Skip to content
Home » பூமியும் வானமும் #26 – எதிரியே இல்லாத போர்

பூமியும் வானமும் #26 – எதிரியே இல்லாத போர்

பூமியும் வானமும்

எதிரியே இல்லாத போர்: இறந்த 300 வீரர்கள்

1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இருந்த அட்டு, கிஸ்காத் தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது. 20ம் நூற்றாண்டில் அமெரிக்க மண்ணில் இருந்து ஓர் அங்குலம் பகைவர்களால் கைப்பற்றப்பட்டது என்றால் அது இதுதான். அதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, மிகப்பெரிய படையைத் திரட்டியது. 35,000 வீரர்கள் அணி வகுத்திருந்தார்கள். எதிர்த்து நின்ற ஜப்பானிய படைகளில் அட்டுத் தீவில் 2000 பேர், கிஸ்காவில் 5000 பேர் இருந்தனர்.

அமெரிக்கப்படை முதலில் இரு தீவுகளையும் சுற்றி வளைத்தது. தீவுகளுக்குச் செல்லும் உணவு விநியோகம், ஆயுத விநியோகங்கள் துண்டிக்கப்பட்டன. அதன்பின் இரு தீவுகள் மீதும் 330 டன் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அட்டுத் தீவில் அமெரிக்க வீரர்கள் இறங்கினர். குண்டுகள் தீரும்வரை சுட்ட ஜப்பானியப் படை, பின்வாங்கிக்கொண்டே சென்று தீவின் மேலே இருந்த மலை மேல் ஏறி பதுங்கு குழிகளுக்குள் மறைந்தன. அவர்களிடம் எதிரிகள் வந்தால் தாக்குவதற்குக் குண்டுகளும் இல்லை, அங்கேயே இருக்கலாம் என்றால் உணவும் தீர்ந்தது.

‘உணவு இல்லாமல் நீ இறங்கி வந்துதானே ஆகணும்’ என அமெரிக்கப்படை கீழே காத்திருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பானிய படைத்தளபதி அந்த முடிவை எடுத்தார்.

அனைத்து ஜப்பானிய வீரர்களும் குண்டுகள் தீர்ந்த துப்பாக்கியில் துமுக்கிமுனைக் கத்திகளைச் (Bayonet) சொருகினார்கள். ஈட்டி மாதிரி தயார் செய்துகொண்டார்கள்.

‘சார்ஜ்…’ என உத்தரவு பறந்தது.

பேய் வேகத்தில் ஓடிச் சென்று அமெரிக்கப் படைகளைக் கத்தியால் குத்திக்கிழித்தபடி தீவின் கடற்கரையை நோக்கி ஓடினார்கள். அவர்களை நோக்கி அமெரிக்கர்கள் சுட, அந்த இடத்தில் ஒரே பரபரப்பு. இரண்டாயிரம் ஜப்பானிய வீரர்களும் செத்து மடிகையில் ஆயிரம் அமெரிக்க வீரர்களும் உயிரை விட்டிருந்தார்கள். ஜப்பானியப் படை கிட்டதட்ட தீவின் கடற்கரையை அடைந்தே விட்டது.

2000 பேர் இருக்கும் தீவுக்கே இப்படி ஒரு போர் என்றால், உயிர் பலி என்றால், 5000 பேர் இருக்கும் கிஸ்காத் தீவை பிடிக்க எத்தனை உயிர்ப்பலி ஆகுமோ என அமெரிக்கர்கள் யோசித்தார்கள். பெரும்படையை அழைத்து வந்தார்கள். 35,000 வீரர்கள் தீவைச் சுற்றி வளைத்தனர்.

‘இப்போது நாம் தாக்குதல் நடத்த வேண்டும். சுட்டுக்கொண்டே முன்னேற வேண்டும். ஒரு இலை அசைந்தால்கூட சுட வேண்டும்…ரெடி ஸ்டார்ட்…சார்ஜ்…’

அமெரிக்கப் படை நாலாபக்கமும் சுட்டபடி தீவின் மையப்பகுதியை நோக்கி ஓடியது. தீவில் எங்கும் புகை மண்டலம். குண்டுச்சத்தம். யார் யாரைச் சுடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

எல்லா சத்தமும் அடங்கியபின் பார்த்தால் தீவில் ஒரு ஜப்பானியர் கூட இல்லை. அட்டுத் தீவு விழுந்தவுடன் அவர்கள் நைசாகப் படகுகளில் ஏறி இரவோடு இரவாகத் தீவை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். ஆள் இல்லாத டீக்கடையில் நுழைந்த அமெரிக்கர்கள், ஜப்பானியரைச் சுடுவதாக நினைத்து, தம்மைத் தாமே சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு எதிர்ப்படை வீரன் கூட இல்லாத தீவில் நடந்த போரில் 313 வீரர்கள் பலியானார்கள்.

இப்படி ஓர் அவமானம் அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே எங்கேயும் நிகழ்ந்தது கிடையாது என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள்.

0

மாதுவும் போதையும்

1966ஆம் ஆண்டு.

‘என்ன டிகிரியைத் தேர்ந்தெடுக்கலாம்?’ என அந்த 18 வயது இளைஞன் யோசித்துக்கொன்டிருந்தான். அவன் பெயர் ஆல்பிரட் டில்லன்டாஷ். சுருக்கமா டெல். அவனுக்குப் படிப்பு எல்லாம் வராது. ஆனால் நிறையப் பெண்களைக் மடக்க வேண்டும் என எண்ணினான். அதற்காவது கல்லூரிக்குப் போக வேண்டும். அதனால் என்ன படிப்புப் படிக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தான்.

ஆழ்ந்து யோசித்துவிட்டு, இறுதியாக விமான ஓட்டியாகி விடலாம் என முடிவெடுத்தான். விமானக் கல்லூரியில் சேர்ந்தான். தினம் ஒரு விமானம். அவன் ஊரில் உள்ள பெண்களை ‘விமானத்தில் ஒரு ரைடு வருகிறாயா?’ எனக் கேட்பான். யார் மாட்டேன் எனச் சொல்வார்கள்? விமானத்தில் பறந்தபடி சாகசம் எல்லாம் செய்துகாட்டி அவர்களை ஆசையில் விழவைப்பான். இப்படியே அவன் ஊரில் மிகவும் பிரபலம் அடைந்தான்.

ஒருகட்டத்தில் அவனது அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அவர் உடனே அவனது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தி, ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். 23 வயதில் திருமணமும் செய்துவைத்தார். குடும்பஸ்தனாகி, கிரேனை ஓட்டுகையில் இது என்னடா வாழ்க்கை எனக் கடுப்பாகிவிட்டான் டெல்.

ஒரு குட்டி விமானம் விற்பனைக்கு வர, இருந்த காசை எல்லாம் போட்டு, அதை வாங்கி பழுது பார்த்து லாபத்துக்கு விற்றான். அதன்பின் குட்டி விமானங்களை வாங்கி, பழுதுபார்த்து விற்கும் தொழிலில் இறங்கினான்.

அந்தச் சமயத்தில்தான் கொலம்பியாவில் இருந்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். ‘எனக்கு விமானத்தின் அடிப்பாகத்தில் ஓட்டை இருப்பது மாதிரி வேண்டும். விலை எல்லாம் பிரச்சனை இல்லை’ என்றார்.

அந்தக் காலக்கட்டத்தில் டிவி நிறுவனங்களிடம் அவர் கேட்ட மாதிரியான விமானங்கள் உண்டு. விமானத்தில் பறந்தபடி, உள்ளிருந்துகொண்டே அடிப்பாக ஓட்டை வழியாகக் காமிராவை நுழைத்து வீடியோ எடுப்பார்கள். டிவி நிறுவனம் ஒன்றிடம் பேசி அதுபோன்ற விமானத்தை வாங்கித் தந்தான்.

இதையடுத்துத் தொடர்ச்சியாக அவனிடம் அதுபோன்ற விமானங்களை அவர் வாங்கத் தொடங்கினார். இவனுக்கு அப்படி அவர் என்ன வியாபாரம் பண்ணுகிறார் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுந்தது. அவரிடமே கேட்டு விட்டான்.

பிறகுதான் தெரிந்தது, கொலம்பியாவின் மிகப் பிரபல போதை மருந்து கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாரின் ஏஜென்ட் அவர் என்று. போதை மருந்தை இந்த விமானங்களில் ஏற்றி வந்து, ஓட்டை வழியாக கீழே தூக்கிபோட்டுவிட்டு, எங்கேயும் நிற்காமல் மீண்டும் கொலம்பியாவுக்கே திரும்பிவிடுவார்கள். ஒரு ஒட்டத்துக்கு $70,000 சம்பளம். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 லட்சம்)

டெல்லுக்கு சபலம் தட்டியது. அவன் காசு சம்பாதிக்க ஆசைப்பட்டதே பெண்ணாசையால்தான். இதில் ஏராளமாகச் சம்பாதிக்கலாம். ஜாலியாக இருக்கலாம் என்று திட்டமிட்டான்.

அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் எஸ்கோபாரின் விமானப்படை தளபதியாகும் அளவு கடத்தல் செய்தான். ராஜபோக வாழ்க்கை. ஆனால், யானைக்கும் அடிசறுக்கும் கதையாக ஒருநாள் அவனது விமானம் விபத்துக்குள்ளானது. போலிஸ் வந்து அவனை மீட்டு, விமானத்தைத் திறந்து பார்த்தால் உள்ளே போதைப்பொருள்.

அடுத்தது?

அந்தர்பல்டி அடித்தான் டெல். ‘என்னைப் பிடித்துச் சிறையில் அடைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? உங்கள் உளவாளியாகி எல்லாவற்றையும் காட்டிக்கொடுக்கிறேன்’ என்றான்.

ஒப்பந்தம் கையெழுத்தானது.

எல்லா ரகசியங்களையும் சொல்லி, எல்லோரையும் காட்டிக்கொடுத்துவிட்டு, கிடைத்த பணத்துடன் விட்னஸ் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ந்து தலைமறைவாகிவிட்டான். அவனைக் காவல்துறை மிக ரகசியமாக எங்கோ அனுப்பிவிட்டது. புது பெயர், புது அடையாளம், புது மாநிலம், புது நாடு என்றானது. பழைய சுவடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன..

எப்படியோ வாழ்க்கையில் சரசரவென மேலே வந்து, சம்பாதித்துவிட்டு, வெற்றிகரமாத் தப்பியும் விட்டான். சாமர்த்தியசாலிதான். தனக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று தெளிவாகத் தெரிந்து வைத்து இருந்தான்.

0

ஸிலாந்தியா கண்டம்

நியூஸிலாந்து மக்களுக்குப் பல ஆண்டுகளாகவே ஒரு மனக்குறை இருந்தது. அது, ‘நாம் எந்தக் கண்டத்திலும் சேராமல் இருக்கிறோமே’ என்று.

உலக மக்களும் ‘நீங்கள் ஆஸ்திரேலியாவுக்குப் பக்கமாக இருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் ஆஸ்திரேலியாதான்’ எனச் சொன்னார்கள்.

‘அது எப்படி?அவங்களுக்கும் எங்களுக்கும் 4000 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது’ என்று பக்கத்தில் இருக்கும் தெற்குப் பசிபிக் தீவுக்கூட்ட நாடுகளைச் சேர்த்துக்கொண்டு நியூசிலாந்து கேட்டது.

‘சரி, ஓசனியா என்ற (Occeania) தனிப்பகுதியாக அறிவிக்கிறோம்’ என்று சொல்லி, பசிபிக் கடலில் உள்ள தீவுகளை எல்லாம் சேர்த்து ஓஷனியா என்ற பகுதியாக அறிவித்தனர்.

ஆனாலும், ‘தனிக் கண்டத்தைக் கேட்டால் தனிப் பகுதியாகவா அறிவிக்கிறீர்கள்?’ என்று கடுப்பில் இருந்தது நியூஸிலாந்து. அப்போதுதான் லட்டு மாதிரி ஒரு செய்தி அவர்களை வந்தடைந்தது. ஆப்பிரிக்காவில் இருந்து 500 கிலோ மீட்டர் மட்டுமே தள்ளி இருக்கும் மடகாஸ்கரை உலக நாடுகள் மைக்ரோ கண்டமாக அறிவித்து இருந்தனர்.

இதைப் பார்த்த நியூசிலாந்து, ‘அவனை மட்டும் மைக்ரோகண்டம் என்று அறிவிக்கலாமா? என்னையும் மைக்ரோகண்டமா அங்கீகரிக்க வேண்டும்’ எனக் கேட்டது.

‘சென்னை ஜனத்தொகையில் பாதிக்கூட இல்லை. உங்களுக்குத் தனிக் கண்டம் அந்தஸ்து வேண்டுமா?’ என உலக நாடுகள் குமுற, 2017இல் செயற்கைக்கோள் வரைப்படத்தைப் பார்த்த நியூசிலாந்து விஞ்ஞானிகள் துள்ளிக் குதித்தார்கள்.

‘நியூஸிலாந்து இருக்கும் பகுதியில் கடலுக்கு அடியில் ஒரு கண்டம் மூழ்கி இருக்கிறது. ஆஸ்திரேலியாவைவிட ரெண்டு மடங்கு அளவு பெரியது’ என அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

‘கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் கண்டத்துக்கு ஸிலாந்தியா (Zelandia) எனப் பெயர் வைக்க வேண்டும். அதுதான் எங்களது கண்டம். உலகின் எட்டாவது கண்டம்’ என்று நியூஸிலாந்து கேட்டது.

இதற்கு உலக நாடுகள், ‘இது அழுகுணி ஆட்டம். அதுதான் கடலுக்கு அடியில் போய்விட்டதே? பிறகு எப்படி கண்டமாகும்?கடலுக்கு அடியில் அட்லாண்டிஸ் இருக்கிறது, லெமூரியா இருக்கிறது என்று ஆளாளுக்குத் தனி கண்டங்களைக் கேட்டால் நாங்கள் எங்கே போகமுடியும்’ என மறுத்தன.

‘இந்தக் காரணங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கடலுக்கு அடியில் இருந்தாலும் கண்டம் கண்டம்தான். இனிமேல் எங்களுடைய கண்டம் ஸிலாந்து. நாங்கள் அப்படித்தான் இனி எங்கள் பாடப்புத்தகத்தில் அச்சடிப்போம். நீங்கள் எங்களை மைக்ரோகண்டமாக அறிவிப்பீர்களோ, உலகின் எட்டாவது கண்டமாக அறிவிப்பீர்களோ. அது உங்கள் பாடு” எனச் சொல்லி, தங்கள் பகுதியைச் சிலாந்து கண்டம் என்று அறிவித்துவிட்டது நியூஸிலாந்து.

இப்போது உலகில் எத்தனைக் கண்டங்கள் இருக்கிறது என்று தெரியாமலும், இனி எத்தனைப் பேர் தனிக்கண்ட கோரிக்கைகளுடன் வருவார்களோ என்ற பீதியிலும் ஆழ்ந்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *