Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 3ம் பகுதி)

முற்பிறவி கதை இது.

அப்போது பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த நகரத்தில் பெரும் தனாதிகாரியின் குடும்பத்தில் போதிசத்துவர் பிறந்திருந்தார். ஓர் அரச குடும்பத்தின் இளவரசன்போல் சொகுசு வசதிகளுடன், அனைத்து ஆடம்பரங்களுடன் வளர்க்கப்பட்டார். தனது பொறுப்புகளைச் சமாளிக்கும் வயதை அடைந்தார்; பதினாறு வயதுதான் என்றாலும் அப்போதே அனைத்துச் செயல்களையும் வெற்றிகரமாக முடிக்கும் அளவுக்குத் தகுதியுள்ளவராகத் தன்னை ஆக்கிக்கொண்டார். அவரது தந்தை இறந்த பின்னர், அவர் வகித்து வந்த தனாதிகாரி பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

தருமச் செயல்கள் செய்வதற்கு ஆறு நிலையங்களை அவர் திறந்தார். நகரின் நான்கு வாயில்களிலும் அவை அமைந்தன; மட்டுமின்றி, நகரின் மையத்தில் ஒன்றும் அவரது மாளிகையின் வாயிலில் ஒன்றும் என மண்டபங்களைக் கட்டினார். மிகவும் தாராள மனம் படைத்த பெருங்கொடையாளி அவர். பௌத்தம் கூறும் கட்டளைகளைப் பின்பற்றினார். மன அமைதியையும் மன மகிழ்வையும் தரும் வகையில் புத்தர் போதித்த உபோசத கடமைகளையும் கடைப்பிடித்தார்.

பச்சேக புத்தர் ஒருவர் தன்னை வருத்திக் கொள்ளும் ஏழு நாட்கள் உண்ணாநோன்பை முடித்திருந்தார். பிட்சை ஏற்கும் முடிவில் வழக்கமாக நகரைச் சுற்றிவர நினைத்தார். நினைவிழந்த பசி மயக்கத்தில் இருந்தார் அவர். அன்று காலை உணவை வாராணசியின் பெரும் தனாதிகாரியின் இல்லத்தில் பெற முடிவு செய்திருந்தார்.

அதிகாலையில் வெற்றிலைக்கொடியால் பற்களைச் சுத்தம் செய்து, அனோதட்டா ஏரியில் வாய் கொப்பளித்து, உடல் சுத்தம் செய்துகொண்டார். மனோசிலா பீடபூமியில் நின்று ஆடையணிந்து இடுப்புக் கச்சையை இறுகக் கட்டிக்கொண்டார்; மேலங்கியையும் அணிந்துகொண்டார்; பிக்ஷை ஏற்கும் திருவோடு ஒன்றையும் கையில் ஏந்திக்கொண்டார். அவர் பெற்றிருந்த அமானுஷ்ய சக்தியால் வான் வழியாகப் பயணித்துப் போதிசத்துவரின் மாளிகை வாசலுக்கு வந்தார்.

போதிசத்துவர் காலை உணவு சாப்பிடும் நேரம் அது; அவருக்கு உணவு பரிமாறும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மிக நேர்த்தியான, அருஞ்சுவை மிக்க பலவகை உணவுகள் கொண்டு வரப்பட்டிருந்தன; அப்போது வாசலில் பச்சேக புத்தர் நின்றிருந்தார்; அவர் அங்கு நிற்பதை அறிந்த போதிசத்துவர் உடனடியாக இருக்கையில் இருந்து எழுந்தார்; அவருக்குப் பணி செய்தபடி அருகில் நின்ற உதவியாளர் பக்கம் திரும்பினார்; அவருடைய சேவை தேவை என்பதுபோல் அவருடைய பார்வைக் குறிப்பு இருந்தது.

‘நான் என்ன செய்ய வேண்டும், எஜமானே?’

போதிசத்துவர் அவரைப் பார்த்து, ‘வாசலில் நிற்கும் புனிதரின் பிக்ஷைப் பாத்திரத்தை வாங்கி வாருங்கள்’ என்றார்.

இந்தச் சொற்களைக் கேட்டதும், அந்த நொடியில் தீயவனான மாரன் கிளர்ச்சியுடன் அங்குத் தோன்றினார். ‘பச்சேக புத்தன் உணவு உண்டு ஏழு நாட்கள் ஆகிறது; இன்று அவன் எதுவும் சாப்பிடவில்லை என்றால், அவன் இறந்து போய்விடுவான். அவனுக்கு உணவு கிடைக்கவிடாமல் தடுத்து நான் அவனை இப்போது அழிப்பேன். தனாதிகாரி அவருக்கு உணவு கொடுப்பதையும் தடுப்பேன்.’

உடனே போதிசத்துவரின் மாளிகை வாயிலுக்குச் சென்ற அவர், அவீசி என்ற பெரும் நரகத்தில் இருப்பது போன்ற நெருப்புக் குழி ஒன்றை அங்கு தோன்றும்படிச் செய்தார். எண்பது கண அடி அளவுள்ள அந்தக் குழிக்குள் தீக்கங்குகள் சுடர் விட்டுப் பெரிதாக எரிந்தன. நெருப்புக் குழி உருவாகியதும், மாரன் ஆகாயத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

வாசலில் நின்றவரிடம் பிக்ஷைப் பாத்திரத்தை வாங்கச் சென்ற உதவியாளர், நெருப்பைப் பார்த்து அஞ்சிப் பின்வாங்கி வீட்டுக்குள் வந்தார். அவரைப் பார்த்துப் போதிசத்துவர்,

‘பணியாளரே, நீங்கள் திரும்பி வரக் காரணம் என்ன?’ என்றார்.

‘என் அன்புக்குரிய எஜமானே! வீட்டு வாசலில் பெரும் நெருப்புக் குழி. தீக்கங்குகள் பெரிதாக எரிகின்றன. என்னால் அதைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.’

மாளிகையில் இருந்த பணியாளர்கள் அடுத்தடுத்து அதைத் தாண்டிச் செல்ல முயன்றனர். முடியவில்லை. அச்சத்தில், அந்த இடத்திலிருந்து வேகமாக ஓடிவிட்டனர்.

போதிசத்துவர் தனக்குள் நினைத்துக் கொண்டார்: ‘வசியத்துக்குப் பொறுப்பான மாரன் இன்று என்னைப் பிக்ஷை அளிக்கவிடாமல் தடுக்க முயற்சிக்கிறான் என்று நினைக்கிறேன். நூறு அல்லது ஆயிரம் மாரன்கள் இவ்வாறு நான் செய்வதைத் தடுக்க முயற்சி செய்வார்கள். அதை மீறித்தான் நான் பிக்ஷை அளிக்கவேண்டும் என்பதை நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. யாருக்குச் சக்தி அதிகம், யாருடைய மன வலிமை பெரிது என்று இன்று பார்த்துவிடலாம். என்னுடையதா மாரனுடையதா?’

அருகில் பிக்ஷையுடன் தயாராக இருந்த பாத்திரத்தைத் தன் கையில் போதிசத்துவர் எடுத்துக் கொண்டார். வாசல் நோக்கிச் சென்று வெளியில் இறங்க எத்தனித்தார். நெருப்பு வழியடைத்து எரிந்து கொண்டிருந்தது. அந்தக் குழியின் விளிம்பில் நின்று அந்தரத்தில் தொங்குவதுபோல் நின்றிருந்த மாரனை நோக்கிக் கேட்டார்.

‘யார் நீ?’

‘யாரா, நான் தான் மாரன்’ என்று பதில் வந்தது.

‘தீக் கங்குகள் கொழுந்துவிட்டெரியும் இந்த நெருப்புக் குழியை நீங்கள்தான் உருவாக்கினீர்களா?’

‘ஆம் நான்தான் உருவாக்கினேன்.’

‘எதற்காகச் செய்தீர்கள்?’

‘நீ அன்ன பிக்ஷை அளிப்பதைத் தடுக்கத்தான். அந்தப் பச்சேக புத்தனின் வாழ்க்கையை அழிக்கத்தான்’.

‘அன்னதானம் செய்வதிலிருந்து என்னைத் தடுக்கவோ பச்சேக புத்தரின் வாழ்க்கையை அழிக்கவோ உங்களை அனுமதிக்க மாட்டேன். யார் வலிமையானவர், உங்கள் வலிமையா என்னுடைய வலிமை பெரிதா என்பதை இன்று பார்க்கப் போகிறேன்.’

நெருப்புக்குழியின் விளிம்பில் நின்றபடி அவர் ஓங்கிக் குரல் கொடுத்தார்: ‘வணக்கத்துக்குரிய பச்சேக புத்தரே, இந்த நெருப்புக் குழியில் நான் தடுமாறி தலைகீழாக விழுந்தாலும் பின்வாங்கமாட்டேன். நான் அளிக்கும் உணவைப் பத்திரமாக எடுத்துச் செல்லுங்கள்’ என்றவர்அத்துடன் இந்த வரிகளையும் உச்சரித்தார்:

நேராகவோ தலை குப்புறவோ
இந்த நெருப்புக் குழியெனும் நரகத்தில்
மகிழ்ச்சியுடனே விழுவேன்; ஆனால்,
இழிவான எதையும் செய்ய மாட்டேன்,
வாருங்கள், இந்த உணவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்தச் சொற்களை உதிர்த்த போதிசத்துவர், உணவுப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தீக்குழியின் மேற்பரப்பில் நடப்பதுபோல், உறுதியுடன் இறங்க முயன்றார். தீக்கங்குகள் அவரைத் தீண்டவில்லை. எண்பது அடி ஆழமுள்ள அந்தக் குழியில் பெரிய, ஒப்பற்ற தாமரை மலர் ஒன்று மேலெழுந்தது. போதிசத்துவரின் பாதங்களை அந்த மலர் தாங்கிக்கொண்டது! மலரிலிருந்து நறுமணத்துடன் மகரந்தத் தூள் வெளிப்பட்டது. தூவுவதுபோல் அந்த உயர்ந்த மனிதரின் தலையில் விழுந்தது. போதிசத்துவரின் உடல் முழுவதும் தலை முதல் கால் வரையிலும் தங்கத் துகள்கள் போல் அவை விழுந்தன! தாமரை மலரின் மையத்தில் நின்றபடி அவர் பச்சேக புத்தரின் பாத்திரத்தில் தான் எடுத்து வந்த சுவையான உணவை இட்டார்.

பச்சேகர் உணவை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்தார். கையிலிருந்த பிக்ஷைப் பாத்திரத்தை விண்ணுலகம் நோக்கி வீசி எறிந்தார். மக்கள் அனைவரும் பார்க்கும்படியாக அந்தக் கிண்ணம் போலவே அவரும் காற்றில் எழுந்து மேலேகினார். மீண்டும் இமயமலையை நோக்கி ஆகாய மார்க்கமாக, மேகங்களின் இடையில் அற்புதமான வடிவில் உருவாகிய பாதையில் சென்றார்.

தோற்றுப்போய், ஏமாற்றத்துடன் நின்ற மாரனும் தன்னுடைய வசிப்பிடத்துக்குத் திரும்பிச் சென்றார்.

எனினும், தாமரையில் நின்றபடி பார்த்து நின்ற மக்களுக்குப் போதிசத்துவர் தம்மத்தை உபதேசித்தார். தானமளிப்பதையும் பௌத்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதையும் புகழ்ந்து பேசினார். பின்னர் ஏராளமானோர் கூடியிருந்த வாசலிலிருந்து விலகி மாளிகைக்குள் சென்றார். வாழ்நாள் முழுவதும் பெருந்தன்மையுடன் தான தருமங்களைச் செய்தார். வேறு பல நற்செயல்களையும் செய்தார்.

கதை சொல்லிமுடித்த புத்தர் இவ்வாறு கூறினார்: ‘சீடரே, உண்மையை ஆய்ந்தறிந்திருக்கும் உங்களைத் தேவதையால் வெல்ல முடியவில்லை என்பதில் ஆச்சரியமேதுமில்லை; கடந்த பிறவியில் விவேகமுள்ளவரும் நல்லவரும் செய்த செயல்கள் தாம் உண்மையில் வியப்பானவை’.

சீடர்களுக்கு உபதேசமும் பாடமும் முடிந்தது. ததாகதர், முற்பிறவித் தொடர்புகளைச் சுட்டிக்காட்டினார், ‘அந்தப் பிறவியின் பச்சேக புத்தர் இறந்துவிட்டார்; மீண்டும் அவர் பிறக்கவில்லை. மாரனை வென்று, தாமரையில் நின்று பச்சேக புத்தரின் பாத்திரத்தில் பிட்சையிட்ட வாராணசியின் தனாதிகாரியாக நான் பிறந்திருந்தேன்.’

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *