(தொகுப்பிலிருக்கும் 39வது கதை)
ஜேதவனத்தில் போற்றுதலுக்குரிய சாரிபுத்தரின் சீடர் ஒருவர் அவரிடம் பணிவுடனும் மரியாதையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்வார். எனினும், வேறு இடங்களுக்குச் செல்லும்போது வேறுமாதிரி நடந்துகொள்வார். மீண்டும் மடத்துக்குத் திரும்பியதும் பணிவுடன் நடப்பார். புத்தரிடம் இந்த விஷயத்தைச் சொல்கிறார்கள்.
சீடர்கள் மத்தியில் அமர்ந்திருந்த கௌதமர் இதைக் கேள்விப்பட்டவுடன் நிகழ்வு முற்பிறவி நிகழ்வு ஒன்றை அவர்களிடம் கூறுகிறார். இவரைப் போலவே நடந்துகொள்ளும் வேலைக்காரன் ஒருவனின் கதையைச் சொல்கிறார்.
0
போற்றுதலுக்குரிய சாரிபுத்தரை அனைத்துத் துறவிகளிலும் சிறந்தவராக புத்தர் கருதினார். அறிவிலும் விவேகத்திலும் சிறந்தவராக, எடுத்துக்காட்டாகப் பின்பற்ற வேண்டியவராக இருந்தார். மூத்தப் பிக்குவான சாரிபுத்தருக்கு பணிவிடைகள் செய்வதற்கு ஓர் இளந்துறவி இருந்தார். சாரிபுத்தரின் ஆடைகளை மடித்து வைப்பார்; குடிலை கூட்டிச் சுத்தம் செய்வார். பிட்சைக்கு அவர் செல்வதற்குமுன் அவரது திருவோட்டைத் தயார் செய்து வைத்திருப்பார். சாரிபுத்தர் சோர்ந்து போயிருக்கும்போதும் உடல்நலம் சரியில்லாத போதும் அவரது வலி தீரும் வகையில் உடலைப் பிடித்துவிடுவார்.
அனைத்தையும் அந்தத் துறவி பணிவுடனும், மரியாதையுடனும் செய்வார். சாரிபுத்தர், பரந்துபட்ட ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்பது அந்தத் துறவிக்குத் தெரியும்; ஆகவே அவருக்கு நெருக்கமாக இருந்தால், தன்னை உயர்த்திக் கொள்வதற்கு அவரிடமிருந்து சிறிதளவாவது அறிவைக் கிரஹித்துக் கொள்ள முடியும் என்று நம்பினார்.
மழைக் காலமான மூன்று மாதமும் துறவிகள் மடத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை; வாசா என்றழைக்கப்படும் இந்த உள்ளிருப்பு காலம் முடிந்தவுடன் மதிப்புக்குரிய சாரிபுத்தர், கௌதமரின் அனுமதியுடன் மகதத்தின் தென்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டார். சாரிபுத்தருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அந்தத் துறவி மகதத்தைச் சேர்ந்தவர். அவர் மகதம் செல்கிறார் என்றவுடன் தானும் வருவதாகத் துறவி கூறினார். ஒரு வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும் இருக்க முடியும் என்றதும், சாரிபுத்தர் அதை ஏற்றுக் கொண்டார்.
பயணத்தின் தொடக்கத்தில் அந்த இளந்துறவி சாரிபுத்தரைப் பொறுமையுடன் வழிகாட்டி அழைத்துச் சென்றார். அவருக்கு அந்தப் பாதை நன்கு தெரியும்; மூத்தவருக்குத் தெரியாது என்ற நிலை. எனவே, பயணம் தொடர்ந்த நிலையில், அந்த இளந்துறவி தன்னை உயர்வாக எண்ணத் தொடங்கினார். மகதத் தேசத்துக்குள் நுழைந்த பின்னர் முற்றிலுமாக மாறிவிட்டார். உயர்வாகத் தன்னை அவர் எண்ணிக்கொண்டதன் காரணமாக, மூத்தப் பிக்குவிடம் அவர் எரிச்சலுடன் பொறுமையின்றி நடந்து கொண்டார்.
சாரிபுத்தர் சற்று ஓய்வெடுக்கலாம் என்றாலோ ஏதேனும் யோசனை சொல்ல வந்தாலோ, பொதுவாக பணிவாகவும் அனுசரித்தும் நடக்கும் அந்த இளந்துறவி இவர் மீது கோபத்துடன் எதிர்வினையாற்றத் தொடங்கினார். ‘இதோ பாருங்கள், நீங்கள் இப்படி மெதுவாக நடந்தால், அடுத்திருக்கும் ஊரை அடைய முடியாது. இரவு முழுவதும் காட்டிலேயே மாட்டிக்கொள்வோம். நான் சொல்வதுபோல் செய்யுங்கள். யோசனை சொல்வதை நிறுத்துங்கள். எனக்கு இந்தப் பாதை தெரியும். உங்களுக்குத் தெரியாது. நாம் ஏறத்தாழ நெருங்கிவிட்டோம். நாம் அப்புறமாக ஓய்வெடுப்போம்.’
அவருடைய நடத்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை சாரிபுத்தர் அவதானித்தார். அருக நிலையடைந்தவர் என்பதால் தமது உணர்வுகளையும் சிந்தனையையும் முழுமையாக அவர் கட்டுக்குள் வைத்திருந்தார். ஆகவே, இளந்துறவியை நோக்கி கேள்விகள் கேட்பதையும் யோசனை தெரிவிப்பதையும் உரையாடுவதையும் முழுமையாக நிறுத்தினார். பயணத்தை அமைதியாகத் தொடர்ந்தார்.
மகத நகரத்து மக்கள் சாரிபுத்தரைச் சிறப்பாக வரவேற்று உபசரித்தனர்; அவர்கள் மத்தியில் அவர் அறநெறி சார்ந்த பிரசங்கத்தையும் ஆற்றினார். மிகப் பயன்மிக்கதென அம்மக்கள் கூறினர். தன்னுடன் பயணித்து வந்த அந்த இளந்துறவி அம்மக்களுடன் இசைந்து போகாமல், எல்லோரிடமும் வெடுவெடென்று எரிச்சலுடன், திமிராகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்துகொள்வதை அவர் பார்த்தார். அவருடைய செயல்களைப் பார்த்துக் கடிந்துகொள்ளாமல் எதிர்வினை ஆற்றாமல் சாரிபுத்தர் இருந்தார். கர்ம வினைப் பலன்கள் என்னவென்று முற்றிலும் அறிந்தவர்; என்ன செய்கிறோமோ அதற்குரிய பலனாக எதிர்வினை இருக்கும் என்பதை உணர்ந்தவர். இந்த மாற்றம் துறவியின் ஆளுமையில் ஏற்படும் மாற்றமாக அவர் உணர்ந்தார்.
ஓய்வெடுக்கும் இடத்தை அடைந்ததும் சாரிபுத்தர் அந்தத் துறவியிடம் மடித்துவைக்கவேண்டிய துணிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். வழக்கமாக இந்தப் பணியை ஆவலுடன் விருப்பத்துடன் செய்யும் அந்தத் துறவி இன்று, ‘அய்யா, இந்தத் துணிகள் உம்முடையவை; நீங்களே மடித்துவைக்கலாமே’ என்று பதில் கூறினார். ஒன்றும் சொல்லாமல் அவருடைய நடத்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை மட்டுமே அமைதியாக மூத்தவர் பார்த்துக்கொண்டிருந்தார்.
மகத்திலிருந்து திரும்பி வரும் பயணத்திலும் நிலைமை இதுதான். திமிர்த்தனத்துடனும் எரிச்சலுடனும் நடந்து கொண்டார். அவர் உதிர்த்த ஒளிவு மறைவான விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு எந்தப் பதிலும் கூறாமல், அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்தபடி பயணத்தைத் தொடர்ந்தார் சாரிபுத்தர். அவரைக் கட்டுப்படுத்தவோ அறிவுரை கூறவோ அவர் விரும்பவில்லை. அந்தத் துறவியும் இவரிடம் உதவியேதும் கேட்கவில்லை. அப்படி ஏதாவது கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. அவருடைய இயல்பு இதுதான் என்பதுபோல் நடந்துகொண்டார்.
எனினும், ஜேதவனத்தில் மடத்தை நெருங்கியவுடன் அந்தத் துறவியின் நடத்தை மாறிவிட்டது. பயணத்துக்கு முன்பிருந்த துறவியாக, மரியாதையுடனும் பணிவுடனும் நடந்துகொள்ளத் தொடங்கினார். பிட்சைப் பாத்திரத்தைத் தானே எடுத்துவருவதாக சாரிபுத்தரிடம் கூறுமளவுக்கு மாறிவிட்டார். இப்போதும் இந்த மாற்றத்தை அமைதியாக அவதானித்தார் சாரிபுத்தர்.
மடத்தின் வளாகத்துக்குள் வந்தவுடன் பணிவுடனும், மரியாதையுடனும் எதுவுமே மாறாததுபோல் அந்த இளந்துறவி நடந்துகொண்டார். ஆர்வத்துடன் போதனைகளையும், கடிதல்களையும் உபதேசங்களையும் கேட்டுக்கொண்டார். மூத்தப் பிக்குவும் அவரை வையவில்லை, கண்டிக்கவில்லை; பயணத்தின்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதையும் கூறவில்லை.
ஒருநாள் புத்தரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது சாரிபுத்தர் கௌதமரிடம் இந்த விநோதத்தை எடுத்துரைத்தார். ‘ஆசானே, இந்த மடத்தில் என்னுடன் தங்கும் ஒரு துறவி நூறு காசுகளுக்கு வாங்கிய அடிமையைப்போல நடந்து கொள்கிறார்; மற்றொரு இடத்துக்குப் போகும்போதோ, மிகவும் கர்வத்துடன், அவரிடம் கூறும் எதற்கும் சண்டையிடுவதுபோல் நடந்து கொள்கிறார். சாதாரணமாகப் பேசினாலே சச்சரவு உண்டாகிவிடும் நிலை. ஏன் இப்படி? என்ன செய்யலாம்?’ என்று கேட்டார்.
‘சாரிபுத்தா, இந்தத் துறவி இவ்வாறு நடந்துகொள்வது இது முதன்முறையல்ல. கடந்த பிறவியிலும் ஓரிடத்தில் விசுவாசம் மிக்க உதவியாளனாகவும் மற்றொரு இடத்தில் கர்வமும் திமிர்த்தனமும் நிறைந்தவராகவும்தான் நடந்துகொண்டார்’ என்று புத்தர் கூறியதும், மூத்தப் பிக்குவும் மற்றவர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க முற்பிறவியின் கதையை புத்தர் கூறினார்.
0
முற்பிறவியில், அச்சமயம் பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தார். போதிசத்துவர் ஒரு பிராமணராகப் பிறந்திருந்தார். அறிவும் விவேகமும் நிறைந்த குடும்பத் தலைவர். அவரது நண்பராக இருந்தவர், மனைவியை இழந்து ஓர் இளம் பெண்ணை மறுமணம் செய்து கொண்டிருந்த ஒரு வயதான நபர். நல்ல செல்வந்தர். அந்த இளம் பெண் மூலம் அவருக்கு வாரிசாக ஒரு மகனும் பிறந்தான்.
அவர் வீட்டில் நந்தன் என்ற அடிமை வேலைக்காரனாக இருந்தான். பணிவுடன் மரியாதையுடன் குடும்பத்தின் வேலைகளைச் செய்வான். அந்த முதியவர் அனைத்துக்கும் இவனையே நம்பினார். சில நாள் இப்படியே சென்றது. அவருக்கு ஒரு நாள் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவர் தனக்குள் இவ்வாறு நினைத்தார்: ‘எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. திடீரென்று இறந்துபோய்விட்டால்? மனைவியோ இளமையாக இருக்கிறாள். அவள் யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம். யாரை என்பது இறைவனுக்குத்தான் தெரியும். செல்வத்தை மகனிடம் ஒப்படைக்காமல் புதிய கணவனோடு சேர்ந்து செலவழித்து விட்டால் என்ன செய்வது? அதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும்.’
எனவே, செல்வத்தையும் பணத்தையும் பாதுகாப்பாக எங்கேயாவது புதைத்துவைப்பதுதான் சிறந்த வழி என்று நினைத்தார். ஆகவே, வேலைக்காரன் நந்தனை அழைத்துக்கொண்டு வண்டியில் அனைத்துச் செல்வங்களையும் ஏற்றிக்கொண்டு சற்று தள்ளியிருந்த காட்டுக்குச் சென்றார். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஒரு மரத்தடியில் குழி ஒன்றைத் தோண்டச் சொல்லி, கொண்டு வந்ததை எல்லாம் அதில் போட்டுப் புதைத்து அடையாளம் வைத்தார்.
‘என் பிரியமான நந்தா. நான் இறந்த பின்னர், என் மகன் ஓரளவு வளர்ந்ததும் அவனுக்கு இந்தப் பொக்கிஷம் இங்கிருப்பதைச் சொல்லு; தோண்டி எடுத்துக் கொடுத்து, அவனுக்குப் பாதுகாப்பாக இரு. அடையாளமாக இருக்கும் இந்த மரத்தை எவரும் வெட்டிவிடாமல் பார்த்துக்கொள்.’
0
சில நாட்களில் அந்தக் குடும்பத்தலைவர் இறந்து போய்விட்டார். தாய், மகனை நன்கு வளர்த்தாள். காலப்போக்கில் அந்த மகனும் – வாரிசும் நன்கு வளர்ந்துவிட்டான். ஒருநாள், அவள் தன் மகனை அழைத்துக் கூறினாள்: ‘மகனே, உன் அப்பா ஒரு நாள் நந்தனை அழைத்துக்கொண்டு, வண்டியில் செல்வங்களையும் பணத்தையும் மூட்டையாகக் கட்டிக்கொண்டு சென்றதை அறிவேன். அவர் இறந்த பிறகு ஒருவேளை நான் வேறொருவரை மணம் செய்துகொண்டு உன்னை ஏமாற்றிவிடுவேன்; அந்தச் செல்வத்தை நானே எடுத்துக்கொள்வேன். என்று எண்ணியிருக்கலாம். இப்போது நீ நன்கு வளர்ந்துவிட்டாய். ஆகவே, நந்தனிடம் பேசி, அவனை அழைத்துச் சென்று அந்தப் புதையலை எடுத்துக் கொண்டு வா.’
அந்த இளைஞன் ஒரு நாள் நந்தனை அழைத்துக் கேட்டான்: ‘அண்ணா, என் அப்பா தன் செல்வத்தை எல்லாம் ஓரிடத்தில் புதைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உங்களுக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?’
‘ஆமாம், தம்பி. அந்த இடம் எனக்குத் தெரியும்.’
‘நாளை நாம் அங்கே செல்லலாமா?’
‘செல்வோம்’ என்று நந்தன் சொன்னான். மறுநாள், வண்டியும் மண்வெட்டியுமாக அவர்கள் காட்டுக்குச் சென்றனர். அவர்கள் அந்தச் செல்வத்தைப் புதைத்த இடமும் வந்தது. அந்த மரத்தடியில் நந்தன் நின்றான். ஆனால், இப்போது அவன் முற்றிலும் மாறிப்போயிருந்தான். தனக்கு மட்டுமே அந்தப் புதையல் இருக்குமிடம் தெரியும் என்ற கர்வத்துடன் நடந்து கொண்டான்.
‘நான் புதைத்த இடத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? அடிமை மனைவியிடமிருந்து உன் தந்தை மறைத்து வைக்க நினைத்த புதையல் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? நீ உழைத்துச் சம்பாதிக்காத பணம் எங்கிருக்கு என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? எனக்கு எதுவும் தெரியாது.’
அந்த இளைஞனுக்குப் பெரும் அதிர்ச்சி. நந்தன் இதுவரையிலும் இப்படி நடந்து கொண்டதே இல்லை. எதனால் என்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவனிடம் இப்போது கோபப்பட்டுப் புதையலை இழக்க அவன் தயாராக இல்லை. ஆகவே நந்தன் உதிர்த்த சொற்கள் அவன் காதில் விழாதுபோலவே நடந்துகொண்டான். எதுவும் சொல்லவில்லை.
‘அப்படியா? சரி, நாம் வீட்டுக்குத் திரும்புவோம்’ என்று சொன்னவன் வண்டியோடும் நந்தனோடும் திரும்பினான். வீட்டுக்குத் திரும்பியதும், நந்தன் எப்போதும் போல் பணிவுடன் மரியாதையுடன் நடந்து கொண்டான். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர், நந்தனிடம் அவன் மீண்டும் பேசினான். நந்தன், ‘ஆமாம் புதையல் இருக்கிறது’ என்றான்.
இருவரும் மீண்டும் வண்டியுடனும் தேவையான உபகரணங்களுடன் மரத்தடிக்குச் சென்றனர். எனினும், மீண்டும் நந்தன் முன்பு போலவே கர்வத்துடன் நடந்து கொண்டான். அந்தப் பையனை மோசமான சொற்களால் பேசினான். இந்த முறையும் எந்தவிதமான முறைகேடான மறுமொழியும் கூறாமல் இளைஞன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். மேலும் இருமுறைகள் நந்தனுடன் அங்குச் சென்ற அவன் வெறுங்கையுடன்தான் திரும்பி வந்தான்.
அந்த இளைஞன் தனக்குள் யோசித்தான். ‘வீட்டில் இருக்கும்போது பணம் எங்குள்ளது என்று சொல்ல மனப்பூர்வமாக ஒப்புக்கொள்பவன். அந்த இடத்துக்குச் சென்றதும் ஏன் முற்றிலும் மாறிப்போய் விடுகிறான் என்பது தெரியவில்லையே? மோசமான சொற்களால் என்னை விமர்சிக்கவும் செய்கிறான். காரணம் என்ன? சரி அப்பாவின் நண்பரிடம் இதைப் பற்றிக் கலந்தாலோசிப்போம்.’
மறுநாள் அவன், அப்பாவின் நண்பரான போதிசத்துவரின் வீட்டுக்குச் சென்று அவரிடம் நடந்ததை எல்லாம் கூறினான். நந்தன் அப்படி நடந்துகொள்வதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கலாம் என்று வினவினான். அதற்கு அவர், ‘இது மிகவும் வெளிப்படையானதுதான். அந்த வேலைக்காரன் உன்னிடம் வித்தியாசமாக நடந்துகொள்ளும் இடம்தான் புதையல் இருக்குமிடம். அந்தப் புதையல்தான் அங்கு நிற்கையில் அவனை அவ்வாறு மோசமாகப் பேசவைக்கிறது. ஆகவே, மீண்டும் அவனை அங்கு அழைத்துச் செல். எந்த இடத்தில் அவன் அவ்வாறு பேசத்தொடங்குகிறானோ, உடனே ‘அடிமையே நீ யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா?’ என்று கேள். அவன் கையிலிருக்கும் மண்வெட்டியை வாங்கி நீயே அந்த இடத்தைத் தோண்டு. அந்த அடிமையைப் புதையலை எடுத்து வண்டியில் போடச் சொல்லி ஓட்டி வரச்சொல்’ என்று கூறினார்.
போதிசத்துவருக்கு உரிய வணக்கம் செலுத்திவிட்டு வீட்டுக்கு வந்தான் அந்த இளைஞன். மறுநாள், நந்தனை வண்டியைக் கட்டச் சொல்லிப் புதையல் இருந்த இடத்துக்குச் சென்றான். வழக்கம்போல், மரத்தடி வந்ததும் நந்தன் மாறிப்போனான். அவனை விலகச் சொல்லிய அந்த இளைஞன் மண்வெட்டி கொண்டு அந்த இடத்தைத் தோண்டினான். நந்தனை விட்டுப் புதையலை வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தான். அம்மாவுடன் இணைந்து, தான தருமங்கள் செய்து நல்வாழ்க்கை வாழ்ந்தான்.
‘இவ்வாறு கடந்த பிறவியிலும் இந்தத் துறவி அப்படித்தான் நடந்து கொண்டார்’ என்று சொன்ன கௌதம புத்தர் ‘சாரிபுத்தருடன் இப்போது வசிப்பவர்தான் அந்தப் பிறவியில் நந்தன். நான் விவேகம் நிறைந்த, அந்த நல்ல குடும்பத் தலைவனாக அவதரித்திருந்தேன்’ என்று முற்பிறவித் தொடர்பையும் விளக்கி உபதேசத்தை முடித்தார்.
(தொடரும்)