Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

(தொகுப்பிலிருக்கும் 31வது கதை)

‘வனத்தின் பறவைக்கூடுகள் பத்திரம்’

ஆசிரியர் கௌதம புத்தர் ஜேத வனத்தில் இருக்கையில் இந்தக் கதையை எல்லோர் முன்னிலையிலும் கூறினார். நீரை வடிகட்டாமல் குடித்த ஒரு சகோதரனின் கதை.

நண்பர்களான இரண்டு இளம் சகோதரர்கள் சிராவஸ்தி நகரத்திலிருந்து நாட்டிற்குள் சென்றனர். அந்தப் பிக்குகள் ரம்மியமான ஓரிடத்தில் தங்கினர். விரும்பும் வரை அங்குத் தங்கியிருந்த அவர்கள், அதன் பின்னர் பூரணரான புத்தரைத் தரிசனம் செய்வதற்காக ஜேதவனம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

பௌத்தச் சங்கத்தின் கொள்கைப் படி நீரை வடிகட்டி அருந்தவேண்டும். அப்போதுதான் நீரில் கண்ணுக்குத் தெரியாமல் வாழும் உயிரினங்கள் வடிகட்டப்படும். அவை கொல்லப்படாது சங்கத்தினர் கருதினர். பயணத்திலிருந்த நண்பர்களிடம் ஒரு நீர் வடிகட்டி மட்டுமே இருந்தது. மற்றவனிடம் இல்லை. ஆகவே, இருவரும், ஒரே வடிகட்டியைப் பயன்படுத்தி நீரருந்தினர்.

இடையில், இருவருக்குமிடையில் ஏதோ வாக்குவாதம். சண்டை போட்டுப் பிரிந்துவிட்டனர். ஆகவே, வடிகட்டி வைத்திருந்தவன் தான் மட்டுமே அதைப் பயன்படுத்திக்கொண்டான். மற்றவனுக்குத் தரவில்லை. கேட்டுப்பார்த்தும் அவன் மறுத்துவிட்டான்.

இவனுக்கோ நா வறட்சி. நீர் அருந்தியே ஆகவேண்டும். எனவே, வேறு வழியின்றி, வடிகட்டாமலேயே நீரை அருந்திக் கொண்டு வந்தான். சில நாட்களில் அவர்கள் ஜேதவனத்தை அடைந்தனர்.

மடாலயத்தை அடைந்து ஆசிரியருக்கு உரிய மரியாதை செய்து வணங்கினர். அதன் பின்னர் பிக்குகளுக்கான ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பின்னர், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று புத்தர் வினவினார்.

‘ஆசானே, நாங்கள் கோசல நாட்டின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறோம்; அங்கிருந்து உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறோம்’ என்றனர் அவர்கள்.

‘நீங்கள் புறப்படும்போது இருந்ததைப் போலவே இப்போதும் நல்ல நண்பர்களாக வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தானே?’

நீர் வடிகட்டியின்றிப் பயணித்து வந்த சகோதரன் இப்படிக் கூறினான். ‘ஆசிரியரே, இவன் வரும் வழியில் என்னுடன் வாதம் செய்து பிரிந்து விட்டான். தன்னுடைய வடிகட்டியை எனக்குத் தர மறுத்துவிட்டான்.’

மற்றவன், ‘ஐயா, அவன் நீரை வடிகட்டாமலே, அப்படியே, அதில் இருக்கும் அனைத்து உயிரினங்களுடன் குடித்தான்.’

‘சகோதரனே, இவர் சொல்வது உண்மையா? தெரிந்தே நீங்கள், அதில் உள்ள உயிரினங்களுடன் நீரைக் குடித்தீர்களா?’

‘ஆமாம், வடிகட்டாமல் தான் நீரைக் குடித்தேன்.’

‘சகோதரா, முற்பிறவியில் ஒரு விவேகம் மிக்க, நல்லவர் யுத்தத்தில் தோற்றுப் பின்வாங்கி ஓடிய போதும், வனத்தின் மீது பறந்து சென்றபோது தேர்ச்சக்கரம் தட்டி ஒரு மரத்திலிருந்த பறவையின் கூட்டிலிருந்து கருடனின் குஞ்சுகள் கீழே விழுந்துவிட்டன. அலட்சியம் செய்யாமல் அந்த உயிர்களைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்ய அவன் துணிந்தான். தேரைத் திருப்பச் சொன்னார். எனினும் அவருக்கு வெற்றிதான் கிடைத்தது. இவ்வாறு சொல்லிய ததாகதர் அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

0

முற்காலத்தில் மகதத் தேசத்தில் ராஜகிருகத்தைத் தலைநகராக அரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். இப்போது சக்ராவாக (இந்திரன்) இருப்பவன் அவனது முற்பிறவியில் அந்த மகதத் தேசத்தின் மக்கலா என்ற குக்கிராமத்தில், போதிசத்துவராக அவதரித்து இருந்தான். பெயரிடும் நாளில் அவனுக்கு இளவரசன் மகா குமாரன் என்று பெயர் சூட்டப்பட்டது. அவன் வளர்ந்த பின்னர், மகா என்ற இளம் பிராமணராக மக்களால் அழைக்கப்பட்டான்.

அவனது பெற்றோர்கள் அவர்களுக்குச் சமமான அந்தஸ்துள்ள ஒரு குடும்பத்திலிருந்து அவனுக்கு மனைவியைத் தேர்ந்தெடுத்தனர்; அவனைச் சுற்றி மகன்களும் மகள்களும் உறவினர்களுமாக நல்ல குடும்பமாக அவர்கள் வாழ்ந்தனர். தாராள மனப்பான்மையிலும் பெருந்தன்மையிலும் அவன் சிறந்து விளங்கினான். பௌத்தத்தின் ஐந்து கட்டளைகளைப் பின்பற்றி வாழ்ந்தார்.

அந்தக் கிராமத்தில் முப்பது குடும்பங்கள் மட்டுமே இருந்தன. அந்த மனிதர்கள் ஒருநாள் கிராமத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டு கிராமத்து விவகாரங்களைப் பேசித் தீர்த்துக் கொண்டு இருந்தனர். ஓரிடத்தை நன்கு சுத்தம் செய்து, அந்த இடத்தில் சௌகரியமாகப் போதிசத்துவர் நின்றிருந்தார். வேறொரு நபர் எழுந்து வந்து அந்த இடத்தில் நின்றார். உடனே போதிசத்துவர் மற்றொரு இடத்தைச் சுத்தப்படுத்தி நின்றார். அந்த இடத்திற்கும் மற்றொரு மனிதர் வந்து நின்றதால், போதிசத்துவர் நகர்ந்து வேறொரு இடத்தைப் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இப்படியாக அங்குக் கூடியிருந்த மனிதர்கள் அனைவருக்கும் வசதியாக நிற்பதற்கு இடங்களை அவர் உருவாக்கித் தந்தார்.

போதிசத்துவர் ஒரு சமயத்தில் அந்தக் கிராமத்தின் முக்கியமான இடத்தில் நெடுஞ்சாலையில் கூடாரம் போன்ற தற்காலிகத் தங்குமிடம் ஒன்றை வழிப்போக்கர்களுக்காக அமைத்தார். அதில் உட்காருவதற்கு மரப்பெஞ்சுகளும் தண்ணீர்க் குடங்களும் வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதை இடித்துத் தள்ளிவிட்டு கட்டிடம் ஒன்றை அமைத்தார். இதைப்போன்ற செயல்களால், முன்மாதிரியாக இருந்த போதிசத்துவரால் அவர்கள் ஈர்க்கப்பட்டனர். தீயச் செயல்களைக் கைவிட்டனர்; போதிசத்துவருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். ஐந்து கட்டளைகளைப் பின்பற்றுவோராக அவரை ஒத்த எண்ணம் கொண்டவர்களாக முப்பதுபேரும் மாறினர்.

அவர்களுடன் இணைந்து போதிசத்துவர் நல்ல செயல்களைச் செய்தார். அனைவரும் அதிகாலையில் எழுந்துவிடுவார்கள். கையில் கத்திகளும் கோடாரிகளும் தடிகளுமாகப் புறப்பட்டு விடுவார்கள். கிராமத்தின் நெடுஞ்சாலையிலும் நான்கு சாலைகளிலும் அனைத்துக் கற்களையும் அகற்றுவார்கள்; தேர்கள் உருண்டு செல்லும்போது இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டித் தள்ளுவார்கள்; கரடுமுரடான இடங்களைச் சமப்படுத்தினார்கள்; வாய்க்கால்கள் அமைத்தார்கள்; குளங்கள் வெட்டினார்கள், அரங்கம் ஒன்றை அமைத்தார்கள்; பெருந்தன்மையும் தாராள மனப்பான்மையும் வெளிப்படுத்தினார்கள்; இந்த வகையில் அந்தக் கிராமத்தின் சபை பொதுவாக போதிசத்துவரின் போதனைகளைக் கடைப்பிடித்தது; ஐந்து கட்டளைகள் பின்பற்றப்படுவதை மேற்பார்வையிட்டது.

அந்தக் கிராமத்தின் தலைவன் இவர்களால் ஏராளமாகப் பணம் சம்பாதித்தவன்; இவர்களிடம் அபராதம் வசூலிப்பது, நிறைய மது விற்பது என்ற முறையில் அவன் அவர்களைச் சுரண்டிக் கொண்டிருந்தவன். இந்தப் பண வரவு குறைந்தவுடன் அவர்களைப் பழிவாங்க முயன்றான்; ‘இந்த மனிதர்கள் குடித்துவிட்டுச் சுற்றியபோது, கொலைகளும் வேறு பல வேலைகளும் செய்து கொண்டிருந்த போது, அவர்களுக்கு மது விற்றதால், அவர்கள் செலுத்திய அபராதத்தால், கட்டணங்களால் நிறையப் பணம் சம்பாதித்தேன். இப்போது இந்த இளைஞன் மகா அவர்களைத் திருத்திவிட்டான்; ஐந்து நெறிகளைக் கடைப்பிடிக்க வைப்பதில் முனைந்துள்ளான்; கொலைகளும் பிற குற்றங்களும் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்’ என்று கிராமத்தலைவன் நினைத்தான். கோபம் தலைக்கேறி இப்படிக் கத்தினான், ‘நான் அவர்களை அந்த ஐந்து கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் செய்வேன்!’

ஆகவே அரசரிடம் சென்று புகார் அளித்தான். அவர்கள் குறித்து மன்னரிடம் தவறான செய்திகளைச் சொன்னான். ‘அரசரே, ஒரு கொள்ளைக் கூட்டம் கிராமங்களைச் சூறையாடியும் வேறு பல வில்லத்தனமான வேலைகளையும் செய்து வருகிறது’ என்று கூறினான். அதைக் கேட்டதும் அரசன் கோபமுற்றான்; கிராமத்தலைவனிடம் உடனே புறப்பட்டுச் சென்று அவர்களைத் தன் முன்னே அழைத்து வரும்படி உத்தரவிட்டான்.

உடனே புறப்பட்டுச் சென்ற அந்த மனிதன், போதிசத்துவரையும் முப்பதுபேரையும் ராஜாவுக்கு முன்பாகக் கைதிகளாகக் கொண்டு வந்து நிறுத்தினான். இதோ அந்தப் பொல்லாதவர்கள் என்று கூறினான். அவர்கள் செய்த குற்றங்கள் என்னவென்று விசாரிக்காத மன்னன், அவர்கள் தலைகளை யானையைக் கொண்டு மிதித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான்.

உடனே யானை வரவழைக்கப்பட்டது; அந்தக் கிராமத்து ஆண்கள் வரிசையாக அரண்மனை முன்முற்றத்தில் படுக்க வைக்கப்பட்டனர். போதிசத்துவர் அவர்களிடம் இந்த உபதேசத்தைக் கூறினார்: ‘ஐந்து கட்டளைகளை மனத்தில் நிறுத்துங்கள்; உங்கள் மீது அவதூறு கூறியவனையும், அரசனையும், யானையையும் உங்களைப் போலவே நேசியுங்கள்’. அவர்களும் அப்படியே செய்தார்கள்.

மாவுத்தன் அவர்களை மிதித்துக் கொல்லும்படி யானைக்கு உத்தரவிட்டான். எனினும், அந்த யானை தரையில் படுத்திருந்தவர்கள் அருகிலேயே செல்லவில்லை; சப்தமாகப் பிளிறியபடி அங்கிருந்து தனது வசிப்பிடம் நோக்கி ஓடிவிட்டது. அதன் பின்னர் வேறு ஒரு யானை அழைத்து வரப்பட்டுப் பணிக்கப்பட்டது. அதுவும், அந்தச் செயலைச் செய்யவில்லை. அடுத்து ஒரு யானை, அடுத்து ஒரு யானை. அனைத்துமே அவர்களை நெருங்காமல் பிளிறிவிட்டு ஓடிப்போயின.

அந்த மனிதர்கள் யானை அவர்களிடம் நெருங்காமல் இருக்க ஏதாவது மருந்து வைத்திருக்கலாம் என்று சந்தேகித்த அரசன், அவர்களைச் சோதனையிட உத்தரவிட்டான். அதன்படி தேடுதல் நடந்தது; எதுவும் கிடைக்கவில்லை.

‘அப்படியானால், அவர்கள் ஏதாவது வசிய மந்திரம் உச்சரித்திருக்க வேண்டும்,’ என்றார் ராஜா. ‘அப்படி அவர்களுக்கு வசிய மந்திரம் ஏதாவது தெரியுமா என்று விசாரியுங்கள்’.

அவர்களிடம் அந்தக் கேள்வியைக் காவலர்கள் கேட்டனர். போதிசத்துவர் அதற்குப் பதிலளித்தார். ‘ஆமாம். எங்களுக்கு ஒரு வசிய மந்திரம் தெரியும்’.

இதை அவர்கள் அரசனிடம் சென்று கூறினர். அரசன் அவர்கள் அனைவரையும் தன்னிடம் அழைத்து வரச் சொன்னான்.

‘எங்கே, உங்கள் வசிய மந்திரம் என்னவென்று என்னிடம் கூறுங்கள்.’

போதிசத்துவர் இவ்வாறு பதிலளித்தார்: ‘அரசனே, இதுவே எங்கள் வசிய மந்திரம். இந்த முப்பதுபேரில் எவரும் மற்றவரின் வாழ்க்கையை அழிப்பதில்லை; கொடுக்காததை எடுத்துக் கொள்வதில்லை; தவறாக நடப்பதில்லை; பொய் சொல்வதில்லை; மதுபானம் அருந்துவதில்லை; எங்களிடம் அன்பும் இரக்கமும் பெருமளவு இருக்கின்றன; பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம்; நாங்கள் சாலைகளைச் சமன் செய்கிறோம்; குளங்கள் வெட்டுகிறோம்; பொது அரங்கு ஒன்றை அமைக்கிறோம். இதுவே எங்கள் மந்திரம், எங்களுக்கான பாதுகாப்பும் வலிமையும்.’

அவர்கள் கூறியதைக் கேட்டு அரசன் மகிழ்ந்தான்; அவர்களைப் பற்றி தன்னிடம் தவறாகக் கூறியவனைத் தண்டிக்கும் விதமாக அவனது செல்வம் அனைத்தையும் இவர்களுக்குச் சொந்தம் என்று அறிவித்தான்; கிராமத்தலைவனையும் அவர்களுடைய அடிமையாக்கினான்; மேலும் அவர்களது செயல்களுக்கு உதவ யானையையும் கிராமத்தையும் அளித்தான்.

அதன்பின்னர், அவர்கள் மனதுக்கு உகந்த பல நல்ல செயல்களைச் செய்தனர். பெரிய அரங்கம் ஒன்றை நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் கட்டுவதற்கு முனைந்தனர். மரத் தச்சன் ஒருவன் அந்தச் செயல்களில் ஈடுபட்டிருந்தான். பெண்கள் மீதான விருப்பங்கள் எதுவும் இல்லாதவர்களாக அவர்கள் இருந்தனர்; ஆகவே எந்த நல்ல காரியத்திலும் பெண்களைப் பங்கு கொள்ள அவர்கள் அனுமதிக்கவில்லை.

அந்த நாட்களில் போதிசத்துவரின் வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர்; அவர்களின் பெயர்கள் சுதம்மா (நற்குணம்) சித்தா (சிந்தனை), நந்தா (மகிழ்ச்சி), சுஜாதீ (உயர்பிறப்பு). இவர்களில் சுதம்மா ஒருநாள் அந்தத் தச்சனைத் தனியாகச் சந்தித்தாள். ‘சகோதரா, இந்த மண்டபம் கட்டுவதில் எனக்கும் முக்கிய பங்கு இருந்தது என்று கருதப்படும் வகையில் ஏதாவது செய்யுங்கள்’ என்று கூறி அவனுக்கு லஞ்சம் கொடுத்தாள்.

‘மிகவும் நல்லது,’ என்றார் அந்தத் தச்சன். அந்தக் கட்டிடத்தில் வேறு எந்த வேலையும் செய்து முடிப்பதற்கு முன்னதாகவே, கலசம் போன்ற கூரை முகட்டிற்காக நன்கு உலர்ந்த மரத்தைப் பயன்படுத்தி, வடிவமைத்து உருவாக்கிவிட்டார். எனினும் அதை வெளியில் எவரும் பார்க்கமுடியாத வகையில் துணியால் மூடி, கட்டி ஓரமாக வைத்துவிட்டார். அரங்கின் வேலை முழுவதுமாக முடிந்து, அந்த முகட்டைப் பொருத்தும் நேரம் வந்தது.

‘ஐயோ, என் எஜமானர்களே, நாம் ஒன்றைச் செய்ய மறந்துவிட்டோம்’ என்று அவர் சப்தமாக அவர்களிடம் கூறினார்.

‘என்ன அது?’

‘அரங்கின் முகட்டில் கலசம் ஒன்றைப் பொருத்த வேண்டுமே.’

‘சரி, அதை அமைத்துவிடுங்கள்.’

‘ஆனால் அதைப் பச்சை மரத்தில் வடிவமைக்க முடியாதே; சில காலத்திற்கு முன்பே வெட்டப்பட்டு, சீராக வடிவமைத்து, முறையாகத் துளையமைத்து, அமைக்கப்பட வேண்டும்.’

‘சரி, இப்போது என்ன செய்வது?’

‘மரத்தைத் தேட வேண்டும். இல்லை யாராவது அப்படி முன்னமே செய்து வீட்டில் வைத்திருக்கிறார்களா, அதை விலைக்குத் தருவார்களா என்று கேட்கலாம்.’

சரி முயலலாமென்று முடிவெடுத்து அவர்கள் ’தேடும்போது’ செய்து முடிக்கப்பட்ட கலசம் ஒன்று சுதம்மாவின் வீட்டில் இருப்பதைக் கண்டறிந்தனர். எனினும் அதைப் பணத்திற்கு வாங்க முடியவில்லை. அதற்கு அவள் தயாராக இல்லை.

‘அந்த அரங்கு உருவாக்கும் பணியில் என்னையும் ஒரு பங்களிப்பவராகச் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் இதை இலவசமாகத் தருகிறேன்.’

‘முடியாது’ என்பதே பதில் வந்தது. ‘நல்லவிதமாக நடக்கும் இந்த வேலையில் பெண்களும் பங்கேற்பதை அனுமதிக்கமாட்டோம்.’

அப்போது அந்தத் தச்சன் அவர்களைப் பார்த்துக் கூறினார். ‘எஜமானர்களே, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? பிரம்மாவின் லோகம் தவிர்த்து பெண்கள் ஒதுக்கப்பட்ட இடம் பிரபஞ்சத்தில் ஏதுமில்லை. இந்தக் கலசத்தை வாங்கிக் கொள்ளுங்கள். நமது அரங்கின் பணி முற்றிலும் நிறைவடைந்து விடும்.

தச்சன் கூறியதை ஏற்றுக் கொண்டு அந்தக் கலசத்தை அவர்கள் எடுத்துக் கொண்டனர். அதை நிறுவியதுடன் அரங்கின் பணி நிறைவடைந்தது. கூடத்தில் பெஞ்சுகள் போட்டனர்; உள்ளே குடி தண்ணீர் ஜாடிகள் வைக்கப்பட்டன. எந்நேரமும் வருபவர்களுக்கு அரிசிச் சோறு அளிக்கப்பட்டது. அந்த அரங்கைச் சுற்றி சுவர் எழுப்பினர். வாயிலும் அமைத்தனர். சுவருக்கும் அரங்கிற்கும் இடையில் இருந்த வெளியை மண் கொண்டு நிரப்பினர். வரிசையாக விசிறி-பனைகளை நட்டனர்.

சித்தாவும் தன் பங்கிற்கு அந்த இடத்தில் உல்லாசமாகப் பொழுதுபோக்க பூங்கா ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தாள். பூக்கும் மரங்களும் பழம் தரும் மரங்களும் அதில் நட்டு வளர்க்கப்பட்டன. நந்தா, அந்த அரங்கிற்கு அருகில் குளம் ஒன்றை வெட்டுவதற்கு ஏற்பாடு செய்தாள். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஐந்து விதமான தாமரைகள் அந்தக் குளத்தை அலங்கரித்தன. எனினும் சுஜாதீ எதையும் செய்யவில்லை.

போதிசத்துவர் வாழ்வில் ஏழு நன்னெறிகளைப் பின்பற்றி நடந்தார்: தாயைப் போற்றுதல், தந்தையை மதித்தல், மூத்தவர்களை மதித்தல், உண்மையைப் பேசுதல், கடும் பேச்சுகளைத் தவிர்த்தல், அவதூறுகளையும் கஞ்சத்தனத்தையும் தவிர்த்தல்.

‘பெற்றோரை ஆதரிப்பவர், மூத்தவர்களை மதிப்பவர், மென்மையானவர், நட்பாகப் பேசுபவர், அவதூறு பேசாதவர், பண்பாடு மிக்கவர், உண்மையானவர், கோபத்திற்கு அடிமை ஆகாமல் அதை அடக்கி ஆள்பவர் தேவலோகத்தில் நல்லவராகப் போற்றப்படுவார் என்றார் போதிசத்துவர்.

இத்தகையப் போற்றுதலுக்குரிய நிலையில் போதிசத்துவர் வாழ்ந்தார். வளர்ந்தார். வயது மூப்பில் இறந்தும் போனார். அடுத்தப் பிறவியில் விண்ணுலகத்தில் தேவர்களின் அரசன் சக்ராவாக (இந்திரன் என்கிறார்கள்) அவதரித்தார்; அவருடைய நண்பர்களும் அங்கு மறுபிறவி எடுத்திருந்தனர்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *