இந்தியாவுக்கு வடக்கே காஷ்மிரைத் தாண்டிச் சென்றால் பாகிஸ்தானில் உள்ள வடக்கு காஷ்மிர் பகுதியும், ஆப்கானிஸ்தானும், தஜிகிஸ்தானும், சீனாவின் ஜிந்ஜியாங் மாநிலமும் சந்திக்கும் ஒரு நகரம் வரும்.
நான்கு நாடுகள் ஒன்றாகச் சந்திக்கும் நகரம் அது. நான்கு கலாசாரங்கள். உருது, சீனம், தாஜிக், வீகர் என நான்கு மொழிகள் பேசப்படும் பகுதி.
இதற்கு சிலநூறு மைல் தெற்கே காஷ்மீர் பிரச்சினை நடப்பதன் எந்த அறிகுறியும் இங்கே தெரியாது. காரணம் இது அத்தனை அழகான, அமைதியான நகரம். ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
இதன் பெயர் தஷ்குர்கான் (Tashkurgan).
சீனாவின் மேற்கு எல்லையின் கடைசி நகரம். நான்கு நாடுகள் சந்திக்கும் பகுதி என்பதால் வக்ஜீர் கணவாய் (Wakhjir Pass) வழியாக ஆப்கானிஸ்தான் போகலாம். ஆனால் உடனே உங்கள் கடிகாரத்தை 3.5 மணிநேரம் தள்ளிவைக்கவேண்டும். சீனா, ஆப்கானிஸ்தான் இடையே நேர வித்தியாசம் 3.5 மணிநேரம்.
அங்கிருந்து பாகிஸ்தான் போக இரு நாடுகளையும் இணைக்கும் 1600 கிமி நீளமுள்ள காரகோரம் நெடுஞ்சாலை தஷ்கர்கான் வழியாகத்தான் போகிறது. லாகூரில் இருந்து நிறைய டூரிஸ்ட் பஸ்களை காரகோரம் மலைப்பாதை வழியே சீனாவுக்கு விடுவார்கள். இந்த நெடுஞ்சாலையில் போவது சுகமான அனுபவம்.
சிந்து நதி, இமயமலையின் பகுதியான நங்கபர்பத், காரகோரம் மலைப்பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பாமிர் மலைப்பகுதி ஆகியவற்றைப் பார்த்தபடி ஜாலியாக போகலாம். உலகின் மூத்த குடிகளுள் ஒன்றான ஹன்சா பழங்குடியினர் இங்கேதான் வசிக்கிறார்கள்.
நம் இலக்கியங்களில் வரும் கின்னர, கந்தர்வர்கள் வசிக்கும் பகுதி காஷ்மீரம், அவர்கள் இங்கிருக்கும் இனக்குழுக்கள் எனவும் ஒரு கருத்தாக்கம் உண்டு. அதை மெய்ப்பிப்பது மாதிரி இப்பகுதி மக்கள் அத்தனை அழகாக இருப்பார்கள். அலெக்சாந்தர் காலத்தில் இங்கே குடியேறிய கிரேக்க வீரர்கள் இங்கேயே செட்டில் ஆகி கலாஷ் எனும் ஒரு இனக்குழுவாக வசித்து வருகிறார்கள்.
ஆக இத்தனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை எல்லாம் தாண்டி பாகிஸ்தானில் இருந்து காரகோரம் நெடுஞ்சாலை வழியே தஷ்கர்கான் நகரில் நுழைந்தால் உடனே நவீன சீனா உங்களை வரவேற்கும். தஷ்கர்கானில் அமெரிக்க ஓட்டலின் கிளைகள் உள்ளன. மிக ஆதிகால கோட்டை ஒன்று உள்ளது. பழைய பட்டுப்பாதையில் இருந்த முக்கிய நகரம்.
யுவான் சுவாங் இவ்வழியேதான் சீனாவை தாண்டி இந்தியாவுக்கு வந்தார்.
அங்கே மிக தொன்மையான கல் கோபுரம் உள்ளது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் பகுதியாக இந்தக் கல் கோபுரம் இருப்பதாக பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர் டாலமி எழுதியுள்ளார்.
தஷ்கர்கான் சுமார் 3000 மீட்டர் உயரமான பீடபூமி. இமயத்தின் பனி உருகி ஏராளமான அழகான ஏரிகளை உருவாக்கியுள்ளது. ஏராளமான மேலைநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கே வருகிறார்கள்.
வரலாறும், நவீனமும், இயற்கை அழகும் சந்திக்கும் பகுதி. நான்கு நாடுகளின் வரலாற்றின் மிக முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் சுவடே இல்லாமல் இன்று அமைதியாக உள்ளது தஷ்கர்கான்.
பாலைவனச்சாலை
தஷ்கர்கானுக்குச் செல்ல சீனாவின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்குபகுதிக்கு ஒரு நெடுஞ்சாலை உள்ளது.
சீனாவின் மிகப்பெரிய பாலைவனங்களில் ஒன்று தக்ளிமாக்கன் பாலைவனம். வீகர் மொழியில் தக்ளிமாக்கன் (Taklimakan) என்றால் ‘போனால் திரும்பிவரமாட்டாய்’ என பொருள்.
சுமார் 500 கிமி நீளமுள்ள இந்தப் பாலைவனம் கடக்க அத்தனை கடினமானது. மார்கோ போலோவே மிகக் கஷ்டபட்டுதான் இதைக் கடந்ததாகத் தன் நூலில் எழுதியுள்ளார். இந்தப் பாலைவனத்தில் ஒரு நெடுஞ்சாலை அமைத்து ஜின் ஜியாங் மாநிலத்தை கிழக்கு சீனாவுடன் இணைக்க சீன அரசு முடிவெடுத்தது. ஆனால் தக்ளிமாக்கன் பாலைவனத்தில் பெரும் புயல் அடிக்கடி வீசும். ஏராளமான அளவில் மண் மேலெழும்பும். பாலைவன மண்ணும் புயல்காற்றால் நகர்ந்துகொண்டே இருக்கும்.
இங்கே சாலை அமைத்தால் ஒரு புயல் காற்று அடித்தாலே சாலையின் பெரும்பகுதி மணலால் மூடப்பட்டுவிடும். எப்படிச் சாலை அமைப்பது?
500 கிமி நீளத்துக்கு சாலையின் இருபுறமும் மரங்களையும், செடிகளையும் ஒரு பசுமை நெடுஞ்சாலை போல நட்டு நடுவே சாலை அமைத்தால் என்ன? இருபுறமும் பல நூறு மீட்டர் அகலத்துக்கு காடுகள் மாதிரி மரங்களையும், செடிகளையும் நடவேண்டும். சொட்டுநீர் பாசனம் மூலம் அவற்றுக்கு நீர் விட்டால் மிக குறைவான நீர்தான் பிடிக்கும்.
அதே மாதிரி செய்தார்கள். ஆனால் பாலைவனத்தில் விளையக்கூடிய மரத்துக்கு எங்கே போவது? மங்கோலியப் பாலைவனத்தின் ஓரங்களில் வளரும் பாப்லர் எனும் வகை மரத்தை நட்டார்கள். இந்த மரம் மணலில் வளரக்கூடியது, மேலும் ஒவ்வொரு மரமும் மண்ணில் இருந்து ஆன்டு ஒன்றுக்கு 10 கிலோ உப்பை உறிஞ்சி எடுக்கக்கூடியது. இதனால் நிலமும் மேம்படும். சொட்டுநீர் பாசனம் மூலம் மரங்களுக்கும் செடிகளுக்கும் நீர் விடபட்டது.
சாலையை அமைக்க பொருட்களுக்கும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. பாலைவன மணலையே தட்டி எடுத்து,மேடை மாதிரி போட்டு சாலை அமைத்துவிட்டார்கள்.
உலகின் மிக நீளமான பாலைவனச்சாலை எனப் பெயர் பெற்ற இந்தச் சாலையின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் பல பாலைவனங்களில் சாலைகளை அமைக்கமுடியும் என்கிறார்கள். மார்கோ போலோ காலத்தில் கடக்கமுடியாத பாலைவனம் இன்று புவியியலின் விந்தையால் வெற்றிகொள்ளபட்டுள்ளது.
0