Skip to content
Home » பூமியும் வானமும் #10 – கோல்டன் எண்பதுகள்

பூமியும் வானமும் #10 – கோல்டன் எண்பதுகள்

கோல்டன் எண்பதுகள்

1974. ஹேமமாலினியும் தர்மேந்திராவும் காதலித்து வந்தார்கள். ஆனால் கல்யானத்தில் ஒரே ஒரு சின்ன சிக்கல்தான். தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தார்கள்.

ஹேமமாலினியின் பெற்றோர் அந்தத் திருமணத்தை நிறுத்த ஒரு மாஸ்டர் பிளான் போட்டார்கள். ஹேமமாலினியுடன் அப்போது ஜீதேந்திரா சில படங்களில் நடித்து வந்தார். அவரும் பிரபலமான நடிகர். கல்யாணம் ஆகாதவர். அவர் மேல் ஹேமமாலினிக்கு மதிப்பு உண்டு. சும்மா தர்மேந்திரா வேண்டாம் எனச் சொல்வதைவிட ‘ஜீதேந்திராவைக் கட்டிக்க’ என்று சொன்னால் என்ன?

முதலில் ஜீதேந்திராவிடம் போய் கேட்கிறார்கள். அப்போது அவர் ஷோபா எனும் விமானப் பணிப்பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால் ஹேமமாலினியைத் திருமணம் செய்யும் வாய்ப்பு வந்தால் நழுவவிடுவாரா என்ன? ஓகே சொல்லிவிட்டார். அதன்பின் ஹேமமாலினியிடம் பேசி மனதை மாற்றுகிறார்கள்.

தர்மேந்திராவுக்கு முதல் மனைவியை விவாகரத்து செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. ஹேமமாலினி இரண்டாவது மனைவியாகத்தான் இருக்கமுடியும். இதை எல்லாம் பேசி கன்வின்ஸ் செய்ய, ஹேமமாலினியும் ஜீதேந்திரா என்பதால் ஓகே சொல்லிவிட்டார்.

ஹேமமாலினியின் சொந்த ஊர் சென்னை என்பதால் ரகசியமாக அங்கே கல்யாணத்தை வைக்கலாம் எனத் திட்டமிட்டார்கள். ஆனால் பத்திரிகையொன்று மோப்பம் பிடித்து செய்தி வெளியிட, தர்மேந்திரா ஆவேசமடைந்தார். ஷோபா- ஜீதேந்திரா விவகாரமும் அப்போது இண்டஸ்ட்ரியில் பரவலாகத் தெரியும். ஷோபாவுக்கு போன் செய்து அழைத்துக்கொண்டு இருவரும் சென்னைக்கு பறக்கிறார்கள். சினிமாவில் வருவது போல தாலி கட்டும் சமயம் போய் கல்யாணத்தை நிறுத்துகிறார்கள்.

அதன்பின் ஷோபா- ஜீதேந்திரா திருமணம் நடக்கிறது. தர்மேந்திரா ஹேமமாலினி திருமணமும் நடக்கிறது.

0

12 அக்டோபர் 1976.

மும்பையில் இருந்து சென்னை செல்லும் அந்த விமானத்தில் ஏற நடிகை ராணி சந்திரா, அவரது இரு சகோதரிகள், தாய் மற்றும் அவரது கலைக்குழுவினர் மும்பை விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். ராணி சந்திரா வளர்ந்து வந்த நடிகை. தமிழில் அவரது முதல் படம் பத்திரகாளி ரிலீஸ் ஆக இருந்தது. அதில் ராணி சந்திரா சில காட்சிகளில் மட்டும் நடித்து முடிக்கவேண்டும். நடுவே துபாய்க்கு கலைநிகழ்ச்சிக்கு குழுவுடன் சென்று ஊர் திரும்புகிறார்.

அதே விமானத்தைப் பிடிக்க ஜீதேந்திராவும் வருகிறார். ஆனால் அன்று கர்வாசோத். வடநாட்டுச் சுமங்கலி பெண்கள் கணவனுக்காக விரதம் இருந்து அதன்பின் கணவர் கையால் உணவு உண்டுதான் உண்ணாவிரதத்தை முடிக்கமுடியும். ஷோபா கர்வாசோத் விரதம் இருக்க, முக்கியமான ஷூட்டிங் எனச் சொல்லி விரதத்தை முடிக்காமல் ஜீதேந்திரா விமான நிலையம் வருகிறார்.

ராணி சந்திரா
ராணி சந்திரா

ராணி சந்திராவும் அவரும் ஒரே விமானத்தைப் பிடிக்கவேண்டும். ஆனால் போர்டிங் அழைப்பு வருகையில் ராணி சந்திரா மட்டுமே விமானம் ஏறுகிறார். ஜீதேந்திராவுக்கு மனசு கேட்காமல் மனைவியின் கர்வாசோத் விரதத்தை முடித்து வைக்க வீட்டுக்குப் போய்விடுகிறார். விமான நிலையம் அருகேதான் வீடு.

நிலாவைப் பார்த்தபிறகுதான் விரதம் முடிவடையும் என்பதால் நிலாவைப் பார்க்க இருவரும் மாடிக்கு செல்கிறார்கள். நிலா தெரியவில்லை. ஆனால், தான் செல்லவேண்டிய விமானம் விண்ணில் எழுவதை ஜிதேந்திரா பார்க்கிறார். மனைவிக்கும் காட்டுகிறார்.

அப்போது நெருப்புப் பந்தாக அந்த விமானம் விண்ணில் இருந்து விழுகிறது. அதில் பயணம் செய்த நடிகை ராணி சந்திரா உள்பட 89 பேர் பலி.

கண்ணால் கண்டதை நம்ப முடியாமல் திகைக்கிறார் ஜிதேந்திரா. அதன்பின் வீட்டு போன் தொடர்ந்து அடிக்கிறது. ஜிதேந்திரா பயணம் செய்த விமானம் நொறுங்கியது எனச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த பாலிவுட்டும் போன் செய்கிறது. உறவினர்கள் பதறி அழுதபடி வீட்டுக்கு ஓடி வருகிறார்கள்.

போனை ஜிதேந்திராவே எடுக்கிறார்… ‘ஷோபாவின் கர்வாசோத் விரதம் என் உயிரை காப்பாற்றியது’ என்கிறார்.

டிசம்பர் 1976.

ராணி சந்திராவுக்கு பதில் டூப்பை நடிக்க வைத்து மீதமிருந்த காட்சிகளை முடித்து பத்ரகாளி ரிலீஸ் ஆகிறது. படம் சூப்பர் டூப்பர் ஹிட். மூன்று மொழிகளில் அதன்பின் ரீமேக் ஆனது.

ஜீதேந்திரா பாலிவுட்டில் தன் வெற்றி நடையைத் தொடர்ந்தார். அவரும் ஷோபாவும் இணை பிரியாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

0

நீனா குப்தா.

1980களில் அந்தச் செய்தி பத்திரிகைகளில் கிசுகிசுவாக வெளிவந்தது. பிறகு சம்பந்தபட்டவர்களால் ஊர்ஜிதமும் செய்யப்பட்டது.

நடிகை நீனா குப்தா- விவியன் ரிச்சர்ட்ஸ் காதல். கிரிக்கெட் வீரர்கள் நடிகைகள் காதல் கிசு கிசு அப்போது மிகவும் சாதாரணம். ஆனால் நீனா குப்தா ஒரு படி மேலே போய் கர்ப்பம் ஆகிவிட்டார். ஆனால் கல்யாணம் என்ற பேச்சு எழ முடியாதபடிக்கு ஒரு சிக்கல். விவியன் ரிச்சர்ட்ஸுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருந்தன. அபார்ஷன் செய்துகொள்ளாமல் ஒரு மகளை பெற்றார் நீனா குப்தா. மசாபா என்ற பெயரைச் சூட்டியதுடன் ரிச்சர்ட்ஸின் கடமை முடிந்தது. இருவரும் பிரிந்தார்கள்.

சிங்கிள் மதராக மசாபாவை வளர்த்தார் நீனா குப்தா. இப்போது மசாபாவுக்கு வயது 33. அம்மாவைப் பற்றி சொல்கையில், ‘அம்மா ஒரு சர்வைவர். தனியாக என்னை வளர்த்தார். வீட்டில் உணவு, உறைவிடம், படிப்பு எதற்கும் பிரச்சனை இல்லை. எல்லாம் இருந்த மாதிரி இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று இல்லாத மாதிரியும் இருந்தது…’

‘காலசக்கரத்தில் ஏறிப் பின்னோக்கிப் போக முடிந்தால், மசாபாவைத் தந்தை இல்லாமல் வளர்த்து இருக்க மாட்டேன்’ என்றார் நீனா. ‘அவளை நல்லபடி வளர்த்தாலும், அவள் வளர்கையில் துன்பத்தை அனுபவித்ததை உணர முடிந்தது…’

மசாபாவுக்கு கல்யாணம் ஆனது. சில ஆண்டுகளில் விவாகரத்தும் ஆனது. குழந்தைகள் இல்லை. 33 வயதில் சிங்கிள் பெண்ணாக இருக்கிறார். ‘மசாபா கலெக்ஷன்ஸ்’ எனும் பெயரில் பேஷன் டிசைனர் கம்பெனி நடத்தி வருகிறார்.

அவர் வீடு தேடும் படலத்தை ‘மசாபா’ எனும் டிவி தொடராக வெளியிட்டார். அதில் அவர் வீடு தேடி போகையில் ‘சிங்கிள் பெண், அதிலும் செலப்ரிட்டி’ எனச் சொல்லி வீடு கொடுக்க மறுக்கிறார்கள். ‘நீங்க டிரக்ஸ் அடிப்பீங்க, வீட்டுக்கு பாய் பிரண்டுகளை கூட்டிட்டு வருவீங்க. பார்ட்டி வெப்பீங்கனு பயப்படறாங்க’ என புரோக்கர் விளக்கம் கொடுக்கிறார்.

மசாபா அப்போது விவாகரத்து வழக்கில் சிக்கி மன அழுத்தத்தில் இருந்தார். இன்ஸ்டாகிராமில் சந்தித்த ஓர் இளைஞனை பேஷன் டிசைன் பணிக்கு உதவ அழைக்கிறார். அவனோ வந்தவுடன் அவரை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கிறான்.

ஆனால் அப்போது அவருக்கு வீடும் கிடைத்துவிட, புது வீட்டுக்குப் போகிறார். கையில் ஒயினுடன், ‘எனக்கு வீடு கிடைச்சுடுச்சு. நான் தனியா இருக்கேன்’ என மகிழ்ச்சியாகப் பாடுகிறார். பின்னர் ‘நான் தனியாக இருக்கிறேன்…’ என்ற சோகப்பாட்டாக அது மாறுகிறது.

காலையில் பார்த்த இளைஞன் ஞாபகத்துக்கு வர அவனுக்கு போன் செய்கிறார். அவன் உடனே ஓடி வந்துவிடுகிறான். அதன்பின் இருவரும் கலவியில் ஈடுபடுகிறார்கள்.

வேலையை முடித்தபின் அவன் ‘எனக்கு கேர்ள் பிரண்டு இருக்கு’ எனச் சொல்ல, மசாபா அவனைக் கண்டபடி திட்டி துரத்திவிடுகிறார். அவனும் தோளைக் குலுக்கியபடி விடைபெறுகிறான்.

மசாபா அதன்பின் மீண்டும் தனிமையில் வீட்டில் சோகத்துடன் இருப்பதுடன் எபிசோடு நிறைவடைகிறது.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *