Skip to content
Home » The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் முரகாமியின் புதிய நாவல் The City and Its Uncertain Walls சமீபத்தில் வெளியானது. 1980இல் இதே பெயரில் முரகாமி ஒரு குறுநாவலாக எழுதி, ஜப்பானிய இலக்கிய இதழ் ஒன்றில் வெளியிட்டிருந்த பிரதியின் நீட்சி வடிவமே இந்நாவல். முரகாமியின் முதல் பிரசித்திபெற்ற A Wild Sheep Chase நாவல் வெளியாவதற்கும் முந்தைய காலகட்டம் இது. 150 பக்கங்கள் கொண்ட ஒரு குறுநாவலாக வெளியான போதும், அது தனக்குத் திருப்திகரமாகத் தோன்றாதபடியால் புத்தக வடிவில் அதை வெளியிட முரகாமி விரும்பவில்லை.

அதன்பிறகு முதல் முறையாக Parallel முறையிலான கதைச்சொல்லலில் தான் முயற்சித்துப் பார்த்த Hard-Boiled Wonderland and the End of the World நாவலை எழுதியபோது, அதில் அடைந்த புதுமையான படைப்பூக்கத்தின் வழியாகக் கிடப்பில் வைத்திருந்த இக்குறுநாவலை முழு நீள நாவலாக எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெற்றிருக்கிறார் முரகாமி. ஆனால் அது செயல் வடிவம் பெறுவதற்கு நாற்பது வருடங்கள் ஆகியுள்ளன. 1980இல் எழுதிய கைப்பிரதியை 2020 கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் முழுவதுமாக மறுசீரமைப்பு செய்து திருத்தி, மேலும் இரண்டு பாகங்கள் இணைப்புடன் மொத்தம் மூன்று பாகங்கள் கொண்ட நாவலாகக் கொண்டு வந்திருக்கிறார்.

முரகாமியின் Killing Commendatore, Kafka on the Shore, Sputnik Sweetheart போன்ற நாவல்களை ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Philip Gabriel இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளார். அபாரமான மொழிபெயர்ப்பு.

‘Rather than stories of ‘abnormal things happening to abnormal people’ or stories of ‘normal things happening to normal people,’ I like ‘stories of abnormal things happening to normal people.’ – Haruki Murakami

The City and Its Uncertain Walls நாவலின் மையக் கதாபாத்திரத்தின் வயது பதினேழு. அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள், வயது பதினாறு. இங்கு வயதை முதன்மையாகக் குறிப்பிடக் காரணம் இவர்கள் இருவரின் பெயர் நாவலில் எங்குமே வராது. ஆனால் ‘முதல் பாகத்தின் பிற்பகுதியில் மட்டும்’ இருவரின் இடையேயான வயது வித்தியாசம் முப்பது அதிகமாக வரும்!

பள்ளிப்பருவத்தில் இருவரும் நண்பர்களாக இருந்து பின் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்குகின்றனர். பதின்ம வயதுக்கே உரிய ஆசாபாசங்களோடு சந்திப்புகள் தொடர்ந்தாலும் அந்தப் பெண் தன்னைப்பற்றி சில விநோதமான தகவல்களை அவனுடன் பகிர்ந்து கொள்கிறாள். எங்கோ தொலைவில் கடக்க முடியாத மதில் சுற்றுச்சுவர் கொண்ட நகரம் ஒன்று இருப்பதாகவும் (நகரத்திற்கும் பெயர் கிடையாது), அங்கு வசிப்பவர்களுக்கு நிழல் கிடையாது, அதாவது நகரில் ஒருவர் நுழைய அனுமதிக்கப்படும்போது அவரது நிழல் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடும் என்பதாகவும், தற்போது தன்னுடைய நிஜ உருவம் அங்குதான் வசிப்பதாகவும் இப்போது இங்கு இருக்கும் தான் அதனுடைய நிழல் என்றும் சொல்கிறாள்.

கனவுகள் பாதுகாத்து வைக்கப்பட்ட ஒரு நூலகமும் அங்கிருக்கிறது. அந்த நூலகத்தில்தான் அவளுடைய நிஜம் பணிபுரிகிறது. நூலகத்தில் பாதுகாக்கப்படும் கனவுகளைப் படிக்க ஒரு வேலையிடமும் காலியாக இருக்கிறது. அந்த வேலைக்கு அவனால் வர முடியும். ஆனால் அதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது, நகரத்தில் நுழையும் முன்பு அவனது நிழல் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு விடும். பிறகு அவன் ஒருபோதும் இப்போதைய நகரத்திற்குத் திரும்ப வரவே முடியாது. இரண்டாவது சிக்கல், தனது காதலிக்காக இப்படி ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டாலும், அங்கு வசிக்கும் அந்த நிஜ உருவத்திற்கு இவன் தன்னுடைய காதலன் என்றோ, குறைந்தபட்சம் இவனைப் பற்றிய எந்தவொரு பின்னணித் தகவலும் நினைவில் இருக்காது.

தனது காதலியின் கற்பனை உலகத்தை எவ்வித அவநம்பிக்கையோ, அலட்சியமோ இன்றி உண்மையான ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்வதைப் போலவே கவனத்துடன் கேட்டுக்கொள்கிறான். சில அசந்தர்ப்பமான முன்னுக்குப் பின் முரணான நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒருநாள் காதலி காணாமல் போகிறாள். காதலியின் வீட்டு முகவரி, தொலைபேசி என்று அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பலனின்றி முடிகின்றன. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தனது காதலி பற்றிய நினைப்பில் தனியாக அன்றாடத்தைக் கழிக்கிறான். கற்பனையும் நிஜமும் தனிமையும் பிரிவேக்கமும் சூழ்ந்த மனநிலை அவனை நுழைய முடியாத உயரமான பாதுகாப்பு அரண் சூழ்ந்த நகரத்தினுள் பிரவேசிக்க வைக்கிறது!

நகரத்திற்கென எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன. நேரத்தைக் காட்டாத வெறுமனே எண்கள் மட்டும் கொண்ட கடிகார கோபுரம், ஒட்டுமொத்த நகரத்தையும் கண்காணிக்க இருக்கும் ஒரே காவலாளி, குழப்பமான எல்லையைக் கொண்ட உருமாறும் சுற்றுச்சுவர், யூனிகார்ன் தவிர்த்து வேறு எந்தவிதப் பூச்சியோ, விலங்கினமோ வாழப் பொருத்தமற்ற சூழல், நிழல்களின் ஆன்மாக்கள் அடைகாக்கப்படும் கனவு நூலகம், கனவுகளை வாசிக்கும் பொறுப்பிலிருப்பவரின் கண்பார்வை நீக்கப்படுதல் என்று பல விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் எதுவும் யார் மீதும் திணிக்கப்பட்டோ தொடர் கண்காணிப்பில் இருக்கும் அவசியத்துடனோ அந்நகரம் இயங்குவதில்லை. அனைத்தும் கட்டுப்பாடற்ற சுதந்திரமான சீரொழுங்குடன் ஒத்திசைவோடு இயங்குகின்றன.

நகருக்கு வெளியே நாற்பத்தி ஐந்து வயதை நெருங்கும் சமயத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்திற்கு ஒரு நாள் ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு நூலகத்தில் நூலகராக இருக்கிறான். ஆனால் அது தனது காதலி தன்னிடம் சொல்லியிருந்தது போல் கனவுகள் பாதுகாக்கப்படும் நூலகம் அல்ல. வழக்கமான புத்தகங்கள் உள்ள ஒரு சிறிய நூலகம். தனது மீதமிருக்கும் வாழ்க்கையைப் பரபரப்பின்றி அமைதியாகக் கழிக்கச் சிறந்த இடம் நூலகத்தில் பணியாற்றுவதே என்பதே அக்கனவு குறிப்புணர்த்தும் செய்தி என்று புரிந்து கொண்டு, அதுபற்றிய தேடலில் இறங்கி, மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் நூலகத்தில் வேலைக்குச் சேர்கிறான்.

குளிர்கால உஷ்ணத்திற்காகக் கணப்பு அடுப்பில் எரிப்பதற்காக ஆப்பிள் மரக்கட்டைகள் ‘நகருக்கு வெளியே’ நூலகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘நகருக்கு உள்ளே’ பாதுகாப்பு அரணைத் தாண்டி வெளியே சென்று வர அனுமதிக்கப்படும் ஒரே ஆளான காவலாளி, வெளியிலிருந்து நகருக்கு கொண்டு வரும் ஒரே பொருள் ‘ஆப்பிள்’. ‘நகருக்கு உள்ளே’ இருக்கும் மணிக்கூண்டு கோபுரத்தில் இருக்கும் கடிகாரத்தில் நேரத்தைக் காட்டும் முள் கிடையாது. வெறுமனே எண்கள் கொண்ட தலைப்பகுதி மட்டுமே கொண்ட கடிகாரம் அது. ‘நகருக்கு வெளியே’ தன்னை வேலைக்குத் தேர்வு செய்த தலைமை நூலகர் கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் நேரத்தைக் காட்டும் முள் கிடையாது. இரண்டில் எது நிஜம்?, எது மாயை? நகருக்கு உள்ளே உள்ள கனவுகளைப் படிக்கும் நூலகமா அல்லது நகருக்கு வெளியே மலையடிவாரத்தில் இருக்கும் நூலகமா?. எது நிஜ உருவம்? எது நிழல்?

இந்த இரண்டு உலகத்திற்கும் பாலமாக இருப்பது மையக்கதாபாத்திரத்தின் காதலியின் பங்கு மட்டுமல்ல. நம்பவே முடியாத ஆற்றலுடன் புனைவு, வரலாறு, தத்துவம், அறிவியல் என்று எந்தத் துறையைச் சேர்ந்த நூலாக இருந்தாலும் அசாதாரணமான வேகத்துடன் படித்து கிரகித்துக் கொள்ளும் திறனும், படித்ததை இம்மி பிசகாமல் நினைவில் வைக்கும் நினைவாற்றலுமுடைய விசித்திரமான சிறுவன் ஒருவனும் வருகிறான். தலைமை நூலகராக வரும் கதாபாத்திரம் சுவாரஸ்யமான ஒன்று. முரகாமியின் அசலான முத்திரை வார்ப்பு இவ்விரண்டு பேரும்.

நாவல் மொத்தம் மூன்று பாகங்களைக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் நகரத்திற்கு ‘வெளியே’, ‘உள்ளே’ என்று ஒன்று விட்டு ஒன்று என்ற அத்யாயங்களின் வரிசைப்படி சொல்லப்படுகிறது. Kafka on the shore நாவலின் வடிவமும் இப்படியானதே. இரண்டாம் பாகம் முழுவதும் நகரத்திற்கு வெளியே நடக்கிறது. முதல் பாகத்தில், சிறுகதைகளில் முரகாமியிடம் காணப்படும் கச்சிதமான கதை சொல்லும் தன்மை வெளிப்படுகிறதென்றால், குறிப்பாக முரகாமியின் நாவல்களில் நாம் நுழைந்து பயணிக்க விரும்பும் அத்தனை சிறப்பம்சங்களையும் இரண்டாம் பாகம் கொண்டிருக்கிறது. இரண்டு பாகங்களின் தொனியும் வேறுபட்டது. கடைசி இருபது பக்கங்களே உள்ள மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகங்களின் சங்கமமாக உள்ளது. ((Runway- take off – landing) just a simile).

முரகாமியின் பிற குறிப்பிடத்தக்க புனைவுகளோடு இந்நாவலை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. உதாரணமாக Killing Commendatore நாவலில் வரும் மையக்கதாபாத்திரம் ஓர் ஓவியன். மனிதர்களின் உருவத்தை வரைந்து தர முதலில் அவர்களின் ஆளுமையை அறிதல் அவசியம் என்பது ஓவியனின் பாணி. ஒப்பந்த ரீதியில் சந்திக்கும் மனிதர்களின் அக மற்றும் புற அம்சங்கள் ஒரு ஓவியனின் அவதானிப்பில் ஓவியத்திலும் சித்தரிப்பிலும் வெளிப்படும் பகுதிகள் அந்நாவலில் அபாரமாக வந்திருக்கும். 1Q84 நாவலில் dyslexia குறைபாடுடைய ஒரு பெண் வினோதமான நிகழ்வுகளைப் புனைந்து எழுதிய அபாயகரமான விளைவுகளை உண்டாக்கும் நாவலை மறு ஆக்கம் செய்ய ஒப்பந்தப்படுத்தப்படுகிறான் கதையின் மையக்கதாபாத்திரம். சிறுவயது முதலே அவன் அனுபவித்து வந்த யதார்த்தமான தனிமை நிறைந்த வாழ்க்கை இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது.

ஏதேனும் துறையில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு மனிதரின் பார்வைக் கண்ணோட்டத்தில் விரியும் புனைவு அசாதாரணமான தளத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், அந்த மாய உலகை நெருக்கமாகத் தொட்டுரணக்கூடிய வகையில் யதார்த்தங்களோடு இணைப்பது கதாபாத்திரங்களின் கடந்த கால அல்லது நிகழ் கால நேரடியான சந்தர்ப்பச் சூழல். இதை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்ட புனைவுகளாக மேலே சொன்ன இரண்டு புனைவுகளை வகைப்படுத்தலாம்.

ஆனால், இந்த அம்சங்களில் The City and its Uncertain Walls கொஞ்சம் சறுக்குகிறது. ஏனெனில் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும் நிகழ்வுகளின் ஊடாகப் பயணிக்கும் அனுபவம் சுவாரஸ்யமாகவே இருந்தாலும், முழுமையாகப் பார்க்கும்போது ஒட்டுமொத்த நாவலுமே ஒருவித அருவமான தொகுப்புத் தன்மையை அடைந்து விடுகிறது. தலைமை நூலகராக வரும் கதாபாத்திரம் இந்தக் குறையை கொஞ்சம் ஈடுகட்டுகிறது. ஆனால் உணர்வுரீதியான பிணைப்புக்கான ஆதாரம் கதையில் மிகக்குறைவான இடங்களையே கொண்டுள்ளது நாவலின் முக்கியமான பலவீனம்.

நாவலில் கற்பனையின் வீச்சு போதாமையாகப் பட்ட பகுதிகளும் இருக்கின்றன. உதாரணமாக நகரத்தில் கனவுகளைப் படிக்கும் பணியில் இருக்கும் சமயத்தில், புதுமையான சூழலின் பாதிப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறியாக மையக்கதாபாத்திரம் காய்ச்சலில் இருக்கும் தருணம், அவனைக் கவனித்துக் கொள்ள ஒரு முதியவர் வருகிறார். தான் இந்த நகரத்திற்கு வரவழைக்கப்படக் காரணமாக இருந்த வெளி உலக வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பாதிப்பைப் பற்றி அவனிடம் பகிர்ந்து கொள்வார். அதன் உச்சக் கட்டத்தில் அந்தப் பயங்கரத்தை விவரிக்க எந்த ஒரு கவிஞனாலும் இலக்கியப் பிரதியாலும்கூட முடியாது என்று முடித்துக் கொள்வார். அதேபோல நகரத்தில் நுழையும் முன்பு நிழல் நிஜ உருவத்திடமிருந்து பிரிக்கப்படும் பகுதியும், தீவிரமான சித்தரிப்புக்கு இடமிருந்தும் சடுதியில் கடந்து விட்டது.

ஒரு மாய நிகழ்வு அல்லது அசாதாரண நிகழ்வு யதார்த்தமாகக் கண் முன் நிகழ்வதைப்போல நெருக்கமாக உணர வைக்க நிச்சயமாகப் பலம் வாய்ந்த சித்தரிப்பு அவசியம். Wind Up Bird Chronicle நாவலில் மங்கோலியர்கள் தங்களிடம் மாட்டிக்கொண்ட ராணுவக் கைதிகளின் முழு உடலின் சருமத்தின் மேலடுக்கை மட்டும் உரித்தெடுக்கும் முழுச்செயல்பாட்டையும் வாசிப்பவருக்கு மூச்சுத் திணற வைக்கும் வகையில் நான்கைந்து பக்கங்களுக்கு நீளும். தீவிரமும் துல்லியமுமான சித்தரித்திருப்பில் சாத்தியப்படுத்திய முரகாமியிடம் இப்படியான எதிர்பார்ப்பு வருவது இயல்புதானே!.

இத்தனை குறைகள் இருந்தாலும் இந்த நாவலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?.முதலாவதாக மொழியைச் சொல்ல வேண்டும். முரகாமியின் புனைவுகளில் என்னுடைய வாசிப்பனுபவத்தில் மொழிநடை இத்தனை சரளமாக அமைந்த நாவலாக இதையே முதலிடத்தில் வைப்பேன். இத்தனைக்கும் முரகாமியின் எந்த ஒரு புனைவும் த்ரில்லர் கதையை விறுவிறுப்பான எழுத்துநடை கொண்டதல்ல. ஆனால் மிகச்சிறந்த பேஜ் டர்னர் வரிசையில் எப்போதும் இருக்கத் தவறியதில்லை. அதில் இந்த நாவலும் விதிவிலக்கல்ல. இரண்டாவது, முரகாமியின் கதைசொல்லல். சாதாரணமாகக் கண்ணில் பட்டு கடந்து சென்றுவிடக்கூடிய நிகழ்வும்கூட சுவாரஸ்யமான கதையாக மாறுவதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை முரகாமியின் பெரும்பாலான கதைகளில் இருந்து உதாரணங்களைக் காட்ட முடியும். நிறைகுறைகளைத் தாண்டி முரகாமியின் நாவல்களை ஆங்கிலத்தில் இதுவரை வாசித்திருக்காதவர்கள் முதல் வாசிப்புக்குத் தாராளமாக இந்நாவலைத் தேர்வு செய்யலாம்.

சலிப்பான அன்றாட நிகழ்வுகளின் சுழற்சி முரகாமியின் புனைவுகளில் மையக்கதாபாத்திரம் எதிர்கொள்ளும் தவிர்க்க முடியாத ஒன்று. இதைப் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனமாக நிறையப் பேர் வைப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனால், முரகாமியைத் தொடர்ந்து வாசித்தவன் என்ற முறையில் இந்தச் சலிப்பான அன்றாடத்தை எழுதுவதில்தான் முரகாமியின் தனித்திறன் இருக்கிறது என்பதாகவே பார்க்கிறேன். ஏனெனில் மேலே குறிப்பிட்ட மேற்கோள் வரிகளைப்போல் முரகாமியின் மையக் கதாபாத்திரங்கள் ரொம்பவே சாதாரணமானவர்கள். பெரும்பாலும் தனக்கென லட்சியங்களை வகுத்துக்கொண்டு அவற்றை நோக்கி விடாப்பிடியாக முன்னேறும் வகையைச் சாராதவர்கள். மிக எளிமையான கைவசம் இருக்கும் சந்தோஷங்களையே தங்களுக்குத் தக்க புதுப்பித்துக் கொள்பவர்கள். அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பத்தப்படாத ஓர் அபாயத்தை எதிர்கொள்ளும்போது அவர்கள் அண்ட நினைக்கும் ஒரே புகலிடம் தங்களது அன்றாட சலிப்புகளுக்குள்தான்! அங்குதான் தங்களின் சிடுக்குண்ட மனதை ஆற்றுப்படுத்தும் வழிகளை அவர்கள் கண்டறிகிறார்கள். குழப்பங்களை விடுவிக்கப் பெரிய சாகசம் எதுவும் தேவையில்லை அவர்களுக்கு. சாதாரணமாக நேர்த்தியாக ஒரு சட்டையை அதன் ஒழுங்குதன தொடர்ச்சி பிறழாமல் அயர்ன் செய்தால் அவர்களைப் பொறுத்தவரை அதுவே கூட அவர்களின் அகச்சிக்கலைக் களைய போதுமானது.

0

பகிர:
ரஞ்சித் குமார்

ரஞ்சித் குமார்

சொந்த ஊர் தென்காசி அருகில் சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிகிறார். வாசிப்பிலும் ஊர்சுற்றுவதிலும் ஆர்வம் அதிகம். அவ்வப்போது இலக்கிய விமரிசனங்கள் எழுதிவருகிறார். தொடர்புக்கு : ranjithlogin01@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *