Skip to content
Home » பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

பௌத்த கிராமங்கள்

புத்தர் காலத்திலும், பௌத்தத்தின் செல்வாக்கு மிகவும் விரைவாகவே உணரப்பட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும், அதாவது இப்போது ஐக்கிய மாகாணங்கள் (யுனைட்டட் பிராவின்ஸ்) என்றும் பீகார் என்றும் அழைக்கப்படும் பகுதிகளிலும், அவற்றை ஒட்டியிருந்த மாவட்டங்களிலும் சமூக நிலைமைகள் முற்றிலும் எளிமையாகத்தான் இருந்தன. ஆனால், அதே மாவட்டங்கள் இப்போதிருக்கும் நிலைமைகளில் இருந்தும், அப்போது ஐரோப்பாவில் வாழ்ந்த இவர்களைப் போன்ற பழங்குடியினத்தவரிடமிருந்து பல்வேறு ஆர்வமூட்டும் விஷயங்களில் வேறுபட்டிருந்தன.

இந்த வேறுபாடுகளை விளக்க வெவ்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. உணவு மற்றும் தட்பவெப்பநிலையின் தாக்கத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதிகப்படியான அரசியல் நடவடிக்கைகளும் மிகுதியான தேசபக்தியும் இல்லாத நிலைக்குக் காரணம், சைவ உணவுப் பழக்கம் மற்றும் அதன் விளைவான உடல் மற்றும் மனரீதியான வலிமைக் குறைவு என்று சொல்லப்படுகிறது. இந்த யூகம் நிரூபிக்கப்படவேண்டிய ஒன்று. வெப்பமண்டலப் பிரதேசமும், புழுக்கத்தையும் வியர்வையையும் உண்டாக்கும் சமவெளிப்பிரதேசமும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மனிதர்களைத் தளர்வடையச் செய்த காரணத்தால் தீவிர அரசியல் செயல்பாடுகள் குறைவாக இருந்தன; அறிவார்ந்த தத்துவங்கள் உருவாகவில்லை என்று கூறப்படுகிறது. அல்லது இடியும் மின்னலும் சேர்ந்த கடும் புயல்கள், சுட்டெரிக்கும், தவிர்க்கமுடியாத சூரியக் கதிர்கள், மனச்சோர்வை உண்டாக்கும் கம்பீரமான பெரும் மலைகள் போன்ற வலிமையான இயற்கை சக்திகள் மனிதர்களின் மனத்தில் ஏற்படுத்தும் பெரும் தாக்கம் ஆகியன இந்திய மக்கள் தாழ்வு மனப்பான்மை மிக்கவர்களாக இருந்ததற்கான காரணமாகக் கூறப்படுகின்றன. அத்துடன், அந்த மக்களது வாழ்விலும் சிந்தனையிலும் விநோதமானதாக நாம் பார்க்கமுடிகிற அனைத்துக்குமான காரணங்களாக, வளர்ச்சி நிலையில் அதிகம் முன்னேற்றமடையாமல் ஓரளவுக்குக் கானகவாசிகள் என்ற நிலையிலேயே இருந்த பழங்குடியினருடன் இவர்களுக்கு இருந்த தொடர்புகள், அதிகமும் நடந்த அக மண உறவுகள், அதன் தொடர்ச்சியாக இவர்கள் பின்பற்றிய முட்டாள்தனமான மற்றும் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகள் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் மத்தியதரைக் கடலின் கரையோர நிலைமைகள் குறித்தும் அல்லது மறுபுறம் கங்கை சமவெளிப்பகுதியின் நிலைமைகள் குறித்தும் நமக்கு இருக்கும் அறிவு/ அல்லது நமக்குத் தெரிந்திருக்கும் விஷயங்கள், அந்தக் காலகட்டத்தில் இந்திய மக்கள் தாழ்வான நிலையில் இருந்தார்கள் என்ற நமது முடிவுக்கு உதவுவதாக, அதை நியாயப்படுத்தும் அளவுக்குத் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறதா என்பது சந்தேகமானதே. சில அம்சங்களில் அது வேறுவிதமாக இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. குறைந்தபட்சம், அறிவு சார்ந்த திறன்களில் இந்தியர்கள் குறைந்தவர்களாக இல்லை. உண்மையைக் கூறுவதென்றால், ஐரோப்பியர்கள் மத்தியில் தாம் மேலானவர் என்று பரவலாகக் காணப்படும் நம்பிக்கை இப்போது மட்டுமல்ல; எப்போதும் உளவியல் ரீதியாக சுவாரஸ்யமானது. நாகரிகமடைந்திராத மனிதர்கள் குறித்த பண்டைய கிரேக்கர்களின் கருத்தும், வெளிநாட்டவர் குறித்த நவீன காலத்துச் சீனர்களின் கருத்தும் இதுபோன்றதே. ஆனால், தரப்படும் காரணங்கள் தெளிவற்றவை, அத்துடன் ஆய்வுக்கு உட்படுத்த முடியாதவை.

1897-ல், பாரிஸில் நடைபெற்ற ஓரியண்டல் காங்கிரஸில் தட்பவெப்பநிலை குறித்த விவாதத்தில் பேராசிரியர் ப்யூலர் பேசியதை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். மிகவும் பலமான எச்சரிக்கை ஒன்றை அவர் வெளிப்படுத்தினார். இந்தியாவில் பள்ளிகளின் ஆய்வாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்திருந்த அவர், அந்தத் தேசத்தின் தட்ப வெப்பநிலையை நன்கு அறிந்தவர்; அப்பிரதேசத்து காலநிலை மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவது என்ற மிகை-மதிப்பீடுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு இதுவரையிலும் வருகை தந்திராத நபர்களால் முன்வைக்கப்பட்டது என்று அவதானித்திருந்தார்.

அந்தத் தேசத்தில் உடல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் அதிகச் சக்தியுடன் செயல்படுவதும் உழைப்பதும் ஐரோப்பியர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பூர்விக குடிமக்களாலும் சாத்தியமில்லாதது. அந்த மக்களுக்கு அது இயல்பானதே என்பதை அங்கு வசித்தவர்கள் அறிந்திருந்தனர். என்னால் இதை முழுமையாக உறுதிப்படுத்த முடியும்.

இந்தக் காலநிலை நேர்மறையான நன்மைகளையும் கொண்டுள்ளது. அனைத்துப் பழமையான நாகரிகங்களும் (எடுத்துக்காட்டாக எகிப்தில் மெசபடோமியா மற்றும் சீனா) வெப்பமான, வளமான நதியோரத்துச் சமவெளிப் பகுதிகளில், ஓரளவு இதுபோன்ற புறவயச் சூழலில், நிலைமைகளில்தான் வளர்ச்சியுற்றன. ஆனால், இந்தியாவுக்குள்ளும் காலநிலை பெரிதும் மாறுபடுகிறது. பௌத்தம் தோன்றிய சாக்கிய தேசம், இமயமலையின் கீழ்ச் சரிவு வரை நீண்டிருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அத்துடன் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் மிகவும் வலிமையான இராஜ்ஜியமாக இருந்த வடக்குக் கோசலத்தின் தலைநகரம் மலையடிவாரத்தில் இருந்தது, அந்த நகரத்தின் வலிமை, அந்தத் தேசத்திலும், சுற்றிலும் வசித்த மலையேறும் அனுபவம் பெற்றவர்களைச் சார்ந்திருந்தது.

இந்தியர்களின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தியதில் புவியியல் சார்ந்த நிலைமைகளைக் காட்டிலும் பொருளாதார நிலைகளும் சமூக நிறுவனங்களும் முக்கியமான காரணியாக இருந்தன. இந்தியச் சமூக அமைப்பின் அடிப்படையாகக் கிராமங்கள் இருந்தன. அவற்றின் அமைப்புமுறை குறித்த விவரங்கள் முழுமையாக நமக்கு இன்னமும் தெரியவில்லை; மேலும் சந்தேகத்துக்கு இடமின்றி அந்தச் சமூகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு கிராமங்களில், நில-உடைமை பழக்க வழக்கங்கள் மற்றும் குடும்பத்தின் தலைவர்களாக இருந்த தனிநபர்களின் உரிமைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தன.

ஆரியர்கள் படிப்படியாக இந்தியாவைக் கைப்பற்றிய நேரத்தில் அவர்கள் எதிர்கொண்டு சந்தித்த மக்கள் நாகரிகமடையாத பழங்குடியினர் என்று இந்தியாவின் ஆரம்பக்கால வரலாறு பற்றிய அனைத்து முடிவுகளையும் மாற்றியமைக்கும் வகையில் கருதுவது பொதுவானதொரு பிழையாகும். சிலர் அப்படி இருந்தனர் என்று சொல்லலாம். மலைகளில் வசித்த பழங்குடியினராக, நாடோடிகளாக, வனங்களின் வேட்டையாடும் குழுக்களாக இருந்தனர். ஆனால், மிகவும் வளர்ச்சியுற்ற சமூக அமைப்புமுறையுடன் நன்கு அமைந்த சமூகக்குடிகளாகவும் சிலர் இருந்தனர். படையெடுப்பாளர்களின் பேராசையைத் தூண்டும் வகையில் அவர்கள் போதுமான அளவுக்குச் செல்வந்தர்களாக இருந்தனர்.

பல நேரங்களில் அமைதியான வாழ்க்கை முறையையே அதிகமும் பின்பற்றினர்; சண்டை என்று வரும்போது நீண்ட நாட்களுக்கு எதிர்த்து நிற்கவும் அவர்களால் முடியும். ஆனால், சில நேநங்களில் மதிப்பு மிக்க சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்குப் போதுமான வலிமை பெற்றவர்களாகவும் இருந்தனர். வேறு சந்தர்ப்பங்களில் போராட்டத்தால் வெளிப்பாடான புதிய தேசத்தின்மீது அவர்களது கருத்துகளையும். அவர்களது நிறுவனங்களது அம்சங்களையும் திணிக்கும் அளவுக்கு வலிமையுடன் இருந்தனர்.

ஆனால், பல சந்தர்ப்பங்களில் போராட்டத்துக்கான வாய்ப்பே இருக்காது எனலாம். அந்தத் தேசம் மிகப் பெரியது. அந்தப் பெரிய, பரந்த நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் பழங்குடியினரும் இனக்குழுக்களும் எண்ணிக்கையில் மிகவும் குறைவே. பெரும்பாலும் ஒரு பிரதேசம் மற்றொன்றிடமிருந்து மிக அகலமான ஆறுகளாலும், ஊடுருவ முடியாத காடுகளாலும் பிரிக்கப்பட்டிருந்தது. ஆகவே, சுயாதீனமான வளர்ச்சிக்கும், சமாதான முறையில் தொடர்புகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்க வேண்டும்.

இந்தச் சூழ்நிலைகள் கிராமங்களின் அமைவில் நிலவிய வேறுபட்டதன்மையை விளக்கக்கூடும். ஆனால், சில விஷயங்களில் கிராமங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. தனித்து இருக்கும் வீடுகள் பற்றி நாம் எங்கும் கேள்விப்படவில்லை. வீடுகள் அனைத்தும் ஒரேயிடத்தில், தொகுப்பாக அமைந்திருந்தன; அவற்றைக் குறுகிய சிறு தெருக்கள் மட்டுமே பிரித்தன. கிராமத்தை அமைக்க, அருகிலிருந்த வனங்களின் மரங்களை வெட்டியபோது புனிதமான மரங்கள் என்று கருதப்பட்டவை வெட்டாமல் விடப்பட்டன. அவை கிராமத்தை ஒட்டி பெருந்தோப்புகளாக நின்று கொண்டிருந்தன. இதற்கு அப்பால், பரந்து விரிந்து கிடக்கும் விளைநிலங்கள்; பெரும்பாலும் அவை நெல் வயல்கள்.

ஒவ்வொரு கிராமமும் கால்நடைகளின் மேய்ச்சலுக்கான புல்வெளியையும், கணிசமான பரப்பளவில் வனங்களையும் பெற்றிருந்தன. காடுகளின் கழிவுகள் மீதும் மரங்கள் மற்றும் விறகுகள் மீதும் கிராமவாசிகளுக்குப் பொதுவான உரிமைகள் இருந்தன.

கால்நடைகள் முறையே கிராமத்துக் குடும்பத்தலைவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. ஆனால், யாருக்கும் தனிப்பட்ட மேய்ச்சல் நிலம் கிடையாது. அறுவடைக்குப் பின் கால்நடைகள் வயல் வெளிகளில் சுற்றித் திரிந்தன. பயிர்கள் விளைந்திருக்கையில், கிராமத்தினரால் கூட்டாக அமர்த்தப்படும் மேய்ப்பனின் பொறுப்பில் கால்நடைகள் விடப்படும். வயல்வெளிக்கு அப்பாலிருந்த கிராமத்து மேய்ச்சல் வெளிக்கு அவன் அவற்றை ஓட்டிச் செல்வான். கால்நடை மேய்ப்பவன் முக்கியமான நபர். அவனது பண்புகள் இவ்வாறு விவரிக்கப்படுகின்றன:

‘அவனது பொறுப்பிலிருக்கும் கால்நடைகளின் பொதுவான தோற்றத்தையும், அவற்றின் மீது இடப்பட்டிருக்கும் அடையாளக் குறிகளையும் அறிந்தவன்; மாடுகளின் உடம்பிலிருந்து ஈக்களின் முட்டைகளை அகற்றுதல், புண்களை ஆற்றுதல் ஆகிய திறமை படைத்தவன்; மாட்டு ஈக்கள் அருகில் வராமலிருக்கும் வகையில் புகை அதிகமாக வெளிப்படும் அளவுக்கு நெருப்பு மூட்டத்தெரிந்தவன்; நீர் இருக்கும் குட்டைகளையும் கால்நடைகள் நீரருந்த வசதியான இடங்களையும் அறிந்தவன்; புல் நிறைந்த மேய்ச்சல் நிலத்தைத் தேர்ந்தெடுப்பதில் திறமை மிக்கவன்; மாடுகளின் மடிகளிலிருந்து பால் கறக்காமல் இருப்பவன்; மந்தைகளின் தலைமை விலங்கை மதிப்புடன் நடத்தத் தெரிந்தவன்’.

வயல்களில் விவசாயம் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது; நீர்ப்பாசன வசதிகள் சமூகத்தினரால் செய்துகொள்ளப்பட்டன. நீர்ப் பயன்பாடும் அதாவது நீர் வழங்குவதும் விதிகள் சார்ந்து கிராமத் தலைவனின் மேற்பார்வையில் ஒழுங்குபடுத்தப்பட்டன. எந்தவொரு தனிநபரும் அல்லது அதிக அளவில் நிலம் வைத்திருப்பவரும் தனது வயல்களைச் சுற்றி வேலி அமைக்கத் தேவையில்லை. ஆனால், ஒரு பொதுவான வேலி இருந்தது; நீர் வழித்தடங்களாகவும் செயல்படும் வரப்புகள் எல்லைகளாக, வயல்வெளி முழுவதையும் பார்க்கும்போது, இணைத்துத் தைக்கப்பட்ட புத்த மதத்தவரின் அங்கியைப்போல் தோன்றியது.

கிராமங்களில் இருந்த பெரும் வயல் பரப்பு குடும்பத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல சிறு வயல்களாகப் பிரிக்கப்பட்டது; இது ஒரு பொதுவிதியாக இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் அதன் பங்குக்கான விளைச்சலை எடுத்துக்கொண்டது. ஆனால், இங்கிலாந்தில் நாம் பார்க்க முடிவதுபோல் சமூகத்தில் எவருக்குமே நிலத்தின்மீது தனிப்பட்ட உரிமை இல்லை. இதுபோன்று கிராமத்து நிலத்தில் அவருக்கு இருக்கும் பங்கை, பங்குதாரர் எவரும் அதை ஓர் அந்நியருக்கு விற்றதாகவோ அடமானம் வைத்ததாகவோ நாம் கேள்விப்படவில்லை; குறைந்தபட்சம் கிராமசபையின் அனுமதியின்றி அவரால் அவ்வாறு செய்ய இயலாது.

சில பழங்கால நூல்களில் நிலம் விற்கப்பட்டதாக மூன்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஒன்றில், அந்த நிலம் உடைமையாளரோ அல்லது அவரது முன்னோர்களோ வனத்தைச் சுத்தம் செய்து உருவாக்கியது; மிகப் பழமையான நூலில், உயிர்ப்பலி சடங்கு ஒன்றை நடத்தியதற்குச் சன்மானமாக நிலம் வழங்கப்பட்டது என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த நிலத்தையும் யாரும் விற்கவோ வாங்கவோ முடியாது என்றும் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது. பூமித் தாய் விற்கவோ வாங்கவோ முடியாதவள்; அனைவரும் பயந்து பணிந்து வணங்கும் தெய்வம்.

எந்தவொரு தனிநபருக்கும் தனது சொத்தை மற்றவர்க்கு அளிக்கும் உரிமை, ஏன் அவரது குடும்பத்துக்கான பகுதியைக் குறித்து முடிவெடுக்கும் அளவுக்கான உரிமை கூடப் பெற்றிருக்கவில்லை. இவை போன்றவை அனைத்தும் சமூகத்தில் நிலவும் வழக்கங்களின் அடிப்படையில் தீர்க்கப்பட்டன. சமூகம், பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் எது சரி, எது சரியில்லை என்று தீர்மானம் செய்தது. மூத்த மகனுக்கு மட்டுமேயான வாரிசு உரிமையைப் பொதுவாக அங்கீகரிக்கவில்லை.

குடும்பத் தலைவர் இறந்துவிட்டால், பெரும்பாலும் அந்தக் குடும்பம், அந்தக் குடும்பத்தின் மூத்த மகனின் மேற்பார்வையில், முன்னர் எப்படி நடந்ததோ அதே வழியில் தொடர்ந்து நடக்கும். ஒருவேளை சொத்துப் பிரிக்கப்பட வேண்டியிருந்தால், நிலம் மகன்களுக்கு இடையில் சமமாகப் பிரிக்கப்பட்டது. தனிப்பட்ட சொத்தில் மூத்த மகனுக்குக் கூடுதல் பங்கு (வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் இது வேறுபட்டிருந்தது) அளிக்கப்பட்டது; எனினும், அதுவும் சமமாகத்தான் பிரிக்கப்பட்டது. கௌதமர் தொடர்பான ஆரம்பக்கால விதிகள் குறித்த நூலொன்றில், இளைய மகனும் கூடுதல் பங்கைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. ’Gavelkind’ என்ற ஆங்கிலேயச் சட்டத்துக்கு இது இணையானது. (செல்டிக் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இது ’Gavail-kinne’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து ‘family settlement’ என்ற பொருளில் பெறப்பட்டது.) ஆனால், விதிகள் குறித்த பிற்காலத்து நூல்களில் இந்தப் பதிவுகள் காணப்படவில்லை.

பெண்களுக்கும் தனிப்பட்ட சொத்துகள் வைத்துக்கொள்ளும் உரிமை இருந்தது. அவை முதன்மையாக அணிகலன்களும் உடைகளும்தான் இருந்தன. மகள், தாயிடமிருந்து இவற்றைச் சுவீகரித்துக் கொண்டாள். நிலத்தில் அவர்களுக்குத் தனியாக ஒரு பங்கு தேவையில்லை; ஏனெனில். அவற்றின் விளைபொருட்கள் அவர்களது கணவர்கள் மற்றும் சகோதரர்களின் பங்காகக் கிடைத்துவிடுகின்றன.

கிராமத்துக்குப் பொதுவான புல்வெளி மீதோ அல்லது வனத்தின் எந்தப் பகுதியின் மீதோ தனி நபர் எவரும், அதை வாங்கியதன் அடிப்படையிலோ அல்லது சுவீகரிப்பின் மூலமாகவோ பிரத்தியேக உரிமை எதையும் பெற முடியாது. மேய்ச்சல் நிலத்துக்கும் காடுகளின் மீதான இந்த உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட யாகத்தை (அறுநூறு பலி!) செய்ததற்காக புரோகிதர்களுக்கு இதைப்போன்ற நிலத்தின் பெரும் பரப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ஒரு கிராமத்தை தானமாக புரோகிதர்களுக்கு வழங்குவது ஒரு சிறப்பான விஷயமாக அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறது.

அதுபோன்ற நிகழ்வில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்; அந்த அரசன் நிலத்தை (அரசனுக்கு நிலம் மீது உரிமை இல்லை) எடுத்துக் கொடுத்துவிடவில்லை; ஆனால், அந்த நில வருவாயில் இருந்து வழக்கமாக அரசாங்கத்துக்கு ஆண்டுதோறும் கட்ட வேண்டிய பத்திலொரு (tithe-பதின்ம வரி) பங்கைத்தான் விலக்காக அளிக்கிறார். விவசாயிகள் எவரிடமிருந்தும் அவர்களது உரிமைகள் எவையும் பறிக்கப்படவில்லை. உண்மையில் அவர்களது நிலை மேம்பட்டதாகத்தான் இருந்தது. ஏனென்றால், அவர்கள் முன்பு செலுத்தப்பட்ட அதே வரியை மட்டுமே செலுத்துகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு பலமான செல்வாக்குள்ள ஒருவரின் பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது.

கிராமத்தினர் பொதுவாகப் பாதுகாப்பு இல்லாமல் இருந்தார்கள் என்பதல்ல. கிராமத் தலைவர் மூலமாகவே அரசாங்க நடவடிக்கைகள் அனைத்துமே மேற்கொள்ளப்பட்டன, மேலும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிடம் மக்களது பிரச்னைகளை எடுத்துச் சொல்லும் வாய்ப்பும் அதிகாரமும் அவருக்கு இருந்தது. பிற்காலத்துச் சட்ட நூல்கள் கூறுவதுபோல் இந்த கிராமத் தலைவர் ராஜாவால் நியமிக்கப்படவில்லை; அத்துடன் முந்தையக் காலங்களில், இந்த நியமனம் பாரம்பரியமாக இருந்தது; அல்லது கிராம சபையால் தீர்மானிக்கப்பட்டது என்பது ஏறத்தாழ உறுதியாகிறது.

அரச குடும்பத்தைச் சார்ந்த நபரோ உயர் அதிகாரியோ கிராமத்துக்கு வருகை தரும் நேரங்களில் இந்தக் கிராமத் தலைவர்தான் சந்தேகத்துக்கு இடமின்றிச் சாலையைச் சரி செய்வார்; அனைவருக்கும் உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்வார். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அரசாங்கத்துக்கான ‘கோர்வி’ அதாவது கட்டாய உழைப்பு (ராஜ காரியம்) பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், பிற்காலத்துச் சட்டப் புத்தகங்களிலும், கைவினைஞர்கள் மற்றும் எந்திர வல்லுநர்களிடம் இருந்துதான் இந்தச் சேவை பெறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மாறாக, கிராமத்து மக்கள் செய்ததாகப் பதிவு ஏதுமில்லை.

மறுபுறம், கிராமத்து மக்கள் ஒன்றிணைந்து, சமூகக் கூடங்களையும் ஓய்வு இல்லங்களையும் நீர்த்தேக்கங்களையும் கட்டுகிறார்கள்; ஊருக்குள்ளும், அண்டை கிராமத்துக்குச் செல்லும் இணைப்புச் சாலைகளையும் அவர்களே சீரமைக்கிறார்கள்; அத்துடன் பூங்காக்களையும் உருவாக்கினார்கள் என்று விவரிக்கப்படுகிறது. அத்துடன் இதுபோன்ற பொது பயன்பாட்டுப் பணிகளில் பெண்களும் பெருமித உணர்வுடன் பங்கு கொண்டார்கள்.

இந்தக் கிராமங்களில் பொருளாதார நிலைமைகள் எளிமையாகவே இருந்தன. இப்போது செல்வந்தர்கள் என்று நாம் சொல்பவர்கள் போல் அந்தக் காலகட்டத்தில் கிராமத்தில் எந்தக் குடும்பத்தலைவரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது எளிய தேவைகளுக்குப் போதுமானவை கிராமத்தில் கிடைத்தன. பாதுகாப்பு இருந்தது, சுதந்திரம் இருந்தது. நிலப்பிரபுக்கள் இல்லை, ஏழைகளும் இல்லை. எந்தக் குற்றமும் மிகக் குறைவே. ஏதேனும் குற்றம் நடந்தது என்றால், அது கிராமங்களுக்கு வெளியில்தான் நடந்தது. அரசு வலுவாக இருந்த காரணத்தால், கொள்ளை போன்றவை ஒடுக்கப்பட்டன என்பது பொதுவான விஷயம். பழைய சுத்தந்தா ஒன்றின் வினோதமான சொற்களை நாம் மேற்கோள் காட்டலாம்: மக்கள், ’ஒருவர் மற்றொருவரால் திருப்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்; குழந்தைகளைக் கைகளில் பிடித்தபடி நடனமாடி மகிழ்ந்தனர்; திறந்து வைத்த கதவுகளுடன் வாழ்ந்தனர்.’

இந்த மகிழ்ச்சியைப் பாதிக்கும் தீவிரமான ஒரே விஷயமாக வறட்சியின் விளைவான பஞ்சம் இருந்தது. மகதத்தின் அரசவையில் நீண்டகாலம் தூதுவராக இருந்த மெகஸ்தனிஸ், நீர்ப்பாசன வசதி காரணமாக, பஞ்சம் என்பது முற்றிலும் அறியப்படாத ஒன்று என்று கூறியிருப்பது உண்மைதான். ஆனால், பஞ்சம் மெகஸ்தனிஸ் வசித்த பாட்னாவை ஒட்டிய மாவட்டங்களிலேயே நிலவியது என்பது குறித்து பல குறிப்புகள் நம்மிடம் உள்ளன. அதுவும் அவரது கூற்று சரியானதுதானா என்று விவாதிக்கும் அந்தக் காலகட்டத்திலேயே நிலவியது. இருப்பினும், அந்தக் குறிப்புகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தையத் தேதியைக் குறிப்பிடுகின்றன; ஆகவே, இந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கும் மெகஸ்தனிஸின் காலகட்டத்துக்கும் இடையிலான காலத்தில் நிலைமைகள் மேம்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டுதான். ஆனால் அப்படி நடந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

பின்னால் வரவிருக்கும் சந்திரகுப்தர் குறித்துப் பேசும் அத்தியாயத்தில் மெகஸ்தனிஸின் கூற்றுகள் பல பிழையாக இருப்பதை நாம் பார்க்கப் போகிறோம். அநேகமாக, இதுவும் அதுபோன்ற ஒரு நிகழ்வாக இருக்கக்கூடும்.

இது போன்ற பொருளாதார நிலைமைகளில் தான் மக்களில் பெரும்பான்மையோர் குறைந்தபட்சம் 70-80 சதவீதம் பொதுமக்கள் வாழ்ந்தனர். பழமையான மற்றும் நவீனப் புத்தகங்கள், பொது மக்கள் அல்லாத சிலரைப் பற்றித் தொடர்ந்து குறிப்பிடுகின்றன; ஏனென்றால் அவர்கள் பொது மக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். பொதுவாக பொதுமக்கள் பற்றி பெரிய அக்கறை வரலாற்று நூல்களில் இருந்திருக்கவில்லை. மதகுருமார்கள், மன்னர்கள், புறக்கணிக்கப்பட்ட ஜாதியினர், வித்தைக் காட்டுவோர், படைவீரர்கள், குடிமக்கள், துறவறம் பூண்ட சிந்தனையாளர்கள் போன்ற பொது ஜனம் சாராத மற்றவர்கள் அவர்களது பங்கை ஆற்றினர்; அதுவும் முக்கியமான பங்கு. ஆனால் இந்திய மக்கள், இப்போது இருந்ததைக் காட்டிலும், முதலாகவும் முதன்மையாகவும் கிராமத்து மக்களாகவே வாழ்ந்தனர். காந்தஹாரிலிருந்து கிட்டத்தட்ட கல்கத்தா வரையிலும், இமயமலையிலிருந்து தெற்கே கட்ச் வளைகுடா வரையிலும் பரந்த விரிந்திருந்த நிலப்பரப்பில், கணிசமான பரப்பளவுடன் பெரிய நகரங்கள் இருந்தன என்று குறிப்புகள் அதிகமாக இல்லை.

எவ்வாறாயினும், பெரும்பான்மை மக்களான கிராமவாசிகள், இப்போதைய கிராமத்து மக்களிடமிருந்து பெருமளவுக்கு முற்றிலும் மாறுபட்ட சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். மோசமான கெடுவாய்ப்பான சூழ்நிலையிலும் கூலிக்கு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதை அவர்கள் சீரழிவாகக் கருதினர். அவர்கள் தங்கள் நிலையை, குடும்பத்தை மற்றும் கிராமத்தை எண்ணிப் பெருமிதம் கொண்டனர். அத்துடன், அவர்கள் அவர்களது வர்க்கத்தைச் சேர்ந்த, கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டனர். அநேகமாக  கிராமத்தினர் மத்தியில் நிலவிய பழக்கவழக்கங்கள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் அந்தத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *