Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

புத்த ஜாதகக் கதைகள் #8 – குக்குர ஜாதகம் – ‘வேட்டை நாய்கள்’

(தொகுப்பிலிருக்கும் 22வது கதை)

கோசல நாட்டு மன்னனுக்கும் அவனது ராணி வாசபகத்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்த புத்தர், இருவருக்கும் சமரசம் செய்துவைக்கிறார்.

அந்த ராணி, மகாநாமா என்ற சாக்கியர் தலைவனுக்கும் நாகமுண்டா என்ற அடிமைப் பெண்ணுக்கும் பிறந்தவள்; அந்தப் பெண் கோசல நாட்டு மன்னனின் மனைவியானாள் என்றும் பாரம்பரியக் கதையொன்று கூறுகிறது. அந்த அரசனால் அவளுக்கு ஓர் ஆண் மகனும் பிறந்தான்; எனினும், பின்னாட்களில் அவள் அடிமைக்குப் பிறந்தவள் என்பதைத் தெரிந்து கொண்ட மன்னன் அவளுக்கு அரசில் அளிக்கப்பட்டிருந்த படிநிலையிலிருந்து அவளைக் கீழிறக்கினான். அவர்கள் இருவருக்கும் பிறந்த மகனுக்கும் அதே நிலைதான் ஏற்பட்டது. அந்த மகனுடைய பெயர் விதூதாபன். அந்தத் தாயும் மகனும் அரண்மனையை விட்டு வெளியில் வருவதே இல்லை. அதற்கு அவர்களுக்கு அனுமதியும் இல்லை.

ததாகதர் இந்த இருவருடைய நிலையையும் கேள்விப்படுகிறார். ஒரு நாள் அதிகாலையில் ஐந்நூறு பிக்குகள் பின்தொடர அரண்மனைக்கு வந்தார்; அவர் அமர்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். பின்னர் அரசனைப் பார்த்து, ‘அரசே, வாசபகத்தியா எங்கே?’ என்று கேட்கிறார்.

உடனே அரசன் நடந்ததையும், என்ன செய்தான் என்பதையும் கூறினான்.

‘அரசே, வாசபகத்தியா யாருடைய மகள்?’

‘சாக்கியர் மகாநாமாவின் மகள், குருவே.’

‘அவள் இங்கு யாருக்கு மனைவியாக இருப்பதற்கு வந்தாள்?’

‘என்னுடைய மனைவியாக இருப்பதற்கு ஆசானே.’

‘அரசனே, அவள் ஓர் அரசனின் மகளாகப் பிறந்தாள்; ஓர் அரசனை அவள் மணம் செய்துகொண்டாள். ஓர் அரசனுக்குத் தன்னுடைய மகனையும் பெற்றெடுத்தாள். அந்த மகனுடைய தந்தை ஆதிக்கம் செலுத்தும், அவருக்குச் சொந்தமான பெரும் சாம்ராஜ்யத்தின் மீது அந்த மகனுக்கு ஏன் அதிகாரம் இல்லை? முற்பிறவியில் ஒரு மன்னன் காட்டில் விறகு சேகரிப்பவளுடன் சேர்ந்து ஒரு மகனைப் பெற்றான்; அந்த மகனுக்குத் தனது இராஜ்ஜியத்தையும் அந்த அரசன் அளித்தான்.’

இதைச் சொல்லிய கௌதமர், அவரது கருத்தை வலியுறுத்த முற்பிறவி கதை ஒன்றையும் அரசனுக்குக் கூறினார்.

பத்தசால ஜாதகத்திலும் (465) இந்தக் கதை, அங்கு வேறு வடிவில் கூறப்படுகிறது. இந்தக் கதையை ஜேதவனத்தில் தங்கியிருக்கும்போது பிக்குகளுக்குக் கூறுகிறார். தன்னுடன் இருப்பவர்களின், உறவினர்களின் நலனுக்காக ஒருவர் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இக்கதையில் ததாகதர் கூறினார்.

அரசனுடைய ரதத்தைச் சேதப்படுத்திய நாய்கள் அனைத்தையும் கொன்றுவிடும்படி உத்தரவு பிறப்பித்த அரசன் ஒருவனைப் பற்றிய கதை அது. அந்தப் பிறவியில் நாய்களின் தலைவனாகப் பிறந்திருந்த போதிசத்துவர் அனைத்து நாய்களுமே குற்றவாளிகள் அல்ல என்று அந்த அரசனுக்கு உணர்த்தியதுடன் அந்த நாய்களை கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றுகிறார்.

0

அந்தக் காலத்தில் பிரம்மதத்தன் என்ற அரசன் வாராணசியை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்தப் பிறவியில் போதிசத்துவர், அதற்கு முந்தைய பிறவியின் பலனாக, நாயாகப் பிறந்திருந்தார்; சில நூறு நாய்களை வழிநடத்தும் தலைவனாகப் பெரும் சுடுகாடு ஒன்றில் வசித்தார்.

ஒரு நாள், அந்த மன்னன் பால் நிறத்தில் வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அரச ரதத்தில் ஏறி உல்லாசவனத்துக்குச் சென்றார். மாலை வரையில் அங்கு மகிழ்ச்சியுடன் நேரத்தைப் போக்கினார்; சூரியன் மலைவாயில் விழத்தொடங்கியதும் நகரத்திலிருந்த அரண்மனைக்குத் திரும்பி வந்தார்.

அரண்மனை முன் முற்றத்தில் அரசனை இறக்கிவிட்ட ரதத்தின் சாரதி அரசன் உள்ளே சென்றதும், குதிரைகளை அவிழ்த்து லாயத்துக்கு இட்டுச் சென்றான். எனினும், தோலால் செய்யப்பட்ட சேணங்களையும், கடிவாளங்களையும் ரதத்திலேயே விட்டுவிட்டு தனது இருப்பிடம் சென்றுவிட்டான்.

அன்று இரவு நல்ல மழை. தேரும் சேணங்களும் நன்கு நனைந்துவிட்டன; இரவில் உலாத்துவதற்காக அவிழ்த்துவிடப்பட்ட அரண்மனை நாய்கள் தேரில் மேல் ஏறி விளையாடின. தோலால் ஆன சேணங்களையும் வார்களையும் கடித்துத் துண்டாக்கிப் போட்டன. அனைத்தும் வீணாகிப்போயின.

மறுநாள் காலையில் ரதத்தில் நடந்திருக்கும் களேபரத்தைப் பார்த்த சாரதியும் வேலையாட்களும் அரசனிடம் சென்று கூறினார்கள்: ‘அரசே, நாய்கள் சாக்கடை வடிகால் வழியாக அரண்மனைக்குள் புகுந்திருக்கின்றன. பெருமைக்குரிய அரசனாகிய உங்களுடைய ரதத்தின் சேணங்களைக் கடித்துத் துண்டாக்கியுள்ளன; ரதத்தையும் அசிங்கப்படுத்திவிட்டன.’

கோபமடைந்த அரசன், கண்ணில் படும் நாய்கள் அனைத்தையும் கொன்றுபோடுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தான். இவ்வாறாக, நாய்களைப் பிடித்துக் கொல்லும் பெரும் படலம் தொடங்கியது; அந்த விலங்குகள் பார்க்கப்படும் இடங்களில் எல்லாம் அடித்துக் கொல்லப்பட்டன.

தேடிப்பிடித்துக் கொல்லப்படுவதால் அஞ்சிய அந்த விலங்குகள் மறைந்து வாழத் தொடங்கின; எனினும் எவ்வளவு நாட்கள் இப்படி வாழ்வது? ஆகவே அவை அனைத்தும் ஒன்று திரண்டு போதிசத்துவரைப் பார்த்து முறையிட முடிவு செய்தன.

0

நாய்கள் அனைத்தும் கூட்டமாக, சுடுகாட்டுக்குச் சென்றன; இவர்களைப் பார்த்த போதிசத்துவர், ‘இவ்வாறு நீங்கள் திரளாக இங்கு வந்திருப்பதன் காரணம் என்ன?’ என்று வினவினார். அந்த விலங்குகள் நடந்ததைக் கூறின. ‘அரசனின் மாளிகையில் இருந்த நாய்கள் தான் இந்த வேலையைச் செய்துள்ளன; தனது ரதத்தின் தோல் சேணங்களும் கடிவாள வார்களும் சேதமாகிவிட்டதால் அரசர் மிகவும் கோபமடைந்தார். நாங்கள் தான் அதைச் செய்திருப்பதாக அவரிடம் பணியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்; அதனால், அனைத்து நாய்களையும் கொல்வதற்கு அரசர் உத்தரவிட்டுள்ளார். நாய்கள் மொத்தமாக அழிக்கப்படும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என்று அவை விளக்கமாகக் கூறின.

போதிசத்துவர் மனத்தில் இந்தச் சிந்தனை ஓடியது: ‘விழிப்புடன் பாதுகாக்கப்படும் ஓர் இடத்துக்குள் வெளியிலிருந்து எந்த நாயும் நுழைந்திருக்க முடியாது; அரண்மனையில் வளர்க்கப்படும் நாய்கள்தான் அதைச் செய்திருக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை; அதேநேரத்தில் குற்றம் செய்யாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். குற்றவாளிகள் யாரெனக் கண்டறிந்து ராஜாவிடம் சொல்லி என்னுடைய கூட்டத்தாரின் உயிரை நான் ஏன் காப்பாற்றக்கூடாது?’

அவர் தனது கூட்டத்தினருக்கு ஆறுதல் கூறினார்: ‘அஞ்சாமல் இருங்கள்; நான் உங்களைக் காப்பாற்றுவேன். அரசனைப் பார்த்துவிட்டு வரும்வரை நீங்கள் அனைவரும் இங்கேயே பாதுகாப்பாகக் காத்திருங்கள்.’

அன்பின் சிந்தனைகள் அவர் மனத்தில் நிரம்பின; நினைவில் நீந்திய பத்து நன்னெறிகள் அவரை வழிநடத்தின. தனியாக, பரிவாரம் தொடராமல் நகரத்துக்குள் நுழைந்தார்; அரண்மனை நோக்கி நடந்தார்; ‘என்னை அடிக்க எவரும் கம்பை எடுக்க வேண்டாம்; என் மீது வீச எவரும் கல்லெடுக்க வேண்டாம். எவரும் என்னை நோக்கிக் கையை உயர்த்த வேண்டாம்’ என்று கட்டளையிட்டபடி அவர் நடந்தார். நகரத்தில் அவ்வாறு அவர் நடந்து செல்கையில் எந்த மனிதரும் அவரைக் கண்டு கோபம் கொள்ளவில்லை.

நாய்களைக் கொல்வதற்கு உத்தரவிட்டிருந்த அந்த ராஜா அன்று அரசவையில் நீதி பரிபாலனம் செய்ய அமைக்கப்பட்டிருந்த அரங்கில் இருக்கையில் அமர்ந்திருந்தார். போதிசத்துவர் எங்கும் திரும்பாமல், நேராக அவரை நோக்கி ஓடினார். அரசன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டார்.

ராஜாவின் வேலைக்காரர்கள் அவரை இருக்கையின் அடியிலிருந்து அகற்ற முயன்றனர்; எனினும், அரசன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். நாயாக வடிவம் எடுத்திருந்த போதிசத்துவரைப் பார்த்து ‘உன்னைப் பாதுகாக்கிறேன். வெளியில் வா. என்ன வேண்டும் சொல்’ என்று கேட்டான்.

சற்று துணிவு கொண்டு அரியணையின் அடியிலிருந்து வெளியே வந்த போதிசத்துவர் அரசனை வணங்கினார்; ‘நாய்களை அழிக்கச் சொல்லி உத்தரவிட்டது நீங்கள் தானா?’ என்று கேட்டார்.

‘ஆம், நான் தான்.’

‘மக்களின் அரசனே, அவர்கள் செய்த குற்றம் தான் என்ன?’

‘அந்த விலங்குகள் என் ரதத்தின் சேணங்களையும் மற்றவற்றையும் கடித்து வீணாக்கிவிட்டன.’

‘அரசே, உண்மையில் அந்த மோசமான குறும்புத்தனத்தைச் செய்த நாய்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?’

‘இல்லை, எனக்குத் தெரியாது.’

‘அப்படியானால், மாண்புமிகு அரசனே, உண்மையான குற்றவாளி யார் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாத நிலையில், கண்ணில் படும் நாய்கள் அனைத்தையும் அழிக்க உத்தரவிடுவது சரியா?’

‘என் ரதத்தின் சேணங்களை வார்களை அவை சிதைத்துவிட்டன; அதனால்தான் அவற்றைக் கொல்லும்படிக் கட்டளையிட்டேன்.’

‘சரி. உங்கள் பணியாளர்கள், விதிவிலக்கு இன்றி எல்லா நாய்களையும் கொல்கிறார்களா? அல்லது சில நாய்களை விட்டுவைத்திருறார்களா?’

‘ஆமாம், சில நாய்கள் கொல்லப்படவில்லை; அவை என்னுடைய அரண்மனையில் வளர்க்கப்படும் நாய்கள்.’

‘அரசே, ரதத்தை நாசம் செய்ததால், ஒன்றுவிடாமல் எல்லா நாய்களையும் கொலை செய்ய உத்தரவிட்டதாக இப்போதுதான் கூறினீர்கள்; அதேநேரத்தில் உங்கள் அரண்மனையில் வளர்க்கப்படும் உயர் இன நாய்கள் கொல்லப்படவில்லை என்கிறீர்கள்! விசித்திரமாக இல்லையா? அப்படியானால், தீய செயல்களின் நான்கு அம்சங்களான பாரபட்சம், வெறுப்பு, அறியாமை, பயம் ஆகியவற்றை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். இத்தகைய குணங்கள் தவறானவை, அரசனுக்குரிய பண்புகள் அல்ல. அரசன் வழக்குகளை விசாரிக்கும்போது தராசில் இருக்கும் நிலைதவறாத முள்போல் நடுநிலைமையோடு செயலாற்ற வேண்டும். அரண்மனையில் வளர்க்கப்படும் அரசனுடைய நாய்கள் கொல்லப்படாமல் சாதாரண எளிமையாக வாழும் நாய்கள் மட்டும் கொல்லப்படுவது பொதுவான நீதியாக இருக்க முடியாது. பாரபட்சமற்ற நீதி அல்ல இது.’

இவ்வாறு கூறிய போதிசத்துவர், அரசனுக்கு தம்மத்தை உபதேசித்தார். ‘அரச குடும்பத்தால் நல்ல தீனி கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும், நல்ல தோற்றமும் வலிமையும் கொண்ட அந்த வேட்டை நாய்கள் கொல்லப்படவில்லை. எனினும், நாங்கள் கொல்லப்படுகிறோம். பலவீனமானவர்கள் மட்டுமே கொல்லப்படுவது நீதியல்ல.’

போதிசத்துவரின் சொற்களைக் கேட்டு அரசன் சிந்தித்தான். ‘அப்படியானால், என்னுடைய ரதத்தின் சேணங்களைக் கடித்துச் சேதப்படுத்தியது யார் என்பதை உங்களுடைய விவேகத்தால் அறிந்து கூற முடியுமா?’ என்று அந்த நாயைப் பார்த்துக் கேட்டான்.

‘நிச்சயமாகக் கூறமுடியும், அரசனே.’

‘யார் அது?’

‘அந்தக் குற்றத்தைச் செய்தது உங்களுடைய அரண்மனையின் வேட்டை நாய்கள்தான்.’

‘அப்படிச் செய்தது அவைதான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?’

‘அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன்.’

‘உடனடியாகச் செய்யுங்கள்.’

‘எனில் உங்கள் நாய்களை அழைத்துவரச் சொல்லுங்கள். அப்படியே சிறிது மோரும் தர்ப்பைப் புற்களையும் கொண்டுவர உத்தரவிடுங்கள்.’

அரசனும் போதிசத்துவர் சொன்னபடி நாய்களை அழைத்து வரச் சொன்னான்.

நாய்களும் அந்தப் பொருட்களும் வந்ததும், போதிசத்துவர், ‘புற்களை மிகச் சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்து அந்த மோரில் கலக்கி நாய்களைக் குடிக்க வையுங்கள்’ என்று பணித்தார்.

அரசனின் வேலையாட்களும் அவ்வாறே செய்தனர்; அரைத்த புற்கள் கலந்த மோரைக் குடித்த நாய்கள் செருமி, குடித்தவற்றையெல்லாம் வெளியில் கக்கின. நாய்கள் துப்பியவற்றில் முழுமையாகச் செரிக்கப்படாத தோல் துண்டுகளும் வெளியில் விழுந்தன! ‘ஆஹா, முழுமை பெற்ற ஒரு புத்தர் கூறிய தீர்ப்பு போன்றதே இது’ என்று மகிழ்ச்சியுடன் கத்தினான்.

அத்துடன் தனது வெண்கொற்றக் குடையை போதிசத்துவர் தலைக்கு மேல் பிடிக்கச் சொல்லி அவருக்கு அரச மரியாதை செய்தான். போதிசத்துவர் தேசகுண ஜாதகத்தில் (521) நீதி பற்றிக் கூறப்படும் பத்து கூறுகளைக் குறிப்பிட்டு தம்மத்தை அவருக்கு உபதேசித்தார்:

‘சத்திரிய அரசனே, நண்பர்களுக்கும் அரசவையினருக்கும், நேர்மையானதைச் செய்யுங்கள்; போரிலும் பயணத்திலும், நேர்மையாகச் செயல்படுங்கள்; நகரமோ கிராமமோ, நேர்மையாகவே நடந்து கொள்ளுங்கள்; எந்த இடத்திலும், எந்த நாட்டிலும் நேர்மையாகச் செயல்படுங்கள்; பிராமணர்களோ துறவிகளோ அனைவரிடமும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்; மிருகங்களிடமும் பறவைகளிடமும் நேர்மையாகவே நடந்துகொள்ளுங்கள்; தம்மத்தின்படி வாழும் அரசன், சொர்க்கத்துக்குச் செல்வான்; நேர்மையாகச் செயல்படுங்கள், அங்கிருந்துதான் அனைத்து அருளாசிகளும் பெருகுகின்றன; கவனமும் விழிப்புணர்வும், நன்மையின் பாதைகளில் உன்னை அழைத்துச் செல்வன; இந்த வழியில்தான் பிராமணர்களும், சாக்கியர்களும், தேவதைகளும் தெய்வத்தை வென்றுள்ளனர். இவையே பழங்காலத்தில் சொல்லப்பட்ட நன்னெறிகள்: விவேகத்தின் வழிகளைப் பின்பற்றுங்கள், அவை, சொர்க்கத்துக்கு வழிகாட்டும். அனைத்து மகிழ்ச்சியெனும் பெண் தெய்வம் உங்கள் முன் தோன்றும்.’

ஐந்து நன்னெறி வழிகளை அரசனுக்கு உபதேசித்து வழிகாட்டிய போதிசத்துவர் அவற்றில் உறுதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பின்னர், அரசனின் வெண்கொற்றக் குடையை அவனிடமே திருப்பி அளித்தார்.

பெருமகனின் உபதேசங்களுக்குப் பின்னர், அனைத்து உயிரினங்களும் பாதுகாப்புடன், எந்தத் துன்புறுத்தலும் இல்லாமல் வாழ ஏற்பாடுகள் செய்யும்படி அரசன் உத்தரவிட்டான். அத்துடன் தலைமைப் பொறுப்பிலிருந்த விலங்கான போதிசத்துவர் தொடங்கி அனைத்து நாய்களுக்கும் தொடர்ந்து தவறாமல் உணவளிக்கும்படியும், அரசன் உண்பவதற்கு இணையான உணவையே அளிக்கும்படியும் கட்டளையிட்டான்.

போதிசத்துவர் எடுத்துரைத்த நன்னெறிகளின்படி, பெருந்தன்மையான குணங்கள் கொண்ட அரசனாக அவன் வாழ்ந்தான்; அதனால் அடுத்த பிறவியில் தேவர்களின் உலகத்தில் பிறந்தான். நாயின் -போதிசத்துவரின் உபதேசங்கள் பல நூறு ஆண்டுகள் நீடித்தன; முதுமையடையும் வரையில் வாழ்ந்த போதிசத்துவர் அவரது செயல்களுக்கு இணையான மதிப்புடன் இறப்பை எய்தினார்.

இவ்வாறு கதையைக் கூறிமுடித்தார் கௌதமர். ‘பிக்குகளே, இப்போது மட்டுமின்றி முற்பிறவியிலும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பலன் தரும் செயல்களையே ததாகதர் செய்தார்’ என்று கூறினார். ஆனந்தன், அரசனாகப் பிறந்தார் என்பதையும், தன்னைப் பின்பற்றுபவர்கள் கூட்டத்தாராகவும், தான் அவர்களின் தலைமை நாயாக அவதாரம் செய்திருந்ததையும் விளக்கிக் கூறினார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *