1941 ஜூன் 19.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள் முன்பு பெரும்கூட்டம் கூடியிருந்தது. அகழ்வாராய்ச்சி குழுவின் தலைவர் மைக்கேல் ஜெராசிமோவ்.
உஸ்பெகிஸ்தானை ஆண்ட மன்னன் தைமூரின் கல்லறையைத் தோண்டி, உடலை எடுத்து அகழ்வாராய்ச்சி செய்யவே அவர் வந்திருந்தார். தைமூர் என்றால் இரும்பு என பொருள். ஸ்டாலின் என்றாலும் இரும்பு என்றுதான் பொருள்.
தைமூரின் உடலைத் தோண்டி எடுத்து நிஜத்தில் அவன் எப்படி இருந்தானோ, அப்படி ஒரு சிற்பத்தை உருவாக்கி மியூசியங்களில் வைக்கவேண்டும் என்பதே ஸ்டாலினின் கட்டளை. தைமூரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ரஷ்யா கொண்டு செல்லப்பட இருந்தது. உள்ளூர் மக்கள் அவர்களை எதிர்க்கவில்லை. ஆனால் பயமுறுத்தினார்கள்.
‘தைமூர் இறக்கையில், என் கல்லறையைத் தோண்டி எடுப்பவன் அழிவான். அவன் நாடும் அழியும் எனச் சாபம் கொடுத்துவிட்டுதான் இறந்தான். 1740இல் நாங்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல் பாரசீக மன்னர் நாதிர்ஷா கல்லறைப் பெட்டியைத் தோண்டி எடுத்து அதனுள் இருந்த விலையுயர்ந்த வைரத்தை பாரசிகம் கொன்டுபோனார். அடுத்த ஆண்டே அவரது மகன் அவரைக் கொல்ல முயன்றான். இவர் அவனது கண்களைன் குருடாக்கிவிட்டார். மனவேதனையில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் கொல்லபட, அவரது சாம்ராஜ்ஜியம் அதன்பின் அழிந்துவிட்டது… நீங்கள் அதைத் தொட்டால் உங்களுக்கும் அதே நிலைதான்.’
‘மாபெரும் சோவியத் ரஷ்ய அரசைத் தைமூரின் சாபம் வீழ்த்திவிடும் என்கிறீர்கள். ரைட்டு.’ சிரித்தபடி கல்லறையைத் தோண்டி கல்லறைப் பெட்டியை திறந்தார் ஜெராசிமோவ். கல்லறைப் பெட்டியில் சாபம் செதுக்கப்பட்டு இருந்தது.
‘என் கல்லறையை எவன் திறந்து என்னைத் தொல்லை செய்தாலும், என்னைவிட பலமடங்கு கொடூரமான ஒருவனால் அவனது நாடு முற்றிலும் அழிக்கப்படும்.’
சாபத்தைக் கண்டு சிரித்தபடி உடலை விமானத்தில் ரஷ்யாவுக்குக் கொண்டு சென்றார் ஜெராசிமோவ். விமானம் மாஸ்கோவைத் தொட்ட அதே நாளில் ஹிட்லர் ரஷ்யா மேல் படை எடுத்தான். சுமார் 5 கோடி ரஷ்யர்களைக் கொன்ற போர் அது. நாடு அழியும் செய்தி வர, வர தைமூரின் உடல் ஜெராசிமோவைக் கண்டு சிரித்தபடி இருப்பது போல அவருக்குப் பிரமை. நேராக ஸ்டாலினிடம் போனார். சாபத்தின் விவரத்தைச் சொன்னார்.
‘உடலை முழு மரியாதையுடன் விமானத்தில் கொண்டுபோய் அதே இடத்தில் அடக்கம் செய்துவிடுங்கள்’ என்றார் ஸ்டாலின்.
அத்தனை கடுமையான போரிலும் அந்த உடல் உஸ்பெக்கிஸ்தான் எடுத்துச் செல்லப்பட்டு அதே இடத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. உள்ளூர்வாசிகள் ‘சொன்னோம், கேட்டீர்களா’ என்றார்கள்.
உடல் அடக்கம் செய்யபட்டவுடன் அந்த செய்தி வந்தது. ‘ஸ்டாலின்கிராடு போரில் ரஷ்யாவுக்கு மகத்தான வெற்றி. ஜெர்மானியப் படைகள் பின்வாங்குகின்றன.’
0
அல்பட்ராஸ் தீவு
ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவே மிகப்பெரிய பசிபிக் கடல் உள்ளது. அக்கடலின் நடுவே மிட்வே எனும் தீவு உள்ளது. முன்பு விமானங்களின் தொழில்நுட்பம் முன்னேறாத நிலையில் பசிபிக் கடலை விமானங்களால் தாண்ட முடியாது. பெட்ரோல் போட நடுவே நிறுத்தவேண்டும். அதனால் மிட்வே தீவில் நிறுத்தி பெட்ரோல் போடுவார்கள் என்பதால் அப்பெயர் நிலைத்துவிட்டது.
இன்று அந்தத் தீவுகளில் மனித நடமாட்டத்தை முழுமையாகத் தடை செய்து உலகின் மிகப்பெரிய அல்பட்ராஸ் (Albatross) காலனியாக அறிவித்துள்ளது அமெரிக்கா. சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தீவில் 20 லட்சம் அல்பட்ராஸ் பறவைகள் வசிக்கின்றன.
அல்பட்ராஸுக்கு ஏன் இப்படி ஒரு மரியாதை?
மிக வித்தியாசமான பறவை அல்பட்ராஸ். உலகின் மிக நீளமான சிறகுகளை கொண்ட பறவைகளில் ஒன்று. அதன் இரு சிறகுகளையும் விரித்தால், 11 அடி நீளம் வரும். ஒரு நாயின் எடைக்குச் சமமான எடை கொண்டது.
இத்தனை பெரிய இறக்கைகளை வைத்துக்கொன்டு விண்ணில் பறப்பதே சிரமம். மலையில் ஏறி காற்று வேகமாக அடிக்கும் சமயம் ஏரோப்ளேன் மாதிரி வேகமாக ஓடி, எழும்பி குதித்து டேக் ஆஃப் ஆகிதான் அதனால் பறக்கமுடியும். இறகுகளை அசைத்து எல்லாம் பறக்கமுடியாது. அதற்கு ஏகபட்ட கலோரிகள் செலவு ஆகும்.
இறக்கையைத் துளியும் அசைக்காமல் கிளைடரைப் போல காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி பாய்மரக் கப்பலைப் போல விண்ணில் பறக்கக்கூடியது அல்பட்ராஸ். ஒருமுறை எழும்பினால் ஆறு ஆண்டுகள் அதன் கால்கள் நிலத்தில் படாது. ஆறு ஆண்டுகளுக்கு நிலத்தில் காலை வைக்காமல் காற்றைப் பயன்படுத்தி உலகைச் சுற்றி வலம் வரும்.
விண்ணில் பறந்தபடி கடலின் மேற்பரப்பில் இறந்து கிடக்கும் மீன்களை, கடலின் மேற்பரப்பில் காணப்படும் மீன்களை உண்டபடி வலம் வரும்.
ஆனால் தரையில் இறங்கினால் நடப்பதே சிரமம். தரையில் இறங்க விமானம் இறங்குவது போல இறங்கி, நெஞ்சுப்பகுதியும், வயிறும் புல்தரையில் உராய்ந்தபடிதான் தரையில் இறங்கமுடியும்.
தலா ஆறு அடி நீள இறக்கைகளை மடித்தபடி நடக்க மிகவும் தள்ளாடும்.
இத்தனை கஷ்டப்பட்டு நிலத்தில் இறங்க ஒரே காரணம் இனப்பெருக்கம்தான். முட்டை வைத்து குஞ்சை வளர்த்துவிட்டு மீண்டும் பறந்துபோய்விடும்.
இந்த அபூர்வப் பறவையை பாதுகாக்க ஒரு தீவையே ஒதுக்கிவிட்டது அமெரிக்கா. அதனுள் யாருக்கும் அனுமதி இல்லை. அல்பட்ராஸ் பறவைகளைத் தவிர.
0