Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

புத்த ஜாதகக் கதைகள் #10 – தித்த ஜாதகம் – ‘வேறு இடத்திற்கு செல்லுங்கள்’

(தொகுப்பிலிருக்கும் 25வது கதை)

தற்போதைய பிறவியில் சாரிபுத்தர் தம்மம் சார்ந்த விஷயங்களுக்குப் பொறுப்பாளராக சங்கத்தில் செயல்பட்டு வந்தார். அவருடன் பிக்கு ஒருவர் தங்கியிருந்தார். அவருக்கு அறநெறிகளைக் கற்பிப்பதில் சாரிபுத்தருக்கு மிகவும் சிரமம் இருந்தது. எவ்வளவோ முயன்றும் அவரது அறிவு நிலையை உயர்த்த முடியவில்லை என்ற காரணத்தால்  அந்தப் பிக்குவை புத்தரிடம் அழைத்துச் சென்று நிலைமையை விளக்குகிறார். கௌதம புத்தர் துறவியின் மனநிலையைப் புரிந்துகொள்கிறார். அவரது மனநிலைக்கு ஏற்றவாறு கற்பிக்கிறார். துறவியின் அறிவு நிலை உயர்கிறது. அருக நிலைக்குத் தயாராகினார்.

இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட மற்ற பிக்குகள் மத்தியில் இதுவே பேசுபொருளாகிறது. எனவே, சீடர்கள் முன்னிலையில் புத்தர் பேசுகிறார். முன்னொரு காலத்தில் அசுத்தமாக இருப்பதாகக் கருதி ஓரிடத்தில் தன்னைக் குளிப்பாட்ட அனுமதிக்காத குதிரையின் கதையைச் சொல்கிறார்.

0

‘வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்ற இந்தக் கதை புத்தர் ஜேத வனத்தில் இருந்தபோது கூறப்பட்டது.  முற்பிறவிகளில் பொற்கொல்லனாக இருந்தவர் குறித்த கதை இது. இந்தப் பிறவியில் அவர் ஒரு துறவியாகிறார்; கதை நிகழும் அந்தக் காலகட்டத்தில் அவர் சாரிபுத்தருடன் உடன் உறைபவராக இருக்கிறார்.

மனிதர்களின் மனத்தை உணரும் அறிவு புத்தருக்கு இருக்கிறது; அவரால் மனிதர்களின் எண்ணங்களை ஊகித்தறிய முடியும். சாரிபுத்தருக்கு இந்த ஆற்றல் குறைவு; ஆகவே சங்கத்தின் தம்மம் சார்ந்த பிரிவிற்கு தலைவராக/ பொறுப்பாளராக இருக்கும் அவருக்கு, அவருடன் தங்கியிருக்கும் மற்றொரு துறவியின் மனத்தையும் உணர்வுகளையும் அறிந்துணர முடியவில்லை.  மனமொருமிப்பிற்கு  அசுத்தம்  என்ற கருத்து அளிக்கப்பட்டபோது இளம் துறவியால் மேலும் தொடர முடியவில்லை. சாரிபுத்தரால் விளக்கவும் இயலவில்லை. அந்தத் துறவிக்கோ அசுத்தமான நிலை என்பது ஏற்புடையதாக இல்லை. காரணமும் விளங்கவில்லை.

தொடர்ச்சியாக ஐந்நூறு பிறவிகளில் அவர்  பொற்கொல்லராகப் பிறந்திருந்தார். ஒவ்வொரு பிறவியிலும் அவர் கலப்பற்ற சுத்தமான தங்கத்தையே பார்த்திருந்தார்; பயன்படுத்தி வேலை செய்தார். ஆகவே, கலப்புள்ள அசுத்தமான எதையும் அவர் மனம் ஏற்கவில்லை என்பதாகப் பாரம்பரியப் புரிதல் கூறுகிறது.

சாரிபுத்தர் பலவிதமாக முயன்றும் இந்த விஷயத்தின் அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே நான்கு மாதங்கள் கழிந்தன. ஆர்வத்துடன் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட, அவருடன் தங்கியிருக்கும் ஒரு துறவிக்கு அருக நிலையை  வழங்க முடியாத சங்கடத்தில் தம்மப் பிரிவின் பொறுப்பாளர் திணறினார். ‘நிச்சயமாகப் புத்தரால் தான் இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடியும்.  அவரால்தான் இவரை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். ததாகதரிடம்  இவரை அழைத்துச் செல்வோம்’ என்று அவர் நினைத்தார். ஆகவே, ஒரு நாள்  அதிகாலை நேரத்தில் அந்தத்  துறவியை அழைத்துக்கொண்டு ஆசானிடம் வந்தார்.

‘சாரிபுத்தா,  இந்த நேரத்தில் இந்தத் துறவியுடன் இங்கு வந்திருக்கிறாய்.  நீங்கள் இருவரும் இங்கு வந்ததற்கு என்ன காரணம்?’ என்று வினவினார் ஆசிரியர்.

‘ஆசிரியரே, தியானம் செய்வதற்கு மனத்தை ஒருமுகப்படுத்த அவருக்கு ஒரு கருப்பொருளை நான் சொன்னேன். நான்கு மாதங்கள் ஆன பின்னரும் அந்தப் பொருளின் அடிப்படையை அவர் அறிந்து கொண்டதற்கான அறிகுறியையே என்னால் அவரிடம் பார்க்க முடியவில்லை. ஆகவே, அவரை உங்களிடம் அழைத்து வந்தேன். புத்தரால் அவருக்கு உதவி செய்ய முடியும். அடுத்த நிலைக்கு அவரை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்; வேறு எவராலும் அதைச் செய்யமுடியாது என்றும் கருதுகிறேன்’ என்று அவருக்கு சாரிபுத்தர் பதிலிறுத்தார்.

‘சாரிபுத்தா, அவர் தியானம் செய்வதற்கு என்ன மாதிரியான கருப்பொருளைப் பரிந்துரைத்தாய்?’

‘அசுத்தம் குறித்த சிந்தனை, ததாகதரே.’

‘சாரிபுத்தா, உனக்கு மட்டுமல்ல. மனிதர்களின் இதயம் பற்றியும், அவர்களது  எண்ணங்களைப் படிக்கும் அறிவும் பொதுவாக அனைவருக்கும் இருப்பதில்லை. நல்லது. இந்தத் துறவி இன்று என்னுடன் இருக்கட்டும். நீ மட்டும் உன் வசிப்பிடம் செல். அப்புறமாக வந்து இந்தத் துறவியை அழைத்துச் செல்லலாம்.’

இவ்வாறு  மூத்தப் பிக்குவை அந்த இடத்திலிருந்து அனுப்பினார் கௌதமர். அதன் பின்னர், அந்தத் துறவியை அழைத்து, மென்மையான நல்லதொரு உள்ளாடையும் மேலங்கியும் அணிந்துவரச் சொன்னார். பிட்சைச் சேகரிக்க ஊருக்குள் செல்லும் போது ​​அவரைத் தன்னுடன் வரச் சொன்னது மட்டுமின்றி அவர் தன்னருகிலேயே நடந்து வருமாறு பார்த்துக்கொண்டார். பிட்சையின் போது அவருக்கு விருப்பமான எல்லாவிதமான உணவுகளையும் அவர் பெற்றுக் கொண்டதைப் பார்த்தார்.  பின்னர் பிக்குகளால் நிறைந்திருந்த மடத்திற்கு வந்து அவர்களுடன் சற்று நேரம் உரையாடிவிட்டு, நறுமணம் நிறைந்த அவருடைய அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டார்.

 

மாலையில், மடத்தைச் சுற்றி உலாவச் செல்கையில்  அந்தத் துறவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். நடந்து செல்லும்போதே, அவருடைய ஆற்றலால் வாவி ஒன்று தோன்றும்படி செய்தார். அதில் ஏராளமான தாமரை மலர்கள் கூட்டமாகப் பூத்திருந்தன. ஒரு மலர்க்கூட்டத்தில் மிகப் பெரும் தாமரை பூத்து அசைந்தாடிக் கொண்டிருந்தது.

புத்தர் துறவியை அழைத்தார். ‘பிக்குவே, இங்கே அமர்ந்து, இந்தத் தாமரை மலர்களை, குறிப்பாக அந்தப் பெரிய தாமரையைப் பார்த்திருங்கள்’ என்று கூறினார். வாவியின் கரையில் துறவியை அமர வைத்து விட்டு, மீண்டும்  தனது அறைக்குள் சென்று விட்டார்.

கரையில் அமர்ந்திருந்த துறவி அந்த மலரையே பார்த்துக் கொண்டிருந்தார்.  அனைத்துத் திறன்களும் பெற்றவரான கௌதமர் அந்த மலர் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து போகும் நிலையை உண்டாக்கினார்.  துறவி அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ​​வாடியது. இதழ்கள், வெளிப்புறத்திலிருந்து உதிரத் தொடங்கின. சற்று நேரத்தில் இதழ்களனைத்தும் உதிர்ந்து போயின; பூவின் மையப் பகுதி மட்டுமே எஞ்சியிருந்தது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து ​​அந்தப் பிக்கு தனக்குள் நினைத்துக் கொண்டார். ‘இதோ  சற்று முன்பு வரையிலும் இந்தத் தாமரை மலர் எவ்வளவு வனப்பு மிக்கதாக அழகுடன் இருந்தது. பின்னர், அது வாடிப்போய், இதழ்கள் உதிர்ந்து, வெறும் கூடுபோல் நிற்கிறது. இந்த அழகிய தாமரையும்  சிதைவுறத்தான் செய்தது. அதுபோல் என் உடலுக்கும் சிதைவு வராதா என்ன? கணத்தில் அனைத்தும் மாறும் இந்த நிலையற்றத்தன்மை அனைத்துடனும் இணைந்திருப்பது அல்லவா?’ இந்தச் சிந்தனை அவருக்குள் உள்ளொளிர்வைத் தந்தது.

துறவியின் மனம் உள்ளொளி பெறும் அளவுக்கு உயர்ந்துவிட்டதை அறிந்த ஆசிரியர், நறுமணம் வீசும் தனது அறையில் இருந்தபடியே, தனது மனத்தில் தோன்றுவதைக் கதிர்வீச்சுபோல் அந்தப் பிக்குவிற்குள் செலுத்தினார்; இந்தச் சொற்களையும் உச்சரித்தார்:

‘இலையுதிர்காலத் தடாகத்தில்
குவளையைக் கைநீட்டிக் கொய்வதுபோல்,
சுயத்தின் மீதான மதிப்பையும்
கண்டறிந்து உருவாக்கிக்கொள்-உன்
இதயத்தை இது தவிர்த்து
வேறெதிலும் செலுத்தாதே’

புத்தர் போதித்த நிப்பானா இதுதான்.  இந்தச் சொற்களின் முடிவில்,  உபதேசத்தின் முடிவில் அந்தத் துறவி அருக நிலைக்குத் தகுதி பெற்றவரானார்.   அவர் மீண்டும் பிறப்பெடுக்க மாட்டார்; ஏதோ ஒரு வடிவத்தில் பிறந்து இனியும் துயரத்திற்கு ஆளாக மாட்டார்.  அந்தப் பிக்குப் பெருமகிழ்வில் கீழ்க்கண்ட வரிகளை உரத்து உச்சரித்தார்.

‘தனது பிறவியை வாழ்ந்து முடித்தவன்,
எண்ணங்களில் முதிர்ச்சியை அடைந்தவன்
அசுத்தங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டுத்
தூய்மையடைந்து சுதந்திரமடைந்தவன்
அவனது இறுதி உடலைச்  சுமக்கிறான்;
தூய்மையாக வாழ்ந்தவன்,
புலன்கள் அனைத்தும் இறைவனால் ஆளப்பெறுபவன்
இறுதியில் ராகுவின் கடைவாயிலிருந்து
மீண்டு வெளிவரும் சந்திரனைப் போல
உயர்வான சுதந்திரத்தை வென்றவனாகிறான்.
ஆயிரம் கதிர்க்கரங்களுடன் சூரியன் தனது
ஒளி வெள்ளத்தால் சொர்க்கத்தை ஒளிரச் செய்வதுபோல்
என்னைச் சூழ்ந்திருந்த அசுத்தத்தை,
அதன் மாயை உருவாக்கிய முழுமையான இருளை
நான் கலைத்துச் சிதறடித்தேன். ’

இதன் பின்னர் அனைத்தும் அருளப்பெற்றவரிடம் சென்ற அந்தப் பிக்கு அவரை வணங்கினார்; அப்போது மூத்தப் பிக்குவான சாரிபுத்தரும் அங்கு வந்தார். ஆசிரியருக்கு உரிய முறையில் வணக்கம் செலுத்திய பின்னர், தனது உடனுறைபவருடன் வசிப்பிடம் சென்றார்.

இந்த நிகழ்வு குறித்த செய்திகள் பிக்குகள் மத்தியில் பரவின;  தம்ம அரங்கில் கூடிய அவர்கள் பத்து ஆற்றல்களையும் பெற்றவரான கௌதமரின் நற்பண்புகளை ஆற்றலை வியந்து பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்; ‘சகோதரர்களே, மனிதர்களின் இதயங்களையும் எண்ணங்களையும் முழுமையும் அறியாத நிலையில்  மூத்த துறவியான சாரிபுத்தரால்  தன்னுடன் வசித்தவரை சரியாக உணர்ந்துகொள்ள முடியவில்லை. ஆசான் அவற்றையெல்லாம்  அறிந்தவராக இருக்கிறார்; ஒரு நாளிலேயே அந்தத் துறவிக்குப் பகுத்துணரும் உள்ளொளியைத் தந்ததுடன், அருக நிலைத் தகுதியையும் வழங்கிவிட்டார். ஓ! ததாகதரின் அற்புத ஆற்றல்கள் தாம்  எவ்வளவு பெரியவை!’

0

அப்போது அந்த அரங்கிற்கு வந்த ஆசிரியர்,  அவருக்கென இருக்கும் இருக்கையில் அமர்ந்தார். பிக்குகளைப் பார்த்துக் கேட்டார். ‘துறவிகளே, இங்கே கூடியிருக்கும் நீங்கள் உரையாடிக் கொண்டிருப்பது எதைப் பற்றி என்று நான் அறிந்துகொள்ளலாமா?’

‘நற்பண்புகள் நிறைந்தவரே,  வேறு ஒன்றும் இல்லை;  உங்களிடம் மனிதர்களின் இதயம் குறித்த புரிதல் இருக்கிறது; எண்ணங்களை உணரவும் முடிந்தது.  தம்மப் பிரிவின் பொறுப்பாளருடன் வசிக்கும் அந்தத் துறவியை உங்களால் நிலையுயர்த்த முடிந்தது.’

கௌதமர், ‘இது வியப்பிற்குரிய ஒன்றில்லை, அன்பிற்குரிய துறவிகளே; புத்தராகிய நான், அந்தத் துறவியின் மனப்பாங்கை அறிந்திருக்க வேண்டும். கடந்த பிறவியிலும் இவ்வாறு நான் அப்படி நன்கு அறிந்தவனாகத்தான் இருந்தேன்.’

இப்படிச் சொல்லியவர், கடந்த பிறவியின் நிகழ்வையும் அவர்களுக்குக் கூறத் தொடங்கினார்.

‘சாரதியே, அந்தக் குதிரை வேறு இடத்தில் நீரருந்தட்டும், குளிக்கட்டும்;  நீண்ட நாள் உண்டு கொண்டிருப்பவனுக்குப் பால் சோறும்  வேதனைத் தருவதே’ இதுதான் கருத்து.

அந்த நாட்களில் வாராணசியைப் பிரம்மதத்தன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். மக்களின் வாழ்வு சார்ந்த விஷயங்களுக்கும் ஆன்மீகம் தொடர்பானவற்றிற்கும் அரசனின் வழிகாட்டியாகப் போதிசத்துவர் இருந்து வந்தார்.

ஒரு முறை சாதாரண நலிவுற்ற குதிரை ஒன்றை, ஒரு மனிதன் அரசனின் போர்க்குதிரை குளிப்பாட்டப்படும்  இடத்தில்  குளிப்பாட்டிச் சுத்தம் செய்தான். கெடுவாய்ப்பாக அந்த இடம் போர்க்குதிரைக்கு உரியது என்பது அவனுக்குத் தெரியாது. சற்று நேரத்தில் அரசனுடைய குதிரையைப் பராமரிப்பவன் போர்க்குதிரையைக் குளிப்பாட்ட அங்கு அழைத்து வருகிறான்.  அந்தக் குதிரை நீருக்குள் இறங்க மறுத்துத் திமிறியது. கடிவாளத்தைப் பிடித்து இழுத்துப்பார்த்தும் அது அடங்கவில்லை. ஆகவே, குதிரை பராமரிப்பவன் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறினான்: ‘மன்னியுங்கள்  அரசே,  நமது போர்க் குதிரை தன்னைக் குளிப்பாட்ட அனுமதிக்கவில்லை. நீரில் இறங்க மறுக்கிறது.’

அரசன் போதிசத்துவரை அழைத்துவரச் சொல்லி ஆளனுப்பினான்.  அவர் வந்ததும் ‘கற்றறிந்தவரே, தாங்கள் தயவு செய்து அங்குச் சென்று, நீருக்குள் குதிரையை இழுத்தாலும், அது ஏன் இறங்க மறுக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள்’ என்று அவரை அந்த இடத்திற்கு  அனுப்பினான். ‘அப்படியே செய்கிறேன் அரசே’ என்று கூறிய போதிசத்துவர் அந்த நீர்நிலை இருந்த இடத்திற்குச் சென்றார்.

அங்கே அவர் அந்தக் குதிரையை ஆய்வு செய்தார்; குதிரை நோய்வாய்ப்படவில்லை; உடலிலும் காயம் ஏதுமில்லை.  காரணம் என்னவாக இருக்கலாம் என்று அறிந்துகொள்ள முயன்றார். இறுதியில் அந்தக் குதிரை வருவதற்கு முன்பாக அந்த இடத்தில் வேறு ஏதாவது குதிரை கழுவப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு; போர்க்குதிரை  அதனால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்து  நீரில் இறங்க மறுத்திருக்கலாம் முடிவுக்கு வந்தார். அதனால், பராமரிப்பவனிடம் இங்கு முன்னதாக ஏதேனும் குதிரை கழுவப்பட்டதா, அது எந்த மாதிரிக் குதிரை என்று  கேட்டார்.

‘ஆமாம், இங்கு ஒரு சாதாரணக் குதிரையைக் குளிப்பாட்டினார்கள் ஐயா.’

‘ஆஹா, அதுவே காரணம். நம் போர்க்குதிரை அது கொண்டிருக்கும் சுய மதிப்பு தீவிரமாகப் புண்பட்டதாகக் கருதுகிறது’ என்று போதிசத்துவர் தனக்குள் சொல்லிக் கொண்டார். ‘தீர்வு, இவனை வேறு இடத்தில் கழுவுவதுதான்.’

ஆகவே அந்தக் குதிரை பராமரிப்பவனைப் பார்த்து,  ‘நண்பரே, தொடர்ந்து ஒரேமாதிரியாகச் செயல்படும்  ஒரு மனிதன் மிகச் சிறிய அளவிலும் சோர்வடைய வாய்ப்பு உண்டு. அதுதான் இப்போது இந்தக் குதிரைக்கும் நிகழ்ந்திருக்கிறது.  எண்ணற்ற முறை இந்த இடத்தில் போர்க் குதிரை குளித்திருக்கிறது. அவரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுங்கள், நீர் அருந்த வையுங்கள்.’

போதிசத்துவர் கூறியதைக் கவனித்துக் கேட்ட குதிரை பராமரிப்பவன், அதை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டினான். நீரருந்த வைத்தான். குதிரையும் இணக்கத்துடன் நடந்து கொண்டது.

அவர்கள் அவ்வாறு செய்துகொண்டிருக்கும்போது, போதிசத்துவர் அரசனிடம் திரும்பச் சென்றார். ‘நல்லது, போதிசத்துவரே! குதிரையைச் சென்று பார்த்தீர்களா? குதிரை குளித்ததா, நீர் அருந்தியதா?’

‘ஆமாம், அரசே.’

‘ஏன் முதலில் மறுத்தது?’

‘இந்தக் காரணத்தால்தான் அப்படி நடந்துள்ளது’ என்று  மொத்தக் கதையையும் அரசனிடம் போதிசத்துவர் விளக்கிக் கூறினார்.

‘எவ்வளவு புத்திசாலித்தனமான மனிதர் இவர். இதைப் போன்ற விலங்கின் மனத்தில் இருப்பதையும் அவரால் அறிந்துணர முடிகிறதே’ என்று அரசன் வியந்தான்.  போதிசத்துவருக்கு பெரும் மரியாதைகளைச் செய்தான்.

0

இந்தக் கதையையும், அதன் மூலமாக ஓர் உபதேசத்தையும் கௌதமர் கூறி முடித்தார்.  முற்பிறவியில் யார் என்னவாக அவதரித்திருந்தார்கள் என்பதையும் கூறினார்: ‘இந்தப் பிக்கு, அந்தப் பிறவியில் போர்க்குதிரையாகப் பிறந்திருந்தார்.  ஆனந்தன் தான் அரசன், விவேகம் நிறைந்த மந்திரியாக நான் அவதாரம் செய்திருந்தேன்.’

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *