கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமய நம்பிக்கைகள் குறித்துப் பதிவாகியிருக்கும் விவரங்கள், உலகின் வேறு பிரதேசங்களில் காணப்பட்ட நம்பிக்கைகளுடன் பெருமளவுக்கு ஒத்திசைவுடன் இருந்தன; சீனா, பாரசீகம் மற்றும் எகிப்தின் நாகரிக மையங்களிலும் இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் அதே காலகட்டத்தில் நிலவிய நம்பிக்கைகளும் ஒத்தவையாக இருந்தன. அதுமட்டுமின்றி, நாகரிகமடையாத மக்கள் மத்தியில் காணப்பட்ட நம்பிக்கைகளுடனும் அப்போதும் இப்போதும் அவை ஒத்திருந்தன. ஆனால், இதற்கு மேலும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. சர் ஹென்றி மைன் இவ்வாறு கூறினார்:
‘முற்போக்கு சமூகங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தன என்பது தவிர்த்து குறிப்பிடும்படி எதுவுமில்லை; இந்தச் சமூகங்களுக்கும் இடம்பெயராமல் ஓரிடத்திலேயே வசித்த இனங்களுக்கும் இடையிலான வேறுபாடு, இதுவரையிலும் ஊடுருவிப் பார்த்து ஆய்வு செய்யாத மிகப் பெரிய ரகசியங்களில் ஒன்றாக இருக்கிறது.’
பொருளாதார நிலைமைகளின் செல்வாக்குக்கு மேலும் அப்பாலும் கூடுதலாக ரகசியம் ஏதாவது இருக்கலாம்; அந்தக் காலகட்டத்தில் நைல் மற்றும் யூப்ரடீஸ், கங்கை மற்றும் மஞ்சள் நதி போன்ற நான்கு பெரும் நதிப்படுகைகளில் பரந்து விரிந்திருந்த இது போன்ற நாகரிகங்கள் பல நூற்றாண்டுகள் மட்டுமல்ல, இன்றிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து காலப்போக்கில் விரிவடைந்தன என்பதை அறிவோம். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அசலான மற்றும் முற்போக்கான நாகரிகம் இருந்தது; புழங்கிய சிந்தனைகளும் பழக்கவழக்கங்களும் சந்தேகமின்றித் தொடர்ந்து மாறிக்கொண்டும், வளர்ந்து கொண்டும் இருந்தன; இல்லை என்று முழுமையாகச் சொல்லமுடியவில்லை என்றாலும், உயிர்ப்பற்ற, தத்துவ சிந்தனை என்று அழைக்கக்கூடிய ஒன்று இருந்தது எனலாம்.
அவர்களது நாகரிகமடையாத மூதாதையர்கள் மற்றும் சில முற்போக்கு இனங்களும் என்ன பார்த்தனர் அல்லது உணர்ந்தனர் என்று அவ்வனைத்தையும் விளக்குவதற்கு அவர்களது தொல் இறை கருதுகோள்களும், ஆன்மா தொடர்பான கொள்கைகளுமே போதுமெனத் தோன்றுகிறது.
மனிதர்கள் பல்வேறுபட்டவர்களாக இருந்தாலும், ஆன்மா தொடர்பான கொள்கைகளை நிராகரிப்பது குறித்து அவர்கள் சிந்திக்கவே இல்லை. அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நெறிமுறைகள் அல்லது தத்துவம் அல்லது சமயம் குறித்துப் பெரிய அளவிலோ அல்லது பொதுவான கண்ணோட்டத்திலோ எதையும் அவர்கள் கட்டமைக்கவில்லை. அதன் பின்னர் திடீரென்று, ஏறக்குறைய ஒரேநேரத்தில், ஏறத்தாழ நிச்சயம் சுயாதீனமாக, கி.மு.ஆறாம் நூற்றாண்டு வாக்கில், பல்வேறு பிரதேசங்களில் பரவலாகப் பிரிந்து கிடந்த நாகரிகத்தின் இந்த மையங்கள் அனைத்திலும் சிந்தனையில் ஒரு பாய்ச்சல் இருந்தது; புதிய நெறிமுறைகள் தோன்றின.
பழக்க வழக்கம் மற்றும் மந்திர தந்திரங்கள் என்பன உள்ளடக்கமாக இருந்த பழைய சமயத்தின் இடத்தை எடுத்துக் கொள்ளுமோ என அச்சம் கொள்ளும் வகையில் சமயம் குறித்த சிந்தனை ஒன்று தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரே மாதிரியான நிலைமைகளிலிருந்து, ஒரே மாதிரியான விளைவை எட்டுவதற்காக ஒரே மாதிரியான காரணங்களும், சிந்தனை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒரேவிதமான விதிகளும், அதே எண்ணிக்கையிலான நூற்றாண்டுகளை எடுத்துக்கொண்டன எனலாம்.
ஒட்டுமொத்த மனிதக்குல வரலாற்றிலும் இதைக் காட்டிலும் வேறு அற்புதமான அதிசயம் இருக்கிறதா? அல்லது இதுபோன்று வேறு ஏதேனும் விஷயம், மனிதச் சிந்தனையை ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியர்களின் தீர்வுக்காக இன்னமும் காத்திருக்கிறதா?
ஒவ்வொரு நாட்டிலும், விழிப்புணர்வுக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளைப் பற்றி மேலும் துல்லியமான தகவல்களை /அறிவைப் பெறும் வரையிலும் தீர்வு சாத்தியமில்லை. இந்தியாவில் இதற்கு முந்தைய சூழ்நிலைகளில் இதுவரையிலும் முக்கியமான காரணி ஒன்று மிக அதிகம் புறக்கணிக்கப்பட்டு விட்டது என்று எனக்கு தோன்றுகிறது. உலக வரலாற்றின் பார்வையில், பழங்கால வரலாற்றையும் நவீனக் காலத்தையும், பழைய அமைப்பையும் புதிய அமைப்பையும் பிரிக்கக்கூடியதாக இடையில் ஒரு சிறந்த கோடு இருக்கக்கூடுமெனில் நிச்சயம் அது கி.மு.ஆறாம் நூற்றாண்டு குறித்த தீவிரமான ஆர்வமும் ஆய்வுமாகவே இருக்கும்; நாம் குறிப்பிட்ட இந்த விஷயம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய இது போதுமான காரணமாக அமையக்கூடும்.
கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட மக்கள் பின்பற்றிய தொல் இறைக்கோட்பாடு தொடர்பான கருத்துகள் மற்ற பிரதேசங்களைப் போலவே, இந்தியாவிலும் சந்தேகத்துக்கு இடமின்றி, முழு வலிமையுடன் நடைமுறையில் இருந்தன. ஆனால் எந்த மனிதரும் அவற்றை முழுமையாக நம்பவில்லை; அல்லது அவை அனைத்தையும் முழுமையாக அறிந்திருக்கவில்லை. வேதப் பிராமண இலக்கியங்களின் ஒரு பகுதி மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இந்த நம்பிக்கைகளின் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன; அவற்றை வேதப் பிராமணர்கள் ஆதரித்ததால் அவற்றுக்கு மதிப்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் அவர்களால் அவற்றுக்கு ஒரு தரநிலை கிடைத்தது. அவர்கள் மிகவும் அரிதாகவே, சொல்லப்போனால் எப்போதுமே, தொல் இறைக்கோட்பாட்டின் மந்திர மாயம் என்ற கவர்ச்சியான வட்டத்துக்கு வெளியில் அடியெடுத்து வைத்ததில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவர்கள் தெரிந்தெடுத்த நம்பிக்கைகள், அந்தக் கோட்பாட்டுக்கு அவர்கள் விட்டுவைத்ததைக் காட்டிலும் சிறந்தவையாக இருக்கலாம்.
சடங்குகள் குறித்த வேதப்பிராமணர்களின் புத்தகங்களின் உள்ளடக்கங்கள், மந்திர மாயம் மற்றும் மூடநம்பிக்கை குறித்த வரலாற்றுக்கு உகந்த மூலப்பொருட்களின் வளமான சுரங்கமாக இருக்கின்றன; எனினும் வெளியில் சொல்லமுடியா அளவுக்கு அவை சாதாரணமானவையே. இந்த விஷயம் குறித்து மிகவும் அதிகாரப்பூர்வமான படைப்பு ஒன்றை எம்.சில்வையன் லெவி (M. Sylvain Levi) எழுதியுள்ளார்; பலியிடும் யாகம் குறித்த பிராமணக் கோட்பாடு பற்றிய கட்டுரை ஒன்றின் அறிமுகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார்:
‘பிராமணர்களின் இறையியலைக் காட்டிலும் மிகக் கொடூரமான ஒன்றை, லோகாயத விஷயங்கள் நிறைந்த ஒன்றைக் கற்பனை செய்வது கடினம். இவற்றின் பயன்பாட்டு நோக்கங்கள் பின்னாளில் மெள்ள மெள்ள மெருகேற்றப்பட்டன; அறநெறி என்ற ஆடை அவற்றுக்கு அணிவிக்கப்பட்டது; காட்டுமிராண்டித்தனமான அவற்றின் யதார்த்தம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.’
அவர் மீண்டும் கூறுகிறார்:
‘இந்த அமைப்பில் அறநெறிக்கு இடமில்லை. தெய்விகத் தன்மைகளுடன் மனிதனுக்கு இருக்கும் தொடர்பை ஒழுங்குபடுத்தும் இந்தப் பலியிடும் யாகம் ஓர் எந்திரகதியிலான செயல்; அதனுள் அடங்கி இருக்கும் தன்னிச்சையான ஆற்றலால் அது இயங்குகிறது; இயற்கையின் மடியில் மறைந்திருக்கும் அதைப் புரோகிதரின் மந்திர கலைதான் வெளிக் கொணர்கிறது.’
பலியிடல் அடங்கிய யாகம் ஒவ்வொன்றும் கட்டுப்பாட்டுடன் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், அந்த விவரங்கள் இந்த எழுத்தாளர்களுக்குப் பயன் தரக்கூடியனவாகவும் நல்ல வாய்ப்பாகவும் அமையக்கூடியன. இந்தப் படைப்புகளில் கடவுளர்கள் பொய்யுரைப்பவர்களாக, மோசடியிலும் முறையற்ற உறவுகளிலும் ஈடுபடுபவர்களாக குறிப்பிடப்படுகின்றனர்; எனினும் அவர்கள் அடிப்படையில் அறநெறி பார்வை கொண்டவர்கள் இல்லை என்பதுடன் ஒழுக்கக்கேடானவர்களும் இல்லை. குறிப்பிடப்படும் யாகத்தின் விளைவுகளுக்கு முற்றிலும் எதிர்வினை ஆற்ற இயலாதவர்களாகத்தான் அந்தக் கடவுளர்கள் இருக்கின்றனர்.
விண்ணுலகத்தில் அவர்களுக்கு இருக்கும் நிலைக்கும், உயர்தன்மைக்கும், அவர்களது பழைய கடவுளர்களுக்கு இதுபோன்று அவர்கள் செய்த யாகங்களுக்கு அவர்கள் கடன்பட்டிருக்கிறார்கள். இதே போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தித்தான் அவர்கள் அசுரர்களைத் தொடர்ந்து தோற்கடிக்கிறார்கள். அவர்கள் பேருருவம் கொண்ட ஆளுமைகள், எதிர்க் கடவுளர்கள்; அவர்கள் சொர்க்கத்தின் வாயில்களைத் தாக்கி நுழைய முயல்பவர்கள்.
யாகம் நடத்துவதற்கென கோவில்கள் ஏதுமில்லை, அநேகமாக உருவங்கள் ஏதுமில்லை; யாகம் நடத்துபவர்களுக்கு சொந்தமான நிலத்திலோ அல்லது தோட்டத்திலோ, ஒவ்வொரு யாகத்துக்கும் பலிபீடங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. யாகத்திலிருந்து கிடைக்கக்கூடிய பலன் நடத்துபவருக்கே சென்றது; அவருக்கு மட்டுமே சென்றது. எனவே, அந்த நிகழ்வுக்காகப் பலியிடப்பட வேண்டிய விலங்குகளுக்கும் நிகழ்வுக்காக அமர்த்தப்படும் ஏராளமான நபர்களுக்கும், புரோகிதர்களின் தட்சணைகளுக்கும் அவர் நிதி அளிக்க வேண்டியிருந்தது.
‘தட்சணைகளைப் பொறுத்தவரை, விதிகள் துல்லியமாக வகுக்கப்பட்டிருந்தன; அவற்றை முன்வைப்பவர்கள் எதற்கும் கூச்சப்படுவதில்லை; புரோகிதர் தட்சணைக்காக மட்டுமே அந்த யாகத்தை நடத்துகிறார். விலை மதிப்புள்ள ஆடைகள், பசுக்கள், குதிரைகள் அல்லது தங்கம் ஆகியன தட்சணையில் உண்டு. எப்போது எதைக் கொடுக்க வேண்டும் என்பதும் கவனமாக கூறப்பட்டுள்ளது. தங்கம் மிகவும் விரும்பப்படுவது; ஏனெனில், ‘அது அழியாத் தன்மை கொண்டது; அக்னியின் விதை’. எனவே பக்தி நிறைந்த புரோகிதர் அசாதாரணமாக இதை ஏற்றுக்கொள்கிறார்’.
இத்தகைய யாகங்களின் சொல்லிமாளாத விவரங்களுக்குச் செல்வது தேவையற்றது. இந்த விஷயம் குறித்து பேராசிரியர் ஹில்பிராண்டு (Hillebrand) எழுதியிருக்கும் தரமான படைப்புகளில் இவை மிக முழுமையாகவும் கவனமாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. மிக விரிவாக நடக்காத சிறிய யாகத்துக்கும் செலவு மிகவும் பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, யாகம் நடத்தாமல் விரும்பியதை அடைய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கும் இந்த செலவினத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கச் சாத்தியமுண்டு.
பௌத்தத்தின் காலத்தை நெருங்க நெருங்க, இரண்டாவது வழிமுறை என்று சொல்லப்படும் ’தபஸ்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தத் தபஸ் அல்லது தவம் என்பதற்கு தன்னைத்தானே வருத்திக் கொள்ளுதல், அல்லது இன்னும் துல்லியமாக அதை சுய-சித்ரவதை என்று சொல்லலாம். இந்தச் சொல் அதன் சரியான நடைமுறைப் பொருளில் ரிக் வேதத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களில் வருகிறது. இதற்கு நேரிடையான பொருள், ‘எரிதல், தீப்பிழம்பு’. வனவாசத்துக்கு அடுத்த இரண்டாம் நிலையான தனியாக வாழ்தல் என்ற உணர்வை ஏற்கெனவே இது பெற்றுவிட்டது.
அவர்கள் வனத்தில் பின்பற்றும் துறவு நிலையும் உடல் ரீதியாக சுயமாக வருத்திக் கொள்ளுதலும், கழுவாய் தேடுதல் அல்லது தவப்பயன் என்ற எண்ணத்துடன் பின்பற்றப்படுவதல்ல; ஆனால், இதைப்போன்று தன்னையே சித்ரவதை செய்துகொள்ளும் வாழ்க்கை முறை மந்திரசக்தி நிறைந்த விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையால் செய்கிறார்கள். ஒருவருக்காக யாகம் நடத்தும்போது புரோகிதர் உச்சரிக்கும் ஒருவித மந்திரங்களால் தெய்வங்களை நிர்ப்பந்தித்து விரும்பியதை அடைவதைப்போல், ஒருவிதமான மந்திரம் தவத்திலும் பயன்தருவதாகக் கருதப்பட்டது; மந்திரங்களை உச்சரித்து ஒருவர் செய்யும் தவத்தின் மூலம் மாயமான மற்றும் அற்புதமான விருப்பங்களை அடைய முடியும். வித்தியாசம் என்னவென்றால், யாகத்தின் மூலம் கால்நடைகள், குழந்தைகள் மற்றும் சொர்க்கம் போன்ற லோகாயதப் பலன்களைப் பெறமுடியும். தவத்தின் மூலம் மனிதச் சக்திக்கு அப்பாற்பட்ட புதிரான அசாதாரணத் திறமைகளைப் பெற முடியும்.
அதன்பின்னர், கடவுளுக்கு ஓர் இயல்பான மனிதப் பண்பேற்றுதல் மூலம், பிற்கால படைப்புகளில் கடவுளர்களும் தபஸ், துறவு ஆகியவற்றைப் பின்பற்ற யாகம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கருதப்பட்டது. அதை ஒரு சாதாரணத் தனித்தன்மை எனக்கூற முடியாது. அது வெறுமனே சிந்தனையில் ஏற்பட்ட முன்னேற்றமும் அல்ல. அசௌகரியம் மற்றும் வலியையும் சகித்துக் கொண்டு இச்சையை வெல்லும் செயல் என்ற உடல் மீதான இத்தகைய ஆள்கை, யாகத்துக்கும் மேலானது என்று மதிக்கப்படும் நிலை உருவானது. அத்தகைய யாகங்கள் மூலம்தான் கடவுளர்கள் உலகைப் படைத்தனர். இப்போது வெவ்வேறு பிரபஞ்ச புராணக் கதைகளில், ஏதோ ஒரு கடவுளோ அல்லது வேறொரு கடவுளோ தவத்தின் மூலம் உலகத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.
பிராமணர்களின் படைப்பொன்று இவ்வாறு கூறுகிறது: ’சொர்க்கம் வளிமண்டலத்தில் அமைக்கப்படுகிறது; வளிமண்டலம் பூமியில் இருக்கிறது, அந்தப் பூமி நீரின் மேல் அமைந்துள்ளது, அந்த நீர் சத்தியத்தின் மீதும், அந்தச் சத்தியம் புதிர் நிறைந்த புலமை மீதும் (யாகத்தின் விளைவாகப் பெறுவது) தவத்தின் மீதும் அமைகிறது’.
இங்கு தவம் என்பது மிக முக்கியமான ஓரிடத்தில், யாகத்தைக் காட்டிலும் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இதையொட்டி யாகம், சத்தியத்தைக் காட்டிலும் உயர்வானது என்று விதிமுறைகள் கூறுகின்றன. இதைப் பின்னர் பார்க்கலாம். இந்தக் காலகட்டத்துக்கு உரிய நூல்களில் குறிப்பிட்ட இத்தகைய நடைமுறைகள் பற்றிய விவரங்கள் ஏதும் காணப்படவில்லை. அவற்றில் இந்தத் துறவும், தன்னை வருத்திக்கொள்ளலும் அடக்கம்.
காலப்போக்கில் இவை போன்ற பல்வேறு வகையான நடைமுறைகள் சந்தேகத்துக்கு இடமின்றி விரித்துரைக்கப்பட்டன. இவை புத்தர் காலத்தில் அடைந்திருந்த நிலை பற்றிய முழுமையான அறிக்கை கிடைத்துள்ளது. ஒரு நிர்வாணச் சந்நியாசி கௌதமருடன் நடத்திய உரையாடல் வடிவில் அது முன்வைக்கப்படுகிறது. சுய-சித்ரவதை விஷயங்களில் பேரறிவும் ஞானமும் பெற்றிருக்கும் அவர், உணவு சார்ந்து இருபத்திரண்டு முறைகளையும், ஆடை சார்ந்து பதின்மூன்று முறைகளையும் பட்டியலிடுகிறார். இவற்றில் தனது விருப்பம் போல் துறவி எதையும் தெரிந்தெடுத்து கொள்ளலாம். அத்துடன் அவர் தனது உடலை / தோற்றத்தை வேறு விதங்களிலும் வைத்துக் கொள்வார்:
‘அவர் தலைமுடியையும் தாடியையும் பிடுங்கி எறிந்தவராக (உடல் தோற்றத்தின் சாதாரண அழகில் பெருமை கொள்ளும் வாய்ப்பை, வலிமிகுந்த செயலின் மூலம் அழித்துவிடுகிறார்) இருக்கலாம். அல்லது அமராமல் நின்று கொண்டே இருக்கலாம் (இருக்கையைப் பயன்படுத்துவதை நிராகரித்தவர்). அல்லது உடலைக் குறுக்கி-குதிகாலில் அமர்ந்து நகரலாம் (வலியுடன் தாவித் தாவி நகர்தல்). அல்லது முள் படுக்கை மனிதராக ( முட்களின் மேல் அல்லது ஆணிகளின் மேல் படுத்துத் தூங்குதல்) இருக்கலாம். அல்லது வெறும் பலகையில், அல்லது வெறும் தரையில், அல்லது எப்போதும் ஒரு பக்கமாகவே படுத்துத் தூங்குபவராக இருக்கலாம்; அல்லது புழுதியை ஆடையாக அணிபவராக இருக்கலாம் (உடலில் எண்ணெயைப் பூசிக்கொண்டு, காற்றில் புழுதி அதிகமாகப் பறக்கும் இடத்தில் நிற்கையில் உடலில் தூசியும் அழுக்கும் ஒட்டி உடலை ஆடைபோல் மூடும்’).’
(தொடரும்)
___________
T.W. Rhys Davids எழுதிய “Buddhist India” நூலின் தமிழாக்கம்.