Skip to content
Home » பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

பூமியும் வானமும் #19 – ரோமானியர் கதைகள்

கிளியோபாட்ரா

ஆர்க்கிமிடிஸ்

கிமு 241.

இத்தாலியின் தென்முனையில் உள்ள சிராகுஸ் தீவு ரோமானியப் பேரரசுக்கு கட்டுப்பட்டு இருந்தது. அதை 50 ஆண்டுகள் ஆண்ட மன்னர் இறந்தவுடன் அவரது 15 வயது பேரன் அரியணை ஏறினான். இள ரத்தம். ரோமுக்கு எதிராகப் புரட்சி செய்தான்.

மூன்றி லீஜியன் படைகளை அனுப்பியது ரோம். கிட்டத்தட்ட மும்மடங்கு பெரிய படை. கடலோரம் இருந்த சிராகுஸ் நகரை 60 கப்பல்கள் கொண்டு முற்றுகை இட்டார்கள்.

15 வயது மன்னனும் அன்றைய உலகின் மிகப்பெரிய பேரரசும் மோதிக்கொள்வதால் ஒரு சில நாட்களில் போர் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

சிராகுஸில் ஒரு கிழவர் இருந்தார். அவர் தன் தாய்நாட்டுக்கு உதவ முன்வந்தார். அவர்தான் ஆர்க்கிமிடிஸ். கணித மேதை என கருதப்பட்டாலும் மிகப்பெரிய ராணுவ விஞ்ஞானியும் ஆவார்.

கடலோரமாக இருந்த கோட்டைச் சுவர்களைத் தாக்க முயன்ற ரோமானியக் கப்பல்கள் கோட்டைச் சுவர் மேலே ஒரு மிகப்பெரிய குவிக்கண்ணாடியைக் கண்டன. குவிக்கண்னாடி சூரிய ஒளியை ரோமானியக் கப்பல்களை நோக்கிக் குவித்தது. ‘ஆர்க்கமிடிஸின் மரணக்கதிர்கள்’ எனப் பின்னாளைய ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் பீதியுடன் அழைத்த கதிர்கள் அதிலிருந்து கப்பல்களை நோக்கிப் பாய்ந்தன. கப்பல்கள் நின்ற இடங்களில் தீப்பிடித்து எரிந்தன.

‘ஆர்க்கமிடிஸின் மரணக்கதிர்கள்’
‘ஆர்க்கமிடிஸின் மரணக்கதிர்கள்’

ஆர்க்கிமிடிஸின் நகங்கள் என அழைக்கப்படும் நீன்ட மரக்கரங்கள் கோட்டைச் சுவர்களில் இருந்து ரோமானியக் கப்பல்களை எட்டிப்பிடித்து கவிழ்த்தன. நெருப்புக் கப்பல்கள் என அழைக்கப்படும் கிரேக்கக் கப்பல்கள் நாப்தாவைப் பீய்ச்சி அடித்தன. அதில் நெருப்புப் பற்றவைக்க கடலே பற்றி எரிந்தது. கப்பல் கவிழ்ந்து, கடலில் நீந்திக்கொன்டிருந்த ரோமானியர் பற்றி எரிந்தார்கள்.

மிகப்பெரும் தோல்விக்குப் பின் தப்பி ஓடியது ரோமானியப் படை. ‘பத்தாயிரம் கை அரக்கன் ஆர்க்கிமிடிஸிடம் தோற்றுவிட்டோம்’ என ரோமானியத் தளபதி மார்சிலியஸ் கையைப் பிசைந்தான். ஆனால் எதாவது வாய்ப்பு வரும் என தீவைவிட்டு அகலாமல் பக்கத்து நகரில் பொறுமையாகக் காத்திருந்தான்.

மிகப்பெரும் வெற்றிக்கு பின் வசந்த விழாவைக் கொண்டாடினார்கள் சிராகுஸியர்கள். மது ஆறாக ஓடியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரவோடு இரவாக கோட்டை சுவரில் ஏறி எந்த எதிர்ப்பும் இன்றி நகரைப் பிடித்தார்கள் ரோமானியர்கள்.

ஒரு விஞ்ஞானியின் வெற்றியை ஒரு சிறுவனின் அலட்சியம் காவு கொடுத்துவிட்டது. ‘ஆர்க்கிமிடிஸைப் பத்திரமாகக் கொன்டு வாருங்கள்’ என்று உத்தரவு போட்டு ஒரு படையை அனுப்பினார் மார்சிலியஸ்.

எந்தப் பதட்டமும் இன்றி பை (Pie) எனப்படும் 22/7ஐ ஆராய்ச்சி செய்துகொன்டிருந்தார் ஆர்க்கமிடிஸ். ‘ரோமானியத் தளபதி அழைக்கிறார். வாருங்கள்’ என படைவீரர்கள் அழைக்க, ‘முதலில் தரையில் வரைந்திருக்கும் என் வட்டங்களில் இருந்து காலை எடு முட்டாளே. உலகக் கணிதவியலில் அது முக்கியமான ஆராய்ச்சி’ என்றார் ஆர்க்கிமிடிஸ்.

