Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #24 – காதிரங்கார ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை)

ஒரு தேவதை, அது தங்கியிருந்த வீட்டு உரிமையாளரான அனாத பிண்டிகர், புத்தரிடம் விசுவாசமாக இருப்பதிலிருந்து தடுக்க முயற்சி செய்கிறது. அது தீங்கான யோசனையைச் சொன்னதும், வீட்டிலிருந்து தேவதையை அவர் வெளியேறச் சொல்கிறார். புத்தருக்கு இந்த நிகழ்வைக் கூறுகிறார்கள். மாறா என்ற தீயரக்கன், நெருப்புப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தி பச்சேக புத்தருக்கு உதவி செய்வதைத் தடுக்க முயன்றதையும், எனினும், போதிசத்துவர் நெருப்பைக் கடந்து சென்று உதவிய முற்பிறவிக் கதையைக் கூறுகிறார். (பச்சேக-புத்தர்கள்: பேச்சில் சிக்கனமானவர்கள், தனிமையை விரும்புபவர்கள். புத்தர் நிலையை அடைவதற்கான சரியான போதனையைப் பெற்றாலும் பச்சேக புத்தர்கள் உருவாவதில்லை. பல யுகங்கள் முயற்சி செய்த பின்னர், அவர்களது தகுதி நிலையை அடைவதற்கு, அவர்கள் நிறைவான புத்தரின் முன் தமது அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டும்).

புத்தரின் மீதும், பௌத்த நெறிமுறைகள் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டவர் அனாதபிண்டிகர். பௌத்தத்தின் மூன்று ரத்தினங்களைக் காட்டிலும் வேறெதையும் பெரிதாக மதிக்காதவர். சிராவஸ்தியின் பெரும் வணிகரான அங்கு மடாலயம் ஒன்றைக் கட்டித் தருவதற்கு ஏறத்தாழ ஐம்பத்து நான்கு கோடி செலவிட்டார் என்கிறார்கள். புத்தர் ஜேதவனத்தில் இருந்தால் அங்கு நடக்கும் பெரும் தியான நிகழ்வுகளில் தவறாமல் தினந்தோறும் கலந்து கொள்வார். விடியற்காலை, காலை உணவுக்குப் பின்னர், பிறகு மீண்டும் மாலையில் நடக்கும் பிரார்த்தனை என அனைத்துக்கும் வருவார். இவற்றுக்கு இடையிலும் பிரார்த்தனைகள் நடக்கும். மடத்துக்கு அவர் என்றைக்கும் வெறுங்கையுடன் வந்ததில்லை. சங்கத்தில் புதியதாகச் சேர்ந்தவர்களும் இளைஞர்களும் அவர் என்ன கொண்டு வந்திருக்கிறார் என்று ஆவலுடன் பார்ப்பார்கள் அதிகாலையில் அரிசியில் செய்த கஞ்சி எடுத்துச் செல்வார்; காலை உணவுக்குப் பின் மடத்துக்குச் சென்றால் நெய், வெண்ணெய், தேன், வெல்லப்பாகு போன்றவற்றைக் கொண்டு போவார்; மாலை நேரத்திலோ வாசனைத் திரவியங்கள், மாலைகள் மற்றும் துணிகளைக் கொண்டு வருவார்.

இப்படித் தினமும் மடத்துக்காக ஏராளமாகச் செலவு செய்தார்; செய்யும் செலவுகளுக்கு வரம்பில்லை என்பதுபோல் பணத்தை இவ்வாறான காரியங்களுக்கு அளித்தார். அந்த வியாபாரியின் வீடு நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும் ஊருணிபோல் அமைந்து சங்கத்தினருக்குப் பேருதவியாய் இருந்தது. ஆம், அவர்களுக்கு அவர் தாயும் தந்தையும் போல இருந்தார். பேராசான் புத்தரும் அவரது இல்லத்துக்குச் செல்வது வழக்கம்; சங்கத்தின் எண்பது மூத்த பிக்குகளும் அவ்வாறு செல்வார்கள்; மற்ற துறவிகளும் எண்ணற்ற அளவில் அங்குச் சென்று வந்தனர்.

பல வர்த்தகர்கள் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்து அவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தனர். பதினெட்டு கோடி அளவுக்கு அவர் கடன் கொடுத்திருந்தார்; அந்தப் பெரும் வணிகர் கொடுத்த கடனை அவராகக் கேட்டு வாங்குவது இல்லை. அவர்களாகக் கொடுத்தால்தான் உண்டு. பலரும் கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி பல கோடி அளவுக்குச் சொத்துகளை அவரது குடும்பத்தினர் புதைத்து வைத்திருந்தனர். புயலும் மழையும் வந்த ஒரு நாளில் நிலப்பரப்புச் சிதைந்து, தரைக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பித்தளை பானைகள், மூடப்பட்ட நிலையில் முத்திரை உடையாமல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் சென்று சேர்ந்தன. நீருக்கு அடியில் மூழ்கிப்போயின.

வணிகரின் வீடு ஏழு மாடி அளவு உயரமானது. ஏழு வாசல்களும் அதற்கு இருந்தன; நான்காவது நுழைவாயிலுக்கு மேல் ஒரு தேவதை வசித்து வந்தாள். நம்பிக்கைகள், குறிப்பாக மத நம்பிக்கைகள் அந்த தேவதைக்குப் பிடிக்காது. புத்தர் வீட்டுக்குள் வந்தால், உயரத்திலிருக்கும் வசிப்பிடத்தில் தேவதையால் இருக்க முடியாது; தனது குழந்தைகளுடன் தரைத்தளத்துக்கு வந்துவிடும்; எண்பது மூத்த பிக்குகளும் அல்லது சங்கத்தின் வேறு பெரியவர்கள் அங்கு வருகை தரும்போதும் தேவதை அப்படியே செய்ய வேண்டியிருந்தது.

தேவதை இவ்வாறு நினைத்தது: ‘சந்நியாசியான கௌதமரும் அவருடைய சீடர்களும் இந்த வீட்டுக்குள் அடிக்கடி வந்து செல்லும்வரை இங்கு என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. என்னால் ஒரேயடியாக தரைத் தளத்துக்கும் இறங்கி வர முடியாது. அவர்கள் இந்த வீட்டுக்கு வருவதைத் தடுக்க நான் ஏதாவது செய்தாக வேண்டும்’.

ஆகவே ஒரு நாள் அந்த வியாபாரியின் உதவியாளர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் முன் தேவதை தோன்றியது.

‘யார் நீ?’ என்று கேட்டார்.

‘நான்தான், நான்காவது நுழைவாயிலின் மேல் வசிக்கும் தேவதை.’

‘சரி, இப்போது எதற்கு இங்கு வந்தாய்?’

‘இந்த வியாபாரி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? எதிர்காலத்தைப் பற்றிக் கவலையே படாமல், சொத்துகளை எல்லாம் செலவு செய்து கொண்டிருக்கிறார். அந்தச் சந்நியாசி கௌதமரை செல்வந்தராக்குவதற்கே அத்தனையும் செய்கிறார். இப்போதெல்லாம் உங்கள் முதலாளி எந்த வணிகத்திலும் ஈடுபடுவதில்லை; எந்தத் தொழிலையும் மேற்கொள்ளவில்லை. நீங்கள் உங்களுடைய முதலாளிக்கு அவருடைய வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்கும்படி அறிவுரை கூறுங்கள்; அப்புறம் அந்தத் துறவியான கௌதமரும் அவருடைய சீடர்களும் இனிமேலும் இந்த வீட்டுக்குள் வர முடியாத அளவுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்’.

அவர் கூறினார், ‘முட்டாள் தேவதையே, வணிகர் அவருடைய பணத்தைத்தானே செலவழிக்கிறார்; அதுவும் புத்தர் தனது கொள்கைகளைப் பரப்புவதற்கும் சங்கத்தை நடத்துவதற்கும் தானே செலவிடுகிறார். அந்தச் செலவுகள் பாதுகாப்பான நிலைக்கே அழைத்துச் செல்லும். வணிகர், என் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஓர் அடிமையாக என்னை விற்றாலும் நான் ஒன்றும் சொல்லமாட்டேன். இங்கிருந்து போய்விடு!’

மற்றொரு நாள், அந்தத் தேவதை வணிகரின் மூத்த மகனிடம் சென்று அதே அறிவுரையைக் கூறியது. உதவியாளர் நடத்திய அதேவிதத்தில் இந்த மகனும் தேவதையை அவமதித்தான். எனினும், அந்த வியாபாரியிடம் இந்த விஷயத்தை நேரடியாகப் பேசுவதற்கு அந்தத் தேவதைக்கு அவ்வளவு துணிவில்லை.

0

முடிவேயில்லாத வள்ளல் தன்மையாலும் எந்த வியாபாரமும் செய்யாததாலும் வணிகரின் வரவுகள் குறைந்தன; அவரது சொத்துகள் மேலும் மேலும் குறைந்து கொண்டே வந்தன; மோசமான வறுமையில் அவர் மூழ்கினார்; பணிபுரியும் மேஜையும், அவரது உடையும், அவரது படுக்கையும் உணவும் முன்பு இருந்ததைப்போல இல்லை. ஆயினும், சூழ்நிலை முற்றிலும் மாறிப்போயிருந்தாலும், சிறப்பான விருந்தளிக்க அவரால் முடியாவிட்டாலும், சங்கத்தை அவர் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.

இப்படியாக ஒரு நாள் சங்கத்துக்கு வந்த அவர், புத்தருக்கு வணக்கம் சொல்லிவிட்டு துறவிகள் மத்தியில் அமர்ந்தார். புத்தர் அவரிடம், ‘வணிகரே, உங்கள் வீட்டில் இப்போதும் வருவோருக்கு உதவிகள் செய்கிறீர்களா?’ என்று கேட்டார்.

‘ஆமாம் அய்யா, எனினும் நேற்று முதல் புளிக்கும் நொய்க் கஞ்சியும் ஊறுகாய் விழுதும்தான் தருகிறேன். அதுதான் மிச்சமிருக்கிறது.’

‘வணிகரே, சுவையற்ற பண்டங்களை மட்டுமே வழங்க முடிகிறது என்ற எண்ணத்தில் வருந்த வேண்டாம். நல்ல மனதுடன் கொடுத்தால், புத்தர்களுக்கும் பச்சேக புத்தர்களுக்கும் அவர்களது சீடர்களுக்கும் வழங்கப்படும் உணவு சுவையாகத்தான் இருக்கும். இருக்காதென ஏன் நினைக்கிறீர்கள்? ஏனெனில், நீங்கள் தயாரித்தளிக்கும் பொருளின் மகத்துவம் அப்படி. ஏனென்றால், மனப்பூர்வமாக ஒருவர் அளிக்கும் பரிசை மற்றவர் ஏற்காமலிருக்க மாட்டார்கள்.’

‘ஏனெனில், இதயத்தில் நல்லெண்ணம் இருந்தால்,
புத்தர்களுக்கோ அவர்களது சீடர்களுக்கோ
எந்தப் பரிசும் சிறியதல்ல என்பதே உண்மை.
புத்தர்களுக்கும் பெரும் புகழ் பெற்ற பெரியவர்களுக்கும்
செய்யப்படும் எந்தச் சேவையையும் சிறியதாகக் கருத முடியாது.’

அத்துடன் கௌதமர், ‘வணிகரே, இந்த ருசியற்ற உணவை நீங்கள் வழங்குவது, உன்னதமான எண் வகை மார்க்கங்களில் நுழைந்தவர்களுக்கு நீங்கள் வழங்குவது போலாகும்’ என்றார்.

வணிகர் கம்பீரமாக வாழ்ந்த நாட்களில் அவரிடம் பேசத் துணியாத அந்தத் தேவதை, இப்போது அவர் ஏழையாகிவிட்டதால் தனது பேச்சைக் கேட்பார் என்ற எண்ணத்தில் நள்ளிரவில் அவர் இருந்த அறைக்குள் பிரவேசித்தது; அவர் முன் தோன்றி, அந்தரத்தில் நின்றது.

‘யார் அது?’ யாரோ அங்கு இருப்பதை அறிந்ததும் வணிகர் கேட்டார்.

‘நான் ஒரு தேவதை, வீட்டு நான்காவது நுழைவாயிலில் மேல் வசிக்கிறேன் , பெரு வணிகரே.’

‘எதற்காக நீ இங்கே வந்திருக்கிறாய்?’

‘உங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக.’

‘அப்படியா, சொல்.’

‘பெரு வணிகரே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ உங்கள் குழந்தைகளைப் பற்றியோ நீங்கள் சிந்திக்கவில்லை. கவலைப்படவில்லை. சந்நியாசி கௌதமருக்குச் சேவை செய்வதற்காக ஏராளமாகச் செலவு செய்துவிட்டீர்கள்; உண்மையில், தொடர்ச்சியாக நீங்கள் செய்த செலவாலும், புதிய தொழிலை மேற்கொள்ளாமல் இருப்பதாலும் இப்போது வறுமை நிலையை அடைந்துவிட்டீர்கள். வறுமை நிலையிலும் துறவி கௌதமரை நீங்கள் விட்டுவிடவில்லை. உங்கள் வீட்டுக்கு வந்து சென்ற சந்நியாசிகள் அப்போது இருந்ததுபோல் தான் இப்போதும் இருக்கிறார்கள். உங்கள் மூலம் அவர்கள் அடைந்ததைத் திரும்பப் பெறமுடியாது. அது நிச்சயம். இனிமேலாவது சந்நியாசி கௌதமரிடம் நீங்கள் செல்ல வேண்டாம். அவருடைய சீடர்கள் உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைப்பதையும் அனுமதிக்காதீர்கள். சும்மா பார்ப்பதற்குக்கூட நீங்கள் கௌதமர் பக்கம் திரும்பவேண்டாம். உங்களுடைய வியாபாரத்தையும் வாங்குவதையும் விற்பதையும் கவனியுங்கள். குடும்பச் சொத்தை திரும்பச் சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்’.

‘இதுதான் நீ எனக்குச் சொல்ல விரும்பும் யோசனையா?

‘ஆமாம்.’

‘தேவதையே, பத்து ஆற்றல்களையும் கொண்ட புத்தர், உன்னைப்போன்ற நூறு, ஆயிரம் ஏன் லட்சக்கணக்கான தேவதைகளையும் எதிர்கொள்ளும் சக்தியை எனக்குத் தந்துள்ளார். என் விசுவாசம் மேரு மலை போல் உறுதியானது, திடமானது! மக்களின் சேவைகளுக்காக எனது பொருளைச் செலவிட்டேன். நீ கூறிய சொற்கள் தீங்கானவை. புத்தர்களின் நன்னோக்கம் கொண்ட சேவைகளின் மீதான தாக்குதல். பொல்லாங்கும் திமிர்த்தனமும் கொண்ட பாதகி நீ. உன்னுடன் ஒரே இல்லத்தில் என்னால் வாழ முடியாது; உடனே என் வீட்டை விட்டு வெளியேறிவிடு: வேறு புகலிடம் தேடிக்கொள்!’ என்றார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *