Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 36வது கதை)

முன்னொரு காலத்தில் புத்தர் ஜேத வனத்தில் இருந்த மடாலயத்தில் தங்கியிருந்தார். இளைஞர் ஒருவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அடிப்படை விஷயங்களை எடுத்துரைத்து உபதேசம் செய்தார் புத்தர். அதன் பின்னர் அந்த இளைஞர் தியானம் செய்யவும் பற்றுகளில் இருந்து விடுபடவும் அவருடைய மனதை ஒருமுகப்படுத்த தியானக் கரு ஒன்றையும் அவரிடம் கூறினார்.

அந்த பிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோசல தேசத்தின் எல்லை அருகிலிருந்த வனப்பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த கிராமம் ஒன்றில் குடில் அமைத்துத் தங்கினார்; பௌத்த சங்கத்தின் பணிகளைச் செய்து வந்தார். ஒரு மாதம்கூடக் கழிந்திருக்காது; பிக்குவின் குடில் ஏதோ காரணத்தால் தீப்பற்றி எரிந்து முற்றிலும் அழிந்துவிட்டது. அதனால், பிக்கு அருகிலேயே தற்காலிகமாகக் கூடாரம் ஒன்றை அமைத்துக்கொண்டார். எனினும், குளிரும் மழையும் வெயிலும் கூடாரத்துணியைக் கடந்து அவரைத் தாக்கின. தனக்கு அந்தக் கூடாரம் அசௌகரியமாக இருக்கிறது; சங்கப் பணிகளை ஆற்ற முடியவில்லை என்று கிராமத்து மக்களிடம் சொல்லி, உதவி கேட்டார்.

இவர் மேல் பரிதாபம் கொண்ட கிராமத்து மக்கள் அவருக்கு ஒரு குடிலை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். எனினும், உடனடியாகச் செய்ய இயலாது; சற்று காத்திருங்கள். பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. அறுத்துத் தானியங்களைக் கொண்டு சேர்த்ததும், குடிசை அமைத்துத் தருகிறோம் என்று பிக்குவிடம் கூறினர். சரி என்று பிக்குவும் காத்திருந்தார்.

தானியங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. பிக்குவைச் சந்தித்த அவர்கள், பருவம் தப்பிவிட்டால் பயிர் விளையாது. ஆகவே அடுத்த பருவத்துக்காக உழுது, விதைத்து முடிந்ததும் குடிசையைக் கட்டி முடித்துவிடலாம் என்றனர். பிக்குவுக்கு அது நியாயமாகப்பட்டது. காத்திருந்தார். நடவு முடிந்ததும் வயல்களைச் சுற்றி வேலி அமைக்கும் வேலை நடந்தது; அடுத்து நீர்ப்பாய்ச்சும் காரியங்களில் ஈடுபட்டனர். முறையாக உரிய நேரத்தில் பயிர்களுக்கு நீர் கிடைக்கவில்லை என்றால் அவை வாடி இறந்துவிடும் என்றனர் கிராமத்தினர். அது முடியட்டும் என்றனர். பிக்குவும் காத்திருந்தார்.

அடுத்தது, களையெடுப்பு. பயிர்கள் நன்கு வளர்ந்து செழித்து முற்றின. அறுவடை செய்ய வேண்டிய பருவமும் வந்துவிட்டது. அறுவடையை முடித்துவிட்டு குடிசை அமைக்கிறோம் என்றனர். அறுவடை முடிந்து, கதிரடிப்பும் முடிந்தது.

இப்படியாக ஒரு வேலையைத் தொடர்ந்து மற்றொரு வேலை என்பதாக மூன்று மாதங்கள் கடந்து சென்றுவிட்டன. அந்தப் பிக்குவுக்குச் சரியான தங்குமிடம் இல்லை. வசதியற்ற கூடாரத்தில் தங்கி, குளிரிலும் மழையிலும் வெயிலிலும் வதைபட்டார். புத்தர் அவரிடம் சொன்ன தியானப் பொருளின் அடிப்படையில் சிந்திக்கவோ சிந்தனையையும் மனதையும் ஒருமுகப்படுத்தவோ அவரால் இயலவில்லை. அடிப்படை வசதிகளுக்கே அவர் போராட வேண்டியிருந்தது. தியானத்தில் அவரால் துளியும் முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. மீண்டும் பேராசானைச் சென்று சந்திப்பதே ஒரே வழி என்று முடிவு செய்தார்.

எனவே மழைப்பருவம் முடிந்ததை அறிவித்துக் கொண்டாடும் பவார்னா விழா முடிந்ததும் புத்தரைப் பார்ப்பதற்கு ஜேத வனம் புறப்பட்டார். மடாலயத்தை அடைந்து உள்ளே சென்றார். தம்ம அரங்கில் வீற்றிருந்த புத்தரின் அருகில் சென்று முறையாக வணக்கம் செய்து முகமன் கூறினார். ஓரமாக அமர்ந்து கொண்டார்.
கௌதமர் அவரைப் பார்த்தார். ‘பிக்குவே, வருக. மழைக் காலத்தை மகிழ்ச்சியுடன் கழித்தீர்களா? தியானத்துக்கும் சிந்தனைக்கும் நான் உங்களுக்கு அளித்த கருப்பொருளின் அடிப்படையில் ஒருமுகப்பட்டு உங்களால் வெற்றிகரமாக உலகப் பற்றிலிருந்து விடுபட முடிந்ததா?’

பிக்கு, ‘இல்லை ஆசானே’ என்று கூறி கோசல எல்லை வனப்பகுதியில் நடந்தது அனைத்தையும் கூறினார். முறையான தங்குமிடம் வாய்க்கப் பெறவில்லை என்பதால் தியானத்தை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை என்று ததாகதருக்கு பதிலுரைத்தார்.

புத்தர், ‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள். பருவம், காலம் அறிந்து உங்களுடைய செயல்களைத் திட்டமிட வேண்டாமா? முற்காலத்தில் விலங்குகளும், அவற்றுக்கு எவை ஏற்புடையன, எவை தகாது என்பதை அறிந்திருந்தன. உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று?’

இவ்வாறு சொல்லி, முற்காலத்துக் கதையையும் சொல்லத் தொடங்கினார்.

0

பிரம்ம தத்தன் அப்போது வாராணசியை ஆண்டு கொண்டிருந்தார். போதிசத்துவர் ஒரு பறவையாகப் பிறந்திருந்தார். பெருங்கிளைகள் அடர்ந்து வளர்ந்திருந்த மிகப் பெரிய மரமொன்றில் இருந்த கூட்டில் வசித்தார். பறவைக் கூட்டங்களுக்குத் தலைமையாக இருந்து வழிநடத்தவும் செய்தார்.

ஒரு நாள் பெருங்காற்று அடித்தது. மரங்கள் வேகமாக அசைந்தன. மரத்தின் கிளைகளும் பயங்கரமாக ஆடி அசைந்தன. போதிசத்துவர் வசித்த மரத்தின் கிளைகள் மிக நெருக்கமாக இருந்தன. அடித்த காற்றின் வேகத்தில் கிளைகளும் உரசிக் கொண்டன. சில காய்ந்த கிளைகள் உரசிக் கொண்டதில் அவற்றின் பட்டைகள் உதிர்ந்தன. விரைவில், உரசிய இடத்தில் புகை உருவாகத் தொடங்கியது.

இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த போதிசத்துவர் இவ்வாறு யோசித்தார். ‘இவ்வாறு இரண்டு காய்ந்த கிளைகள் தொடர்ந்து உரசிக்கொண்டிருந்தால், அவை நிச்சயம் நெருப்பை உண்டாக்கும்; அந்தக் கிளையிலிருந்து நெருப்புத்துளிகள் கீழே விழக்கூடும். மரத்தின் அடியில் குவிந்து கிடக்கும் காய்ந்த இலைகளில் விழுந்தால் உடனே சருகுகள் தீப்பற்றிக் கொள்ளும். வனத்தில் பரவத் தொடங்கும். தீ இந்த மரத்தையும் விட்டுவிடாது. மரமும் மரத்திலிருக்கும் கூடுகளும் பற்றி எரியும். பறவைகளும் பறவைக் குஞ்சுகளும் இறந்துவிடுமே’.

நாம் இனியும் இங்கு வசிக்க முடியாது. வசிப்பதற்கு ஏற்ற இடமில்லை இது. வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து கூடுகட்டிக் கொள்வதே சரி என்ற எண்ணத்தில் பறவைக் கூட்டத்தின் மத்தியில் இவ்வாறு உரைத்தார்:
இந்த மரத்தை நம்பியிருக்கும் பறவைகளே,

எச்சரிக்கையாக இருங்கள்,
நெருப்பு உண்டாகிறது.
பறவைகளே, வேறிடம் நாடுங்கள்,
நம் தங்குமிடத்துக்கு ஆபத்து.

புத்திசாலித்தனம் நிறைந்த பறவைகள் போதிசத்துவர் கூறிய அறிவுரைகளை ஏற்றுக்கொண்டன; உடனே தத்தம் கூடுகளிலிருந்து வெளியேறிப் பறந்தன; போதிசத்துவரின் துணையுடன் வேறு இடம் அடைந்து பாதுகாப்பாகக் கூடுகளைக் கட்டிக்கொண்டு வசித்தன. ஆனால், அறிவிலிகளான சில பறவைகள், போதிசத்துவரைப் பிடிக்காத பறவைகள் அந்த முடிவை விமர்சனம் செய்தன: ‘எப்போதும் இவர் இப்படித்தான்; ஒரு சொட்டு தண்ணீரில் முதலைகளைப் பார்ப்பவர்; புதிய இடத்தை நாம் கண்டறிவதும், அங்கு நமக்கான கூடுகளைக் கட்டுவதும் எவ்வளவு சிரமமானது.’ இவ்வாறு சொல்லிய அவை போதிசத்துவரின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்காமல் அந்த மரத்திலேயே தங்கியிருக்க முடிவு செய்தன.

போதிசத்துவர் அனுமானித்தபடி, மிகக் குறுகிய நேரத்தில் காற்று அடித்தது. மரங்களும் கிளைகளும் வேகமாக அசைந்தன. பறவைகள் முன்னர் தங்கியிருந்த மரத்திலும் தீப்பொறிகள் வெடித்தன. மரத்திலும் தீப்பிடித்துக் கொண்டது. புகையும் தீப்பிழம்புகளும் அடர்த்தியாக எழுந்தபோது அந்தப் புகையில் பறவைகளால் பார்க்க இயலவில்லை. அங்கிருந்து தப்பிக்கவும் இயலவில்லை; ஒவ்வொரு பறவையாகக் கீழே விழுந்து தீயில் கருகி அழிந்து போவதை போதிசத்துவர் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

0

‘பிக்குகளே, முற்காலத்தில் பறவைகள் போன்ற மரங்களின் உச்சியில் வாழும் உயிரினங்களும் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொண்டிருந்தன; தலைமைப் பறவை கொடுத்த எச்சரிக்கையைக் கேட்டு நடந்த பறவைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மற்றவை அழிந்தன. பிக்குவாக உபதேசம் பெற்றிருக்கும் உங்களுக்கு இந்தக் குறைந்தபட்ச அறிவும் யோசனையும் எப்படி வராமல் போயிற்று?’ என்ற கேள்வியுடன் புத்தர் பாடத்தையும் உபதேசத்தையும் முடித்தார்.

அத்துடன் யார் யார் எப்படிப் பிறந்திருந்தனர் என்பதையும் ததாகதர் சுட்டிக்காட்டினார்: ‘போதிசத்துவரின் சொற்களைக் கேட்டு ஆபத்திலிருந்து தப்பித்த பறவைகள், இப்போது என்னுடைய சீடர்களாக இருக்கின்றனர். அப்போது நான் விவேகம் நிறைந்த நல்ல பறவையாகப் பிறந்திருந்தேன்.’

தொடர்ந்து சத்திய நெறிகளையும் அவர் போதித்தார். புத்தரைப் பார்த்து அறிவுரை பெறவந்திருந்த அந்த பிக்கு அதைக் கேட்டுத் தெளிவடைந்து சங்கத்தின் முதல் நிலையை வெற்றிகரமாகக் கடந்தார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *