Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 20வது கதை)

‘திரும்ப வராத அடிச்சுவடுகள்.’

கோசல நகரத்தில் புத்தர் பிட்சை ஏற்கும் யாத்திரையில் இருந்தார். அப்போது இந்தக் கதை நடக்கிறது. அருகில் நளகபானம் என்ற கிராமத்தில் புத்தர் தங்கியிருந்தார். நளகபான புஷ்கரணி என்ற பெயரில் அங்கு பெரிய ஏரி இருந்தது. அதனால், அந்தக் கிராமத்துக்கு அந்தப் பெயர். கிராமத்துக்கு அருகில் கேதகவனம் மற்றும் பலசவனம் என்ற இரண்டு பெரிய மரத்தோப்புகளும் இருந்தன; பலசவனத்தில் புத்தரின் வேண்டுகோளின் பேரில் சாரிபுத்தர் இரண்டு பிரசங்கங்களும் செய்தார்.

புத்தரும் சீடர்களும் கிராமத்தில் தங்குகிறார்கள்; கேதவனத்தில் புஷ்கரணிக்கு அருகில் அடர்த்தியாகப் பிரம்பும் நாணலும் வளர்ந்திருந்ததைப் பார்க்கின்றனர். பிக்குகள் ஏரியில் குளித்த பின்னர் புதியதாக சங்கத்தில் சேர்ந்திருப்பவர் சிலரை அழைத்து பிரம்புத் தண்டுகள் வெட்டிவரச் சொன்னார்கள்; ஊசிகள் போட்டுவைத்துக்கொள்ளும் சிறு குழல்களாகப் பிரம்பைப் பயன்படுத்தும் வழக்கம் அவர்களிடம் இருந்தது; அன்று எடுத்து வரப்பட்ட பிரம்பில் அடியிலிருந்து நுனி வரை இடையிடையே கணுக்கள் இருக்கும் பகுதியிலும் அடைப்பு ஏதும் இன்றி முழுவதும் வெறுமையாகவே இருந்தன.

இது எப்படி சாத்தியம் என்று அவர்களுக்கு ஒரே வியப்பு. ஆகவே, அவர்கள் கௌதம புத்தரிடம் செல்கின்றனர்.

‘ஆசிரியரே, ஊசிகள் வைத்துக் கொள்ளும் குழல்களாகப் பயன்படுத்தலாம் என்று பிரம்பு வெட்டிவரச் சொன்னோம். ஆனால், அவற்றில் இடையில் அடைப்பு ஏதுமில்லையே? இது எப்படிச் சாத்தியமாகும்’ என்று கேட்டனர்.

‘பிக்குகளே’ என்று தொடங்கினார் கௌதமர். ‘கடந்த பிறவியில் என்னுடைய உத்தரவு இதுவாகத்தான் இருந்தது.’

இப்படிச் சொல்லிவிட்டு, அந்த முற்பிறவியின் கதையைக் கூறத் தொடங்கினார்.

0

ஒரு காலத்தில் இந்த இடத்தில் அடர்ந்த காடு இருந்தது. அங்கு ஓர் ஏரியும் இருந்தது; அந்த ஏரியில் ஒரு நீர் ராட்சசன் வசித்து வந்தான். நீரில் இறங்கும் எந்த விலங்கையும் அந்த ராட்சசன் விழுங்கிவிடுவான்.

அந்தப் பிறவியில் போதிசத்துவர் ஒரு வனத்தில் குரங்குக் கூட்டத்தின் தலைவனாகப் பிறந்திருந்தார். ஒரு சிவப்பு மான் குட்டியின் அளவுக்கு அவர் பெரிதாக இருந்தார்; அந்தக் காட்டில் எண்பதாயிரம் குரங்குகளுக்குக் குறையாமல் வசித்தன; அந்தக் கூட்டத்தினருக்கு அவர் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

‘என் நண்பர்களே, இந்தக் காட்டில் விஷ மரங்களும், அமானுஷ்ய சக்திகளால் நிரம்பியிருக்கும் ஏரிகளும் உள்ளன. அவை உயிரினங்களை வேட்டையாடும். அந்நியமான இடத்தில் இதுவரை சாப்பிடாத பழங்களை நீங்கள் சாப்பிடாதீர்கள். அல்லது இதுவரை நீரருந்தாத இடத்தில் குளம் குட்டைகளில் நீரருந்த வேண்டாம். அப்படிச் செய்வதற்கு முன் என்னிடம் கேளுங்கள். என்னுடைய அனுமதியின்றி எதையும் செய்யவேண்டாம்’ என்னுடைய இந்த வழிகாட்டுதல்களை உறுதியாகப் பின்பற்றவேண்டும்’ என்று கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். அந்தக் கூட்டமும் ‘நிச்சயமாக’, என்று உடனே பதில் கூறியது.

ஒரு நாள் அவை அந்த வனத்தில் இதுவரை பார்க்காத ஓர் இடத்துக்கு வந்தன. இன்று நாம் பார்க்கும் ஏரிக்கரை பகுதிதான் அது. பகல் முழுவதும் அவை இங்கு அலைந்து திரிந்தன; குடிநீரைத் தேடின; அந்த ஏரிக்கு அருகில் வந்து அமர்ந்தன. எனினும் அந்தக் கூட்டம் நீரில் இறங்கிக் குடிக்க முயற்சி செய்யவில்லை; அவற்றின் தலைமைக் குரங்கான போதிசத்துவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தன.

சிறிதுநேரத்தில் அவரும் வந்து சேர்ந்தார். கூட்டம் நீரருந்தாமல் உட்கார்ந்து இருந்ததைப் பார்த்து ‘நண்பர்களே! ஏன் நீர் குடிக்காமல் இருக்கிறீர்கள்… என்ன காரணம்?

‘நீங்கள் வருவதற்காகக் காத்திருக்கிறோம்.’

‘நல்லது நண்பர்களே, என்ன என்று பார்ப்போம்’ என்று சொல்லிய அந்தத் தலைமைக் குரங்கு, ஏரியையும் அதைச் சுற்றியுள்ள பிரதேசத்தையும் சோதித்தது. ஏரியின் அருகில் கால் தடங்கள் ஏராளமாக இருந்தன; அவை அனைத்தும் ஏரியை நோக்கி நீரருகில் போயின. ஆனால், எவையும் திரும்பவும் மேலே வரவில்லை. அந்த இடத்தில் அமானுஷ்யமான ஏதோ ஒன்று, உயிரினங்களைத் தின்று வாழும் பிசாசு ஒன்று உலவக்கூடும் என்று முடிவு செய்தார்.

‘சந்தேகத்துக்கு இடமின்றி, இந்த இடம் அமானுஷ்யச் சக்தியின் வசிப்பிடம்’ என்று போதிசத்துவர் தனக்குள் நினைத்துக்கொண்டார். பின்னர் தனது கூட்டத்தினரைப் பார்த்து, ‘நண்பர்களே இந்தத் தண்ணீரை நீங்கள் குடிக்காமல் இருந்தது சரிதான்’ என்று கூறினார். இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்போம் காத்திருங்கள் என்று அக்குரங்குகளிடம் கூறி என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்.

அந்த நீர் ராட்சசன் இவர்கள் தண்ணீரில் இறங்குவார்கள் என்று காத்திருந்தான். ஏரிக்குள் எவரும் இறங்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டான். நீல வயிறும், வெள்ளை முகமும் பிரகாசமான-சிவப்பு நிறத்தில் கைகளும் கால்களும் கொண்ட, பயங்கர அசுர வடிவம் எடுத்து வெளியில் வந்தான். குரங்குக் கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டான்: “ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? ஏரியில் இறங்கி தண்ணீரைக் குடிக்க வேண்டியதுதானே”.

போதிசத்துவர் அவனைப்பார்த்து ‘நீ இங்கு வசிக்கும் ராட்சசன் தானே?’ என்று வினவினார்.

‘ஆம். நான் தான் அது.’

‘இந்த ஏரியில் தண்ணீர் குடிக்க இறங்குபவர்களைச் சாப்பிட்டு விடுகிறாய் என்று சொல்கிறார்களே?’

‘ஆமாம். சாப்பிடுவேன். சிறிய பறவைகள் தொடங்கி இந்தத் தண்ணீரில் இறங்கும் எந்த விலங்கையும் ஒருபோதும் விடமாட்டேன். இப்போது இதோ உங்களில் பலரையும் சாப்பிடப் போகிறேன்.’

‘எங்களை நீ சாப்பிட விடமாட்டோம்.’

‘எப்படி முடியும், தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கியாகவேண்டியிருக்குமே.’

‘ஆமாம். நீர் குடிப்போம். ஆனால், உன்னுடைய தந்திரத்தில் மாட்டிக்கொள்ள மாட்டோம்.’

‘நீரில் இறங்காமல், எப்படி இந்தத் தண்ணீரைக் குடிப்பீர்கள்.’

‘அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நீரருகில் வருவோம். தண்ணீரில் இறங்குவோம் என்று தானே நினைக்கிறாய். நீரில் இறங்க மாட்டோம். ஆனால், இங்கே வந்திருக்கும் நாங்கள் அனைவரும், இந்த எண்பதினாயிரம் பேரும் குடிப்போம். ஆனால், உன்னால் எங்களைச் சாப்பிட முடியாது.’

இறங்கிச் செல்லும் காலடிகளைப் பார்த்தோம்; அனைத்தும் ஏரிக்குள் செல்கின்றன. எதுவும் திரும்பி வரவில்லை. நீரை நாணல் தண்டால் குடிப்போம். நிச்சயமாக எங்களை உன்னால் கொல்லமுடியாது.

இவ்வாறு சொல்லிய போதிசத்துவர் அருகில் விளைந்திருந்த பிரம்புகளை வெட்டிவரச் சொன்னார். ஒன்றைத் தனது கையில் பிடித்தபடி அவர் கூறிய பத்து கொள்கைகளை நினைவில் கொண்டு வந்தார். சத்தியத்தின் உறுதியான வடிவங்களாக அவற்றை மனத்தில் இருத்தி, பிரம்பின் ஒரு முனையில் வேகமாக ஊதினார். பிரம்பின் உள்ளுக்குள் இருந்த கணுவடைப்புகள் நீங்கி, வெற்றிடமாகி ஓர் உறிஞ்சு குழாய் போலாகியது.

இப்படியாக ஆயிரக்கணக்கில் பிரம்புகளை ஊதி, அவற்றைத் தம் பட்டாளத்துக்கு அளித்தார்.

கூட்டத்தினருக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு போதிசத்துவர் ஏரியின் நீரருகில் கரையில் கையில் பிரம்புடன் அமர்ந்தார். அவரது இனத்தவரான எண்பதாயிரம் குரங்குகளும் அவ்வாறே கைகளில் பிரம்புடன் ஏரியைச் சுற்றி வரிசையாக அமர்ந்தன. ஒரு நேரத்தில் போதிசத்துவர் தன் தலையசைத்து அருந்துங்கள் என்றபடி பிரம்பின் நுனியை ஏரியின் நீரின் மேல் வைத்து தண்ணீரை உறிஞ்சிக் குடித்தார். மற்ற குரங்குகளும் அவர் போலவே கரையில் அமர்ந்தபடியே நீரை அருந்தி தாகத்தைத் தணித்துக்கொண்டன.

அவர்களில் ஒருவரையும் அந்த நீர் ராட்சசனால் தொடமுடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. அவன் வெறுத்துப்போய் கோபத்துடன் தனது வசிப்பிடத்துக்குத் திருப்பிச் சென்றான்.

போதிசத்துவர் ஏரியையும் சுற்றிவந்தார். ‘இங்கு வளரும் பிரம்புகள் அனைத்தும் உள்ளே வெற்றிடமாக இருப்பவையாக விளையட்டும்’ என்று உத்தரவிட்டார். அதன்பின்னர் போதிசத்துவரும், இனத்தவர்களும் அவர்களுடைய வனப்பகுதிக்குச் சென்றனர்.

மீட்சியளிக்கும் போதிசத்துவரின் சிறந்த நற்பண்புகளுக்கு நன்றி சொல்வோம்; அவரின் கட்டளைகள் எப்போதும் நிறைவேற்றப்படுகின்றன. அன்று முதல் அந்த ஏரியைச் சுற்றி விளையும் பிரம்புகளில் உட்பக்கம் அடைப்பின்றி நீண்ட காலியான குழல் போலவே வளர்கின்றன.

0

ததாகதர் இவ்வாறு அந்தக் கதையைக் கூறி அதன் மூலமாகத் தனது உபதேசத்தையும் சொல்லி முடித்தார்; நாணல் தண்டுகளில் உள்ளே தடுப்பேதுமின்றி வெற்றிடமாக இருந்ததற்குக் காரணம் முற்பிறவியில் அவரது கட்டளைகளில் ஒன்று என்று கூறினார். அதன்பின்னர் இந்தப் பிறவிக்கான தொடர்பையும் சுட்டிக்காட்டினார்; ‘தேவதத்தன் அந்தப் பிறவியில் நீர் ராட்சசனாக இருந்தார். எனது சீடர்கள் அப்போது எண்பதாயிரம் குரங்குகளாக அவதாரம் எடுத்திருந்தனர். குரங்குகளின் அரசனாக நான் இருந்தேன்.

அவர் நிகழ்த்திய நான்கு அதிசயங்கள் அந்த யுகம் முழுவதும் தொடர்ந்து இருப்பவையாகச் சொல்லப்படுகின்றன; அவற்றில் ஒன்று இந்த அதிசயம்; அதாவது பிரம்பு, இடையில் கணுவடைப்பு இல்லாமல் விளைவது.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *