Skip to content
Home » பௌத்த இந்தியா #2 – மன்னர்கள் – 1

பௌத்த இந்தியா #2 – மன்னர்கள் – 1

அஜாதசத்ரு

பௌத்தம் எழுச்சியுற்றபோது இந்தியாவில் ஆக உயர்ந்ததாக முடியரசு எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், நிச்சயமாக, அரசர்களும் அரசாட்சியும் இருக்கத்தான் செய்தன. பௌத்தம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கங்கை நதிச் சமவெளியில் மன்னர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். பரந்த இந்தியா முழுவதும், மன்னர்கள் ஆளவிருக்கும் காலகட்டம் ஒன்று வேகமாக உருவாகிக் கொண்டிருந்தது. பெளத்த ஆதிக்கத்தின் கீழ் வெகு வந்த பிரதேசங்களில் குறுநில மன்னர்களின் சிறிய குடியரசுகளும் அவை தவிர்த்து கணிசமான பரப்பளவும் அதிகாரமும் பெற்றிருந்த நான்கு பெரிய ராஜ்யங்களும் இருந்தன. இவை தவிர்த்து பத்துக்கும் மேற்பட்ட சிறிய ராஜ்ஜியங்களும் இருந்தன – இவை ஜெர்மனியின் ‘டச்சிகள்’ அல்லது ‘ஹெப்டார்க்கி’ காலத்தில் வழக்கத்திலிருந்த இங்கிலாந்தின் ஏழு மாகாணங்களுக்கு இணையானவை என்று கூறலாம். இவை எதுவும் அவ்வளவு அரசியல் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கவில்லை.

இந்தப் பகுதிகளையும், குடியரசுகளையும் அண்டையில் இருந்த பெரிய ராஜ்ஜியங்கள் படிப்படியாகத் தன்னகப்படுத்தி, இணைத்துக் கொள்ளும் நடைமுறை ஏற்கனவே முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் சான்றுகள், அன்றைய காலகட்டத்தில் ஆட்சி செய்த அரசாங்கத்தின் வடிவம் அல்லது தன்மை என்ன என்பதை அறிந்து கொள்ளவோ, அந்த நாட்டின் பரப்பளவு குறித்தோ, அல்லது மக்கள் தொகை குறித்தோ மிகச் சரியான சிந்தனையை அளிப்பதற்கு போதுமானதாக இல்லை. பௌத்தம் எழுச்சி பெறுவதற்குமுன் இந்தியாவிலிருந்த அரசியல் நிறுவனங்களின் வரலாற்றைக் கண்டறிவதற்கும் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, ஒப்பீட்டுப் பார்வையில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை இங்கு கூறமுடியும். மிகப்பழமையான பௌத்தப் பதிவேடுகள், முழுமையான சுயாதீனத்துடன் அல்லது பகுதியளவு சுதந்திரத்துடன் இருந்த குடியரசுகளைப் பற்றியும்  அதே காலகட்டத்தில் அவற்றின் அருகிலேயே அதிக வலிமையுடன் அல்லது குறைந்த வலுவுடன் இருந்த முடியரசுகளைப் பற்றியும் வெளிப்படுத்துகின்றன.

கிறித்துவுக்கு முன் ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் இந்திய சமுதாயத்தில் காணப்பட்ட இந்த முக்கிய அம்சத்தை ஐரோப்பாவை அல்லது இந்தியாவைச் சேர்ந்த அறிஞர்கள் இதுவரை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள பிராமணர்களின் படைப்புகளை மட்டுமே அதிக அளவுக்கு அவர்கள் நம்பினர். இந்தப் படைப்புகள் உண்மையான தகவல்களைப் புறக்கணிக்கின்றன. அதற்கான காரணங்களில் ஒன்று, சுயாதீனக் குடியரசுகள் மீது புரோகிதர்களுக்கு இயல்பாகவே இருந்த எதிர்ப்பு. அதுமட்டுமின்றி, தற்போது கிடைத்திருக்கும் பெரும்பாலான பிராமண இலக்கியங்களும், மிகவும் குறிப்பாக சட்டப் புத்தகங்களும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசு வடிவமாக, உலகளவிலும் அப்போது நடைமுறையிலிருந்த அரசின் வடிவமாக, மத குருமார்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கிய மன்னர்களின் ஆட்சி முறையே நிலவியதாக ஒரு தோற்றத்தை அவை தருகின்றன. ஆனால், பௌத்தப் பதிவுகள் இந்த விஷயத்தை சந்தேகம் ஏதுமின்றி தெளிவாக விளக்குகின்றன; பின்னாளைய ஜைனப் பதிவேடுகளும் இந்த விஷயத்தைப் போதுமான அளவுக்கு உறுதிப்படுத்துகின்றன.

மேலே குறிப்பிட்டதுபோல் நான்கு முடியரசுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. அவை:

  1. மகத ராஜ்ஜியம். அதன் தலைநகர், ராஜகிருஹம் (பின்னர் பாடலிபுத்திரம்). முதலில் ஆட்சி செய்தது மன்னன் பிம்பிசாரன்; அதன் பின்னர், அவரது மகன் அஜாதசத்ரு.
  2. வடமேற்கில் கோசல ராஜ்ஜியம் (வட கோசலம்) இருந்தது. அதன் தலைநகர் சிராவஸ்தி. முதலில் மன்னன் பசநேதி ஆட்சி செய்தார்; பின்னர் அவரது மகன் விதூதபா ஆட்சியில் இருந்தார்.
  3. கோசலத்துக்குத் தெற்கே வம்சஸ் அல்லது வத்சஸ் என்ற ராஜ்ஜியம் இருந்தது. அவர்களது தலைநகர், யமுனை நதிக்கரையில் இருந்த கோசம்பி. பரந்தபாவின் மகன் உதயணன் இதை ஆட்சி செய்தார்.
  4. இந்த ராஜ்ஜியத்துக்கு மேலும் தெற்கே அவந்தி ராஜ்ஜியம் இருந்தது. அதன் தலைநகர், உஜ்ஜைனி. ராஜா பஜ்ஜோதா அதை ஆட்சி செய்தார்.

இந்த ராஜ்ஜியங்களின் அரச குடும்பங்கள் திருமண உறவுகளால் இணைந்திருந்தன. ஆனால், இந்த இணைப்பின் காரணமாக அவ்வப்போது இவை யுத்தத்திலும் ஈடுபட்டன. பசநேதியின் சகோதரி கோசலாதேவி, மகதத்தின் மன்னன் பிம்பிசாரனின் மனைவியாக இருந்தார். பிம்பிசாரனின் மற்றொரு மனைவியின் (மிதிலையின் விதேகா) மகனான அஜாதசத்ரு தந்தையைக் கொன்றான். கோசலா தேவி துயரத்தால் இறந்துபோனார். பசநேதி, காசி நகரைக் கைப்பற்றினார். அந்த நகரத்தின் வருவாய் இதுவரை கோசலா தேவியின் கைச்செலவுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. கோபமடைந்த அஜாதசத்ரு வயதான தனது மாமாவுக்கு (சிற்றன்னையின் சகோதரர்) எதிராகப் போர் தொடுத்தார். முதல் படையெடுப்பில் வெற்றி அஜாதசத்ருவின் பக்கம் இருந்தது. ஆனால், நான்காவது படையெடுப்பில் அவர் சிறைபிடிக்கப்பட்டார்.

ஆட்சிக்கான தனது உரிமைகோரலைக் கைவிட்ட பின்னரே விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் பசநேதி தனது மகள் வஜிராவை அவருக்குத் திருமணம் செய்துகொடுத்தார். அத்துடன், திருமணப் பரிசாக, சர்ச்சையிலிருந்த காசி நகரத்தையும் அளித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின், பசநேதியின் மகன் விதூதபா தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். அப்போது பசநேதி சாக்கிய நாட்டின் உலும்பாவில் இருந்தார். பசநேதி ராஜகிருஹத்துக்குத் தப்பிச் சென்று அஜாதசத்ருவிடம் உதவி கேட்டார். ஆனால், நகரத்துக்குச் சென்று சேரும் முன்னே நோயில் விழுந்த அவர் வழியிலேயே இறந்துபோனார். பின்னாட்களில் பக்கத்திலிருந்த குடியரசு அமைப்புகளுடன் அதாவது, விதூதபா சாக்கியர்களுடனும், அஜாதசத்ரு வைசாலியின் வஜ்ஜியன்களுடனும் எவ்வாறு மோதலில் ஈடுபட்டார்கள் என்பதைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

கோசாம்பி மற்றும் அவந்தியின் அரச குடும்பங்கள் திருமண உறவால் ஒன்றுபட்டன. அவந்தியின் மன்னன் பஜ்ஜோதாவின் (பிரத்யோதா) மகள் வாசவதத்தை கோசாம்பியின் அரசன் உதயணனின் மனைவியானார். அதாவது அவனது மூன்று மனைவிகளில் ஒருத்தியானார். இது நிகழ்ந்த விதத்தை வசீகரமான கதையாக தம்மபதத்தின் 21-23 பாடல்கள் விவரிக்கின்றன. கதை இவ்வாறு செல்கிறது.

பஜ்ஜோதா ஒரு முறை தனது அரசவையில் இருந்தவர்களைப் பார்த்து, அவனைக் காட்டிலும் புகழ்பெற்ற அரசன் யாராவது இருக்கிறானா என்று விசாரிக்கிறான். அவன் மூர்க்கமானவன், பழிபாவங்களுக்கு அஞ்சாத குணம் கொண்டவன். கோசாம்பியின் உதயணன் அவனை விஞ்சிய புகழ் பெற்றவன் என்ற பதில் அவனுக்கு கிடைக்கிறது. அவன் உடனே உதயணனைத் தாக்கத் தீர்மானித்தான். வெளிப்படையாகப் படையெடுத்துச் செல்வது நிச்சயமாகப் பேரழிவை ஏற்படுத்தும்; பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது என்று அவனுக்கு அறிவுரை கூறினார்கள். இதற்கான உத்தியொன்று வகுக்கப்பட்டது.

சிறந்த யானையைப் பிடிக்க உதயணன் எங்கு வேண்டுமானாலும் செல்வான்; ஆகவே மரத்தால் யானை ஒன்றைச் செய்து, உண்மையான யானைபோல் வண்ணம் தீட்டி அதற்குள் அறுபது வீரர்களை மறைத்தனர். எல்லைக்கு அருகில் இருபக்கமும் வீரர்கள் மறைந்திருக்கும் குறுகலான ஓரிடத்தில் அதை நிறுத்தினர். எல்லைக்கு அருகில் உள்ள வனத்தில் இதுவரையிலும் எவரும் பார்த்திராத அற்புதமான யானை ஒன்று நிற்பதாக, ஒற்றர்கள் மூலம் உதயணன் காதுக்கு எட்டும் வகையில் செய்தி பரப்பப்பட்டது. உதயணன் தூண்டிலில் சிக்கினான். மதிப்பு மிக்க பரிசைத் தேடி, மறைந்திருந்த வீரர்கள் மத்தியில் நுழைந்தான். பரிவாரங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களிடமிருந்து அவன் பிரிக்கப்பட்டான். சிறைபிடிக்கப்பட்டான்.

யானைகளை வசீகரித்து அடக்கும் ஓர் அற்புதமான சக்தியை உதயணன் அறிந்திருந்தார். அதைத் தனக்குச் சொல்லித்தந்தால், உயிர்ப்பிச்சை அளித்து விடுதலை செய்வதாக பஜ்ஜோதா கூறினார்.

‘மிக நன்று. ஆனால், ஓர் ஆசிரியருக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை எனக்கு அளித்தாலே அதைச் சொல்லித் தருவேன்’ என்றார் உதயணன்.

‘உனக்கு மரியாதை செலுத்துவதா, என்றைக்கும் அதற்கு வாய்ப்பில்லை.’

‘அப்படியானால் நானும் உனக்கு அந்த மந்திரத்தைச் சொல்லித்தர முடியாது.’

‘எனில், நான் உன்னைத் தூக்கிலிட உத்தரவிட வேண்டியிருக்கும்.

‘உன் விருப்பம் போல் செய்துகொள்! என் உடலுக்குத்தான் நீ இப்போது எஜமானன். என் மூளைக்கு அல்ல.’

பஜ்ஜோதா யோசனை செய்தார். இந்த வசீகரிக்கும் மந்திரம் இவனைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உதயணனைப் பார்த்து, அவனை மதித்து வணங்கும் வேறு யாருக்காவது அதைச் சொல்லித்தர முடியுமா என்று கேட்டார்.

சொல்லித் தருவேன் என்று அவர் பதில் அளித்ததும், பஜ்ஜோதா தன் மகளை அழைத்தார்: ‘ஒரு குள்ளன் வந்திருக்கிறான். அவனுக்கு வசீகர மந்திரம் ஒன்று தெரியும்; அதை அவனிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும். அதன்பின் அதை எனக்கு சொல்லித் தரவேண்டும்’ என்று மகளிடம் கூறினார். மகள் ஒப்புக்கொண்டார்.

மன்னன், உதயணனிடம், ‘கூனலான பெண்ணொருத்தி இருக்கிறாள். அவள் திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு உனக்குரிய மரியாதையைச் செய்வாள். திரைச்சீலைக்கு வெளியில் நின்றுகொண்டு அவளுக்கு அந்த வசீகர மந்திரத்தைக் கற்பிக்க வேண்டும்’ என்றார். அவர்களிடையில் நட்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மன்னன் இந்தத் தந்திரத்தைச் செய்தார்.

சிறை பிடிக்கப்பட்ட ஆசிரியர் தினந்தோறும் மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும், திரைமறைவிலிருந்த மாணவியால் அதைக் கற்க முடியவில்லை. திரும்பவும் உச்சரிக்க முடியவில்லை. இறுதியாக ஒருநாள், பொறுமையிழந்த உதயணன் சத்தமாகக் கோபித்துக் கொண்டான். ‘சரியாகத் திருப்பிச் சொல், கூனியே! உனக்குக் குழறும் நாக்கும் அசையாத தாடையுமா இருக்கிறது!’

இளவரசி உடனே ‘என்ன சொல்கிறாய், கேவலமான குள்ளனே! என்னை எப்படி கூனி என்று அழைக்கலாம்?’ என்று பதிலுக்குக் கோபத்துடன் கேட்டாள். உதயணன் உடனே திரைச்சீலையின் ஒரு முனையைப் பிடித்து இழுத்தான். அவள் யார் என்று கேட்டார். சொன்னாள். மன்னனின் தந்திரம் வெளிப்பட்டது. அவன் அவளிருந்த இடத்திற்குள் சென்றான். அதன்பின் அன்று வசீகரிக்கும் மந்திரத்தைக் கற்றுக் கொள்வதோ பாடங்களைத் சொல்வதோ எதுவும் நடக்கவில்லை.

இருவரும் சேர்ந்து, மாற்றுத் திட்டம் ஒன்றைப் போட்டனர். மந்திரத்தை முறையாகக் கற்றுக்கொள்வதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறதாம்; சில நட்சத்திரங்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தில் கையில் ஒரு குறிப்பிட்ட சக்திவாய்ந்த மூலிகையை வைத்திருக்க வேண்டுமாம் என்று அவள் தன் அப்பாவிடம் கூறினாள். அவர்கள் வெளியில் செல்லவும், உதயணனின் பிரபலமான யானையைப் பயன்படுத்தவும் அனுமதியும் கேட்டாள். மன்னன் அவள் விருப்பத்துக்கு அனுமதி அளித்தார்.

ஒரு நாள், அவளது தந்தை உல்லாசப் பயணம் சென்றிருந்தபோது, உதயணன் அவளை யானையின் மீது ஏற்றிக்கொண்டு, தோல் பைகளில் காசுகளையும் தங்கப்பொடிகளையும் நிறைய நிரப்பி எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.

வீரர்கள் மன்னன் பஜ்ஜோதாவிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். கோபம் கொண்ட அவர், விரைந்து சென்று அவர்களைப் பிடித்துவரும்படி படையொன்றை அனுப்பினார். துரத்திவருபவர்களைப் பார்த்த உதயணன் சிறிது தூரம் சென்ற பின், காசுகள் இருந்த பையை அவிழ்த்துக் கொட்டினான். வந்தவர்கள், காசுகளைப் பொறுக்கி எடுப்பதில் ஈடுபட்டதால் தாமதித்தனர். தப்பிச் செல்பவர்கள் மேலும் முன்னேறி சென்றனர். படைவீரர்கள் மீண்டும் அவர்களருகில் நெருங்கியதும், உதயணன் தங்கப் பொடிகள் இருந்த பையை அவிழ்த்துக் கொட்டினான். வீரர்கள் அதை எடுப்பதற்குத் தாமதித்து நின்றனர்.

அவர்கள் தப்பியவர்களை மீண்டும் நெருங்கியபோது, அவர்கள் எல்லையைத் தாண்டிவிட்டனர். உதயணனின் படைகள் தங்கள் அரசனை எதிர்கொள்ளக் கோட்டையிலிருந்து வெளியே வந்து நின்றன! பின்தொடர்ந்து வந்தவர்கள் பின்வாங்கித் திரும்பினர். உதயணனும் வாசவதத்தையும் பாதுகாப்பாக வெற்றியுடன் நகரத்துக்குள் நுழைந்தனர். ஆடம்பரமாகவும் உரிய சடங்குகளுடனும் அவள் உதயணனின் ராணியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டாள்.

(தொடரும்)

 

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *