் அடிப்படையில் அறவே கிடையாது என்பதை ஆசிரியர் ஒருமனதாக நின்று வாதாடுவதில்லை. ஆனால் எதிர்மறைச் செய்திகளால் மட்டுமே மக்களிடம் கவனத்தை அடைய முடியும் என்று நம்பும் ஊடகங்களும், அடுக்கதிகார அரசியல் அமைப்புகளும் உண்மைகளைத் திரிக்கின்றன. செய்திகளுக்குப் பின்னாலுள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்து நோக்கும் பார்வையை மழுங்கடிக்கச் செய்யும் வேலையை நவீன யுகம் தொற்றுபோலப் பரவ விட்டு வருகிறது.

தன்னலத்துடன் தன் குடும்பம் சார்ந்தும், தான் வாழும் சமூகம் சார்ந்தும் நன்மை தீமை இரண்டு குணங்களும் கலந்தே மனித இயல்பு பரிணாமம் அடைந்து வந்துள்ளது. அவநம்பிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவசர உலகில், மனித உறவுகளுக்கிடையே அருகி வரும் இணக்க மனப்பான்மையை அதன் ஈரம் உலராமல் நீர் தெளித்து பசுமையுடன் வைத்துக் கொள்ள, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமூகம் ஒற்றுமையைப் பேணி கடந்துவந்துள்ள இக்கட்டான சந்தர்ப்பங்கள் நினைவுகூரப்படுதல் அவசியமாகிறது. அவ்வகையில் ருட்கர் பிரெக்மன் இன் ‘மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு’ இக்காலத்திற்கான அவசியமான கையேடாகத் திகழ்கிறது.

0

பகிர:
ரஞ்சித் குமார்

ரஞ்சித் குமார்

சொந்த ஊர் தென்காசி அருகில் சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிகிறார். வாசிப்பிலும் ஊர்சுற்றுவதிலும் ஆர்வம் அதிகம். அவ்வப்போது இலக்கிய விமரிசனங்கள் எழுதிவருகிறார். தொடர்புக்கு : ranjithlogin01@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *