Skip to content
Home » பூமியும் வானமும் #27 – தங்கநூல்

பூமியும் வானமும் #27 – தங்கநூல்

மோர்மான்

மோர்மான்

1820ஆம் ஆண்டு, நியூயார்க் நகரம். ஜோசப் ஸ்மித் எனும் அந்த 15 வயது சிறுவன் தன் பெற்றோரிடம் வந்து, ‘நான் இயேசுவையும் கர்த்தரையும் பார்த்தேன். அவர்கள் என்னுடன் பேசினார்கள்’ என்றான்.

கிறிஸ்தவ சமயத்தில் இப்படிக் கர்த்தரை நேரில் பார்த்ததாகச் சொல்லகூடியவர்கள் யாரும் கிடையாது. அதனால் அவன் கடுமையான கேலி, கிண்டலுக்கு உள்ளானான். ஆனால், விரைவிலேயே அவனை நம்பும் சிலரும் உருவானார்கள். அதன்பின் தனது 18வது வயதில் அதே ஜோசப் ஸ்மித் மற்றொரு தகவலையும் சொன்னான்.

‘மொரானி எனும் தேவதையைக் கண்டேன். அவர் எனக்குத் தங்கத்தில் ஆன புனித நூல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதன் இழைகள் அனைத்தும் தங்கத்தால் ஆனது. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை என்னிடம் கொடுத்துள்ளார்’ என்றான்.

அங்கே இருந்தவர்களால் அதை நம்ப முடியவில்லை.

‘எங்கே அந்தத் தங்க நூல்?’

‘யாரிடமும் காட்டக்கூடாது எனச் சொல்லிவிட்டார்.’

அந்தச் இளைஞன் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என அனைவருக்கும் குழப்பம்.

ஜோசப் ஸ்மித்
ஜோசப் ஸ்மித்

நடந்தவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஊர் பெரியவர் ஒருவர், ‘சரி, என் நிலத்தில் ஒரு தங்கப் புதையல் இருப்பதாகப் பலகாலமாக வதந்தி ஒன்று உள்ளது. அதை நீ சரியாகக் கண்டுபிடித்துக் கொடுத்தால் நீ இறைதூதர் என நம்புகிறேன்’ என்றார்.

ஜோசப் ஸ்மித்தும் கண்டுபிடித்துத் தருகிறேன் எனக் கிளம்பினான். பெரியவரின் வீட்டில் ஜோஸப் ஸ்மித்துக்குக் கிடைத்தது தங்கப் புதையல் அல்ல, அவருடைய மகளின் காதல்.

அவள் பெயர் எம்மா. எம்மாவுடன் வீட்டை விட்டுச் சென்று திருமணமும் செய்துகொண்டான். எம்மாவுக்கு அந்தத் தங்க நூலைக் காட்டி, அதில் இருப்பதை அவன் மொழிபெயர்க்க, அவள் அதை ஆங்கிலத்தில் எழுதித்தந்தாள். 600 பக்கங்கள் கொண்ட அந்த நூலின் பெயர் மோர்மான் பைபிள்.

மீண்டும் ஊருக்குத் திரும்பிய ஜோசப் ஸ்மித் தான் மொழிப்பெயர்த்த விஷயங்களை ஊர்க்காரர்களிடம் கூறினான். ஆனாலும், அந்த ஊர்க்காரர்கள் தங்க நூல் இருப்பதை ஒத்துக்கொள்ளவில்லை. அதைக் காட்டியே ஆக வேண்டும் எனப் பிரச்சனை செய்தனர். இதனால் பத்து முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அதைக் காட்டுவதாக ஜோசப் ஸ்மித் ஒப்புக்கொண்டான். அவர்களிடம் காட்டவும் செய்தான். அடுத்த நாளே அந்தப் பத்து பிரமுகர்களும், ‘நாங்கள் தங்கநூலை மட்டும் பார்க்கவில்லை, மொரானி தேவதையும் எங்கள் கண்முன் கண்டோம்’ என எழுதி, கையெழுத்திட்டு மோர்மான் சமயத்தில் இணைந்தனர்.

அவ்வளவுதான். காட்டுத்தீயைப்போல மோர்மான் சமயம் பரவியது. மற்ற மதங்களில் சேர்வதுபோல மோர்மான் சமயத்தில் சாதாரணமாகச் சேரமுடியாது. வீடு, வாசல், தொழில், நிலம், புலம் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஜோசப் ஸ்மித் இருக்கும் ஊருக்கு வரவேண்டும். அங்கேயே வசிக்கவேண்டும். உங்கள் குடும்பத்தில் மோர்மான் சமயத்தில் சேர மறுப்பவர்கள் இருந்தால் அவர்களை விட்டுவிட்டு வரவேண்டும். இப்படிக் கடுமையான விதிகள் இருந்தன. இருப்பினும், 5000 பேர் அப்போது சேர்ந்தார்கள். கூட்டம் அதிகமாகவே அனைவரையும் கூட்டிக்கொண்டு இல்லினாய் மாநிலத்துக்குச் சென்று, புதிய ஊரில் குடியேறினார் ஜோசப் ஸ்மித்.

இல்லினாய்க்குச் சென்றதும், ‘பழைய இறைத்தூதர்கள் சொன்னதுபோல பலதார மணம் இனிமேல் அங்கீகரிக்கப்படும்’ என்றார். இதை எம்மாவால் ஏற்க முடியவில்லை. ஆனால், விரைவில் அதையும் ஒப்புக்கொண்டு விட்டார். ஜோஸ்ப் ஸ்மித்துக்கு அதன்பின் 34 திருமணங்கள் நடந்தன. எம்மாவுடன் மட்டும் அவருக்கு 11 குழந்தைகள்.

ஸ்மித்தின் 38வது வயதில் 30,000 மோர்மான் மக்கள் இருந்தார்கள். இவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரிக்கவே, எங்கே வாக்குரிமை மூலம் இல்லினாய் மாநிலத்தையே கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சம் அங்கிருந்தவர்களுக்கு எழுந்தது. இவர்களைக் கிறிஸ்துவர்கள் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்களுக்கு எதிரிகளும் உருவானார்கள். மோர்மான் மக்களுக்கு எதிராகக் கடுமையான எதிர்பிரசாரம் செய்யப்பட்டது. இறுதியாக, இல்லினாய் மாநில அரசு ஜோசப் ஸ்மித்தைக் கைது செய்து, சிறைக்குக் கொண்டு சென்றது. ஆனால், அங்கே இவர் மேல் என்ன குற்றம் சுமத்துவது என யாருக்கும் தெரியவில்லை.

காவல்துறையினர் யோசித்து முடிவெடுத்து ஜோஸப் ஸ்மித்தை இரவோடு இரவாகச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். இதற்குப் பின் மோர்மான்கள் அனைவரும் 1300 மைல் நடந்தே சென்று யூடா மாநிலத்தில் குடியேறினார்கள். இன்று உலகெங்கும் 1.6 கோடி மோர்மான் சமயத்தவர் வாழ்ந்து வருகிறார்கள்.

0

ஒனிசிமஸ்

1716ஆம் ஆண்டு. அமெரிக்கா பிரிட்டனின் காலனியாக இருந்தது. மாசாசூசெட்ஸ் எனும் பிரிட்டிஷ் காலனியில் காட்டன் எனும் பாதிரியார் வசித்து வந்தார். அவருக்கு அவரது தேவாலய உறுப்பினர்கள் ஒரு அடிமையைப் பரிசாக வழங்கினர். அந்த அடிமையின் பெயர் ஒனிசிமஸ்.

ஒனிசிமஸ் புதியதாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்துவரப்பட்டு விற்கபட்டவர். அவருக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. தான், கானா நாட்டைச் சேர்ந்தவர் என ஒனிசிமஸ் தெரிவித்தார்.

அன்று உலகை ஆட்டிவந்த நோய்களுள் ஒன்று சின்னம்மை வியாதி. ஆண்டுக்குப் பல லட்சம் பேரைக் காவு வாங்கிய வியாதி. தனக்குச் சின்னம்மை வந்தபோது, தன் கிராமத்தினர் மருத்துவம் பார்த்துத் தன்னைக் காப்பாற்றினார்கள் என ஒனிசிமஸ் சொன்னபோது காட்டனால் அதை நம்பமுடியவில்லை.

ஒனிசிமஸ்
ஒனிசிமஸ்

‘எங்கள் கிராமத்தில் சின்னம்மை நோய் வந்தவர்களின் தோலை எடுத்து, சிறுவர்களின் உடலில் இருக்கும் புண்கள், காயங்களின் மேல் வைப்போம். அவர்களுக்கு அதன்பின் சின்னம்மை வரும். ஆனால் மிக லேசானதாகத்தான் இருக்கும். பிழைத்து எழுந்துவிடுவார்கள். அதன்பின் ஆயுளுக்கும் அவர்களுக்குச் சின்னம்மை வராது’ என்றார் ஒனிசிமஸ்.

இன்றையத் தடுப்பூசியின் அன்றைய வடிவம் இது. ஆனால் காட்டனால் இதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஊர் மக்களை அழைத்து விவரத்தைச் சொன்னார்.

‘அடிமை நம்மை பழிவாங்க ஒட்டுமொத்த ஊரையும் அழிக்க திட்டம் போடுகிறான்’ எனச் சொல்லி பலரும் அதை நிராகரித்தார்கள்.

கடைசியில் 11,000 பேர் இருந்த அந்த ஊரில் 280 பேர் மட்டுமே அப்படி ஒரு தடுப்புமுறைக்கு ஒப்புக்கொண்டார்கள். 1721ஆம் ஆண்டு அந்த ஊரைச் சின்னம்மை தாக்கியது. தடுப்பு முறையை கையாளாதவர்களில் ஆறாயிரம் பேருக்குச் சின்னம்மை வந்தது. 844 பேர் இறந்தார்கள். தடுப்புமுறையைக் கையாண்ட 280 பேரில் ஆறு பேர் மட்டுமே இறந்தார்கள்.

அதன்பின் அமெரிக்காவெங்கும் மெதுவாக இம்முறை பரவியது. அமெரிக்கச் சுதந்திரப்போர் தொடங்கியபோது நாடெங்கும் சின்னம்மை நோய்ப்பரவி 1 லட்சம் பேருக்கு மேல் இறந்தார்கள். ஜார்ஜ் வாசிங்டன் தன் வீரர்கள் அனைவருக்கும் இத்தடுப்புமுறையை கையாள அறிவுறுத்தியதால் அவர்கள் பக்கம் மரண விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது.

பிரிட்டிஷ் படையில் ஏராளமான வீரர்கள் சின்னம்மை நோயால் இறந்தனர். போருக்கு வரமுடியாமல் பல பிரிட்டிஷ் படையணிகள் நோய்வாய்ப்பட்டு இருந்தன.

ஆக, அமெரிக்காச் சுதந்திரம் பெறக் காரணம் ஒனிசிமஸ் எனும் ஒரு அடிமை. இது அமெரிக்கர்கள் பலருக்கே இன்றுவரைத் தெரியாது என்பதுதான் விதியின் விந்தை.

0

பகிர:
நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஆரோக்கியம் - நல்வாழ்வு’ (www.facebook.com/groups/tamilhealth) எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருகிறார். ‘பேலியோ டயட்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு : neander.selvan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *