Skip to content
Home » பௌத்த இந்தியா #1 – முன்னுரை

பௌத்த இந்தியா #1 – முன்னுரை

T.W. ரீஸ் டேவிட்ஸ்

பழங்கால இந்தியாவில் பௌத்தம் செல்வாக்குடன் இருந்த காலம் பற்றி ஆங்கிலத்தில் விவரிக்கும் முதல் முயற்சி இந்தப் புத்தகம். பிராமணர்களின் பார்வையை அடிப்படையாகக் கொள்ளாமல், பெருமளவுக்கு மன்னர்களின் பார்வையிலிருந்து விவரிக்க முயற்சி செய்திருக்கிறேன். இந்த இரண்டு பார்வைகளும் இயல்பாகவே மிகவும் வேறுபட்டவை. இந்தியாவில் புரோகிதர்களும் ஆட்சியாளர்களும் பரஸ்பர நலன் சார்ந்த மோதல்கள் ஏற்படாத வரையில் எப்போதுமே ஒன்றிணைந்தே செயல்பட்டுள்ளனர். அத்தகைய மோதல் ஏற்பட்ட தருணங்களில், அதாவது இந்தப் புத்தகம் பேசக்கூடிய பெளத்தம் செல்வாக்குடன் இருந்த காலகட்டத்தில், நல்லிணக்கம் பெருமளவுக்கு இருந்ததில்லை. பின்வரும் பக்கங்களில் அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளப்போகிறோம்.

இப்படியான ஒரு முயற்சியை மேற்கொள்வதைக்கூட ஒருவிதமான மதிப்புக் குறைவான செயலாகச் சிலர் சொல்லக்கூடும். ஏனென்றால், ஐரோப்பியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலத்தில் இந்தக் களம் பிராமணர்களின் வசம் இருந்தது; பிராமணர்களின் பார்வை  நீண்ட காலத்துக்கு நம்மிடையே முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆகவே, இப்போது மற்றொரு பார்வையை முன்வைப்பது அதிகப்பிரசங்கித்தனமான முயற்சியாகத் தோன்றலாம்.

‘இதை ஏன் அப்படியே விட்டுவிடக்கூடாது? சோர்ந்துபோன இந்த மனிதர்களின் அழிவேற்படுத்தும் பார்வைகளை ஏன் இப்போது உயிர்த்தெழச் செய்யவேண்டும்? பல நூற்றாண்டுகளாக மறக்கடிக்கப்பட்டு அவற்றுக்கே உரிய, பாழடைந்த கிடங்குகளில் அவை கிடத்தப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முன் ஐந்து நூற்றாண்டுகளும், அவருக்குப் பின் ஐந்து நூற்றாண்டுகளும் எல்லோராலும் உண்மையெனக் கூறப்படும் வாய்ப்பை அவை பெற்றிருந்தன.

இந்திய வரலாற்றின் அந்தப் புதிர்கள் மனு சாத்திரத்திலும் மகாபாரதத்திலும் உலவும் மதிப்பு மிக்க மனிதர்களால் தீர்த்துவைக்கப்பட்டன. குமரில பட்டரின் நிழல்!  பிராமணர்களைக் கைகழுவி விலகும் இந்தப் புதிய எழுத்துகள் (ஆட்சியாளர் கோணத்திலானவை) உண்மையில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டால், ஏளனமின்றிக் குறிப்பிடப்பட்டால் என்ன நிகழ்ந்துவிடும்?  தற்செயலாக ஒன்றைப் பற்றி அவர்கள் நல்லவிதமாகச் சொல்கிறார்களென்றால் அவ்வாறு அவர்கள் சொல்வதற்கு முன்பே, பழமைவாத  பிராமணர்கள் அவற்றை நன்றாக எடுத்துச் சொல்லியிருப்பார்கள். இந்திய சமூக வாழ்க்கை அமைப்பின் அஸ்திவாரமாக இருக்கக்கூடிய மற்றும் எப்போதும்  அவ்வாறு இருந்துகொண்டிருக்கும் பிராமணர்கள் மட்டுமே முறையான அதிகாரம் பெற்றவர்கள். இந்த மரபிலிருந்து விலகி நிற்கும் பரிதாபத்துக்குரிய  இவர்களை இப்போது ஏன் பொருட்படுத்தவேண்டும்?’

நல்லது. இந்தத் தவறைச் செய்யும் முதல் குற்றவாளி நான் அல்ல என்ற உணர்வுடன்  என் தரப்பை முன்வைப்பேன். பிராமணர்கள் முன்வைத்த சாதி மற்றும் வரலாறு குறித்த கோட்பாடுகளுடன் பொருந்தவில்லை என்பதற்காக நாணயங்களையும் கல்வெட்டுகளையும்  யாரும் ஆராயாமல் விட்டுவிடவில்லையே. நிறைய புதிய விஷயங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன. ஜாதி குறித்த கோட்பாடுகள் ஏற்கனவே பெருமளவுக்கு அசைக்கப்பட்டுவிட்டன. கிடைக்கும் ஒவ்வொரு சான்றையும் எந்தத் தயக்கமும் இன்றி இப்போது தைரியமாகப் பயன்படுத்தலாம். இந்தப் புத்தகத்தில் சொல்லப்படவிருக்கும் சான்றுகள் பெருமளவுக்கு முதல் முறையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே இவற்றில் குறைபாடுகள் இருக்கவே செய்யும்.

ஆனால், இதுவரை இருண்டு கிடந்த விஷயங்கள் மீது அல்லது சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள் மீது புதிய வெளிச்சத்தை இவை பாய்ச்சுகின்றன. இதுவரையிலும் அவற்றைச் சேகரிப்பதில் எதிர்கொண்ட சிரமங்களுக்குப் போதுமான அளவு பலன் கிடக்கத்தான் செய்திருக்கிறது.

இந்த  உணர்வுகளுக்கு எதிரான எந்தவொன்றினாலும் எந்த நன்மையும் இல்லை. அவை எந்த ஆதாரம் கிடைத்தாலும் அதை கேள்விக்கு உட்படுத்தும். எந்த தீர்மானம் கிடைத்தாலும் காதை மூடிக் கொண்டு அதைப் புறந்தள்ளும்.  ஆனால், நிச்சயமாக அனைத்துக்கும் மேலாக, ஒரு பாதை  திறந்திருக்கிறது.  அத்தகைய பார்வைகளுக்கு எதிராக, அக்கருத்துகளைக் கொண்டிருப்பவர்களின்மீது, எப்போதும் பெரும் மரியாதை கொண்டிருந்தபோதிலும், ஒரு போரை அறிவிப்பது என்பதே அந்தப் புதிய பாதை.  அந்தக் கருத்துகள் தவறானவை. வரலாற்று முறைமைகளுடன் அவை பொருந்தாதவை. அத்துடன் தன்னுணர்வின்றி அவர்களால் உயிரூட்டப்பட்ட எழுத்துகள் அடுத்த தலைமுறையில் ஒருவேளை மறக்கப்பட்டுவிடும்.

இதன் தொடர்பாக இதுபோன்ற மற்றொரு அம்சத்தை நிச்சயம் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அது இந்தியாவில் நடக்கும் வரலாற்று ஆய்வுகள் மீது அனைவரும் கொண்டிருக்கும் அவநம்பிக்கை. கால வரிசையிலான வரலாற்று விவரிப்புகளைத் தொடர்ச்சியாகக் கொண்ட புத்தகங்கள் ஐரோப்பாவில் ஏராளம் கிடைக்கின்றன; நாம் அவற்றை நிறையப் படித்திருக்கிறோம். இவை மிக அவசியம். ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை;  இதுவரையிலும்  இந்தியர்களுக்கு இங்கு கிடைத்துள்ள இலக்கியங்கள் முழுவதும் பிராமண இலக்கியங்களே. ஆனால், அப்படைப்புகளில் கால வரிசைப்படியான முக்கியமான மன்னர்களின் பெயர்கள், நிகழ்வுகளின் தேதிகள், போர்கள், அந்த விவரிப்புகளை  எழுதியவர்கள் யார் என்ற விவரங்கள் எதுவும் இருப்பதில்லை.

கெடுவாய்ப்பாக, உண்மை நிலை அப்படித்தான் இருக்கிறது. அதற்கான சில முக்கியமான காரணங்கள் பின்னால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், இதன் மறுபக்கத்தையும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது. கிபி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் வரலாறு குறித்துக் கிடைத்திருக்கும் சான்றுகளுடன் அதே காலகட்டத்தின் இந்திய வரலாறு குறித்துக் கிடைத்திருக்கும் ஆதாரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், உண்மையில் இந்தியா, பல்வேறு நாடுகள் ஒன்று சேர்ந்த கண்டம் என்பதால், ஐரோப்பியக் கண்டத்துடன் செய்யப்படும் ஒப்பீடே இன்னும் சரியானதாக இருக்கும்.

அந்தக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு மூலையிலிருக்கும் நாம் ஒன்றோடொன்று தொடர்புடைய வரலாற்றை ஸ்வீகரித்துள்ளோம். எனினும், ஆரம்பக் காலகட்டத்தில் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் கிடைத்திருக்கும் ஆவணங்கள் இந்தியாவில் கிடைத்திருப்பதைப் போலவே சொற்பமானதாக, குறைகள் மிகுந்ததாகவே இருக்கின்றன.

ஆனால், இரண்டு கண்டங்களிலும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. அதாவது ஐரோப்பாவில், முந்தைய காலகட்டங்கள் குறித்துக் கிடைத்திருக்கும்  அனைத்து ஆவணங்களும் வரலாற்று மாணவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. அவை முறையாக செழுமைப்படுத்தப்பட்டுள்ளன; ஆங்காங்கே அவசியமான சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.  அத்துடன் அகராதிகளும், குறுநூல்களும் அனைத்து வகை உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கின்றன.

ஆனால், இந்தியாவில் கடந்த காலம் தொடர்பாகக் கிடைத்துள்ள  சான்றுகளின் பெரும்பகுதி இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன;  அவற்றில் பல அச்சிடப்பட்டிருக்கும் நிலையிலும் முழுமையாக அவையும் ஆய்வு செய்யப்படவில்லை. புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி இதுவரையிலும் அரிதாகவே நிகழ்ந்துள்ளன.

சான்றுகள் அதிகம் இல்லை என்ற புகார்கள் குறித்துப் படிக்கும்போது இதற்கான பரிகாரம் மிகப் பெருமளவில் நம் கைகளில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. மிக எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் முறையாகச் செயல்பட்டிருந்தால் நிறைய சான்றுகள் கிடைத்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால்,  இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களைக்கூட நாம் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பது அதைவிடப் பெரிய உண்மையே.1

மிகத் தெளிவாகச் சொல்வதென்றால், வரலாற்றுத் தரவுகள் அல்ல; மனித முயற்சிதான் போதுமான அளவுக்கு இல்லை. இந்த வேலையைச் செய்வதற்கு விருப்பமுள்ள, திறமையான நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். பிரச்னை என்னவென்றால் இங்கிலாந்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. அனைத்து உயர்கல்வி, ஆய்வுகள் எல்லாம் முறையான அமைப்பு ஏதுமின்றி,  நல்கைகள் வழங்கும் தனிப்பட்ட புரவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, தட்டுத் தடுமாறி நடந்துவரும்படிச் செய்துவிட்டிருக்கிறோம். அந்தக் கட்டுப்பாடுகள் எல்லா நேரங்களிலும் அறிவார்ந்ததாகவே இருக்கும் என்று சொல்லவும் முடியாது. இதன் விளைவாக என்ன ஆனதென்றால் மத்திய கால ஆய்வு தொடர்பாக, புரவலர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இந்த ஆய்வுகளுக்கு நிதிகள் கிடைத்தன. இறையியல், செவ்விலக்கியங்கள், கணிதம் போன்ற பழமையான ஆய்வுகளுக்கே தேவைக்கு அதிகமாக,  பெருமளவில் நல்கைகள் கிடைத்தன. புதிய ஆய்வுகள் போதிய நிதி வசதியின்றியும் பெரும் சிரமத்திலும் தான் நடைபெற வேண்டியுள்ளது.

எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் அசிரியாலஜிக்கு (அசிரிய இனத்தவர் குறித்த ஆய்வு) இருக்கை கிடையாது. ஆனால், பாரீஸில், பெர்லினில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், வியன்னாவில், கீழ்த்திசை விஷயங்களைக் கற்பதற்கு சிறந்த கல்வி நிறுவனங்கள்  உள்ளன.  ஆனால், பேராசிரியர்கள், கல்வி கற்பிக்கவோ ஆராய்ச்சிக்காகவோ தமது நேரத்தைச் செலவிடாமல், சம்பாத்தியத்துக்காக வேறு வழிகளில் ஈடுபடவேண்டியிருக்கும் பெரும் அபத்தத்தை லண்டனில்தான் நாம் பார்க்கமுடியும்.

இங்கிலாந்து முழுவதும் நிலைமை கிட்டத்தட்ட இப்படி மோசமாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக  இங்கிலாந்து முழுவதிலும் சமஸ்கிருதத்துக்கு இரண்டே ஆய்வு இருக்கைகள்தான் உள்ளன. ஜெர்மனியில் அரசு சார்பிலேயே இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வு இருக்கைகள் செயல்படுகின்றன. ஏதோ இந்தியா மீது ஜெர்மனிக்கு நம்மைக் காட்டிலும் பத்து மடங்கு அக்கறை அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. நம் அரசாங்கம் செயலற்றும் அமைதியாகவும் இருக்கிறது. எப்படியாவது ஏதோ ஒரு வழியில் ஒப்பேற்றிவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கிறது; இந்தியா தொடர்பான ஆய்வுகள் எல்லாம் நம் பொறுப்பு இல்லை என்றும் நம் அரசு நினைக்கிறது.

இந்த நூலை எழுதுவதற்கு அதிகம் கால தாமதமாகிவிட்டது; பரபரப்பான, வாழ்க்கையின் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து, அவ்வப்போது சிறிது சிறிதாக நேரம் ஒதுக்கி மிகவும் சிரமப்பட்டே இதை எழுதி முடித்திருக்கிறேன். என்னைக் காட்டிலும் திறமை மிகுந்த, குறைவான நெருக்கடிகள் இருக்கும்  அறிஞர்கள் பலர் உள்ளனர்.  மிகுந்த அக்கறையுடன் தீவிரமாக நான் ஆராய்வதற்கு முயன்ற முக்கியமான இந்த விஷயங்கள் மீது அவர்களால்  என்னைக் காட்டிலும் எல்லா வகையிலும்  அதிகம்  பங்களிக்க முடியும்  என்று நம்புகிறேன்.

T.W. ரீஸ் டேவிட்ஸ்

அக்டோபர், 1902

___________

1. இப்பிரச்சனை குறித்து மிகப் பொருத்தமான குறிப்புகளைப் பேராசிரியர் கைய்கர் எழுதியிருக்கும் ‘தீபவம்சம் மற்றும் மகாவம்சம்’ என்ற சிறுநூலில் பார்க்கமுடியும்  (Erlangen-1901).

 

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *