(தொகுப்பிலிருக்கும் 37வது கதை)
‘மூத்தோரை மதியுங்கள்’
அனந்தபிண்டிகர் மடாலயம் ஒன்றைக் கட்டி முடித்திருந்தார்; பணி முடிந்துவிட்டதைத் ததாகருக்குச் செய்தியாக அனுப்பி மடத்துக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார். புத்தர் ராஜகிருகத்தை விட்டுப் புறப்பட்டு வைசாலி நகருக்கு வந்து சேர்ந்தார். இரவு நேரம். மீண்டும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் சீடர்களுடன் அந்த நகரில் ஓய்வெடுக்கத் தங்கினார்.
தங்குமிடம் எதுவென்று தெரிந்ததும் சில சீடர்கள் அந்த இடம் நோக்கி விரைந்தனர். முன்னதாகச் சென்று தூங்குவதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து, ஆக்கிரமித்துக் கொண்டனர். அவர்களில் பிரச்னைக்குரிய ‘அறுவர்’ என்றழைக்கப்படும் பிக்குகளும் உண்டு. சங்கத்தின் மூத்தவர்கள் உரிய இடத்தில் தம்மை இருத்திக்கொள்ளும்முன், ஏறத்தாழ அனைத்து இடங்களையும் பிடித்துக் கொண்டனர்.
அறைகளை அவர்களுக்குள்ளேயே மேனிலையில் உள்ளவர்களுக்கும் தமக்கும் என்று பிரித்துக்கொண்டனர். சற்றுத் தாமதமாக வந்த மூத்தவர்கள் சிலருக்குப் படுக்கும் அறைகள் கிடைக்கவில்லை. படுக்குமிடம் கிடைக்காமல் இரவு முழுவதும் அவர்கள் சிரமப்பட்டனர். அவருடைய சீடர்கள் நன்கு முயன்று பார்த்தும் தலைமைச் சீடரான சாரிபுத்தருக்கும் படுக்குமிடம் கிடைக்கவில்லை. அதனால், தலைமைச் சீடரான சாரிபுத்தர் கௌதமர் இரவு தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த அறைக்கு வெளியில் மரத்தடியில் துணியை விரித்து அமர்ந்தும், இரவு முழுவதும் முன்னும் பின்னும் நடந்து உலவியபடியும், மரத்தடியிலேயே தூங்கியும் இரவுப் பொழுதைக் கழித்தார்.
விடிந்ததும் புத்தர் அறையிலிருந்து கனைத்துக் கொண்டே வெளியில் வந்தார். அவருக்கு பதில் அளிப்பதுபோல் மூத்த பிக்குவான சாரிபுத்தரும் மெதுவாகக் கனைத்தார்.
‘யார் அது?’ என்று வினவினார் புத்தர்.
‘நான் தான், சாரிபுத்தன் குருவே’.
‘சாரிபுத்தா, இந்த நேரத்தில் நீ இங்கு என்ன செய்கிறாய்?’
அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக இரவு நடந்ததைக் கௌதமருக்குச் சாரிபுத்தர் விளக்கியுரைத்தார். அப்போது புத்தர் இவ்வாறு நினைத்துக் கொண்டார்: ‘நான் உயிருடன் இருக்கும்போதே, துறவிகள் மத்தியில் மூத்தவர்களை மதிப்பதும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் பண்பும் இல்லாமல் போய்விட்டது; எனில், எனது இறப்புக்குப் பின்னர் இவர்கள் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள்?’
இந்த எண்ணம் தம்மம் குறித்த கவலையாக அவர் மனத்தில் நிரம்பியது. உரிய நாளில் பிக்குகள் அனைவரையும் அவர் தம்ம அரங்கில் கூட்டினார். ‘பிக்குகளே, அந்த அறுவரின் சொல் கேட்பவர்கள் முன்னதாகவே மடத்துக்கு வந்து, சங்கத்தின் மூத்த பிக்குகளை மதிக்காமல், அவர்களை புதிய பிக்குகளுடன் தங்கவைத்தது மட்டுமின்றி அன்று இரவு அவர்கள் தூங்குவதற்கு வசதியற்ற நிலையையும் உண்டாக்கினார்கள் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா?’ என்று சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.
‘அப்படித்தான் நடந்தது, நல்வாய்ப்பு பெற்றவரே’ என்ற பதில் வந்தது.
அதன்பின்னர் புத்தர், அந்த அறுவரைப் பின்பற்றும் துறவிளைக் கண்டித்தார்; அனைவருக்கும் பாடம் என்பதுபோல் சீடர்கள் மத்தியில் நன்னெறிகள் குறித்த சொற்பொழிவும் ஆற்றினார். உபதேசம் அளித்தார்.
‘சீடர்களே, சிறந்த தங்குமிடம், சிறந்த தண்ணீர், சிறந்த அரிசியில் சமைத்த உணவு பெறுவதற்கு யார் மிகவும் தகுதியானவர் என்று சொல்லுங்கள்?’
‘துறவி ஆவதற்கு முன்பு உயர் குலத்தில் பிறந்த ஒரு பிரபுவுக்கு அந்தத் தகுதி இருக்கிறது’ என்று சிலர் பதிலளித்தனர்.
வேறு சிலர், ‘இதற்கு முன்பு தொடக்கத்தில் பிராமணனாக இருந்தவருக்கு, அல்லது உயர் லட்சியங்கள் கொண்ட மனிதருக்கு’ என்று கூறினர்.
அதிகமானவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘நம் சங்கத்தின் கட்டுப்பாடுகளை முறையாக நன்கு அறிந்தவர், தம்மத்தை விளக்கிப் பொருள் கூறக்கூடிய மனிதர், சங்கத்தில் முழுமையாகத் தன்னை இணைத்துக்கொள்ளும் வகையில் முதல் நிலை தொடங்கி நான்காவது நிலைவரை தேர்ச்சி பெற்றவர்.’
வேறு சிலரோ, ‘முதல் நிலை தொடங்கி நான்காவது நிலை வரையிலும் தேர்ச்சி பெற்ற மனிதர்கள் அல்லது அருகர்கள் அல்லது மூன்று வகை புரிதல்களையும் அறிந்தவர்கள் அல்லது ஆறுவகை அறிவில் தேர்ச்சி பெற்றவர்கள்’ என்று கூறினர்.
இவ்வாறு தங்குமிடம் போன்ற சில சலுகைகளை முன்னுரிமையாகப் பெறுவதற்கு யார் தகுதியானவர்கள் என்று பலரும் தம் கருத்துகளை வெளிப்படுத்திய பின்னர் புத்தர் இவ்வாறு கூறினார்:
‘நான் கற்பிக்கும் இந்த நெறியில் தங்குமிடம் போன்ற விஷயங்களில் முன்னுரிமை யாருக்கு அளிப்பது என்பது, அவர் உயர்குலத்தில் பிறந்தவராக இருத்தல், பிராமணனாக இருத்தல், சங்கத்தில் இணைவதற்கு முன்பு அவர் செல்வந்தராக இருந்திருத்தல் ஆகிய தகுதிகளை வைத்து முடிவெடுக்கப்படாது. சங்க அமைப்பின் கட்டுப்பாடுகளை அறிந்திருக்கவேண்டும், அல்லது சுட்டங்களையும் அல்லது அபிதம்ம புத்தகங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் தகுதிநிலையாகக் கூறமுடியாது. அருக நிலை அடைவதற்கான நான்குவிதமான நிலைகளில் ஏதோ ஒன்றை அடைவதோ மீட்புக்கான நான்கு பாதைகளில் எதையாவது ஒன்றைப் பின்பற்றி நடப்பதுகூட நிச்சயம் போதாது.
‘பிக்குகளே, நான் போதிக்கும் இந்த நன்னெறி சார்ந்த சமயத்தில், அந்தத் தகுதி, அமைப்பில் சேர்ந்து இயங்கும் மூத்தவருக்கே உரியது. சொல்லிலும் செயலிலும், வணக்கம் செலுத்துவதிலும், அவருக்கான பணிவிடைகள் அனைத்திலும் முறையான மரியாதையை மூத்தவர்க்கு அளிக்கவேண்டும். மூத்தவர்கள் சிறந்த தங்குமிடத்தையும், சிறந்த உணவையும் அனுபவிக்க வேண்டும், இதுதான் உண்மையான தரநிலை; மூத்த பிக்குகளே இவற்றைப் பெற முன்னுரிமை பெற்றவர்கள்.
‘பிக்குகளே, இதோ சாரிபுத்தர்; என்னுடைய தலைமைச் சீடர்; தம்மத்தின் சக்கரம் சுழல்வதற்கான பணிகளைச் செய்து வருபவர்; எனக்கு அடுத்து, முறையான தங்குமிடத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர், சாரிபுத்தரே. தங்குமிடம் இல்லாமல் நேற்று இரவை அதோ அந்த மரத்தின் அடியில் படுத்துக் கழித்திருக்கிறார்! இப்போதே, உங்களுடைய மரியாதையான நடத்தைகளும் கீழ்ப்படிதலும் இப்படி இருக்குமெனில், காலம் செல்லச் செல்ல உங்களுடைய நடத்தை எப்படி இருக்குமோ என்று கவலையுறுகிறேன்.’
என்று அறிவுறுத்திய கௌதமர், மேலும் சில விஷயங்களையும் கூறினார்:
‘துறவிகளே! கடந்த காலங்களில் விலங்குகள்கூட, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தியும் கீழ்ப்படிந்தும் அல்லது அவர்களுடைய பொதுவான வாழ்க்கை முறையை ஒழுங்கமைத்து கட்டுப்பாட்டுடன் வாழ்வதுதான் சரியானது என்ற முடிவுடன் இருந்தன; அந்த விலங்குகளும் தமக்குள் யார் மூத்தவர் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னர் அந்த மூத்தவருக்கு எல்லா வகையான மரியாதையும் காட்டுவதென முடிவு செய்தன. அப்படியே நடந்து கொண்டன. சொர்க்கத்துக்கு நெருக்கமான வாழ்க்கையை வாழ்ந்து இயற்கை எய்தின.’
இவ்வாறு எடுத்துரைத்த ததாகதர் கடந்தகாலக் கதையையும் சீடர்களுக்குக் கூறினார்.
0
முற்காலத்தில், இமயமலைச் சரிவில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அருகில், நெருங்கிய நண்பர்கள் மூவர் வசித்து வந்தனர்: ஒரு கௌதாரி, ஒரு குரங்கு, ஒரு யானை. நண்பர்கள் எனினும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல், யார் சொல்லை யார் கேட்டுக் கீழ்ப்படிதல் போன்றவை தெரியாமல் இருந்தன. பொதுவான வாழ்க்கை முறையையும் அவை ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லை. ஒரு நேரத்தில், இத்தகைய வாழ்க்கை சரிதானா? முழுமையான வாழ்க்கையாக இது தோன்றவில்லை என்று நினைத்தன.
தமக்குள் எவர் மூத்தவர் என்பதைக் கண்டறிய வேண்டும். அவருக்குக் கௌரவம் அளிக்கவேண்டும் என்ற எண்ணமும் அவற்றிடம் எழுந்தது. எவர் மூத்தவராக இருக்க முடியும் என்று அவை யோசித்துக்கொண்டு இருந்தன; ஒரு நாள் அந்த மூன்று பேரும் – கௌதாரியும், குரங்கும், யானையும் அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது அவற்றுக்கு ஒரு யோசனை உதித்தது. பறவையான கௌதாரியும் குரங்கும் யானையைப் பார்த்துக் கேட்டன: ‘நண்பரே யானையே! நீங்கள் முதன்முதலாக இந்த ஆலமரத்தை எப்போது பார்த்தீர்கள்? அப்போது இந்த மரம் எவ்வளவு பெரியதாக இருந்தது என்பது நினைவிருக்கிறதா?’ என்று கேட்டன.
யானை சொன்னது: ‘என்னுடைய இளம் பருவத்தில் இந்த ஆலமரம் வெறும் புதர்ச் செடிபோல் இருந்தது, சில நேரங்களில் அதன் மேல் நடந்திருக்கிறேன். மரத்தின் உச்சியிலிருக்கும் கொழுந்திலைகளையும் பறித்துச் சாப்பிட்டிருக்கிறேன். அதன் அருகில் நிற்கும்போது, உச்சிக் கிளைகள் என் வயிற்றை உரசுவதுபோல் இருக்கும். அப்படியாக இந்த மரத்தைச் சிறிய செடியாக இருந்ததிலிருந்தே எனக்குத் தெரியும்.’
இப்போது குரங்கிடம் நண்பர்கள் இருவரும் அதே கேள்வியைக் கேட்டனர்; குரங்கார் இவ்வாறு பதிலளித்தார், ‘நண்பர்களே, என்னுடைய சிறுவயதில் இந்த மரத்தின் அருகில் அமர்ந்திருப்பேன். அப்படியே என்னுடைய கழுத்தைச் சற்றே நீட்டி, இந்த ஆலமரத்தின் மேல் இலைகளையும் என்னால் உண்ண முடிந்தது. இந்த ஆலமரம் மிகச் சிறியதாக இருக்கும்போதே எனக்குத் தெரியும்’.
பிறகு கௌதாரியிடம் அதே கேள்வியை மற்ற இருவரும் கேட்டார்கள்; ‘நண்பர்களே, இங்கு இதே இடத்தில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது; அதன் பழத்தைச் சாப்பிட்டு விதைகளை இங்குப் போட்டிருக்கிறேன். அந்த விதைகளில் இருந்துதான் இந்த மரம் தோன்றியிருக்கிறது. எனவே, இந்த மரம் முளைத்து வளர்வதற்கு முன்பே எனக்கு இந்த மரம் குறித்த அறிவு இருக்கிறது. எனவே, நான் உங்கள் இருவரையும் காட்டிலும் வயதில் மூத்தவன்’ என்று அது கூறியது.
அப்போது குரங்கும் யானையும் கௌதாரியைப் பார்த்து, ‘நண்பா, நீதான் மூத்தவன் என்பதை நாங்கள் ஏற்கிறோம். இனிமேல் நாங்கள் உன்னை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துவோம். பணிவுடனும் விசுவாசத்துடனும் நடப்போம், உன் சொற்களையும், செயலையும் மதிப்போம். தலை வணங்குவோம். நீ அளிக்கும் ஆலோசனைகளைக் கேட்டு நடப்போம். உன் பங்குக்கு நீ எங்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்று சொல்லின.
அப்போதிருந்து, கௌதாரி நண்பர்களுக்கு அறிவுரைகளை வழங்கியது. தான் ஏற்றுக்கொண்டு பின்பற்றிய நன்னெறி கட்டளைகளை அவர்களும் பின்பற்றும்படி செய்தது. இவ்வாறு நன்னெறிகளை ஏற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்றியதுடன், அவை தமக்குள் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்துகொண்டன. இயல்பான பொதுவாழ்க்கையில் சரியான ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தன. ஆகையால் இந்தப் பிறவியின் முடிவில் அவை சொர்க்கத்தில் பிறப்பதை உறுதி செய்து கொண்டன.
புத்தர் தொடர்ந்தார்: ‘இந்த மூவரின் நோக்கங்களும் ‘கௌதாரியின் புனிதத்தன்மை’ என்று அறியப்பட்டன. பிக்குகளே, இந்த மூன்று விலங்குகளும் பரஸ்பரம், மரியாதையுடனும் பணிவுடனும் ஒன்றாக வாழ்ந்தன. ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடின் மீது நம்பிக்கையுடன் இந்த அமைப்பில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள்; அந்த நன்னெறிகள் உங்களுக்கு நன்கு கற்பிக்கப்பட்டுள்ளன. எனும்போது, உங்கள் மத்தியில் உரிய மரியாதையும், பணிவும் காட்டாமல் எப்படி இருக்க முடியும்?
‘பிக்குகளே இன்று முதல் இதை என் கட்டளையாக எடுத்துக்கொள்ளுங்கள்: மூத்தவர்களிடம் சொல்லிலும் செயலிலும் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். வணக்கம் செய்தல், தேவையான பணிவிடைகள் செய்தல் ஆகியன முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்; சிறந்த தங்குமிடம், நல்ல நீர், சிறந்த உணவு ஆகியவை பெறுவதற்குச் சங்கத்தில் மூத்த உறுப்பினர் என்பதே முறையான தகுதியாக இருக்கும். இனிமேலும் இளையோர்கள், மூத்தவர்களுக்குத் தங்குமிடம் கிடைக்காமல் தவிக்கவிடக்கூடாது. அப்படிச் செய்பவர் குற்றமிழைத்தவராகக் கருதப்படுவார்.’
வயதுக்கு மதிப்பளிக்கும் பண்பைச் சீடர்களுக்குப் போதித்த புத்தர், யார் எவ்வாறு பிறப்பெடுத்திருந்தனர் என்பதையும் கூறினார்: ‘மொக்கல்லன் யானையாகவும், சாரிபுத்தன் குரங்காகவும், நான் கௌதாரியாகவும் பிறந்திருந்தோம்’.
இந்தப் பாடத்தின் முடிவில் துறவிகள் முழுமையான விழிப்பு நிலை அடைந்தனர் என்பதை உணர்ந்த புத்தர், பின்வரும் சொற்களைத் திரும்பவும் உதிர்த்தார்: ‘தம்மத்தில் திறன் பெற்றவர்கள், தம்மைக்காட்டிலும் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன் விசுவாசத்துடன் நடந்துகொள்வார்கள்; இந்தப் பிறவியில் பாராட்டப்படுவார்கள். அடுத்த பிறவியில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்’ என்று சொல்லி முடித்தார்.
(தொடரும்)