(தொகுப்பிலிருக்கும் 30வது கதை)
‘முனிகாவைப் பார்த்துப் பொறாமைப்படாதே’
இக்கதை நிகழும் நேரத்தில், சிற்றின்ப உணர்வைத் தூண்டும் பெண்ணொருத்தியால் மயக்கப்பட்டு மடாலய வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிற ஆபத்தில் பிக்கு ஒருவர் இருக்கிறார். முற்பிறவியில், நல்ல உணவளித்துப் பெருக்க வைக்கப்பட்ட ஒரு பன்றி சாவை நோக்கிச் செலுத்தப்பட்டதை புத்தர் கூறுகிறார். அந்தப் பன்றியின் வாழ்க்கை நன்றாக இருப்பதுபோல் தோன்றினாலும், அதில் பொறாமைகொள்ள எதுவும் இல்லை என்கிறார்.
0
ஆசான் புத்தர், ஜேதவனத்தில் இருக்கையில் சிற்றின்பத்தைத் தூண்டும் இளம்பெண் ஒருத்தியால் பிக்கு ஒருவர் மயக்கப்படும் இந்தக் கதையைக் கூறுகிறார்.
சிராவஸ்தி நகரின் சாதாரணக் குடிமகனின் மகள் அவள். சுமார் பதினாறு வயதுள்ளவள். ஆண்களுக்கு நல்வாய்ப்பைக் கொண்டுவரக் கூடிய பெண் என்று அவள் கருதப்பட்டாள். எனினும், எவரும் அவளைத் துணையாகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவளுடைய தாய்க்கு அதனால் பெரும் வருத்தம்.
அந்தத் தாய் மனத்துக்குள் இவ்வாறு நினைத்துக் கொண்டாள்: என் மகள் உரிய வயதை அடைந்து நல்ல வடிவுடன் இருக்கிறாள்; எனினும் அவளை யாரும் துணையாகத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆகவே ஒரு தூண்டிலின் இரையைப்போல் அவளைப் பயன்படுத்தப் போகிறேன். புத்த மடத்திலிருக்கும் சாக்கியத் துறவிகளில் ஒருவரை மயக்கி, சிக்கவைத்து அவரை லோகாயத உலகிற்கு இழுத்து வந்து, அவர் மூலம் வாழ்க்கையை நடத்தப்போகிறேன்.
அந்த நேரத்தில் சிராவஸ்தியில் இளைஞன் ஒருவன் நற்குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்தான்; அவன் பௌத்தக் கொள்கைகளில் தனது மனத்தைப் பறிகொடுத்தான். குடும்பத்தைத் துறந்து மடத்தில் சேர்ந்துவிட்டான். முழுமையான உபதேசங்களைப் பெற்ற காலத்திலிருந்து கற்றல்மீது அவனுக்கு இருந்த அனைத்து விருப்பங்களும் போய்விட்டன. சுய மோகத்தில் ஆட்பட்டு தன்னை அலங்கரித்து, அழகுபடுத்திப் பார்த்துக்கொள்ளும் இளைஞனாக இருந்தான்.
அந்தத் தாயும் மகளும் ஒரு நல்ல இளைஞனுக்காகக் காத்திருந்தனர். வீட்டில் அரிசியில் செய்த சுவையான கஞ்சியும், பல வகையான பதார்தங்களும் தயாரித்து வைத்துவிட்டு வீட்டு வாசலில் அவர்கள் இருவரும் நின்றிருப்பார்கள். பிட்சை ஏற்பதற்கோ, வேறு காரணங்களுக்காகவோ புத்தத் துறவிகள் தெருக்களில் நடந்து செல்பும்போது அவர்களது பார்வையில் படும்படி நிற்க முயல்வார்கள். சுவையான உணவுகள் சாப்பிடும் ஏக்கத்துடன் அந்தச் சீடர்களில் எவராவது இருப்பார்களா, அவர்களை வீட்டுக்குள் அழைக்கலாம் என்று நினைத்திருந்தார்கள்.
ஒருநாள் நன்கு கற்றிருந்த பிக்குகளின் கூட்டம் அவர்களது தெருவின் வழியாகச் சென்றது. அபிதம்ம மற்றும் வினயா உட்பட மூன்று பிடகங்களையும் கற்றவர்கள். எனினும் அவர்களில் எவரும் அவர்களது தூண்டிலில் சிக்குபவர்களாகத் தெரியவில்லை. பிக்குகளின் உடையணிந்து, கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி, இனிமையான குரலில் தம்மத்தை உபதேசிக்கும் அந்தத் துறவிகள் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, காற்றின் முன் மிகவேகமாகப் பறந்து செல்லும் பஞ்சுகற்றையைப் போல் விரைந்து செல்லும் ஓர் இளைய பிக்குவைக் கண்டனர். ஆஹா, இறுதியாக அவர்கள் எதிர்பார்த்த ஒரு நபர் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொண்டனர்.
அந்த இளைஞனுடைய கடைக் கண்களின் வெளியோரம் மை தீட்டப்பட்டிருந்தது; நன்கு வளர்ந்த தலைமுடி பிடரியில் தொங்கியது; நல்ல துணியால் ஆன உள்ளாடை; மேலே போட்டிருந்த பிக்குகளின் உடை நன்கு கசக்கித் துவைத்துச் சுத்தம் செய்யப்பட்டதாக இருந்தது; எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவிற்குச் சுத்தமாக இருந்தான்; உடலும் வெண்கல நிறத்தில் உறுதியாக இருந்தது. புலன்கள் அவற்றின் போக்கில் திரிய அனுமதித்தவனாய் உற்சாகத்துடன் காணப்பட்டான்.
‘வலையில் சிக்கக்கூடிய மனிதன்’ இவன்தான் என்று அந்தத் தாய் நினைத்தாள்; அவனை வணங்கி வரவேற்றாள்; அவன் கையிலிருந்த உண்கலத்தை வாங்கியபடி அந்த இளைஞனை வீட்டுக்குள் அழைத்தாள். வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு இருக்கை ஒன்றை அளித்து அமர வைத்தாள். அரிசிக் கஞ்சியும் மற்ற உணவுகளையும் அளித்துச் சாப்பிடச் சொன்னாள்.
அவன் அனைத்தையும் சாப்பிட்டான்; அவனிடம், எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்றும், எதிர்காலத்தில் இந்த வீட்டை அவன் ஓய்வெடுக்கும் இடமாகக் கருதும்படியும் அந்தத் தாய் அன்பாக வேண்டிக்கொண்டாள்.
அந்த இளைஞனும் பிட்சை ஏற்கச் செல்லும்போதெல்லாம் அந்த வீட்டுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். நாளடைவில் அவர்களிடம் நெருங்கிப் பழகவும் தொடங்கினான்.
நெருக்கம் அதிகமானதும், திட்டத்தின் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு இதுதான் சரியான சமயம் என்பதை அந்தத் தாயும் மகளும் உணர்ந்தனர். ஒரு நாள் தாய் இளைஞனிடம் இவ்வாறு கூறினாள்: ‘தம்பி, இந்த வீட்டில் நாங்கள் அனைவரும் போதுமான வசதிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எனினும் எங்களுக்கு ஒரு குறை இருக்கிறது. எங்களைப் பார்த்துக்கொள்ளும் திறனுள்ள மகனோ, மருமகனோ இந்த வீட்டில் இல்லை.’
அந்த இளைஞன் அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தான். இந்தப் பெண்மணி இவற்றை நம்மிடம் ஏன் சொல்லவேண்டும் என்று வியந்தான். அந்தத் தகவல் அவன் இதயத்தில் தைத்தது. அவன் குழம்பிப்போய் அமர்ந்திருந்தான். அந்தத் தாய் மகளைப் பார்த்தாள். ‘இவன் இளகிவிட்டான், இதுதான் தருணம். அவனை வசீகரித்து உன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடு’ என்றாள்.
அதற்கான முயற்சிகளில் மகளை அந்தத் தாய் ஈடுபடுத்தினாள். அடுத்த முறை அந்தப் பிக்கு வீட்டிற்கு வந்தபோது, அந்தப் பெண் நல்ல உடையணிந்து அலங்கரித்துக்கொண்டு அவன் முன்னால் வந்தாள். பெண்ணுக்குரிய தந்திரங்களுடன், சூழ்ச்சிகளையும் செய்து அவனை மயக்கத் தொடங்கினாள். அது நன்கு வேலை செய்தது. அவன் இளைஞன்; அந்த வயதுக்குரிய உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருந்தான். ஆகவே அவளிடம் முற்றிலும் தன்னை இழந்துவிட்டான். அவன் தனக்குள் இவ்வாறு நினைத்தான்: ‘இந்த நிலைக்குப் பிறகு நான் இனிமேலும் புத்தரின் உபதேசங்களின் அடிப்படையில் சங்கத்தில் தொடர்ந்து இருக்க முடியாது’.
மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றான். அங்கு அவனுக்கு உபதேசிக்கும் ஆசிரியர்களின் முன்னிலையில், பிட்சைப் பாத்திரத்தை வைத்தான். பிக்கு உடையைக் கலைந்து வேறு சாதாரண உடையை அணிந்துகொண்டு ‘நான் மனநிறைவு எய்த முடியவில்லை. வெளியேறுகிறேன்’ என்றான். அவர்கள் அவனைத் ததாகதரிடம் அழைத்துச் சென்றனர்.
‘அய்யனே, இந்தப் பிக்கு தனக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்ற காரணத்தால் வெளியேறுவதாகச் சொல்கிறார்’ என்று கூறினர்.
அதன் பின்னர் புத்தர் அந்தப் பிக்குவைப் பார்த்துக் கேட்டார். ‘துறவியே இவர்கள் சொல்வது உண்மையா? உன்னால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லையா?’
‘ஆமாம், ஆசிரியரே.’
‘பிக்குவே, அந்தப் பெண்தான் உன்னுடைய அழிவுக்குக் காரணமாக இருக்கப் போகிறவள். இதற்கு முந்தைய பிறவியிலும் அந்தப் பெண்ணால்தான் நீங்கள் உங்கள் இறப்பைச் சந்தித்தீர்கள். அவளுடைய மணநாளின்போது வந்திருந்த விருந்தினர்களுக்குச் சுவையான விருந்தாக்கப்பட்டீர்கள்’. இவ்வாறு கூறிய கௌதமர், அந்த முற்பிறவிக் கதையையும் கூறத் தொடங்கினார்.
அந்தப் பிறவியில், வாராணசியில் பிரம்மதத்தன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். போதிசத்துவர் குக்கிராமம் ஒன்றில் விவசாயி ஒருவரின் வீட்டில் மகாலோகிதா (பெரிய சிவப்பு) என்ற பெயருடன் அவதரித்திருந்தார். இந்த மகாலோகிதாவைக் காட்டிலும் வயதில் குறைவான எருது ஒன்றும் அங்கு இருந்தது. அதன் பெயர் குள்ளலோகிதா (சின்ன சிவப்பு). இந்த இரண்டு எருதுச் சகோதரர்களும் அந்தக் குடும்பத்தின் விவசாய வேலைகள், வண்டி இழுக்கும் வேலைகள் உட்பட அனைத்து வேலைகளையும் செய்துவந்தனர்.
அந்த விவசாயிக்கு ஒரே ஒரு மகள். அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர் ஒருவரின் மகனுக்கு அவளை மணம் செய்து தரும்படி கேட்டிருந்தனர். மணம் நிச்சயம் செய்யப்பட்டது. அந்தப் பெண்ணின் பெற்றோர், மணவிழாவிற்கு வருவோருக்கு நேர்த்தியான விருந்தளிக்க வேண்டும் என்று விரும்பினர். ஆகவே, அவர்கள் வீட்டில் இருந்த முனிகா என்ற பன்றியை விருந்துக்கு வெட்டி சமைக்கலாம் என்று எண்ணினர். ஆகவே, அந்தப் பன்றிக்கு உணவுப் பொருட்களை அதிக அளவில் கொடுத்துப் பெருக்க வைக்க முயன்றனர்.
குள்ளலோகிதா இதைக் கவனித்துக் கொண்டிருந்தது. தன் சகோதரனிடம் இதைப் பற்றி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டது. ‘இந்த வீட்டுக்கு வேண்டிய வேலைகளை நீங்களும் நானும்தான் செய்கிறோம். இழுக்க வேண்டிய பாரங்களையும் இழுக்கிறோம். எனினும், சகோதரனே, நமது சிரமங்களுக்குப் பதிலாக, நமக்கு அவர்கள் சாப்பிடுவதற்குக் கொடுப்பதெல்லாம் புல்லும் வைக்கோலும் மட்டுமே. இதோ பாருங்கள், அந்தப் பன்றிக்கு அரிசிச் சாதம்! அவர்கள் இவ்வாறு பாரபட்சத்துடன் நம்மை நடத்துவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?’
மூத்த சகோதரன், எருதாக அவதரித்திருக்கும் போதிசத்துவர் இவ்வாறு கூறினார்: ‘அன்பான என் குள்ளலோகிதா, அந்தப் பன்றியைப் பார்த்து பொறாமை கொள்ளாதே; ஏனெனில் அந்தப் பன்றி தனது சாவிற்கான உணவைச் சாப்பிடுகிறது. அவர்களது மகளின் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்குச் சுவையான உணவை வழங்கவே அந்தக் குடும்பத்தினர் பன்றிக்கு உணவளித்துப் பெருக்க வைக்கிறார்கள். சில நாட்கள் காத்திரு. வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். அப்போது அந்தப் பன்றியை அதன் கால்களைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்று, கொன்று சமைப்பதற்கு உகந்த கறியாக மாற்றுவார்கள். அதை நீ பார்க்கப் போகிறாய்.’
மேலும், இந்த வசனத்தையும் எடுத்துக் கூறினார்:
‘முனிகாவைப் பார்த்துப் பொறாமைப்படாதே- அவனைத்
துன்பத்தில் ஆழ்த்தப் போகும் உணவைச் சாப்பிடுகிறான்.
கவலைப்படாமல்
உனக்குரிய வைக்கோலையும் கூளத்தையும் சாப்பிடு
நீண்ட நாள் வாழ்வதற்கு உரியது அதுதான்.’
திருமண நாளும் வந்தது; விருந்தினர்களும் வந்தனர்; முனிகா கொல்லப்பட்டான். பலவிதமான பதார்த்தங்களாகக் கறி சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டது. போதிசத்துவரான மகாலோகிதா குள்ள லோகிதாவைப் பார்த்துச் சொன்னார், ‘முனிகாவின் நிலைமையைப் பார்த்தாயா, அன்புத் தம்பி?’
‘பார்த்தேன், அண்ணா. முனிகா விருந்தானதையும் பார்த்தேன். அவனுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கும் உணவு – அது புல்லோ, வைக்கோலோ, கூளமோ நூறு மடங்கு… இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தது. இந்தப் பாரபட்சம் நமக்குக் கெடுதலாக அமையவில்லை. நமது வாழும் நாட்களும் குறைந்து போய்விடாது என்பதும் உறுதி.’
இவ்வாறாக ஆசான் தனது உபதேசத்தை ஒரு பாடமாகச் சொல்லி முடித்தார். முற்பிறவியில் விருந்தினர்களுக்கு ஒரு சுவையான உணவாக அந்த இளம்பெண் ஆனதை இளைய பிக்கு உணர்ந்தான். அவனுக்கு நன்னெறிகளையும் புத்தர் எடுத்துரைத்தார். உணர்ச்சிக்கு அடிமையாகிப் போயிருந்த அந்த இளம் பிக்குவும் சங்கத்தின் முதல் நிலையை அடைந்தார்.
ததாகதர், முற்பிறவியில் யார் என்னவாக பிறந்திருந்தனர் என்பதையும் தொடர்புகளையும் எடுத்துரைத்தார்: ‘உணர்ச்சிக்கு அடிமையாகிப்போன அந்தப் பிக்குதான் முற்பிறவியில் முனிகா என்ற பன்றியாக அவதாரம் எடுத்திருந்தார். ஆனந்தன், குள்ளலோகிதாவாகவும் நான் மகா லோகிதாவாகவும் பிறந்திருந்தோம்’.
(தொடரும்)