Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #22 – பாக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 38வது கதை)

‘ஏமாற்றுக்காரனை ஏமாற்றியவன்’

மடாலயத்தின் ஒரு பிக்கு தையல் கலையில் வல்லவராக இருந்தார். ஆனால் அந்தக் கலையைப் பயன்படுத்தி சக துறவிகளை ஏமாற்றிவந்தார்; பின்னொரு நாள் அவரும் ஏமாற்றப்படுகிறார். இந்தச் செய்தியை புத்தரிடம் கூறுகிறார்கள். மீன்களை ஏமாற்றி அவற்றைத் தின்ற கொக்கை ஏமாற்றி அதன் தலையைக் கொய்த நண்டின் கதையைச் சீடர்களுக்கு புத்தர் சொல்கிறார்.

அப்போது ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தார். மடத்திலிருந்த ஒரு பிக்கு, துறவிகளுக்கான ஆடைகள் தைப்பதில் நிபுணர். உடைக்கு ஏற்றவாறு துணியைக் கத்தரித்தல், அப்பகுதிகளைச் சரியாக இணைத்துத் தைத்து அழகான ஆடைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் திறமையானவர். சங்கத்திலிருந்த சீடர்களுக்கான ஆடைகளை நாகரிகமாக வடிவமைத்துத் தைப்பதால் அவருக்கு சீவரவத்தாகர் (அங்கிகளுக்கான சிறப்புத் தையல்காரர்) என்று பெயர் அளிக்கப்பட்டது.

ஆனால் அவரோ தனது திறமையைப் பயன்படுத்தி அனைவரையும் ஏமாற்றினார். பழைய அங்கிகளிலிருந்து தேவையான துணியை வெட்டி எடுப்பார்; அவற்றுக்குப் புதிதாகச் சாயமேற்றுவார். வண்ணம் தோய்ந்த கஞ்சியில் முக்கி அந்த நிறத்தை மேம்படுத்துவார், சங்கு போன்ற பொருளால் அந்த ஆடையைத் தேய்த்து மேலும் மென்மைகவும் நேர்த்தியாகவும் பார்க்கக் கவர்ச்சியாகவும் ஆக்குவார். ஓரளவு திருப்தியடைந்த பின்னர் அதை அங்கியாக உருவாக்குவதில் தன் திறமையைக் காட்டுவார்.

பிக்குகளுக்குத் துறவியுடை தயாரிப்பது பற்றிய அறிவு கிடையாது. ஆகவே, அவர்கள் புதிய துணியுடன் இந்தப் பிக்குவிடம் வருவார்கள். ‘சகோதரரே, எங்களுக்கு இந்தத் துறவியுடை உருவாக்குவது எப்படி என்று தெரியாது. ஆகவே, தாங்கள் எங்களுக்கு ஓர் உடையைத் தைத்துத் தாருங்கள்’ என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், ‘சகோதரர்களே! துறவியுடை ஒன்றை உருவாக்க அதிக நாட்கள் ஆகும். எனினும், இப்போதுதான் தைத்து முடித்த துறவியுடை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அல்லது இந்தத் துணிக்குப் பண்டமாற்று போலவும் அதைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று அவர்களிடம் கூறுவார். சொல்லியபடி, உருவாக்கி வைத்திருக்கும் அந்த உடையை எடுத்து அவர்களுக்குக் காட்டுவார்.

அவர்கள், அதன் நேர்த்தியையும் நிறத்தையும் பார்ப்பார்கள்; அந்த ஆடை எப்படித் தைக்கப்பட்டது என்று அவர்களுக்குத் தெரியாது; நல்ல உடை, அழுத்தமான துணியில் தைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணி, தங்களிடம் இருக்கும் புதிய துணியை சீவரவத்தாகரிடம் கொடுத்து மாற்றாகத் துறவியுடையை எடுத்துக் கொண்டு செல்வார்கள்.

ஆடை அழுக்கானதும், துவைக்க வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அலசிய பின்னர், அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுவிடும்; பழைய துணி என்று தெரிந்துவிடும், இப்படி வாங்கி வந்துவிட்டோமே என்று பிக்குகள் வருந்துவார்கள். இப்படி, அவரிடம் வந்தவர்களை எல்லாம் ஏமாற்றிய செய்தி எங்கும் பரவியது; இவ்வாறு ஏமாற்றுவதில் வல்லவர் என்று அந்தத் துறவி பெயர் பெற்றார்.