‘முட்டாள் என்றா சொன்னாய்?’ என ஒரே சீவில் அவரது தலையைத் துண்டாடினான் அந்த மூடன்.

செய்தியறிந்த மார்சிலியஸ் கண்ணீர் சிந்தினான். ஆர்க்கிமிடிஸின் குடும்பத்துடன் மனதார மன்னிப்புடக் கேட்டு, அவருக்கு சிராகுஸில் நினைவிடம் எழுப்பி மரியாதை செய்தான்.

0

சீசரின் மதிப்பு

கிமு 75.

ஏஜியன் கடலில் சென்றுகொண்டிருந்த கப்பலை வழிமறித்த கடல் கொள்ளையர் அதில் நல்ல பணக்காரர் மாதிரி இருந்த ஒரு இளைஞரை வளைத்துப் பிடிக்கிறார்கள். அவரைத் தம் இருப்பிடத்துக்கு கொண்டு போகிறார்கள். விடுவிக்கவேண்டுமெனில் 25 பொற்காசுகள் கொடுக்கவேண்டும் என்கிறார்கள்.

‘என் மதிப்பு தெரியாத முட்டாள்களா நீங்கள்? நான் ஜூலியஸ் சீசர். (அப்போது அவர் சாதாரண குடிமகன் மட்டுமே). 25 காசுகள் மட்டும் கேட்டால் என் மதிப்பே குறைந்துவிடும். ஐம்பது காசுகள் கேளுங்கள்’ என சீசர் சொல்லி அனுப்புகிறார்.

அவர் கைதி போலவே நடந்துகொள்ளவில்லை. அவர்களைத் தன் பணியாட்கள் போல நடத்தினார். அவர் தூங்குகையில் அவர்கள் பேசினால் உஷ் என்று சத்தம் போடுவார். தன் கவிதைகள், உரைகளைக் கேட்கச் சொல்லி அதட்டுவார். ‘என்னை விடுவித்தால் நான் செய்யும் முதல் வேலை உங்களைச் சிலுவையில் அறைவதுதான்’ என்பார்.

ஐம்பது பொற்காசுகள் வந்ததும் அவரை விடுவித்து இன்றைய துருக்கியில் இறக்கிவிட்டனர் கொள்ளையர். அங்கே ஒரு படையைத் திரட்டிக்கொண்டு கொள்ளையரைத் தேடிக்கொண்டு மீண்டும் கிளம்பினார் சீசர். சொன்னது போல் அதே இடத்தில் அனைவரையும் சிலுவையில் அறைந்து காசுகளைப் பிடுங்கிக்கொண்டுதான் ஊர் திரும்பினார்.

0

கிளியோபாட்ரா

எகிப்தை ஆண்டு வந்த கிரேக்க வம்சத்தின் கடைசி ராணி. அவளுக்கு 18 வயது ஆகையில் தந்தை மறைந்துவிட்டார். அவருக்கு நாலு பிள்ளைகள், மூத்தவள் கிளியோபாட்ரா. அடுத்த வாரிசு டாலமி. அவன் வயது 13. அக்காவுக்கும் தம்பிக்கும் கல்யாணம் செய்து வைத்து இருவரும் நாட்டை ஆளவேண்டும் என சொல்லிவிட்டு மறைந்தார் அப்பா. (எகிப்தில் ராஜ குடும்பத்தில் இதுதான் வழக்கம்).

ஆனால் விரைவில் அக்கா தம்பிக்கு இடையே சண்டை வந்துவிட்டது. எகிப்து அன்று ரோமானியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அரசாக இருந்தது. ஜூலியஸ் சீசர் தன் எதிரி பாம்பேவைத் துரத்திக்கொண்டு எகிப்து வந்தார்.

டாலமி பாம்பேவைப் பிடித்துத் தலையை வெட்டி சீசரிடம் சமர்ப்பித்தான். மகிழ்ச்சியடைந்த சீசர் ‘நீ தான் இனி எகிப்தின் அரசன்’ எனச் சொல்லிவிட்டு ஓய்வெடுக்க தன் அரண்மனைக்கு சென்றார்.

‘படுத்துத் தூங்கவேண்டும். கம்பளியை விரியுங்கள்’ என்றார். கம்பளி விரிந்தது. உள்ளே அழகுச் சிலையாக கிளியோபாட்ரா. சீசரும் நோக்கினார். கிளியும் நோக்கியது. கண்டதும் காதல்.

சீசரைச் சந்திக்க கிளியோபாட்ரா கையாண்ட உத்தி இது. அதன்பின் காலையில் விவரம் தெரிந்து டாலமி அடித்துப் பிடித்துக்கொன்டு ஓடிவர அதற்குள் எல்லாமே மாறிவிட்டிருந்தது. ‘கிளியோபாட்ராவுடன் சேர்ந்து ஆட்சியை நடத்து’ என ஆணையிட்டார் சீசர்.

அதன்பின் கிளியோபாட்ராவின் கை ஓங்கியது. அவள் சொன்னதுதான் சட்டம். டாலமியைக் கொன்று நைல் நதியில் வீசி தானே எகிப்தின் அரசி ஆனாள். மற்ற இரு தம்பி, தங்கைகளையும் கொன்று ஒரே வாரிசாக அரியணையில் அமர்ந்தாள்.

ஆனால் அதற்குள் கர்ப்பமும் ஆகிவிட ‘இது சீசரின் குழந்தை’ என சொல்லியபடி ரோம் சென்றாள். அவளுக்கு மகனும் பிறக்க ‘சீசரின் மகன்’ எனும் பொருளில் சிசேரியன் என பெயர் சூட்டினாள். சீசர் அவளை ஏற்றுக்கொள்ள, இருவரும் நான்கு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அதன்பின் சீசர் கொல்லப்பட, மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டது.

தன் மகன் சிசேரியன் ரோமானிய சக்ரவர்த்தி ஆகவேண்டும் எனச் சொல்லி சீசரின் நண்பர் மார்க் ஆண்டனியைக் காதலில் வீழ்த்தினாள் கிளியோபாட்ரா. ஆனால் சீசரின் வாரிசாக இருந்தவர் அவரது தத்துப்பிள்ளை அகஸ்டஸ் சீசர். அவர்தான் ஆட்சிக்கு வந்தார். மார்க் ஆண்டனி அகஸ்டஸ் சீசரின் தங்கை ஆக்டேவியாவை மணந்திருந்தான். கிளியோபாட்ராவுக்காக அவளைக் கைவிட்டுவிட்டான்.

மார்க் ஆண்டனி-கிளியோபாட்ரா
மார்க் ஆண்டனி-கிளியோபாட்ரா

இருவரும் எகிப்துக்கு திரும்பினார்கள். சீசரின் முன்னாள் மனைவி என்பதால் கிளியோபாட்ராவையும், மார்க் ஆண்டனியையும் அகஸ்டஸ் சீசர் தொல்லை செய்யவில்லை. ஆக்டேவியன் சீசர் எனும் பெயரில் அவர் ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் ஆசை யாரைவிட்டது?

சிசேரியனுக்கு 18 வயது ஆனது. அவன் பார்க்க அச்சு அசலாக ஜூலியஸ் சீசர் போலவே இருந்தான். அவன்தான் ரோமின் மன்னன் என ஆண்டனியும் க்ளியோபாட்ராவும் அறிவித்தார்கள். ஆடம்பரமாக விழாவும் எடுத்தார்கள்.

அதன்பின் ஆக்டேவியன் சீசர் படை எடுத்து வந்தார். போரில் மார்க் ஆண்டனி தோற்க, ரோமானியப் படைகள் எகிப்தை சூழ்ந்தன. சிசேரியனை கேரளா செல்லும் கப்பலில் அனுப்பிவிட்டு, தற்கொலை செய்துகொன்டாள் கிளியோபாட்ரா. அவள் வயது அப்போது 39.

சிசேரியன் தப்ப முயலும்போது பிடிபட்டான். ஆக்டேவியன் சீசர் முன் நிறுத்தபட்டான்.

‘அம்மா செய்த தவறுக்கு என்னைத் தண்டித்துவிடவேண்டாம்’ என மன்றாடினான் சிசேரியன்

அவனை உற்றுப்பார்த்தார் ஆக்டேவியன். ‘உன்னைக் கொல்வது என் நோக்கம் இல்லை. ஆனால் உன்னைப் பார்த்தால் அச்சு அசலாக ஜூலியஸ் சீசரைப் பார்ப்பது போலவே இருக்கிறது. நான் ஆட்சிக்கு வர ஒரே காரணம் நான் சீசரின் வாரிசு என்பதுதான். உன்னை விட்டு வைத்தால் என்றும் குழப்பம்தான்.’

அதன்பின் கொலைக்களத்துக்குச் சென்று உயிரிழந்தான் சிசேரியன்.

கிளியோபாட்ராவுக்கும் மார்க் ஆண்டனிக்கும் பிறந்த மகள் ஒருத்தி இருந்தாள். அவளை மார்க் ஆண்டனியின் முன்னாள் மனைவி ஆக்டேவியா தத்து எடுத்துக்கொண்டாள். அவள் வளர்ந்தபின் கல்யாணம் செய்துவைத்து இன்றைய ஆபிரிக்காவின் மரிஷியானா எனும் நாட்டைச் சீதனமாகவும் கொடுத்தார் ஆக்டேவியன்.

ஆக ஆட்சி, அதிகாரம் எனும் போதையால் தவறு மேல் தவறு செய்து வீழ்ந்தவள் கிளியோபாட்ரா. தான் வீழ்ந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 400 ஆண்டுகள் பழமையான கிரேக்க எகிப்திய அரசையும் வீழ்த்திவிட்டாள்.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *