பழங்கால நகரம் ஒன்றின் வெளிப்புறத் தோற்றம் குறித்த விரிவான விளக்கம் நம்மிடம் இல்லை என்பது ஒரு கெடுவாய்ப்பு: உயரமான மதில்கள், சரியாமல் அவற்றைத் தாங்கி நிற்கும் சுவர்களுடன் வலிமையான கொத்தளங்கள், கண்காணிப்புக் கோபுரங்கள், பெரும் வாயிற்கதவுகளுடன் அவை இருந்தன என்று சொல்லப்படுகிறது; கோட்டையைச் சுற்றி ஓர் அகழி அல்லது இரட்டை அகழிகள் இருந்தன. ஓர் அகழியில் நீர் நிரம்பியிருக்கும், மற்றொன்றில் சேறு. சாஞ்சியில் இருக்கும் பௌத்த நினைவுச் சின்ன வளாகத்தில் செதுக்குச் சிற்பம் ஒன்று உள்ளது; கி.மு.இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
மேற்கூறிய நகரத்து மதில்களின் மாதிரியை அதில் பார்க்கமுடியும். அதுமட்டுமின்றி, பழங்காலத்தில் கோட்டைகள் அனைத்தும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்திருக்க அதிக வாய்ப்பு உண்டு. ஆனால், கோட்டை மதில்களின் நீளம் அல்லது அவை சூழ்ந்து ஆக்கிரமித்திருக்கும் இடத்தின் பரப்பளவு பற்றி எங்கும் கூறப்படவில்லை.
பெரிய மதில்கள் சூழ்ந்த நகரம் குறித்த தகவல்கள் இல்லை என்றாலும் பல்வேறு புறநகர்ப் பகுதிகள் சூழ்ந்த கோட்டை இருந்திருக்க வாய்ப்பு என்று தோன்றுகிறது. ஏனென்றால், மதியப் பொழுதில் மகிழ்வுலா மேற்கொள்ள விரும்பும் ஓர் அரசனோ ஓர் உயர் அதிகாரியோ அதற்காக நகரத்துக்கு வெளியில் செல்வதாக அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறது. அதுபோல் பெரும் வீடுகளின் ஜன்னல்களைத் திறந்தால், தெருவை அல்லது அப்பகுதியின் சதுக்கத்தைப் பார்க்க முடிவது போல அவை அமைந்திருந்தன என்றும் அடிக்கடிக் குறிப்பிடுகிறது.
எந்த இல்லமும் தனித்த காலியிடம் அல்லது மைதானத்தால் சூழப்பட்டதாகக் கட்டப்படவில்லை என்று இதன் மூலம் நாம் அறியமுடிகிறது. எனினும், பிற்காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் முன்புறம் அமைந்த சுவர்கள் சூழ்ந்த முன்முற்றம் போன்ற இடங்கள் தெருக்களில் முடிவதுபோல் இருந்தன என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
வீடு கட்டுவது குறித்த பலவிதமான விவரங்கள்/ விளக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. கட்டுமானத்துக்கு என்ன விதமான பொருட்கள் பயன்பட்டன என்பதும் தெரிய வருகிறது. வீட்டு முன்பக்கத் தோற்றத்தின் பொதுவான வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதைத் தெரிவிக்கும் செதுக்கு சிற்பங்கள் கிடைத்துள்ளன. மஹோசதா என்ற அரசன் அமைத்த சுரங்க வழி புகழ் பெற்றது; தரைக்குக் கீழே அந்தச் சுரங்கத்தில், அமைத்த அரண்மனை குறித்து மிக விரிவான விவரணைகள் கிடைத்துள்ளன. பழங்காலத்து ’வெல்பெக் அபே’ (Welbeck Abbey- Nottinghamshire) போன்ற மாளிகை அது. கட்டடக் கலை தொடர்பான மிகவும் ஆர்வமூட்டும் விஷயங்கள் நிறைந்தது. (மற்றொரு தகவல், அந்த அரண்மனைக்கு அடியில்தான் கங்கை நதிக்குச் செல்வது போல ஒரு சுரங்கப்பாதையை அவர் அமைத்தார் என்கிறது – மொ.ர்.).
வினய பிடகத்தில் (3. 96, 104-115, 160-180) பௌத்த அமைப்பின் முக்கியமான நபர்களின் வசிப்பிடங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன; மக்கள் வசிப்பதற்கான இல்லங்கள் பலவேறு வடிவங்களில் எப்படிக் கட்டப்பட்டன, எப்படி அழகுபடுத்தப்பட்டன என்பது பற்றிய மிக நுணுக்க விவரங்களையும் அது சொல்கிறது.
மேலும், கடவுளர்களின் மாளிகை குறித்த விவரங்களும், அவை பற்றிய செதுக்குச் சிற்பங்களும் கிடைத்துள்ளன. கடவுளர்களும் உருவாக்கப்பட்ட சிற்பங்களும் மனிதர்களின் பிரதிமைகளாக உருவாக்கப்பட்டனர். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில் மனிதர்களின் பயன்பாட்டிலிருந்த கட்டடங்களுக்கான உண்மையான சான்றுகள் இவை. முழுமையாக விரிவாக எழுதுவதற்கு இங்கு போதிய இடமில்லை. கொடுக்கப்பட்டுள்ள வரைபட விளக்கம், பர்கூட் பௌத்த நினைவுச் சின்ன இடத்தில் பார்க்க முடிவது, மாளிகை ஒன்றின் முகப்புத் தோற்றம் பற்றி சிற்பிக்கு இருந்திருக்கக்கூடிய சிந்தனையை இது வெளிப்படுத்துகிறது.
அடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் வரைபடம், விண்ணுலகத்தில் இருப்பதாகக் கருதப்படும் விஜயந்தா என்ற அரண்மனைப் பகுதியான கடவுளர்கள் சந்திக்கும் அரங்கம் எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தச் சிற்பி எப்படி கற்பனை செய்திருப்பார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.1 (இந்தக் கடவுளர்கள், சுதந்திரக் குடியரசுகளின் இனக்குழு மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்).
சித்தரிக்கப்படும் வரைபடங்களில் நாம் பார்க்கும் தூண்களும் உத்திரங்களும் மரவேலைப்பாட்டைக் குறிக்கின்றனவா? மரவேலைப்பாட்டை போலியாகச் சித்திரிக்கும் நோக்குடன் செதுக்கப்பட்ட கருங்கல் வேலைப்பாடா என்பதைத் தீர்மானிப்பது எளிதாக இல்லை. பிந்தியதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியிருப்பின், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் (செதுக்குச் சிற்பத்தின் ஆண்டு) கருங்கல் ஏற்கனவே அதிகம் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.
ஒரு மலையின் மீது கட்டப்பட்டிருந்த கி.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டையின் மதில் சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தன என்பதை இப்போதும் நாம் பார்க்கமுடிகிறது. எடுத்துக்காட்டு, கிரிப்பஜ்ஜா கோட்டை. ஆனால், மிகவும் முந்தைய காலம் பற்றிப் பேசும் நூல்களில், தூண்கள் அல்லது படிக்கட்டுகளுக்குக் கருங்கல் பயன்பட்டது என்பது தவிர்த்து வேறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. கருங்கல் அரண்மனை ஒன்றைப்பற்றி ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது ஒரு கற்பனை நிலப்பரப்பில் இருக்கிறது. முந்தையக் காலங்களில், அனைத்துக் குடியிருப்புகளின் மேற்கட்டுமானங்களும் குறைந்தபட்சம் மரவேலைப்பாடாக அல்லது செங்கல் கட்டுமானமாகத்தான் இருந்தது என்று கருதலாம்.
இந்த இரண்டுவிதக் கட்டுமானங்களிலும் உட்புறமும் வெளிப்புறமும் பெரும்பாலும், சிறப்பான சுண்ணாம்பு பூச்சு வேலைகளால் மூடப்பட்டிருக்கும்; அத்துடன், வண்ணம் தீட்டப்பட்டு, ஓவியங்களாலும், அல்லது வேறு வடிவங்களாலும் பிரமாதமாக அழகுபடுத்தப்பட்டிருக்கும். சுண்ணாம்பு கொண்டு இந்த மென்மையான அடிப்படைப் பூச்சு எப்படிச் சுவரில் பூசப்படுகிறது; அதில் சுவர் கோல ஓவியங்கள் எப்படி வரையப்பட்டன என்பன குறித்த விரிவான வழிமுறைகள் வினய பிடகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாக்கப்பட்டுப் பின்பற்றப்படும் நான்கு பொதுவான வடிவங்களின் பெயர்களும் கிடைத்துள்ளன: அவை, சரம் (மாலை) போல் வரைதல், படரும் கொடிகள் போல் வரைதல், ஐந்து-ரிப்பன்கள் தொங்குவதுபோல் வரைதல், நாகம்-டிராகனின்-பல வடிவ வரைகலை.
உருவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வேலைப்பாடு பெரும்பாலும் சித்திரங்களின் காட்சிக்கூடம் (சித்திரக் குடில்) என்பதாக அழைக்கப்பட்டது. அஜந்தா ஓவியங்களில் காணப்படுகிற முழுநிறைவான நிலை பிற்காலத்தில்தான் பெறப்பட்டிருக்கும் என்று கருத முடியாது; சித்திரங்களை அழகுற வரைதல் என்பதில் தொடக்கத்திலிருந்தே பெருமளவுக்கு முன்னேற்றம் இருந்தது என்பதையே விளக்கக் குறிப்புகள் காட்டுகின்றன.
o
முக்கியமான பெரும் மாளிகைகளின் நுழைவாயிலை, பெரிய வெளிப்புற வாயிலுக்குள் நுழைந்து சென்று அடைவதுபோல் அமைக்கப்படுகின்றன. அந்த நுழைவாயிலுக்கு இருபுறமும் இருக்கும் நடைபாதைகளில் வலதுபுறத்திலிருப்பது கருவூலத்துக்கும், இடதுபுறம் இருப்பது தானியக் களஞ்சியத்துக்கும் செல்கின்றன. நுழைவாயிலைக் கடந்து சென்றதும் ஓர் உள் முற்றமும், அதைச் சுற்றி (தரை தளம்) அறைகளும் இருந்தன. இந்த அறைகளுக்கு மேலிருக்கும் பகுதி தட்டையான மேற்கூரை. இது உப்பரி-பசாதா-தளா என்று அழைக்கப்பட்டது. அந்தத் தளத்தில் வீட்டின் உரிமையாளர் வழக்கமாக ஒரு விதானத்தின் கீழ் அமர்ந்திருப்பார்; அது ஒரு வரவேற்பறையாகவும், அலுவலகமாகவும், சாப்பாட்டுக் கூடமாகவும், அவர்களின் நோக்கத்துக்கு இசைந்தாற்போல் பயன்படுத்தப்பட்டது.
அரசு காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றவும், அவனது பரிவாரத்தைச் சேர்ந்த ஏராளமான மனிதர்கள் தங்க வசதியாக, விரிவான அந்தப்புரத்தைக் கொண்டதாக, அரசனின் அரண்மனை பெரிதாக இருந்தது. அரசு, அதனுடைய நிர்வாகக் காரியங்களை மேற்கொள்வதற்கான அலுவலகங்கள் அரண்மனைக்கு வெளியில் எதுவும் இல்லை என்று அறிகிறோம். இது தவிர்த்து, நமக்கு விநோதமாகத் தோன்றும் மூன்று நிறுவனங்களை உள்ளடக்கியிருக்கும் துணைக் கட்டடங்களும் இருந்தன. இவை பெருமளவுக்கு வரலாற்று ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
ஏழு மாடிகளுடன் உயரமான மாளிகை ஒன்று, ’சட்ட பூமகா பிரசாதா’ என்ற பெயரில் அடிக்கடிக் குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம். இவற்றில் எதையும் இந்தியாவில் இப்போது பார்க்க முடியவில்லை. ஆனால், இலங்கை புலஸ்திபுராவில் பிற்காலத்தில் கட்டப்பட்ட இது போன்ற மாளிகை ஒன்று இன்றளவும் இருக்கிறது. அத்துடன் ஆயிரம் தூண்களுடன் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மற்றொரு கட்டடம், அதேத் தீவில் அனுராதபுரம் என்ற இடத்தில் இருக்கிறது. மற்றொரு சுவாரஸ்யமான நினைவுச்சின்னங்களில் ஒன்று. ஆர்வத்தைத் தூண்டும் இந்தக் கட்டடங்கள் அனைத்துக்கும் சால்டியாவின் (நியோ -பாபிலோனிய அரசின் நகரம்) கட்டடங்களின் ஒன்றான ஏழு மாடி ’ஸிகராட்’களுடன் (Ziggarat) நிச்சயமாக ஏதோ தொடர்பு கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.
கங்கை நதிச் சமவெளி நாகரிகத்துக்கும் மெசபடோமிய நாகரிகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வேறு வழிகளில் நாம் அறிந்துள்ளோம்; ஆகவே, இந்த விஷயத்திலும், இது போன்ற சிந்தனைகளைப் பிறரிடமிருந்து கடன் வாங்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற ஏழு மாடி கொண்ட அரண்மனைகள் முற்றிலும் தனிமனிதப் பயன்பாட்டுக்குத்தான் இருந்தன. விண்ணுலகச் சக்திகளின்/ நட்சத்திரங்களின் வழிபாட்டுடன் அவற்றுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
ஓர் அரசனுடைய அரண்மனையின் இயல்பான பகுதியாக பொது சூதாட்டக் கூடம் அமைக்கப்பட்டிருந்தது என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. அது தனியாகவோ பெரிய வரவேற்பு மண்டபத்தின் பகுதியாகவோ அமைந்திருக்கலாம். இது போன்ற ஓர் இடத்தை அமைப்பது அரசனின் கடமை என்று ஆபஸ்தம்பச் சூத்திரம் (ii. 25) குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறது; பின்னால் எழுதப்பட்ட வழிகாட்டும் நூல்கள், சூதாட்டத்தில் வென்றவர் அதில் ஒரு பங்கை அரசுக் கருவூலத்துக்குச் செலுத்தும் வழக்கம் இருந்ததைக் கூறுகின்றன. முப்பத்தாறு சதுரங்கள் கொண்ட பலகையில் பகடை வீசி சூதாட்டம் நடைபெற்றது.
விளையாட்டு குறித்த மிக நல்ல முறையிலான விளக்கங்கள் ஜாதகக் கதைகளில் மிகவும் தெளிவாக இல்லை. ஆர்வமூட்டக்கூடிய தொன்மையான செதுக்குச் சிற்பம் ஒன்று திறந்தவெளி சூதாட்ட அரங்கு ஒன்றைக் காட்சிப்படுத்துகிறது. அதில் பிளவுபட்டதுபோல் அமைந்திருக்கும் பாறைமேல் சூதாட்டக்காரர்கள் குழுக்களாக அமர்ந்து விளையாடுகிறார்கள். காட்சியின் மையப்புள்ளி பாறையில் காணப்படும் பிளவுதான் என்பது வெளிப்படை. இது தற்செயலானது அல்ல; முற்றிலும் சிந்தித்து, திட்டமிட்டு அந்தச் சிற்பி வடித்தது. இதுபோன்ற காட்சி வேறு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை; ஆகவே, காட்சி என்ன சொல்கிறது என்பதை நாம் யூகித்துக் கொள்ள வேண்டியதுதான்.
கட்டட அமைப்பின் ஒரு பகுதியாக, வரலாற்று ரீதியாக சுவாரஸ்யம் தரக்கூடியதாக வெப்பக்காற்று குளியல் இருக்கிறது; வினய பிடகம் -iii 105-110, 297ல் இது குறித்து முழுமையாக விவரித்துள்ளது. செங்கல் அல்லது கருங்கல் கொண்டு அமைக்கப்பட்ட உயரமான அடித்தளம் ஒன்றின்மீது இந்த அமைப்புக் கட்டப்பட்டது. அந்தக் குளியல் அறைப் பகுதியை அடைய படிக்கட்டுகள் உள்ளன. அந்த ஆளோடியைச் சுற்றி தடுப்புகள் மரத்தண்டுகளால் அமைந்திருந்தன. மேற்கூரையும், சுவர்களும் மரத்தால் செய்யப்பட்டவை. அவற்றை முதலில் தோல் கொண்டு மூடுகிறார்கள்; அதன் பின், மேல் பூச்சு. சுவரின் கீழ் பகுதி மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
முன் அறையும், வெப்பக்காற்று அறையும், அதன்பின் குளிப்பதற்குச் சிறிய குளமும் இருந்தன. மத்தியில் இருந்த வெப்ப அறையின் நடுவில் நெருப்பு மூட்டப்படும் இடமும் அதைச் சுற்றி இருக்கைகளும் போடப்பட்டிருக்கும்; உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதைத் தூண்டுவதற்கு அவர்கள் மீது சுடு நீர் ஊற்றப்பட்டது. அவர்களது முகங்கள்மீது சுத்தம் செய்யப்பட்டு நறுமணம் சேர்க்கப்பட்ட சுண்ணாம்பு பூசப்படுகிறது. வெப்பக்குளியலுக்குப் பிறகு தலைக்கு ‘ஷாம்பு’ தேய்ப்பதும், குளத்தில் மூழ்கிக் குளிப்பதும் உண்டு. தற்போது ’துருக்கிக் குளியல்’ என்று அழைக்கப்படும் ஒரு வகைக் குளியலைப் போன்ற இந்த வழக்கம் கங்கைச் சமவெளிப் பகுதியில் ஆரம்ப காலகட்டத்திலேயே நடைமுறையில் இருந்ததை அறிவது மிகவும் ஆர்வமூட்டுகிறது. ஒருவேளை துருக்கியர்கள் இந்த வழக்கத்தை இந்தியாவிலிருந்து பெற்றிருப்பார்களோ?
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.