அருகில் ஒரு குக்கிராமத்தில் துறவியுடை உருவாக்கத் தெரிந்தவர் இருந்தார். இவரும் ஜேதவனத்தில் இருந்த பிக்கு போலவே அனைவரையும் ஏமாற்றி வந்தார். பிக்குகளில் இவருக்கு நண்பர்கள் இருந்தனர்; அவர்கள் இந்த மனிதரிடம் வந்து, ‘ஐயா, அங்கே ஜேதவனத்தில் உங்களைப் போலவே ஆடை உருவாக்குபவர் அனைவரையும் ஏமாற்றி வருகிறார். உமக்குத் தெரியுமா?’

இதைக் கேட்ட அந்த மனிதர் வியப்படைந்தார்; அவருக்கு ஒரு யோசனையும் தோன்றியது. அந்த நண்பர்களைப் பார்த்து, ‘அப்படியா! நான் கேள்விப்படவில்லை. சரி ஒன்று செய்வோமா? அந்த நகரத்துத் துறவியை நான் ஏமாற்றிக்காட்டுகிறேன் பாருங்கள்!’

தன்னிடமிருந்த பழைய துணிகளைக் கொண்டு மிக நேர்த்தியான ஆடை ஒன்றைத் தைத்தார்; அதற்கு அழகான காவி வண்ணம் ஏற்றினார். அந்த ஆடையை அணிந்து கொண்டு ஜேதவனம் சென்றார். இவரைப் பார்த்த அந்தத் தையல்கார பிக்கு, புதிய உடை மீது ஆசைப்பட்டார். அந்த மனிதரைப் பார்த்து, ‘ஐயா, இந்த அங்கி நீங்கள் உருவாக்கியதா?’ என்று கேட்டார்.

‘ஆம், நான் தைத்ததுதான், பிக்குவே’ என்பது பதில்.

‘இந்த ஆடையை எனக்குக் கொடுக்க முடியுமா?’

‘ஆனால், ஐயா, கிராமத்திலிருக்கும் துறவிகளான எங்களுக்குத் தேவையானவை கிடைப்பது கடினம்; இந்த ஆடையை நான் உங்களுக்குக் கொடுத்தால், நான் எதை அணிந்து கொள்வது?’

‘ஐயா, என் வசிப்பிடத்தில் புதிய துணி வைத்திருக்கிறேன்; அதை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் உங்களுக்கு ஏற்ற ஆடையைத் தைத்துக் கொள்ளுங்களேன்’.

‘வணக்கத்துக்குரிய துறவியே! என்னுடைய கைவினைத் திறமையை நீங்கள் பார்த்துவிட்டீர்கள். இப்படி வேண்டிக் கொள்ளும்போது நான் எப்படி அதை மறுக்க முடியும்? எடுத்துக் கொள்ளுங்கள்’.

இவ்வாறாகப் பழைய துணியில் தைத்த ஆடையைக் கொடுத்து அதற்கு மாற்றாக புத்தம் புதிய துணியை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தனது கிராமத்துக்குத் திரும்பிச் சென்றார் அந்த நபர்.

ஜேதவன மடாலயத்தின் பிக்கு, மகிழ்ச்சியுடன் ‘புதிய’ ஆடையை அணிந்து திரிந்தார். ஆடை அழுக்கான பின்னர், துவைத்து அலசுவதற்காக வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்தார். ஆடையின் லட்சணம் வெளிப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டோம்; அந்த ஆடை கந்தல் துணியில் தைக்கப்பட்டது என்பதை அறிந்து அவமானத்தில் தலைகுனிந்தார். ஜேதவனத் தையல்காரர், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆடை தயாரிப்பவரால் ஏமாற்றப்பட்ட செய்தி சங்கம் முழுவதும் பரவியது.

ஒரு நாள் பிக்குகள் தம்ம மண்டபத்தில் அமர்ந்து பல்வேறு செய்திகள் பற்றி உரையாடிக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருந்தனர். அப்போது உள்ளே நுழைந்த புத்தர் தனக்குரிய இடத்தில் அமர்ந்த பின், அவர்கள் எவை குறித்துப் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா எனக் கேட்டார்.

அவர்கள் இந்த இரண்டு தையல்காரர்களின் கதையையும் சொன்னார்கள். புத்தர் சொன்னார்: ‘துறவிகளே, ஜேதவன மடத்தின் ஆடை தயாரிப்பாளரின் ஏமாற்றும் தந்திரம் முதன் முறை அல்ல; கடந்த பிறவியிலும் அவர் அவ்வாறு செய்தார்; கிராமப்புறத்தைச் சேர்ந்த மனிதரால் இப்போது அவர் ஏமாற்றப்பட்டதைப்போலவே, கடந்த காலத்திலும் அவர் ஏமாற்றப்பட்டார்.’

பிக்குகள் அது என்ன சம்பவம் என்று ஆர்வத்துடன் கேட்டனர்.

அந்த முற்பிறவி நிகழ்வை புத்தர் விவரிக்கத்தொடங்கினார்.

0

அந்தப் பிறவியில் போதிசத்துவர், ஆவிகளும் தேவதைகளும் உலவும் வனத்தில் ஓரிடத்தில் அமைந்திருந்த தாமரைக்குளத்தின் அருகில் நின்ற மரத்தில் மர தேவதையாக அவதரித்திருந்தார். ஒவ்வொரு கோடைக்காலத்திலும் அந்தக் குளத்தில் நீர் அளவு மிகவும் குறைந்து போய்விடும். மிகப் பெரிய குளம் இல்லையென்றாலும் அந்தக் குளத்தில் மீன்கள் ஏராளமாக இருந்தன.

இந்த மீன்களைப் பார்த்ததும் கொக்கு ஒன்றுக்கு மீன்கள் முழுவதையும் தானே சாப்பிட்டுவிட வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. ‘இந்த மீன்களை வசப்படுத்தி ஏமாற்றிச் சாப்பிட ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று யோசித்தது. அவ்வாறு சிந்தித்தபடியே குளத்து நீரின் அருகில் அமர்ந்திருந்தது.

குளத்தில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், குளக்கரையில் சிந்தனையில் ஆழ்ந்திருந்த கொக்கைப் பார்த்தன.

‘அய்யா, இங்கு உட்கார்ந்து என்ன யோசிக்கிறீர்கள்?’ என்று அவரைக் கேட்டன.

‘நான் உங்களைப் பற்றி யோசிக்கிறேன்.’

‘அப்படியா! எங்களைப் பற்றி யோசிக்க என்ன இருக்கிறது?’

‘இந்தக் குளத்தில் நீர் குறைந்து வருகிறது; உணவுப் பற்றாக்குறையாக இருக்கிறது. வெப்பம் அதிகமாக உள்ளது. ஆகவே, எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எனக்குள் யோசித்துக் கொண்டிருந்தேன்.’

இதைக் கேட்டு மீன்கள் திகைத்தன. அப்படி ஒரு நிலைமையை அவை நினைத்துப் பார்க்கவில்லை. ‘அப்படியானால், நாங்கள் என்ன செய்வது, அய்யா?’

‘சரி, நீங்கள் எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்களா? ஒப்புக்கொண்டால் உங்கள் அனைவரையும் ஒவ்வொருவராக என் அலகால் தூக்கிச்சென்று அருகிலிருக்கும் மற்றொரு பெரிய குளத்தில் விடுவேன். அந்தக் குளம் ஐந்து வகையான தாமரைக் கொடிகளால் மூடப்பட்ட நீர் நிறைந்தது.’

‘அய்யா, இந்த உலகம் தோன்றியதிலிருந்து எந்தக் கொக்கும் மீன்களின் நலனைப் பற்றி சிறிதும் சிந்தித்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை. எங்களை ஒவ்வொருவராகச் சாப்பிட வேண்டும் என்பதே உங்கள் ஆசை.’

‘இல்லை; என்னை நம்பி வரும் உங்களை எப்படிச் சாப்பிடுவேன்’ என்றது கொக்கு. ‘அப்படி ஒரு குளம் இருக்கிறது என்று நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களில் ஒருவர் என்னுடன் வாருங்கள். குளத்தைக் காட்டுகிறேன்.’

அந்த மீன்கள் கொக்கை நம்பின. ஒரு பெரிய மீனை கொக்கோடு அனுப்ப நினைத்தன. நீரிலும் அல்லது தரையிலும் பெரிய மீன் கொக்குக்கு இணையாக, ஏற்றதாக இருக்கும் என்று அவை நினைத்தன.

‘இந்த மீன் உங்களுடன் வரும்’ என்றன.

கொக்கு அந்த மீனை அலகில் சுமந்து கொண்டு சென்று, குறிப்பிட்ட அந்தக் குளத்தில் போட்டது. குளம் எவ்வளவு பெரியது என்று பார்க்கச் சொல்லியது. பிறகு, மீண்டும் அந்த மீனைச் சுமந்து வந்து பழைய குளத்தில் மீன்கள் மத்தியில் போட்டது. புதிய குளத்தின் அழகை பெரிய மீன் மற்ற மீன்களிடம் விவரித்தது. அது கூறிய விவரங்களைக் கேட்டதும் அந்தக் குளத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் அவற்றுக்கு எழுந்தது.

அவை கொக்கைப் பார்த்து, ‘அய்யா, நீங்கள் சொல்வது மிகவும் நல்ல யோசனை. தயவுசெய்து எங்களை அங்கே கொண்டு விடுங்கள்’ என்று வேண்டிக்கொண்டன.

மீன்கள் இவ்வாறு சொன்னதும், கொக்கு முதலில் அந்தப் பெரிய மீனைத் தூக்கிக்கொண்டு பறந்தது. குறிப்பிட்ட அந்தக் குளம் பார்வையில் படும் தூரம் வரை வந்தது. எனினும் அந்த மீனை நீரில் விடாமல், அருகிலிருந்த மாவிலங்கம் மரத்தின் கிளையொன்றில் மோதியது. அதன் பின் அலகால் கொத்தி, மீனின் சதையைத் தின்றது. எலும்புகள் மரத்தின் அடிப்பகுதியில் விழுந்தன. பிறகு மீன்கள் நிறைந்த குளத்துக்குத் திரும்பிப் பறந்தது.

அந்த மீன்களைப் பார்த்து, ‘நான் அந்த மீனை நீரில் போட்டுவிட்டேன். அடுத்ததாக என்னோடு வரப்போவது யார்?’ என்று கேட்டது. மீன்கள் ஒவ்வொன்றாக முன் வந்தன. கொக்கும் அவற்றைத் தனது அலகில் தூக்கிச்சென்று குளத்தில் விடாமல், அனைத்தையும் தன் விருப்பம்போல் சாப்பிட்டது. இறுதியில் அந்தக் குளத்தில் மீன்கள் எதுவும் இல்லை.

0

நண்டு ஒன்று அந்தக் குளத்தில் மீதமிருந்தது. கொக்குக்கு அந்த நண்டையும் உண்ண வேண்டும் என்ற ஆசை. ஆகவே நண்டைப் பார்த்து இப்படிக் கூறியது: ‘நண்டே, அந்த மீன்களை எல்லாம் சுமந்து சென்று தாமரைக் கொடிகள் மூடியிருக்கும் அந்தப் பெரிய குளத்தில் கொண்டு விட்டிருக்கிறேன். நீயும் வா. உன்னையும் விடுகிறேன்.’

‘என்னை எப்படித் தூக்கிச் செல்வாய்?’

‘ஏன், நிச்சயமாக, மீன்களைத் தூக்கிச் சென்றதுபோல், அலகால்தான்.’

நண்டு, ‘ஆனால் நீ என்னைக் கீழே போட்டுவிட வாய்ப்பு இருக்கிறதே; அதனால், நான் வரவில்லை’ என்றது.

‘பயப்படாதே; நான் உன்னை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வேன்.’

எனினும் நண்டு தனக்குள் இப்படி நினைத்துக் கொண்டது, ‘இந்தக் கொக்கு நிச்சயமாக அந்த மீன்களைக் குளத்தில் போடவில்லை. தின்றிருக்கும். எனினும், அது என்னை நீரில் போட்டுவிட்டால், எனக்கு அது நல்லதுதான். அப்படிப் போடவில்லை என்றால் நான் அந்தக் கொக்கின் தலையைத் துண்டித்துக் கொன்றுவிடுவேன்’.

இந்த முடிவுடன் கொக்கைப் பார்த்து நண்டு சொன்னது: ‘உம்மால் ஒருபோதும் என்னை இறுக்கமாகப் பிடிக்க முடியாது, நண்பரே. அதே சமயம் நண்டுகளுக்கு வியக்கத்தக்க ஒரு திறன் உண்டு. இறுக்கமாகப் பிடித்தல். என் கால்களால் உம் கழுத்தை இறுகப் பிடித்தபடி உன்னுடன் வருவேன்’.

தன்னை ஏமாற்ற நண்டு தந்திரம் செய்கிறது என்று சந்தேகம் கொள்ளாமல், கொக்கு நண்டைத் தூக்கிச் செல்லச் சம்மதித்தது. நண்டு தன் கால்களால் கொக்கின் கழுத்தை ஒரு ஆசாரியின் குறடைப்போல் இறுக்கிப் பிடித்துக் கொண்டது. ‘இப்போது நீர் பறக்கலாம்’ என்றது. கொக்கு நண்டைத் தூக்கிக்கொண்டு முதலில் குளத்தை நோக்கிப் பறந்து, நண்டிடம் குளத்தைக் காட்டியது. அதன் பின்னர் திரும்பி மாவிலங்க மரம் நோக்கிப் பறந்தது.

‘குளம் இந்தப் பக்கம் இருக்கிறது, கொக்கு மாமா. ஆனால் நீர் என்னை வேறு பக்கம் அழைத்துச் செல்கிறீர்களே’ என்றது நண்டு.

‘ஆமாம், நான் உனது அன்புக்குரிய மாமாதான் பிரியமானவனே! நீயும் அப்படித்தானே என் மருமகனே! உன்னைத் தூக்கிச் சுமக்க உன் அடிமை என்றா என்னை நினைத்தாய். மரத்தின் அடியில் குவிந்து கிடக்கும் மீன் எலும்புகளைப் பார். அந்த மீன்கள் அனைத்தையும் நான்தான் சாப்பிட்டேன். இப்போது உன்னையும் சாப்பிடப் போகிறேன்.’

நண்டு, ‘அந்த மீன்களின் முட்டாள்தனத்தால்தான் அவற்றை நீர் சாப்பிட்டீர். நான் உமக்கு அந்த வாய்ப்பை அளிக்கப் போவதில்லை. நிச்சயம் இல்லை. நான் உம்மைக் கொல்லப்போகிறேன். நீர் ஒரு முட்டாள். எனது தந்திரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சாவது என்றால், இருவரும் செத்துப்போவோம். நான் இப்போது உம் கழுத்தைத் துண்டிக்கப் போகிறேன்’.

இவ்வாறு கூறியபடி நண்டு கொக்கின் கழுத்தை குறடைப்போல் இறுக்கிப் பிடித்தது. கொக்கு மூச்சுவிட முடியாமல் தடுமாறி வாயைத் திறந்தது; கண்களில் நீர் வழிய, உயிர் பிழைக்க, நடுங்கிய குரலில், ‘நண்டாரே நான் உம்மைச் சாப்பிடமாட்டேன்! என்னைக் கொல்லவேண்டாம்’ என்று கெஞ்சியது.

‘அப்படியானால், கீழே இறங்கு. என்னைக் குளத்தில் விடு.’

கொக்கு மரத்தின் பக்கமிருந்து திரும்பி குளத்தின் பக்கம் இறங்கியது. சேற்றில் நண்டை இறக்கிவிட முயற்சித்தது. ஆனால், நண்டோ, நீரில் புகுவதற்கு முன்னர், கொக்கின் கழுத்தை மீண்டும் இறுக்கியது. கத்தியால் தாமரைத் தண்டை நறுக்குவதுபோல் கொக்கின் கழுத்தை மிகத் திறமையுடன் துண்டாக்கியது.

0

மரத்தில் வசித்த தேவதை இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தது; இந்த அற்புதமான விஷயத்தைப் பாராட்டும் வகையில் ஒட்டுமொத்த வனமும் கைதட்டி ஆரவாரிக்கும் வகையில் தனது இனிமையான குரலில் இந்த வரிகளைக் கூறியது:

புத்திசாலி ஏமாற்றுக்காரனும்
ஏமாற்றியே எப்போதும் மகிழ்ச்சியை அடைய முடியாது.
அப்பாவிகளைத் தந்திரக்காரன் ஏய்த்தால்
தந்திரக்காரனை அதிதந்திரக்காரன் ஏய்ப்பான்.
நண்டு கொக்குக்குச் செய்ததுபோல்,
புத்திசாலி ஏமாற்றுக்காரனும் ஒரு நாள் ஏமாற்றப்படுவான்.

என்று சொல்லிய கௌதமர் தனது பாடத்தையும் உபதேசத்தையும் முடித்துக் கொண்டார்.

அதற்கு முன் யார், யாராகப் பிறந்திருந்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்: ‘நம் ஜேதவன மடாலயத்தில் ஆடை தயாரிப்பவராக இருப்பவர் அந்தப் பிறவியில் கொக்காகவும், கிராமத்து ஆடை தயாரிப்பவர் நண்டாகவும் பிறந்திருந்தனர். மரத்தில் வசித்த தேவதையாக நான் பிறந்திருந்தேன்’.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *