Skip to content
Home » பௌத்த இந்தியா #13 – பொருளாதார நிலைமைகள் – 1

பௌத்த இந்தியா #13 – பொருளாதார நிலைமைகள் – 1

பௌத்த இந்தியா

இந்தியாவின் ஆரம்பகால வரலாற்றின் எந்தவொரு காலகட்டத்தையும் சார்ந்த பொருளாதார நிலைமைகளின் சித்திரத்தை மீட்டுருவாக்கம் செய்ய இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பேராசிரியர் ஸிம்மர், முனைவர் பிக் மற்றும் பேராசிரியர் ஹாப்கின்ஸ் ஆகியோர் முறையே வேதங்கள், ஜாதகக் கதைகள் மற்றும் இதிகாசங்களின் அடிப்படையில், அவற்றில் கூறப்படும் சில விஷயங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். ஆனால் பொதுவாகப் பார்த்தால், இந்தியாவைப் பற்றிய புத்தகங்கள் அனைத்தும், சமயம் மற்றும் தத்துவம், இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த விஷயங்களில் மட்டுமே மிக அதிக அக்கறை கொண்டிருந்தன.

உலகின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம் மக்களின் நேரத்தை, பெரும்பான்மையான நேரத்தை என்று சொல்ல முடியாதென்றாலும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். வேறு விஷயங்களான செல்வம் சேர்த்தல், அதைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றைக் காட்டிலும் தினசரி உணவுத் தேவை பெரிதாக இருந்திருக்கிறது.

முக்கியமான இந்த விஷயம் குறித்து திருமதி.ரைஸ் டேவிட்ஸ் 1901ஆம் ஆண்டுக்கான ‘Economic Journal’, மற்றும் 1901ஆம் ஆண்டுக்கான ‘Journal of the Royal Asiatic Society’ல் எழுதிய கட்டுரைகளின் அடிப்படையில் பின்வரும் கருத்துகள் குறிப்பிடப்பட்டுகின்றன. மேலும் இந்த அத்தியாயத்தில் குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டுரையின் பக்கங்களைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறு இல்லாதவை, மற்ற தரவுகளைக் குறிக்கின்றன.

மகத நாட்டு மன்னன், புகழ்பெற்ற (மற்றும் மோசமான) அஜாதசத்ரு, புத்தரை ஒருமுறைதான் பார்க்கச் சென்றான். அவனது மனநிலையைப் பிரதிபலிக்கிற புதிரான கேள்வியை கௌதமரைச் சோதிப்பதற்காக அவரிடம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அது இதுதான்: ‘உங்களைப்போல் துறவு மேற்கொள்வதால், உங்களது அமைப்பு போன்ற ஒன்றில் சேர்வதால் இந்த உலகில் என்ன நன்மை ஏற்படும்? மற்ற மனிதர்கள் (இங்கே அவன் ஒரு பட்டியலைத் தருகிறான்), சாதாரணமாக கைவினைத் தொழில்களில் ஈடுபட்டு அதிலிருந்து ஏதாவது பெறுகிறார்கள்; அதன்மூலம் இந்த உலகில் அவர்கள் நல்லமுறையில் வாழலாம்; இந்த உலகில், குடும்பங்களைச் சௌகரியமாக வைத்துக் கொள்ளலாம். குருவே, இந்த உலகில் இவ்வாறு துறவு மேற்கொண்டு, தனித்து வாழும் வாழ்க்கையால் கிடைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரிகிற உடனடி பலனை எனக்குக் கூற முடியுமா?’

கொடுக்கப்படும் பட்டியல் குறியீட்டு ரீதியாகத் தெரிவிப்பதே. மன்னனின் பார்வையில் அத்தகையக் கைத் தொழில்களின் சிறந்த எடுத்துக்காட்டுகள் இவை:

1. யானைப் பாகன்கள்
2. குதிரை வீரர்கள்
3. தேர்ச் சாரதிகள்
4. வில் வீரர்கள்
5-13. படையில் பணிபுரியும் ஒன்பது வகை வீரர்கள்
14. அடிமைத் தொழில்
15. சமையல்காரர்கள்
16. முடிதிருத்துவோர்
17. குளியலறை உதவியாளர்கள்
18. இனிப்பு/மிட்டாய் தயாரிப்பவர்கள்
19. மாலை கட்டுபவர்கள்
20. துணி வெளுப்பவர்கள்
21. நெசவாளர்கள்
22. கூடை முடைவோர்
23. பானை வனைவோர்
24. எழுத்தர்கள்
25. கணக்காளர்கள்

இவர்கள் ஒரு முகாம் சார்ந்தோ அல்லது அரண்மனைக்காகவோ பணியமர்த்தப்படுகிறார்கள். அரசனும், அரசனைப் போன்றவர்களும் அரசனுக்கு அமைச்சராகப் பணி செய்பவரை முக்கியமாகக் கருதுகிறார்கள்; அவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். அஜாதசத்ரு அரசனுக்கு அளிக்கப்பட்ட பதிலில் ஒரு விவசாயி குறித்தும், வரி செலுத்துபவர் பற்றியும் மிகவும் பணிவுடன் அவருக்கு நினைவூட்டப்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள். மன்னரின் பட்டியல் முடிவான ஒன்று இல்லை என்பது மற்ற பத்திகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

அதே காலகட்டத்தைச் சேர்ந்த வேறு ஆவணங்களில், தொழிலாளர்களின் குழுக்கள்/ கூட்டமைப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது; பின்னாளில், இந்த அமைப்புகளின் எண்ணிக்கை பதினெட்டு என்று அடிக்கடிக் கூறப்படுகிறது. அவற்றில் நான்கின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கெடுவாய்ப்பாக அந்தப் பதினெட்டின் பெயர்ப் பட்டியல் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அநேகமாக பின் குறிப்பிடப்படுவன அவற்றில் இருக்கக்கூடும்:

1. மர வேலை செய்பவர்கள். இவர்கள் தச்சர்கள் மற்றும் அலமாரி போன்றவை செய்பவர்கள். அத்துடன் வண்டிச் சக்கரங்கள் செய்தல் -பழுதுபார்த்தல், வீடுகள் கட்டுதல், கப்பல்கள் மற்றும் அனைத்து வகை வாகனங்களையும் செய்தனர்.

2. உலோகத் தொழில் செய்பவர்கள். இவர்கள் கலப்பையின் கொழு, கோடரி, மண்வெட்டி, ரம்பம், கத்திகள் போன்ற அனைத்து வகை இரும்புக் கருவிகளையும் உருவாக்கினர். அத்துடன் மிகச் சிறந்த, ஊசிகளை, அதிக லேசானதாக மிகுந்த கூர்மை கொண்டதாகச் செய்தனர். அல்லது நுட்பமாகவும் அழகுடனும் தங்கம் மற்றும் (பெரும்பாலும் குறைவாக) வெள்ளி நகை வேலைகள் செய்தனர்.

3. கல் தச்சர்கள். இவர்கள், வீட்டுக்குள் செல்வதற்கு அல்லது நீர்த்தேக்கத்துக்குள் கீழிறங்கிச் செல்லும் படிக்கட்டுகளை அமைத்தனர். நீர்த்தேக்கங்களையும் உருவாக்கினர். மரத்தாலான வீடுகளின் மேல் பகுதிக்கு அடித்தளம் அமைத்துத் தந்தனர். வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் மற்றும் செதுக்குச் சிற்பங்கள், படிகக் கிண்ணம் அல்லது கருங்கல்லில் பெட்டகம் போன்ற நுட்பமான, சிறந்த வேலைகளையும் செய்தனர். இறுதியாகக் குறிப்பிடப்படும் இரண்டுக்கும் அழகிய எடுத்துக்காட்டுகளை சாக்கிய நினைவுச் சின்ன வளாகத்தில் காணலாம்.

4. நெசவாளர்கள். மக்கள், அணிந்து கொண்ட ஆடைகளுக்கான துணிகளை மட்டும் இவர்கள் தயாரிக்கவில்லை; ஏற்றுமதி செய்வதற்கு சிறந்த மஸ்லின் துணிகளையும் தயாரித்தனர். விலையுயர்ந்த, நேர்த்தியான பட்டாடைகளுக்கான துணிகளை நெய்தனர்; மென் முடி கொண்டு விரிப்புகள், போர்வைகள், ஜமக்காளங்களையும் செய்தனர்.

5. தோல் தொழிலாளர்கள். பெரும்பாலும் குளிர்ப் பருவங்களில் மக்கள் தமது பாதங்களை மூடிக்கொள்வதற்கான ‘கவசம்’ போன்ற செருப்புகளை உருவாக்கினர்; புத்தகங்களில் குறிப்பிடப்படுவதுபோல், இதே வகைப் பொருட்களை சித்திர வேலைகளுடன், விலையுயர்ந்ததாகவும் செய்தனர்.

6. குயவர்கள். வீட்டு உபயோகத்துக்கான அனைத்து வகைப் பாத்திரங்களையும் கிண்ணங்களையும் செய்தனர். பெரும்பாலும் அவற்றைத் தலையில் சுமந்து சென்று தெருவில் விற்றனர்.

7. தந்த வேலைக்காரர்கள்: சாதாரணப் பயன்பாட்டுக்கென தந்தத்தில் பல சிறிய பொருட்களை உருவாக்கினர். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த, இந்தியா இன்றைக்கும் புகழ் பெற்றிருக்கும் விலையுயர்ந்த சிற்பங்களையும் அணிகலன்களையும் செய்தனர்.

8. சாயக்காரர்கள், நெசவாளர்கள் நெய்த ஆடைகளுக்கு இவர்கள் சாயம் தோய்த்து வண்ணம் கூட்டினர்.

9. நகைக்கடைக்காரர்கள். இந்தக் கைவேலைப்பாடுகளில் சில கிடைத்திருக்கின்றன. செதுக்குச் சிற்பங்களில் அவற்றை நாம் காணமுடிகிறது. அதன் மூலம், அவர்கள் உருவாக்கிய ஆபரணங்களின் வடிவம் மற்றும் அளவை நாம் நன்கு அறிந்து கொண்டுள்ளோம்.

10. மீனவர்கள். இவர்கள் ஆறுகளில் மட்டுமே மீன் பிடித்தனர். எனக்குத் தெரிந்தவரை கடலில் மீன் பிடிப்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

11. இறைச்சிக் கடைக்காரர்கள்: இவர்களது கடைகள் பற்றியும் இறைச்சிக் கூடங்கள் பற்றியும் எண்ணற்ற முறை குறிப்பிடப்பட்டுள்ளன.

12. வேட்டைக்காரர்கள் மற்றும் பொறிவைத்துப் பிடிப்பவர்கள்: காடுகளில் இருந்து விலங்குகள் மற்றும் காய்கறிப் பொருட்களையும், மான் இறைச்சியையும் நகருக்குள் வண்டிகளில் விற்பனைக்குக் கொண்டு வருபவர்கள்; இவர்கள் பொழுதுபோக்குக்கான பறவைகள் மற்றும் விலங்குகளையும் கொண்டுவந்தனர் என்று பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஓர் அமைப்பாக உருவாகியிருந்தனரா என்பது சந்தேகமே. ஆனால் அவர்களது தொழில் நிச்சயமாக மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. காடுகளின் பெரும் பகுதிகள் அனைவருக்கும் பொதுவானவை. பெரும்பாலான குடியிருப்புகள் வனப்பகுதியிலிருந்து தள்ளியே அமைக்கப்பட்டிருந்தன.

இறைச்சிப் பயன்பாட்டுக்காகக் கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் அப்போது இல்லை; தந்தம், உரோமம், நரம்புகள், படர்க்கொடிகள் மற்றும் வனங்களில் கிடைக்கும் ஏனைய பொருட்கள் அனைத்துக்கும் தேவை அதிகமிருந்தது; அத்துடன் அத்தொழில் செய்வோரின் இணக்கமான செயல்பாடும், அந்த வேட்டைக்காரர்களை மக்கள் ஊக்குவிக்கும் நிலையை ஏற்படுத்தின. விலங்குகளைத் துரத்தி வேட்டையாடுதல் என்ற மிகவும் தொன்மையான உணர்வு வனவாசிகள் என்று அழைக்கப்படுபவர்களிடம் மட்டுமே இருந்தது என்று கருதக் காரணம் ஏதுமில்லை.

அரசர்களும் பிரபுக்களும், ரத்தத்தால் அவர்கள் ஆரியராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உணவுத் தேவை என்ற பொருளாதார அடிப்படையிலான இலக்குக்கு அப்பால், வேட்டையாடும் பொழுதுபோக்கில் மகிழ்ச்சி அடைந்தனர் என்றே தெரிகிறது. நற்குடிப் பிறப்பாளர்கள் அதை ஒரு வியாபாரமாகச் செய்தனர்; பிராமணர்கள் இந்தத் தொழிலைச் செய்தபோது லாபத்துக்காகச் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. சமையல்காரர்களும் தின்பண்டங்கள் செய்வோரும் அதிக எண்ணிக்கையில் இருந்த வகுப்பினர்; அநேகமாக ஓர் அமைப்பாக அவர்கள் உருவாகி இருந்திருக்கலாம்; ஆனால், அதைப் பற்றிக் குறிப்பிடும் பகுதிகள் ஏதும் இல்லை.

14. முடிதிருத்துவோரும் எண்ணெய் சீயக்காய், நறுமண முதலானவை கொண்டு கேசம் சீர் செய்வோரும் தங்களுக்கு என்று அமைப்பை வைத்திருந்தனர். வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதிலும் விற்பதிலும் ஈடுபட்டிருந்தனர். செல்வந்தர்கள் அணியும் பலவகையான தலைப்பாகைகளை உருவாக்குவதில் அவர்கள் தனித்திறமை பெற்றிருந்தனர்.

15. மாலை கட்டுபவர்கள், பூக்கள் விற்பனை செய்பவர்கள்.

16. பெரும் நதிகளில் இங்குமங்குமாக நடந்த நதிப்போக்குவரத்தில் பெரும்பகுதியை படகோட்டிகள் ஆக்கிரமித்துள்ளனர். சில நேரங்களில் அவர்கள் கடலுக்கும் சென்றனர். நமக்குக் கிடைத்திருக்கும் தொடக்க கால ஆவணங்கள் சிலவற்றில், பார்த்திராத நிலங்களுக்கு நடந்த கடல் பயணங்கள் குறித்தும் பதிவுகள் இருக்கின்றன. ஜாதகக் கதைகள் போன்றவற்றில் குறிப்பிடப்படும் இந்தப் பயணங்கள் அடிக்கடி நடந்திருக்கின்றன. இவ்வாறாக, ஆறு மாதங்கள் வரை நீடித்த கப்பல் பயணங்களை (நாவாய் அல்லது ஒருவேளை படகுகள் மூலம்) பழைய ஆவணங்கள் பேசுகின்றன. பிற்காலத்து நூல்களில் அதாவது ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கங்கை நதிப் போக்குவரத்துப் பற்றிப் பேசப்படுகிறது. பனாரஸிலிருந்து தொடங்கும் பயணம் அதன் முகத்துவாரத்தை அடைந்து கடலைக் கடந்து எதிர்க் கடற்கரையில் இருக்கும் பர்மாவின் நிலப்பரப்பை அடைகிறது. அதுபோலவே பாருகாச்சாவிலிருந்து (தற்போதைய பரோச்) புறப்படும் பயணம் குமரி முனையைச் சுற்றி இந்தியப் பெருங்கடலைக் கடந்து அதே இடத்தை அடைகிறது. எனவே, இந்தக் காலகட்டம் முழுவதும் மாலுமிகளின் தொழில் தொடர்ந்து நடந்திருக்காதபோதிலும் முக்கியமற்றதாகவும் இருக்கவில்லை என்பது தெளிவு.

17. நாணல்/ கோரை வேலை செய்பவர்கள் மற்றும் கூடை முடைபவர்கள்

18. வண்ணம் தீட்டுவோர். இவர்கள் பெரும்பாலும் வீடுகளுக்கு வண்ணம் தீட்டுபவர்கள். வீடுகளில் சுவர்கள் பெரும்பாலும் நேர்த்தியான சுண்ணாம்பு பூச்சால் மூடப்படுகின்றன. அதன் மேல் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. இவர்கள் சுவர்க்கோல ஓவியங்களையும் வரைந்தனர். இந்தப் பத்திகள், பொழுதுபோக்குக்கான கேளிக்கை விடுதிகள் பற்றிக் கூறுகின்றன. மகத மற்றும் கோசல மன்னர்களுக்குச் சொந்தமான இவற்றின் சுவர்கள் வண்ணத்தினால் வரையப்பட்ட உருவங்களாலும் வடிவங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அனைவரும் நன்கு அறிந்த சுவரோவியங்களான கி.பி.ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அஜந்தா குகை ஓவியங்களும், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலோனின் சிகிரி பாறை ஓவியங்களும் பண்புகளில் மேற்குறிப்பிட்ட ஓவியங்களைப் போலவே இருந்தன. ஆனால், அவை நிச்சயமாக முந்தைய காலகட்டப் பாணியிலிருந்தன.

இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் இரண்டு அல்லது மூன்று தொழில் செய்பவர்கள் தம்மை அமைப்பாக/ குழுவாக ஒருங்கிணைத்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால், இவை அனைத்தும் வேளாண்மை தவிர்த்த கைவினைத் தொழில்களில் மிக முக்கியமானவை; இவர்களில் பெரும்பான்மையினர், மத்திய கால ஐரோப்பியாவில் காணப்பட்ட கில்டுகளைப் போல் தமது அமைப்புகளை வைத்திருந்தனர் என்பது உறுதி. முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்களின் சேவை தேவைப்படும்போது ‘குழு (குலம்)’ மூலம்தான் அரசன் அத்தொழிலாளிகளை வரவழைத்தார்.

அத்தகைய அமைப்புகளின் முதிய உறுப்பினர்கள் (குல மூப்பர்கள்-ஆல்டர்மேன்) அல்லது தலைவர்கள் (பாலி மொழியில் ஜெதாகா அல்லது பமுகா) சில நேரங்களில் அரசவையில் மிகவும் முக்கியமான நபர்களாக, செல்வந்தரைப் போன்றவர்களாக, விரும்பத் தகுந்தவர்களாகக் கருதப்பட்டிருக்கின்றனர். உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் மத்தியில் பிரச்னைகள் ஏதாவது எழும் நிலையில் அதைத் தீர்த்துவைக்கும் நடுவர் மன்றம்போல் செயல்படும் அதிகாரத்தை ‘குலம்’ பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு தொழில் குழுவுக்கும் மற்றொரு தொழில் குழுவுக்கும் இடையில் தகராறுகள் ஏதேனும் இருப்பின் அதைத் தீர்த்துவைக்கும் அதிகார வரம்பு ‘மகா-சேத்தி’யிடம், அதாவது இங்கிலாந்தின் Lord High Treasurer போன்ற ஒருவரிடம் இருந்தது; குலங்களின் ‘மூப்பர்’கள் அனைவருக்கும் முதன்மையான ‘முது மூப்பர்’ என்ற தரநிலையில் அவர் செயல்பட்டார்.

விவசாயிகளையும் கைவினைஞர்களையும் தவிர்த்து வியாபாரிகளும் இருந்தனர். பெரிய நதிகளில் படகுகளில் மேலும் கீழும் பயணித்து தம் பொருட்களை விற்றனர். நதிக்கரையோரம் வசித்த மக்களிடமும் வியாபாரம் செய்தனர். பொருட்களை வண்டிகளில் நிரப்பிக்கொண்டு, கூட்டமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று விற்றனர். அளவில் ஓரளவுக்குச் சிறிய இந்த இரு சக்கர வண்டிகளை இரண்டு காளைகள் இழுத்தன. நீண்ட வரிசையில் செல்லும் இவை அக்காலகட்டத்தின் தனித்துவ அம்சமாக இருந்தன. மனிதர்கள் போட்ட சாலைகளோ பாலங்களோ அப்போது கிடையாது. விவசாயிகள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்குத் தமது போக்குவரத்துக்காகக் காடுகளின் இடையே உண்டாக்கிய பாதைகளில் இந்த வண்டிகள் மெதுவாக, மிகவும் சிரமப்பட்டே சென்றன.

வண்டிகளின் வேகம் ஒரு மணிக்கு இரண்டு மைல்கள் தாம். அதைத் தாண்டியதில்லை. சிறிய நீரோடைகள், தோணித்துறைகளுக்கு இட்டுச்செல்லும் ஆழம் குறைவான பகுதிகளில் கடந்து செல்லப்பட்டன. பெரிய நீரோடைகள் வண்டி போன்ற படகுகள் மூலம் கடந்து செல்லப்பட்டன. அவை நுழையும் ஒவ்வொரு நாட்டிலும் வரிகளும் சுங்க வரியும் விதிக்கப்பட்டன; பொருள் எடுத்துச் செல்லும் இந்த நடைமுறையில் அதிகச் செலவு தரும் விஷயமாக, பயணக் குழுவினரை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க வணிகர்கள் தாமாகவே ஏற்பாடு செய்துகொள்ளும் காவல் படைக்கு அளிக்கும் சம்பளம் இருந்தது.

இப்படிச் செய்யப்படும்போது பொருளுக்கு விலை அதிகமாகிவிடும். ஆகவே, விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லும் பயணக்குழு மட்டுமே இப்படியான செலவைத் தாங்கிக்கொள்ள முடியும்.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *