Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 2ம் பகுதி)

‘பெரு வணிகரே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ உங்கள் குழந்தைகளைப் பற்றியோ நீங்கள் சிந்திக்கவில்லை. கவலைப்படவில்லை. சந்நியாசி கௌதமருக்குச் சேவை செய்வதற்காக ஏராளமாகச் செலவு செய்துவிட்டீர்கள்; இனிமேலாவது சந்நியாசி கௌதமரிடம் நீங்கள் செல்ல வேண்டாம். அவருடைய சீடர்கள் உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைப்பதையும் அனுமதிக்காதீர்கள். உங்களுடைய வியாபாரத்தையும் வாங்குவதையும் விற்பதையும் கவனியுங்கள். குடும்பச் சொத்தை திரும்பச் சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்’ என்று தேவதை அனாதபிண்டிகரிடம் சொன்னது.

பௌத்த நம்பிக்கையில் இணைத்துக்கொண்ட, புத்தருடைய சிறந்த சீடரான அவர், தேவதை மீது கோபம் கொண்டு தன் வீட்டை விட்டு வெளியேறும்படிக் கூறினார். அதன் பின்னரும் தேவதை அங்கு எப்படி இருக்க முடியும்? குழந்தைகளைக் கையில் பிடித்தபடி வெளியில் சென்றது. ஆனால், போகும்போது தனக்குள் இப்படி நினைத்துக் கொண்டது: ‘சரி, வசிக்க நமக்கு வெளியில் இடம் ஏதும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? வணிகரைச் சமாதானப்படுத்தி மீண்டும் இங்கேயே வசிக்க முயற்சி செய்யவேண்டும்’.

இந்த யோசனையுடன் அந்த நகரத்தின் பாதுகாவலன் தேவபுத்தனைச் சென்று பார்த்த தேவதை அவரை வணங்கி நின்றது. தேவதையைப் பார்த்து, ‘என்ன காரியம்? எதற்கு இங்கு வந்தாய்?’ என்று கேட்டார்.

‘அய்யா, அனாதபிண்டிகரிடம் விவேகமின்றி அலட்சியமாகப் பேசிவிட்டேன். அதனால் அவர் கோபம் கொண்டு என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். தயவுசெய்து எங்களுக்கு இடையில் சமாதானம் ஏற்படுத்தி நான் மீண்டும் அங்கு வசிப்பதற்கு அவரிடம் அனுமதி வாங்கித் தாருங்கள்’.

‘சரி, நீ அந்த வணிகரிடம் அப்படி என்ன சொன்னாய்?’

‘அவருடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புத்தரையும் சங்கத்தையும் ஆதரிக்க வேண்டாம் என்று சொன்னேன். துறவி கௌதமரை மீண்டும் அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்காதீர்கள் என்றேன்.’

‘உன் சொற்கள் பொல்லாதவை; சங்கத்துக்கும் அதன் செயல்பாட்டுக்கும் எதிரானவை. வியாபாரியிடம் உன்னை அழைத்துச் செல்ல முடியாது’ என்று தேவபுத்தன் மறுத்துவிட்டார்.

அவரிடமிருந்து தனக்கு ஆதரவான சொற்களைப் பெறமுடியாத தேவதை, உலகின் நான்கு பெரிய அரசர்களிடமும் சென்று முறையிட்டது. முந்தியவரைப் போலவே இவர்களும் தேவதையை விரட்டிவிட்டனர். அதனால் அது தேவர்களின் அரசன் சக்கனிடம் சென்று தனது கதையைச் சொல்லியது; இன்னும் தீவிரமாக மன்றாடியது.

‘தேவனே, வசிக்க இடம் எதுவும் கிடைக்காமல், வீடற்றவளாக, என் குழந்தைகளைக் கையில் பிடித்தபடி அலைந்து திரிகிறேன்; சிரமப்படுகிறேன், நீங்கள் இரக்கம் கொண்டு நான் வசிக்க ஓரிடத்தை ஏற்பாடு செய்யுங்கள்’.

சக்கன் அந்தத் தேவதையிடம், ‘நீ தீய நோக்கத்துடன் நடந்துகொண்டாய்; கௌதமர் என்ற வெற்றியாளர் உபதேசிக்கும் கொள்கையின் மீதும் சங்கத்தின் மீதும் நீ நடத்திய மோசமான தாக்குதல் அது. அதனால், உன் சார்பாக அந்த வணிகரிடம் என்னால் பேச முடியாது. எனினும், வணிகர் உன்னை மன்னிப்பதற்கு ஒரு வழியை என்னால் சொல்ல முடியும்.’

‘தயவு செய்து சொல்லுங்கள் தேவனே.’

‘பதினெட்டு கோடி அளவுக்கு வணிகரின் பணத்தைப் பலரும் கடனாக வாங்கியுள்ளனர். எவரும் திருப்பிக் கொடுக்கவில்லை; கடன் பத்திரங்கள் வணிகரிடம் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள். அந்தத் தொகை அளவுக்கு ரசீதையும் தயார் செய்து கொள். வணிகருடைய மேலாளரின் உருவத்தில் அந்தக் கடன்காரர்களின் வீடுகளுக்குச் செல். இதை வெளியில் எவரிடமும் சொல்லாதே. உன்னோடு, இளம் யட்சர்கள் சிலரை அழைத்துச் செல். ஒரு கையில் பத்திரமும் மறுகையில் ரசீதையும் வைத்தபடி, வீட்டின் மத்தியில் நின்றுகொண்டு, உங்களுக்கிருக்கும் மாய சக்தியைப் பயன்படுத்தி அவர்களைப் பயமுறுத்து; ‘இதோ நீங்கள் வாங்கிய கடனுக்கான பத்திரம். அவர் செழிப்புடன் இருந்த காலத்தில் கடனைக்கேட்டு உங்களிடம் வரவில்லை. இப்போது அவர் வறுமை நிலைக்கு உங்களால் தள்ளப்பட்டார். கடனை உடனே திருப்பிக் கொடுங்கள். இல்லையேல்…’ என்று மிரட்டு. உங்களுடைய சக்தியால் அந்தப் பதினெட்டு கோடி கடனையும் வாங்கி, காலியாகக் கிடக்கும் அவரது பணப்பெட்டியை நிரப்பு’.

‘நல்லது, அப்படியே செய்கிறேன்’.

‘சற்றுப் பொறு. அவருடைய மற்றொரு சொத்து அசிராவதீ (இன்றைய ரப்தி நதி) ஆற்றின் கரையில் புதைக்கப்பட்டிருந்தது. பெரும் வெள்ளத்தால் அந்தக் கரை உடைந்து அடித்துச் செல்லப்பட்டபோது புதையலும் கடலுக்குள் சென்று மூழ்கிவிட்டது. உன்னுடைய அமானுஷ்ய சக்தியால் அதையும் திரும்ப எடுத்து வா. அவருடைய வீட்டில் கொண்டு சேர்த்துவிடு. அதுமட்டுமல்ல. இன்னொரு பதினெட்டு கோடியும் அவருக்குச் சேர வேண்டியிருக்கிறது. ‘இந்த இடத்தில்’ இருக்கிறது. அதையும் எடுத்து வந்து மேற்சொன்ன சொத்துகளோடு சேர்த்துவிடு. அதற்குப் பிறகு அந்த வணிகரைச் சந்தித்து மன்னிப்புக் கேள். அவர் ஒப்புக்கொள்வார்’.

‘அப்படியே செய்கிறேன், தேவனே.’

தேவதை அதனிடம் சொல்லப்பட்டதைச் சிரமேற்கொண்டு மிகப் பணிவுடன் செய்தது. அனைத்தையும் செய்து முடித்த பின்னர், ஒருநாள் நள்ளிரவில் வணிகரின் அறைக்குச் சென்று, அவருக்குத் தெரியும் வடிவில் காற்றில் மிதந்தாற்போல் நின்றது. வணிகரும் யாரோ நிற்பதை அறிந்து, யார் வந்திருப்பது என்று வினவினார்.

‘வணிகரே, நான்தான். குருட்டுத்தனமாக நடந்துகொண்ட அந்த முட்டாள் தேவதை. உங்களுடைய மாளிகையின் நான்காவது வாயிலின் மேல் வசித்தவள். எனது முட்டாள்தனத்தால் புத்தரின் நற்பண்புகளையும் மகத்துவத்தையும் அறியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டேன். சில நாட்களுக்கு முன்னர் உங்களிடம் சொன்னதையே நான் திரும்பவும் சொல்கிறேன்.

‘என் தவறுகளை மன்னியுங்கள். தேவர்களின் அரசன் சக்கனின் அறிவுறுத்தலின்படி உங்களுக்குத் திரும்பி வரவேண்டிய பதினெட்டு கோடியையும், கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பதினெட்டு கோடியையும், வேறு இடத்திலிருந்த பதினெட்டு கோடியையும் காலியாக இருந்த உங்கள் கருவூலத்தில் சேர்த்துவிட்டேன்.

‘நீங்கள் ஜேதவன மடாலயத்துக்குச் செய்த செலவு அனைத்தும் மீண்டும் உங்களிடம் சேர்ந்துவிட்டன. எனக்கு வசிக்க இடமேதும் இல்லாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். துயரப்படுகிறேன். அறியாமையால் முட்டாள்தனமாக நடந்துகொண்டதை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள்.’

0

தேவதை சொன்னதைக் கேட்ட அனாதபிண்டிகர், தனக்குள் இவ்வாறு எண்ணினார்: ‘இந்தத் தேவதை; ஏதோ பரிகாரம் செய்ததாகச் சொல்கிறது; செய்தத் தவற்றை ஒப்புக்கொள்கிறது. புத்தர்தான் இதைப் பற்றி யோசித்து எது சரி தவறு என்று சொல்வார்; அவளுக்கும் அவர் நற்பண்புகளை எடுத்துரைப்பார். இவளை ஆக உயர்ந்தவரான புத்தரிடம் அழைத்துச் செல்வேன்.’

‘எனதருமை நல்ல தேவதையே! நான் உன்னை மன்னிக்கவேண்டும் என்று விரும்பினால் என்னுடைய குருவின் முன்னிலையில் மன்னிப்புக் கேள்.’

‘மிகவும் நல்லது. அப்படியே கேட்கிறேன். என்னையும் உங்களுடன் உமது குருவிடம் அழைத்துச் செல்லுங்கள். ‘

‘நிச்சயம்’ என்று கூறியவர், மறுநாள் அதிகாலையில், இருள் நீங்கியவுடன் தேவதையைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தி, தேவதை செய்த அனைத்தையும் ததாகதரிடம் விளக்கிக் கூறினார். தம்மபதத்திலிருந்து இரண்டு வசனங்களை மீண்டும் எடுத்துரைத்த பேராசான் இந்த வரிகளையும் உச்சரித்தார்.

‘தூய்மைக் கேடானவன், தான் செய்வதை,
பலன் நல்லதாக விளையாதவரையிலும்
செய்வது நல்லதுதான் என்று நினைக்கிறான்.
அந்தத் தவறு, அப்படியாக முதிரும்போதுதான்
‘செய்தது தவறு’ என்று அந்த மனிதன் உணர்கிறான்.
நல்லவன் நல்லதையும், நல்லதாக முதிராத வரையும்
தவறாகச் செய்கிறோமோ என்றே எண்ணுகிறான்
எனினும், அவன் செய்த நல்லது,
அப்படியாக முதிரும்போதுதான்,
‘செய்தது நல்லது’ என்பதாக அவன் அறிகிறான்.’

இந்தச் சொற்களின் முடிவில் தேவதை பௌத்தத்தின் முதல் பாதையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கால்களில் சக்கர ரேகையிருக்கும் புத்தர் முன் விழுந்து அந்தத் தேவதை கதறியது: ‘பேராசையால் வீழ்ந்தேன்; தூய்மைக் கேடு நிறைந்தவளான என்னை மாயை தவறாக வழிநடத்திவிட்டது. அறியாமை என்னைக் குருடாக்கியது. உமது நற்பண்புகளை அறியாத நான் தீயச் சொற்களை உதிர்த்தேன். என்னை மன்னித்து விடுங்கள்!’ அதன்பின்னர் தேவதையை புத்தரும் பெரு வணிகரும் மன்னித்தருளினர்.

இந்த நேரத்தில் அனாதபிண்டிகர் புத்தரின் முன்னிலையில் தனது நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்: ‘அய்யா, புத்தருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் நான் ஆதரவாக இருப்பதைத் தடுக்க இந்த தேவதை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது; எனினும் அதனால், வெற்றிபெற முடியவில்லை; உதவிகள் செய்வதைத் தடுக்க முயன்றாலும், நான் மேலும் உதவிகளை அளித்துக் கொண்டிருந்தேன்! இது நான் செய்த நல்ல விஷயம் இல்லையா?’

கெளதமர் இவ்வாறு கூறினார்: ‘வணிகரே! சங்க நம்பிக்கையில் உங்களை இணைத்துக் கொண்டவர் நீங்கள்; சிறந்த சீடர்; உங்கள் நம்பிக்கை உறுதியானது; உங்களுடைய பார்வை தூய்மையானது. இந்த சக்தியற்ற தேவதையால் உங்களைத் தடுக்கமுடியவில்லை என்பதில் வியப்பில்லை. இதில் அற்புதம் ஒன்றிருக்கிறது; புத்தர் தோன்றாத காலத்தில், அறிவு முழுமையடையாத காலத்தில், விவேகமும் நல்லதும் நிறைந்த, தாமரை மலரிதயம் கொண்டவர்கள் முற்பிறவியிலும் மற்றவர்க்கு உதவிகளை அளித்தனர். சிற்றின்ப உணர்வுகளால் நிரம்பிய இந்த உலகின் அதிபதியான மாரன் சொர்க்கத்தின் நடுவில் தோன்றி அவற்றைத் தடுக்க முயன்றான்; எண்பது கன அடி ஆழமான, செந்தழல் கங்குகளால் நிறைந்த பள்ளத்தைக் காட்டி ‘நீங்கள் உதவிகள் செய்தால், இந்த நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவீர்கள்’ என்று குரல் கொடுத்தான். எனினும், அந்த அச்சுறுத்தலையும் மீறி போதிசத்துவர் உதவி செய்தார்’.

அனாதபிண்டிகரின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த முற்பிறவிக் கதையை புத்தர் கூறத்தொடங்கினார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *