Skip to content
Home » பூமியும் வானமும் #24 – புவியியலே சுழற்சிதான்

பூமியும் வானமும் #24 – புவியியலே சுழற்சிதான்

எருமையும் வனவளமும்

எருமையும் வனவளமும்

எருமைத்தோல் எனச் சுரணையற்று இருப்பவர்களைத் திட்டுவோம். திபெத்திய எருமைகள் இந்திய எருமைகளை விடக் கொடூரமானக் குளிரைத் தாங்கக்கூடியவை. அந்த எருமைகளுக்கு ‘யாக்’ எனப் பெயர்.

ஐரோப்பிய, அமெரிக்க எருமைகளுக்குப் பைசன் எனப் பெயர். நமது ஊர் எருமைகளுக்கு இல்லாத அளவு அவற்றின் உடலெங்கும் கம்பளிப் போர்வை இருக்கும். கூடுதல் குளிரைத் தாங்கும். சுமார் மைனஸ் 40 டிகிரி அளவுக்குக்கூட அவற்றால் குளிரைத் தாங்க முடியும்.

ஒரு காலத்தில் பல மில்லியன் பைசன்கள் ஐரோப்பாவெங்கும் சுற்றித்திரிந்தன. பசுக்களால் தாங்க முடியாத குளிரை எருமைகள் தாங்கியதால் ஸ்பெயின் முதல் சைபிரியா வரை மக்களுக்கு ஏற்ற உணவாக அவை இருந்தன. லட்சக்கணக்கான பைசன்கள் வரிசையாக நடந்து சென்றதால் கொடூரமானப் பனியில் நெடுஞ்சாலைகள் உருவாகின. அவற்றில், அம்மாதிரி பாதையை உருவாக்க வலிமையற்ற பல மிருகங்கள் நடந்து சென்றன.

தரை முழுக்கப் பனியாக இருந்தாலும், காலாலும் கொம்பாலும் பனியை அவை எட்டி உதைத்து, அகற்றி, புற்களை உண்டன. அதனால் சுத்தமானப் பகுதிகளில் மற்றச் சிறு மிருகங்கள் புற்களை உண்ண முடிந்தது.

ஒரு எருமையின் எடை 800 கிலோ. ஒரு நாளைக்கு எட்டு லிட்டர் சாணியை வெளியேற்றும். மில்லியன் கணக்கில் பைசன்களின் சாணி உரமாகப் பொழிந்து மண்வளம் செழித்தது.

அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களின் இலைகளை அவை உண்டதாலும் கிளைகளை முறித்ததாலும் சூரிய வெளிச்சம் நுழைய முடியாத அளவுக்கு மூடிக்கிடக்கும் வனப்பகுதிகளிலும் சூரிய ஒளி உள்ளே புகுந்து, மரங்களுக்கு கீழே இருக்கும் செடிகளும் வளர ஆரம்பித்தன. இதனால் காடுகள் தீப்பிடிக்கும் அபாயமும் குறைந்தது.

ஆனால் மக்கள் தொகை பெருக, பெருக எருமைகள் வேட்டையாடப்பட்டன. ஒரு கட்டத்தில் போலந்தின் ஒரு காட்டில் 600 பைசன்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. ரஷ்யாவின் காகசஸ் மலையில் சில எருமைகள் தப்பிப் பிழைத்து இருந்தன. போலந்து மன்னர்கள் பைசனை வேட்டையாடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதித்ததால் அவைத் தப்பின. ஆனால் அவர்கள் நல்லெண்ணத்தில் எல்லாம் தடை விதிக்கவில்லை. அவர்களுக்கு வேட்டையாட பைசன்கள் வேண்டும். அதனால் 600 எருமைகளை விட்டு வைத்தார்கள்.

இரண்டாம் உலகப் போரின் கொடூரமான பட்டினிச்சூழலில் ஜெர்மானிய படைகள் அந்த 600 எருமைகளையும் சுட்டுத் தின்ன, ரஷ்யாவின் எருமைகளும் அழிய, அந்தப் போர் முடிந்த சமயம் ஐரோப்பிய பைசன்கள் முழுமையாக அழிந்த உயிரினமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் எங்கெங்கோ உயிரியல் பூங்காக்களில் தப்பிப் பிழைத்த 12 எருமைகளைப் பிடித்து வந்தார்கள். 1952ஆம் ஆண்டு பண்ணைகளில் வைத்துப் பைசன்களின் இனப்பெருக்கம் தொடங்கியது. இப்போது அவற்றின் ஜனத்தொகை சுமார் 8500ஆக பெருகியுள்ளது. அவற்றை கொஞ்சம், கொஞ்சமாக ஐரோப்பிய காடுகளில் விட்டு, ஜி.பி.எஸ் கருவிகள் மூலம் கண்காணித்து வருகிறார்கள்

சில லட்சம் பைசன்கள் உருவானால் மீண்டும் வனவளம் செழிக்கும் என்கிறார்கள்.

புவியியலே இப்படி ஒன்றை, மற்றொன்று நம்பி இருக்கும் சுழற்சிதான்.

அணுக்கழிவு மின்சாரம்

அணு உலைகளை இயக்குவதில் இருக்கும் முக்கியப் பிரச்சனை என்னவெனில், அவற்றின் அணுக்கழிவுகள்தான். ஏற்கெனவே இயங்கும் அணு உலைகளில் இருந்து கழிவுகள் எடுக்கப்பட்டு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் நிற்க பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும்.

ஆனால் அணுக்கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுத்தால் எப்படி இருக்கும்? அதுவும் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக அவற்றில் இருந்து மின்சாரம் எடுக்க முடிந்தால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும்.

அந்த தொழில்நுட்பத்தை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டுமே என யோசிக்க வேண்டாம். ஏன் என்றால் ஏற்கெனவே அந்தத் தொழில்நுட்பம் 1970களிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதற்கு பீடாவோல்டிக்ஸ் (Betavoltaics) எனப் பெயர். 1970களில் வந்த பேஸ்மெக்கர்களில் இந்தத் தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டது..

ஆம், 1970களில் அணுசக்தி பேட்டரிகள் கொண்ட, பீடாசெல் (betacel) எனும் வகை பேஸ்மெக்கர்கள் தயாரிக்கப்பட்டுப் பொருத்தப்பட்டன. அப்போதுதானே பேஸ்மேக்கர் இயங்கத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்கும். அதைப் பொருத்திக்கொள்வதால் இதயத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. சொல்லப்போனால், ஏற்கெனவே பல இடங்களில் ட்ரிடியம் எனும் அணுக்கதிர்களை உமிழும் எக்ஸிட் பலகைகள்தான் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைவிட குறைவானக் கதிர்வீச்சுதான் இதில் வரும்

லித்தியம் ஐயான் பேட்டரிகள் பயன்பாட்டுக்கு வந்ததும் பீடாசெல் பேஸ்மேக்கர்கள் பயன்பாடு நின்றது. ஆனால் அப்போது பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர்கள் அனைத்தும், அவற்றை பொருத்திக்கொண்ட நபர்கள் இறந்து பல ஆண்டுகள் ஆனப்பிறகும், இப்போதும்கூட நிற்காமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பீடாவோல்டிக்ஸ் தொழில்நுட்பம், பீடாவோல்டிக்ஸ் பேட்டரி மாடல்

பீடாவோல்டிக்ஸ் தொழில்நுட்பம், பீடாவோல்டிக்ஸ் பேட்டரி மாடல்இப்போது அந்த பீடாசெல் டெக்னாலஜி மீண்டும் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும் அணுக் கழிவுகளை எடுத்து, அதன் மேல் செமிகண்டெக்டர்களை பொருத்தி, அதை ஒரு வைரத்துக்குள் பதிக்கிறார்கள். வைரம் என்ன ஆனாலும் உடையாது. மிக வலிமையான மூலப்பொருள். அதன்பின் அதைச் செல்போன் பேட்டரியாக பயன்படுத்தலாம், விளக்குகளை எரிக்கலாம், விண்வெளிக் கப்பல்கள், சாட்டிலைட்டுகளில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கருவிகளை இயக்கலாம்.

சரி, வைரத்தில் ஏன் அவற்றை பதிக்கவேண்டும்? வைரம் என்ன விலை? இது எப்படி கட்டுப்படி ஆகும்?

அதாவது இந்த பேட்டரிகள் இயங்க கார்பன் – 14 (கரி) வேண்டும். வைரம் என்பது என்ன? மிக அழுத்ததுக்கு உள்ளான கரி. கரித்தூளை எடுத்துச் செயற்கை முறையில் அழுத்தினால் வைரம் தயார். செயற்கை வைரத் தொழில்நுட்பம் ஏற்கெனவே வந்துவிட்டது. இயற்கை வைரத்துக்கும் செயற்கை வைரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை சோதனைக்கூடத்தில் மிக நுணுக்கமாக ஆராய்ந்தால்தான் கண்டுபிடிக்கமுடியும். ஆக, செயற்கை வைரத்தை மிக மலிவாகத் தயாரிக்கமுடியும்.

செயற்கை வைரம் வந்தபின் ஏன் இயற்கை வைரத்தை இத்தனை விலை கொடுத்து வாங்கவேண்டும்? நாம் எல்லோரும் என்ன கிறுக்கா என கேட்கவேண்டாம். பதில் ஆமாம் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அது தனிக்கதை. அதை வேறொரு பதிவில் பார்ப்போம்.

ஆக, இந்த அணுக்கழிவு உள்ள வைரம் கொண்ட பேட்டரியை வைத்துச் செல்போனை இயக்கினால் சார்ஜிங் ஒயர் தொல்லையே இல்லை. 24 மணிநேரமும் போன் பேட்டரி முழுமையான நிலையிலேயே இருக்கும். தற்போதைய தொழில்நுட்பத்தில் கார்கள் போன்ற பெரிய இயந்திரங்களை இதனால் இயக்கமுடியாது. ஆனால் சிறியக் கருவிகள், எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்கமுடியும்.

இது எப்போது சந்தைக்கு வருகிறது?

2024ஆம் ஆண்டு. அதன்பின் அடுத்தப் பத்தாண்டுகளில் எல்லாம் நல்லபடியாக நடந்தால், உங்கள் செல்போன் சார்ஜிங் ஒயரை தூக்கிப் போட்டுவிடலாம். அணுக்கழிவு பிரச்சனையில் இருந்து மனிதனுக்கு விடுதலை. எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு மின்சாரமும் கிடைக்கும். பேஸ்மெக்கருக்கே பயன்படும் பொருள் என்பதால் கதிர்வீச்சு ஆபத்தும் கிடையாது.

மணல் பேட்டரி

சூரியசக்தி மின்சாரத்தின் ஒரு பிரச்சனை, அது பகலில் மட்டும்தான் வேலை செய்யும் என்பது. சில சமயம் வெயில் கொளுத்துகையில் தேவைக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தியாகும். அப்போது மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து வைத்து இரவில் பயன்படுத்த முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அத்தகைய பேட்டரிகள் இல்லை.

இருப்பினும், ஃபின்லாந்தின் கன்கான்பா (Kankaanpää) எனும் சிற்றூரில் மணலை பேட்டரியாகப் பயன்படுத்தி வெற்றிக்கண்டுள்ளார்கள்.

உலகின் முதல் மணல் பேட்டரி, ஃபின்லாந்து
உலகின் முதல் மணல் பேட்டரி, ஃபின்லாந்து

கன்கான்பா, நூறு வீடுகளும் ஒரு பள்ளியும் இருக்கும் சிற்றூர். அதற்கான மின்சாரம் கொடுக்கும் கம்பெனி, சூரிய சக்தி, காற்றாலை இரண்டையும் பயன்படுத்துகிறது. ஆனால் காற்று வீசாவிட்டால் காற்றாலை வேலை செய்யாது. ஃபின்லாந்தில் ஆண்டுக்குப் பாதி நாள் கடும் குளிர், நீண்ட இரவுகள்தான் இருக்கும். சூரியசக்தி மின்சாரம் அப்போதெல்லாம் கிடைக்காது.

இதனால் மின் கம்பெனி ஒரு பெரியக் கட்டடத்தை கட்டினார்கள். அதனுள் 10 டன் மணல் போட்டு நிரப்பப்பட்டது. அதன்பின் அது மூடபட்டது. மணலுக்குள் மின்சார ஒயர்கள் சென்றன. காற்று நுழைவதற்கு குழாய்கள் இருந்தன. அக்குழாய்களும் மூடப்பட்டு இருந்தன.

சூரியசக்தி மின்சாரம் தேவைக்கு அதிகமாக உற்பத்தி ஆகையில், காற்றாலை தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்திச் செய்கையில், இந்த மணலுக்குள் இருக்கும் ஒயர்களில் மின்சாரம் பாய்ச்சபப்பட்டு மணல் சூடாக்கபட்டது. மணல் 600 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை தேக்கி வைக்கும் திறன் கொண்டது. மூடபட்ட கட்டடத்தினுள் இருக்கும் மணல் என்பதால் வாரக்கணக்கில் சூடு அப்படியே இருக்கும்.

இரவில் சூரிய சக்தி நின்றவுடன் மணலுக்குள் இருக்கும் குழாய்கள் திறக்கபட்டு காற்று உள்ளே செலுத்தப்படும். அது உள்ளே இருக்கும் 600 டிகிரி வெப்பத்தில் சூடாகி வெப்பக்காற்றாக மறுபுறம் இருக்கும் குழாய்களில் இருந்து வெளிவரும். வெளிவரும் அந்தக் காற்று அக்கிராமத்தின் நூறு வீடுகளுக்கும் வெப்பக்காற்றாக சென்று ஹீட்டராக பயன்படும். நீரைச் சூடாக்கவும் இந்தக் காற்றை பயன்படுத்தலாம்.

மணல் பேட்டரிகள் வெப்பக்காற்று தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கு பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. உற்பத்திக்கு அதிக வெப்பம் தேவைப்படும் கம்பெனிகள், நீரைக் கொதிக்கவைக்க பாய்லரை பயன்படுத்த வேண்டிய வேலைகளை செய்யும் கம்பனிகள், சூரிய ஆற்றல் பேனல் மற்றும் மணல் பேட்டரி மூலம் ஏராளமான மின்சாரத்தை சேமிக்கலாம் என கூறுகிறார்கள்.

இதற்கு சாதாரண மணலே போதும். பாலைவன மணலைக்கூட ஏற்றுமதி செய்து மணல் பேட்டரிகளுக்குப் பயன்படுத்தலாம். பல நூற்றாண்டுகளுக்கு மணல் எதுவும் கெட்டுப்போகாது என்கிறார்கள்.

இந்த எளிய தொழில்நுட்பம் பரவலானால் எத்தனை நன்றாக இருக்கும்?

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *