பௌத்தம் கூறும் பிரபஞ்சத்தில் – தேவலோகங்களில் ஒன்று அல்லது தேவதைகளின் உலகம் தவதிம்ச பவனம். முப்பத்து மூவரின் உலகம் (முப்பத்து மூன்று தேவர்களின் உலகம்) எனப்படுகிறது. இவர்களின் தலைவன் சக்ரா அதாவது இந்திரன், பௌத்தத்துக்கு முந்தைய நம்பிக்கை இது. இது போல் பல உலக அமைப்புகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்ரா உண்டு.
அப்போது அந்த நேரத்தில் தேவலோகத்தில் அசுரர்களும் வாழ்ந்து கொண்டிருந்தனர்; ஆனால், விண்ணுலகை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள போதிசத்துவருக்கு விருப்பமில்லை; ஆகவே ஒரு நாள் அந்த அசுரர்களை நன்கு மதுவருந்தும்படி செய்தார். மதுவின் மயக்கத்தில் இருக்கையில் அவர்களின் காலைப் பிடித்து இழுத்து அவருடைய உலகான மேரு மலையிலிருந்து, அந்த மலைக்குக் கீழிருக்கும் அசுரர்களின் உலகான மலையின் தாழ்வான பகுதியில் தள்ளிவிட்டார். அவர்களின் உலகமும் முப்பத்துமூவரின் உலகத்தின் அளவுக்குப் பெரிதானதே.
அந்த மலையின் சரிவுகளில் தேவர்களின் பவள மரம் போல் மரம் ஒன்று வளர்ந்திருக்கும். ஒரு யுகம் வரையிலும் அந்த மரம் உயிர்த்திருக்கும். போதை தெளிந்து எழுந்த அசுரர்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்று புரிந்தது. அந்த மரத்தின் மலர்கள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இது தேவலோகம் இல்லை. அங்குப் பவள மரங்கள் அல்லவா பூத்திருக்கும்!
ஆகவே அவர்கள் சினங்கொண்டு அலறினர். ‘சக்ரா நம்மைக் குடிக்கவைத்து மேரு மலைச் சரிவில் தள்ளிவிட்டான். நம் வசமிருந்த விண்ணுலகைக் கைப்பற்றிவிட்டான். வாருங்கள், யுத்தம் செய்து நமது உலகை மீண்டும் கைப்பற்றிவிடுவோம்.’ இவ்வாறு சொல்லியபடி படைகளுடன் அவர்கள் தூணின் மேல் ஏறும் எறும்புகள் போல் மேரு மலையின் சரிவில் ஏறத்தொடங்கினார்.
மயக்கம் தெளிந்து அசுரர்கள் விண்ணுலகம் நோக்கிப் படையுடன் வருகிறார்கள் என்ற எச்சரிக்கைச் செய்தியைக் கேட்டவுடன் சக்ரன், அவர்களுடன் போரிடுவதற்காக அந்த ஆழமான மலைச் சரிவுக்குச் சென்றார். எனினும், அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை; சண்டையில் மிகவும் மோசமான தோல்வி. 225 கோசம் நீளமுள்ள விஜயந்தா என்ற தேரில் ஏறி ஒவ்வொரு சிகரமாகத் தாவித் தாவித் தப்பித்து ஓடினார். (ஒரு கோசம் சுமார் இரண்டே கால் மைல்).
மலைச்சரிவுகளில் அவருடைய தேரோட்டி மாதலி சாமர்த்தியமாக வேகமாக விஜயந்தாவைச் செலுத்தினான். அந்தச் சரிவுகளில் இலவ மரங்களும் வேறு மரங்களும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. தேர் விரைந்து சென்ற பாதையில் இருந்த பெரும் மரங்களின் ஏராளமான பனை மரங்களின் மேல்பகுதி புல் வெட்டப்படுவதுபோல் வெட்டப்பட்டுச் சரிவுகளில் விழுந்தன. அந்த மரங்களில் பறவைகள் ஏராளமாகக் கூடுகளைக் கட்டியிருந்தன. கருடனின் குஞ்சுகள் இருந்த கூடு ஒன்று வெட்டப்பட்டு வீழ்ந்த மரமொன்றின் உச்சியில் இருந்தது.
கூடு குஞ்சுகளுடன் கீழே வேகமாக வீழ்ந்தபோது தாயின் அலறல் சத்தமாக ஒலித்தது. உடனே சக்ரா தேரோட்டி மாதலியிடம் வினவினார். ‘மாதலி, நண்பரே, அது என்ன சத்தம்? பறவைகளின் சத்தம்போல், இதயத்தைத் தைப்பதுபோல் பரிதாபமாக ஒலிக்கிறதே.’
‘ஐயா, உமது ரதத்தின் வேகத்தால் அவை வசித்த மரம் வேரோடு பிடுங்கப்பட்டு விழுந்துவிட்டது. கூடு விழுந்துவிட்டதால் அந்தக் குஞ்சுகளும் தாயும் அனைத்தும் பயத்தால் அலறும் அழுகைக் குரல் அது.’
உடனே அந்த மகான் ‘நண்பரே மாதலி என்னால் இப்படி எல்லோரும் சிரமப்பட வேண்டாம், தேவலோகத்தின் பொருட்டு பிறருடைய வாழ்க்கையை அழிக்கும் செயல் வேண்டாம். அதற்குப் பதிலாக என் உயிரை அசுரர்களிடம் பலி கொடுத்துவிடலாம். தேரைத் திருப்புங்கள்’ என்றார். இவ்வாறு கூறினார்:
இந்த வனத்தில் மரங்களின் உச்சியில் இருக்கும் கூடுகள்,
மாதலி, நமது தேர்ச்சக்கரத்தால் அடிபடாது இருக்கட்டும்!
பதிலாக, அசுரர்களிடம் நம் உயிரை
மகிழ்ச்சியுடன் கொடுக்கலாம்.
பாவம் பறவைகள் கூடுகளின்றி இறக்கவேண்டாம்.
அந்தச் சொற்களைக் கேட்டவுடன் தேரோட்டியான மாதலி, தேரைத் திருப்பினான்; வேறொரு வழியில் தேவலோகம் நோக்கி ரதத்தைச் செலுத்தினான். பின்வாங்கி ஓடிய சக்ராவின் தேர் திரும்பியதை அசுரர்கள் பார்த்தனர். அதைக் கண்ட கணத்தில், வேறு உலகங்களைச் சேர்ந்த சக்ரர்கள் அவருக்குத் துணையாக மேரு மலைக்கு வந்திருக்கிறார்கள் என்று அஞ்சினர். அவருக்குக் கிடைத்த உதவிதான் அவர் தேரைத் திருப்பியதற்குக் காரணம் என்று தோல்விக்கு அஞ்சிய அவர்கள் அனைவரும் திரும்பியோடினர். அசுரர்களின் உலகத்தை அடையும்வரை அவர்கள் நிற்கவில்லை.
தேவலோகத்தில் திரும்பவும் நுழைந்த சக்ரா அரண்மனையில் சென்று அமர்ந்தார். அவரது லோகத்தின் தேவர்களும், பிரம்மலோகத்தின் தேவதைகளும் அவரைச் சூழ்ந்து நின்றனர். அந்த நேரத்தில், பூமி பிளந்து அதிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கோசங்கள் உயரமும் நீளமும் கொண்ட ‘வெற்றி அரண்மனை’ எழுந்தது. வெற்றி பெற்ற தருணத்தில் எழுந்ததால் அதற்கு அவ்வாறு பெயர். அதன் பின்னர், அசுரர்கள் மீண்டும் படையெடுத்து வராமல் இருக்க அந்த வெற்றி அரண்மனைக்கு ஐந்து வாயில்கள் அமைத்து, பலத்த காவலையும் அமைத்தார் சக்ரா.
இரண்டு நகரங்களும் தாக்க முடியாதவை!
இடையில், ஐந்து மடங்கு காவல்!
நாகர்கள், கருடர்கள், கும்பந்தாக்கள், பூதங்கள்
மற்றும் நான்கு மாபெரும் மன்னர்கள்!
0
இவ்வாறு சக்ரா தேவர்களின் அரசனாக மகிமையுடன் தேவலோகப் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த ஐந்து வாயில்களில் இருந்த காவலால் அவர் பாதுகாப்புடன் இருந்தார்.
அந்த நேரத்தில், இறந்துபோன சுதம்மா சக்ராவின் பணிப்பெண்களில் ஒருத்தியாக மறுபிறப்பு எடுத்திருந்தார். கிராமத்தின் அரங்குக்குக் கலசம் ஒன்றை அவர் அன்பளிப்பாகக் கொடுத்ததால் இங்கு அவளுக்கு மாளிகை ஒன்று எழுந்தது. விண்ணுலகின் ரத்தினங்களும் முத்துக்களும் பதிக்கப்பட்ட அதன் பெயர் ‘சுதம்மா’. அறுநூறு கோசங்கள் உயரம் கொண்ட மாளிகையில் ராஜ அந்தஸ்துடன் அமைந்த வெள்ளைக் கூரை கொண்ட விதானத்தின் கீழ், மனிதர்களையும் தேவர்களையும் ஆளும் தேவர்களின் அரசன் சக்ரா அமர்ந்திருந்தார்.
சித்தாவும் இறந்துபோனாள்; சக்ராவின் பணிப்பெண்களில் ஒருத்தியாக அவள் மறுபடியும் பிறந்திருந்தாள். பூமியில் அவள் அமைத்த உல்லாசப் பூங்காவின் தாக்கத்தால், அதன் பலனாக இங்கும் ஓர் உல்லாசத் தோட்டம் எழுந்தது. அதன் பெயர் ‘சித்தாவின் படர்க்கொடி பூங்கா’. இறந்து போன நந்தாவும் சக்ராவின் பணிப்பெண்களில் ஒருத்தியாக மறுபடியும் பிறந்தார்; குளம் வெட்டி மக்களுக்கு அவள் செய்திருந்த சேவையின் காரணமாக இங்கும் ஓர் அழகிய குளம் ‘நந்தா’ என்ற பெயரில் உருவானது. எனினும் சுஜாதீ, எதுவும் செய்யாத காரணத்தால் வனமொன்றில் பெருங்குகை போன்ற இடத்தில் கொக்காகப் பிறந்திருந்தாள்.
சுஜாதீ எங்கிருக்கிறாள் என்று எந்த அறிகுறியும் தென்படவில்லையே. அவள் எங்கே மறுபிறவி எடுத்திருப்பாள் என்று சக்ரா யோசித்தார். அதன் பின்னர், அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார். அங்கு சென்று அவளைப் பார்த்தவர், தன்னுடன் விண்ணுலகத்துக்கும் அழைத்து வந்தார். தேவர்களின் மகிழ்ச்சியான நகரத்தை அவளுக்குச் சுற்றிக் காட்டினார். சுதம்மா மாளிகை, சித்தாவின் பூங்கா, நந்தாவின் பெருங்குளம் ஆகியவற்றைக் காண்பித்தார்.
‘இந்த மூவரும் அவர்கள் செய்த நற்செயல்களால் என்னுடைய பணிப்பெண்களாக மறுபிறவி எடுத்துள்ளனர். ஆனால் நீ எந்த நற்செயலும் செய்யாத காரணத்தால் விலங்கினத்தில் பிறந்துள்ளாய். இனிமேலாவது ஐந்து நெறிகளைப் பின்பற்றி நட’ என்று சொல்லி அவளுக்கு அவற்றை உபதேசமும் செய்தார்; அவளைத் திரும்பவும் அவளிருந்த இடத்தில் கொண்டு சேர்த்தார். அன்றிலிருந்து சுஜாதீ அந்த நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தாள்.
சில காலத்துக்குப் பின்னர், அவள் அந்த ஐந்து நெறிகளைச் சரியாகக் கடைப்பிடிக்கிறாளா என்பதை அறிந்துகொள்ள அங்கு சென்றார். அவள் நின்றிருந்த இடத்தில் ஒரு மீனைப்போல் கிடந்தார். மீன் இறந்துகிடக்கிறது என்று அந்தக் கொக்கு அதன் தலையைக் கவ்வியது. ஆனால், கொக்கு வால் பகுதியை ஆட்டியது. ‘ஆகா, உயிரோடிருக்கிறதே’ என்று கொக்கு மீனைப் போட்டுவிட்டது. ‘நல்லது. நெறிகளைச் சரியாகக் கடைப்பிடிக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு சக்ரா விண்ணுலகம் சென்றார்.
கொக்காகப் பிறந்திருந்த சுஜாதீ இறந்த பின்னர் வாராணசியில் குயவன் குடும்பம் ஒன்றில் மீண்டும் பிறந்தார். அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த சக்ரா, வயதான மனிதனாக மாறுவேடமிட்டு, திடமான தங்கத்தில் செய்த வெள்ளரிகளை வண்டியில் நிரப்பிக் கொண்டு கிராமத்தின் நடுவில் அமர்ந்து, ‘வெள்ளரி வாங்குங்கள்! வெள்ளரிகள் வாங்குங்கள்!’ என்று கூவிக்கொண்டிருந்தார். மக்கள் அவரிடம் வந்து விலை கேட்டார்கள்.
‘நன்னெறிகளைக் கடைப்பிடிப்பவர்க்கு மட்டுமே இவற்றை விற்பேன்.’நீங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கிறீர்களா?’ என்று சொன்னார்.
‘நன்னெறிகளா? அப்படி என்றால் என்ன? இந்த வெள்ளரிகளை எங்களுக்கு விற்கிறாயா?’
‘இல்லை; இந்த வெள்ளரிகளைப் பணத்துக்கு விற்கவில்லை. அது முக்கியமில்லை. எனக்குப் பணம் வேண்டாம். நன்னெறிகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இலவசமாகத் தருகிறேன்’.
‘யார் இந்த முட்டாள்?’ என்று சொல்லிக்கொண்டே மக்கள் திரும்பிச் சென்றனர்.
இதைக் கேள்விப்பட்ட சுஜாதீ, அந்த மனிதன் தனக்காகத்தான் வெள்ளரிகள் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று எண்ணினாள். அந்த மனிதனிடம் சென்று வெள்ளரிகள் கேட்டாள்.
‘நீங்கள் நன்னெறிகளைக் கடைப்பிடிக்கிறீர்களா, அம்மணி?’
‘ஆமாம், அவ்வாறு செய்கிறேன்.’
‘உனக்காகத்தான் இவற்றைக் கொண்டு வந்தேன்’ என்று சொல்லிவிட்டு வெள்ளரிகளையும், வண்டியையும் அங்கேயே அவள் வீட்டு வாசலில் விட்டுவிட்டு சக்ரா சென்றுவிட்டார்.
வாழ்நாள் முழுவதும் நன்னெறிகளைக் கடைப்பிடித்த சுஜாதீ, இறப்புக்குப் பிறகு, அசுர மன்னன் வேப்பசிட்டியின் மகளாகப் பிறந்தாள். அவள் நற்குணம் மிக்கவளாக இருந்தாள் என்பதால் இப்பிறவியில் பெரும் அழகைப் பரிசாகப் பெற்றாள். அவள் உரிய வயதை அடைந்ததும், தனது மகளுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்க அசுர மன்னர்களை ஒன்று கூட்டினார் வேப்பசிட்டி. இந்த நிலையில் அவள் இருக்கும் இடத்தைத் தேடிக்கண்டுபிடித்த சக்ரா, அசுர உருவம் எடுத்துக் கீழிறங்கி வந்தார். ‘சுஜாதீ அவள் மனத்தில் தோன்றியபடி கணவனைத் தேர்ந்தெடுத்தால், நான்தான் அவன்’ என்று சொல்லிக் கொண்டார்.
சுஜாதீ அலங்கரிக்கப்பட்டு சேடிகள் புடை சூழ அசுர மன்னர்கள் கூடியிருக்கும் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டாள். அவள் இதயம் விரும்பும் கணவரைத் தேர்ந்தெடுக்கும்படி பணிக்கப்பட்டாள். சுற்றும் முற்றும் நன்கு பார்த்த சுஜாதீ சக்ரா அங்கு இருப்பதைப் பார்த்தாள். கடந்த பிறவியில் அவள் சக்ரா மீது கொண்டிருந்த அன்பு நினைவுக்கு வந்து நெகிழ்ந்தவள், அவரைத் தனது கணவனாகத் தேர்வு செய்தாள்.
சக்ரா அவளைத் தேவர்களின் நகரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருநூற்றைம்பது லட்சம் நடனப் பெண்களுக்குத் தலைவியாக்கினார். ஆயுட்காலம் முடிவடைந்தவுடன், செய்த செயல்களுக்கு ஏற்ற நிலையை அடைந்தார்.
0
ததாகதரின் பாடமும் உபதேசமும் முடிந்தது. பெரும் மகான் அந்தத் துறவியை இந்தச் சொற்களைச் சொல்லி கடிந்துகொண்டார். ‘பிக்குவே, இவ்வாறுதான் கடந்த பிறவியில் தேவர்களின் ஆட்சியாளனாக இருந்தபோதும் விவேகம் நிறைந்த நல்லவர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தாலும் பரவாயில்லை என்று படுகொலை செய்தவர் என்ற குற்றம் சுமத்தப்படாமல் இருப்பதைத் தவிர்த்தனர். ஆகவே ஒரு கொள்கையைக் காப்பாற்றுவதற்கு உங்களை அர்ப்பணித்திருக்கும் நீங்கள் அனைத்து உயிரினங்களும் வாழும் நீரை வடிகட்டாமல் குடிக்கலாமா?’
அதன்பின்னர், கௌதமர் ‘தேரோட்டி மாதலியாக ஆனந்தனும், சக்ராவாக நானும் பிறந்திருந்தோம்’ என்றும் சொல்லி முடித்தார்.
(தொடரும்)