மக்கள் பலரும் உவகையுடன் பின்பற்றும், மதிக்கும் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் தங்கள் பட்டியலில் சேர்க்க நமது இரு கவிஞர்களும் இயல்பாகவே ஆர்வமாக உள்ளனர். ’மகா சமயா’ என்ற பெரும் சங்கமம் எழுதிய கவிஞர் முதலில் இந்தப் பூமியின் தேவதைகளையும் அதன்பின்னர் பெரும் மலைகளின் தேவதைகளையும் விவரித்து எழுதுகிறார். அதன் பின்னர் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு நான்கு என்ற திசைகளின் காவலர்களான நான்கு பெரும் அரசர்களை விவரிக்கிறார். இரண்டாவது பாடலில் குறிப்பிடப்படும் நால்வரில் ஒருவரான வைஸரவன குபேரன் (Vessavana Kuvera வெஸ்ஸவன குவேரா) ஏனைய அனைவருக்கும் பிரதிநிதியாக, செய்தித் தொடர்பாளர்போல் இருக்கும் கடவுள்.
அதன் பிறகு வானுலகத்தின் இசைக் கலைஞர்களான கந்தர்வர்கள் பேசப்படுகிறார்கள். கர்ப்பகாலம் மற்றும் குழந்தை பிறப்பு ஆகியவற்றை மேற்பார்வை செய்பவர்களாகவும், பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாகவும் இருப்பவர்கள் இவர்கள்.
அதற்கு அடுத்துப் பேசப்படுபவர்கள் நாகர்கள் மற்றும் நாக கன்னிகைகள்; இவர்களின் வழிபாடு நாட்டுப்புறக் கதைகள், மூடநம்பிக்கைகள். பண்டைய காலங்களிலிருந்து இன்றுவரை இந்தியாவில் உலவும் நாட்டுப்புறப் பாடல்களில் முக்கிய அம்சமாகக் குறிப்பிடப்படுகிறது. அவற்றின் இயல்பான வடிவில், கடற்கன்னிகள் மற்றும் கடல்கன்னிகளைப் போல நாகப்பாம்புகள் நீருக்கு அடியில் வசித்தன. மிகுந்த ஆடம்பரமாகவும், செல்வச் செழிப்புடனும் வசித்த அவற்றிடம் ஏராளமான ரத்தினங்கள் இருந்தன.
அத்துடன், நாம் பாக்க முடிவதுபோல் வன தேவதைகள் என்ற பெயர் சில இடங்களில் அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது. இணையாக அவையும் நல்ல செல்வத்துடனும் சக்தியுடனும் இருந்தன. விரும்பும்போது, அடிக்கடி மனித உருவத்தை எளிதில் அவற்றால் பெறமுடியும். கோபத்தின்போது அவை பயங்கரத் தோற்றம் பெறும். இயல்பில் கனிவான மென்மையான தோற்றம் கொண்டவை. வேதத்திலோ பௌத்தத்துக்கு முந்தைய உபநிடதங்களிலோ இவை பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை; முற்றிலும் ஏற்கக்கூடிய ஒன்று இல்லை என்றாலும் விநோதமான வரங்களை/ திறமைகளைப் பெற்றிருந்த நிஜமான மனிதர்கள் குறித்த நம்பிக்கைகளால் உருவான கட்டுக்கதையாக இவை தோன்றுகின்றன.
மரங்களை வழிபடுதல், பாம்புகளை வழிபடுதல், மற்றும் நதிகளை வழிபடுதல் போன்ற முன்னர் இருந்ததாகக் கருதப்படும் கோட்பாடுகளிலிருந்து பெறப்பட்ட கருத்துகளுடன் இவை இணைந்து போகின்றன. ஆனால், அந்தச் சிந்தனை குறித்த வரலாறு இன்னமும் எழுதப்படாமலே இருக்கிறது. பழங்காலத்துச் செதுக்குச் சிற்பங்களில் ஆண்களாகவோ பெண்களாகவோ இந்த நாக வடிவங்கள் காணப்படுகின்றன; அந்த உருவங்களின் தலைக்குப் பின்னால் நாகத்தின் தலை காணப்படுகிறது. அல்லது இடுப்புக்குக் கீழே பாம்பு உடலுடன் அவை காணப்படுகின்றன.
அடுத்ததாக கருளா அல்லது கருடன் பேசப்படுகிறது; மேற்கத்திய புராணங்களின் ஹார்பி மற்றும் கிரிஃபின் என்ற உயிரினங்களுக்கு இணையாக இந்திய இலக்கியங்களில் காணப்படுபவை; பாதி மனிதனாகவும், பாதி பறவையாகவும் உருவங்கள் கொண்டவை; இவை நாகங்களின் பரம்பரை எதிரிகள்; நாகங்களை இவை உணவாகக் கொள்கின்றன. ஒருவேளை இவையும் முதலில் நிஜமான பழங்குடி மனிதர்களாக இருந்திருக்கலாம்; கழுகு அல்லது பருந்தை அவர்களது கொடியின் சின்னமாக வைத்துக்கொண்டிருக்கலாம்.
அதன் பின்னர் ’டைட்டன்கள்’ என்ற பேருருக் கொண்ட உருவங்கள் பற்றியும் அத்துடன் அறுபது வகைக் கடவுளர்கள் குறித்தும் பேசப்படுகிறது. இவர்களில் அறுவர் மட்டுமே வேத காலத்திலும் குறிப்பிடப்படுபவர்களாக இருக்கிறார்கள்; மற்ற பெயர்கள் புதிராகத்தான் இருக்கின்றன. எதிர்கால ஆய்வாளர்களின் முடிவுக்கு இவை காத்திருக்கின்றன.
முதலில் நாம் பார்ப்பது இரக்க குணமும் நல்ல பண்புகளும் கொண்ட கடவுளர்கள்; அடுத்து, ஆன்மாக்கள் அல்லது ஆவிகள்; இவை உருவம் பெற்று சந்திரன் மற்றும் சூரியனில், காற்று, மேகம், கோடை வெப்பம் ஆகியவற்றில் வசிப்பதாகக் கருதப்படுபவை, (சந்திரன்தான் எப்போதும் முதலில் குறிப்பிடப்படுகிறது). அதன்பின் ஒளி /வெளிச்சத்தின் தெய்வங்கள் வருகின்றனர். அதன்பின்னர் ஆர்வமூட்டுவதாக கடவுளர்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது.
மனித மனத்தின் பல்வேறு பண்புகளை ஏற்றிச் சொல்லப்பட்ட வடிவங்கள் அவை; அப்புறம் இடி மற்றும் மழைக்கான தேவதைகள்; இறுதியாக ஆக உயர்நிலையான சொர்க்கத்தில்/ வானுலகத்தில் (இது மிக உயர்ந்த ஓர் ஊகத்தின் வெளிப்பாடு) வசிக்கும் மாபெரும் கடவுளர்களின் பட்டியல்: பிரம்மா, பரமத்தன் (பரமாத்மா அல்லது பரமேஸ்வரன்) மற்றும் சனம் குமாரா.
போதுமான அளவு அனைத்தையும் உள்ளடக்கியதாகப் பட்டியல் தோன்றுகிறது. ஆனால், ஏன் வன தேவதைகள் (மரங்கள் வழிபாடு) பற்றி குறிப்பிடவில்லை? திருமதி.பில்பாட் எழுதிய The Sacred Tree என்ற மிகச் சிறந்த சிறிய நூல் நாம் வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. உலகம் முழுவதும் நிலவும் மர-வழிபாடு பற்றிய மிக முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அந்த நூலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மர வழிபாடு குறித்து கற்பனையான பல விஷயங்கள் அதில் காணப்படுகின்றன; அதிகம் நாகரிகம் இல்லாத ஆன்மக் கோட்பாடுகளின் மிக எளிமையான விளைவுகள் தொடங்கி மேம்பட்ட தத்துவங்கள் வரையிலும், நடைமுறையில் மக்களிடம் பரவலாகக் காணப்படும், இந்தியாவிலும் நம்மால் தடம் காண முடிகிற அனைத்து வகை நம்பிக்கைகளையும் பார்க்க முடிகிறது.
இப்போது, என் நினைவிலிருந்து ஒன்றைக் கூற முடியும்; இந்தக் கற்பனைகள் எதுவும் (அடுத்துப் பார்க்க முடிகிற சுவாரஸ்யமான விதிவிலக்கு ஒன்றும் அதில் உண்டு) பௌத்தக் கோட்பாடுகளை விளக்கும் முக்கியமான தொடக்க காலப் புத்தகங்களான நான்கு நிகாயாக்களில் எடுத்துக்காட்டாக சுத்த நிபாதாவில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சற்று பழமையான மற்றும் பிற்கால ஆவணங்களில் இந்த நம்பிக்கைகளில் பலவற்றைக் காணமுடியும். முடிவு வெளிப்படையானது.
பௌத்தத்துக்கு முந்தைய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மர வழிபாடு பற்றிய நம்பிக்கைகள், பௌத்தத்தின் எழுச்சியின் போது, மக்கள் பின்பற்றிய சமயத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆரம்பக்கால பௌத்தர்கள் அவற்றை நிராகரித்துவிட்டனர். ஆனால், புதிய போதனைகளால் செல்வாக்கு செலுத்த முடியாத அந்த மக்கள் பின்பற்றிய சமயத்தின் ஒரு பகுதியாக அவை தொடர்ந்து இருந்தன. அவர்களில் ஓரிருவர் பௌத்தத்தின் பிற்காலப் பள்ளிகளில் ஏதோவொன்றில் தங்களுக்கான பாதையைக் கண்டறிந்தனர்.
ஏற்கெனவே மரங்களை தெய்வமாகக் குறிப்பிடும் பல பகுதிகள் வேதங்களில் காணப்படுகின்றன. இவை இந்தியாவில் ஆரம்ப காலத்து ஆரியர்களின் மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால், நிச்சயமாக, மரங்கள் என்பதற்காக அவை வணங்கப்படவில்லை; மாறாக, அந்த மரங்களுக்குள் வாழ்வதாகக் கருதப்படும், மரங்களைச் சுற்றிவரும் ஆன்மாக்கள் அல்லது ஆவிகள் கடவுளாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டன.
இந்தக் கருத்து பௌத்தத்தின் எழுச்சிவரையிலும் நீடித்தது என்பது உபநிடதங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆன்மா மரத்தை விட்டு வெளியேறினால், மரம் வாடிவிடும்; ஆனால், அந்த ஆன்மா இறந்து போகாது. இந்த ஆன்மாக்கள் மனித உடல்களில் வசித்திருக்கக்கூடும்; மீண்டும் அந்த உடலில் அவை வசிக்கக்கூடும். புத்த மதத்தின் எழுச்சிக்குப் பின், நீண்ட காலத்துக்கு பின்னர் இந்த நம்பிக்கையுடன் தொடர்புடைய பல கருத்துகள் அடிக்கடிக் குறிப்பிடப்படுகின்றன.
மரத்தில் வசிக்கும் இந்த ஆவிகளுக்குப் படையல்கள் காணிக்கைகள் அளிக்கப்பட்டன. ஏன், சில நேரங்களில் நரபலியும் கொடுக்கப்பட்டது. அவை வரம் அருள்பவையாகக் கருதப்பட்டன; குழந்தைகளும் செல்வமும் தருபவை என்று எதிர்பார்க்கப்பட்டன. ஆவிகள் வசிக்கும் மரங்களைக் காயப்படுத்துபவர்களை அவை காயப்படுத்தும் என்று கருதப்பட்டது. மரக்கிளைகளில் மாலைகள் தொங்கவிடப்பட்டால் அவை மகிழ்ச்சியடைந்தன.
மரத்தைச் சுற்றி விளக்குகள் ஏற்றி, ’பாலி’ காணிக்கை (சமைத்த உணவு படைத்தல்) மரத்தின் அடிப்பகுதியில் வைக்கப்படுகிறது. வேதப் பிராமணர்கள், புனித விதிகளையும் வழக்கங்களையும் கூறும் அவர்களது புத்தகங்களில் மரத்தின் வசிக்கும் தேவதைகளுக்கு இவ்வாறு பாலி காணிக்கை அளிக்கப்படுவதைக் கூறி இதனுடன் சேர்ந்து கொள்கிறார்கள்.
மேற்கூறியவை அனைத்தும் சுத்தமான மற்றும் எளிமையான மர வழிபாடு அல்லது இன்னும் சரியாகச் சொல்லப்போனால் வன தேவதை வழிபாடு எனலாம். சொர்க்கத்தில் அதன் வேர்களைக் கொண்ட ஒரு மரமாக, உலகத்தின் ஆன்மாவாகப் பேசுவதாக பார்க்கப்படும்போது அது ஒரு கவிதை; ஒருவேளை உலகத்தின் வளர்ச்சியின் புதிரை அடிப்படையாகக் கொண்ட ஓர் உருவகமாக அது இருக்கலாம்; எனினும் அது ஓர் உருவகம் மட்டுமே. கற்பக விருட்சம் என்ற, ஒருவருக்கு அவருக்குத் தேவையான அனைத்தையும், விரும்புவதையும் அளிக்கும் மரம் என்ற சிந்தனை, நாம் பரிசீலித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக இருந்திருக்கலாம்; ஆனால், நாம் இன்னமும் அதைத் தடம் காண முடியவில்லை.
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.