(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 1ம் பகுதி)
வணக்கத்துக்குரிய சாரிபுத்தர் பிக்ஷை எடுத்துச் சிரமப்படும் ஓர் ஏழைச் சிறுவனைக் காண்கிறார். அவனுக்கு பௌத்த நெறிமுறைகளை எடுத்துரைத்து சங்கத்தில் சேர்க்கிறார். முன்னைப் போலவே போதிய உணவைப் பெற முடியவில்லை என்றாலும், அந்தச் சிறுவனால், உரிய வயதில் அருக நிலை எய்த முடிகிறது. எனினும், இறக்கும் வரையிலும் அவரால் முழுமையாக ஒரு வேளை உணவைப் பெற்று உண்ண முடியவில்லை.
அவர் இறந்த பின்னர், அவருடைய உடல் எரியூட்டப்படும் சடங்கு புத்தர் முன்னிலையில்தான் நடக்கிறது. விசித்திரமான அவரது வாழ்வைப் பற்றி துறவிகள் அனைவரும் தமக்குள் பேசிக்கொள்கின்றனர். கௌதமரிடம் இதற்கான விளக்கம் கேட்கின்றனர். முந்தைய பிறவியில் மற்றவர்களுக்கு உணவு கிடைப்பதைத் தடுக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பதால், அந்த வினைப்பயனின் தொடர்ச்சியாக இப்போது அவர் அனுபவித்த துயரம் இருக்கிறது; எடுத்த அனைத்துப் பிறவியிலும் அவர் அப்படித்தான் துயரங்களை அனுபவித்தார் என்ற புத்தர் அந்த முற்பிறவிக் கதையையும் கூறுகிறார். வினைப்பயன் என்ன என்பதையும் விளக்குகிறார்.
0
லோசாகாவின் பெற்றோர்கள் கோசல நாட்டில் மீனவ கிராமம் ஒன்றில் வாழ்ந்தனர். அந்தக் கிராமத்தில் ஆயிரம் மீனவக் குடும்பங்கள் இருந்தன. திறமைசாலிகளான அந்த மீனவர்கள், பிடிக்கும் ஏராளமான மீன்களை விற்றுத் தம் வாழ்க்கையை நடத்திவந்தனர். அவரது தாய் அவரைக் கருத்தரித்திருந்தபோதே அந்தக் கிராமத்தவர் துயரத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர்.
அவன் கருவில் உருவான அன்றைக்கு, வலைகளைக் கையிலேந்தி ஆற்றிலும் குளங்களிலும், ஏரிகளிலும் மீன் பிடிக்கச் சென்ற அனைவரும் வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். அவர்களுக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை. மோசமான நாட்கள் அவர்களைத் தொடர்ந்தன. அந்த மக்கள் வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டனர். அவன் பிறப்பதற்கு முன்பாகவே அந்தக் கிராமத்தின் வீடுகள் ஏழு முறை தீக்கிரையாகின. அரசனின் வரி வசூல் செய்யும் அதிகாரி பல முறை அந்தக் கிராமத்துக்கு வந்து அந்த மக்களை வரி கேட்டுச் சிரமப்படுத்தினான்.
இப்படியாக அந்த மக்கள் பரிதாபகரமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். கடந்தகாலத்தில் இவ்வாறு எப்போதும் சிரமப்பட்டதில்லையே; இப்போது இதுபோன்ற நிலை தமக்கு ஏன் ஏற்பட்டது; முற்றிலும் அழிந்துபோகப் போகிறோமோ என்று அஞ்சினர். கிராமத்தினர் ஒன்று கூடி இதைப் பற்றி விவாதித்தனர். இப்படி ஒரு மோசமான துரதிர்ஷ்ட நிலை ஏற்பட கிராமத்தில் வசிக்கும் நம்மில் யாராவது காரணமாக இருக்கலாம். அவர்களைப் பிடித்த சாபம் தம்மையும் பாதிக்கிறதோ என்று யோசித்தனர். சம்பந்தப்பட்ட அந்த நபருக்கே அது தெரியாமல் இருக்கலாம். ஆகவே அது யார் என்று கண்டறியலாம் என்று முடிவு செய்தனர்.
கூட்டத்தில் எடுத்த முடிவின்படி கிராமத்தின் ஆயிரம் குடும்பங்களையும் இரு குழுக்களாகப் பிரித்தனர். ஒவ்வொன்றிலும் ஐந்நூறு குடும்பங்கள் இருந்தன. அன்றிலிருந்து லோசகாவின் பெற்றோர் இல்லாத குழுவினருக்கு மீன்கள் கிடைத்தன. அவர்களுக்கு எந்தப் பிரச்னைகளும் எழவில்லை. மற்ற குழுவுக்கோ பழைய நிலையே தொடர்ந்தது. அவர்கள் எவருக்கும் மீன்கள் கிடைக்கவில்லை; துரதிருஷ்டம் துரத்தியது.
ஆகவே குழுக்களை மேலும் பிரிக்கலாம் என்று முடிவு செய்தனர்; இருநூற்றைம்பது குடும்பங்கள் கொண்ட இரு குழுக்களாகவும் அதன் பின்னர் நூற்றிருபத்தைந்து குடும்பங்கள் கொண்ட பிரிவுகளாகவும் பிரித்து சோதனை செய்தனர். ஒவ்வொரு முறையும் லோசகாவின் தாய் இருக்கும் குழுவே துயரத்தைச் சந்தித்தது. இறுதியில் லோசகா குடும்பம்தான் அவர்களுடைய துயரத்துக்குக் காரணம் என்பதை உறுதி செய்தனர். ஆகவே அந்தக் குடும்பத்தைக் கிராமத்திலிருந்து விரட்டுவது என்று முடிவு செய்து அவர்களை அடித்து விரட்டினர்.
கணவனும், வயிற்றில் குழந்தையுடன் மனைவியும் வேறு இடம் தேடிச் சென்றனர். மிகவும் சிரமத்துடன் உயிர்வாழ்ந்தனர். இந்த நேரத்தில் கணவன் மனைவியை விட்டுவிட்டுத் தனியே சென்று விட்டான். மிகவும் சிரமத்துடன் அந்தத் தாய் உயிர் வாழ உணவைத் தேடவேண்டிய சூழல். எப்படியோ சமாளித்து உயிர்வாழ்ந்தவர், குப்பையும் கூளமும் நிறைந்திருந்த குறுகிய சந்து ஒன்றில் யாருடைய உதவியும் கிடைக்காத சூழலில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்தக் குழந்தையின் பிறப்புச் சக்கரத்தில் அது இறுதிப் பிறவியாம். அதனால் அவனைக் கொல்லவும் இயலாது. அத்துடன் ஒரு குடத்தில் எரியும் விளக்கு போல அந்தக் குழந்தையின் இதயத்தில் மிகப் பாதுகாப்புடன் அருகன் ஆக வேண்டும் என்ற உணர்வு தீச்சுவாலைபோல் எரிந்து கொண்டிருந்தது.
தாயையும் மகனையும் எவருக்கும் பிடிக்கவில்லை. அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அந்தக் குழந்தை, தானாக எழுந்து நின்று ஓடியாடும் வரையிலும் அந்தத் தாய் அவனைக் கவனித்துக்கொண்டாள். பிறகு அவன் கைகளில் உடைந்த பானை ஓடு ஒன்றைக் கொடுத்து வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துத் தனக்கான உணவைத் தேடிக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தாள். மனம் இடங்கொடுக்கவில்லை என்றாலும் அவனைத் தனியாக விட்டுவிட்டு ஓடிவிட்டாள். உயிர்வாழ்வதற்கான வழியை அவன் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று தாய் எண்ணினாள்.
அதன்பிறகு, தனித்துவிடப்பட்ட லோசகா பிச்சைக்காரனாக வாழ்ந்தான். கிடைத்த இடத்தில் தூங்கினான். அழுக்குக் கந்தலுடன் நீரே பார்க்காத உடலுடன் பிச்சை கேட்கும் அவனை எவருக்கும் பிடிக்கவில்லை. அவன் மீது இரக்கமோ பரிவோ எவரும் காட்டவில்லை. அவனைத் துரத்தியடித்தனர். ஏழு வயதாகிவிட்டது. அதுவரையிலும், லோசகா ஒரு நாளும் ஒருவேளை உணவையும் முழுமையாகச் சாப்பிட்டதில்லை. வீடுகளுக்கு வெளியில் தூக்கி எறியப்படும் உணவு மிச்சங்களே அவனுக்குக் கிடைத்தன. மண் தின்னும் யட்சன் போலவும், சிறு கவளங்களை உண்டு வாழும் காக்கைப் போலவுமே அவன் வாழ்ந்தான். முழுவயிறு நிரம்புவது என்ற உணர்வே அவன் அறிந்ததில்லை.
0
ஒரு நாள் சங்கத்தின் தம்மப் பிரிவின் தலைவரான மதிப்புக்குரிய சாரிபுத்தர், பிக்ஷை சேகரிக்கும் நோக்கில் சிராவஸ்தி நகரில் சென்று கொண்டிருந்தார்; அப்போது இந்தச் சிறுவனைப் பார்த்துவிட்டார். அவன் மீது பரிவும், இரக்கமும் கொண்டார். அவனை அருகில் அழைத்தார். ‘சிறுவனே, நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்? உன் பெற்றோர் யார்? எங்கே அவர்கள்?’
அருகில் வந்து அவரை வணங்கிய சிறுவன், ‘நான் எந்தக் கிராமத்தையும் சேராதவன். நான் ஓர் அநாதை. என் பெற்றோர்களால் அவர்களையும் காப்பாற்றிக்கொண்டு என்னையும் வளர்க்க இயலவில்லை. அதனால், என்னைக் கைவிட்டுச் சென்றுவிட்டனர்.
தனது பாத்திரத்தில் இருந்த உணவை அவனோடு பகிர்ந்துகொண்டார் சாரிபுத்தர். அவனை அன்புடன் நோக்கி, ‘சிறுவனே, பௌத்த சங்கத்தில் இணைந்துகொள்ள உனக்கு விருப்பமா?’ என்று கேட்டார். ‘உனக்குத் தங்க இடமும் உண்ண உணவும் கிடைக்கும். நீ செய்ய வேண்டியதெல்லாம், சங்கத்தின் நெறிமுறைகளை ஏற்பதும் தம்மத்தைப் பின்பற்றுவதும் மட்டுமே’.
‘நிச்சயம் சேர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் ஏழை அநாதையை யார் சங்கத்தில் சேர்த்துக் கொள்வார்கள்?’
‘நாங்கள் சேர்த்துக் கொள்வோம்’.
‘உங்கள் கருணை, நான் துறவியாகிறேன்’.
சாரிபுத்தர், அந்தச் சிறுவனை மடத்துக்கு அழைத்துச் சென்றார்; தம் கைகளால் அவனைக் கழுவிக் குளிப்பாட்டினார். நல்ல ஆடைகளை அணியத் தந்தார். அவனைச் சங்கத்தின் புதிய உறுப்பினராகச் சேர்த்தார். அதன் பின்னர் உரிய வயதை அடைந்தவுடன் அவன் முழுமையான துறவியானார். அவர் இப்போது துறவி லோசகா என்று அழைக்கப்பட்டார்.
இப்படி அவர் வளர்ந்த காலகட்டத்திலும் என்றைக்குமே அவருக்கு முழுமையான உணவு கிடைத்ததில்லை. அவரை அந்தக் கெடுவாய்ப்பு துரத்தியபடியே வந்தது. அவருக்குத் தேவையான உணவு என்றைக்கும் கிடைத்ததில்லை. அவர் தன்னை உயிருடன் வைத்துக்கொள்ளப்போதுமான அளவுக்கு மட்டுமே கிடைத்தது.
பெருந்தன்மையுடன் யாராவது அவருக்கு உணவளிக்க முன்வந்தாலும், அவருடைய பிக்ஷைப் பாத்திரத்தில் ஒரு கரண்டி உணவை அவர்கள் இட்டவுடனேயே அந்தப் பாத்திரம் நிரம்பிவிட்டது என்றே அளிப்பவருக்குத் தோன்றுமாம். அதனால், மீதத்தை அருகில் இருக்கும் துறவிக்கு அளித்துவிடுவார்கள். இன்னொரு கதை, அவருடைய பாத்திரத்தில் அன்னம் இடும்போதே, அளிப்பவரின் பாத்திரத்திலிருக்கும் சோறு மறைந்து போய்விடும் என்கிறது. எந்த வகையான உணவின் நிலையும் இப்படித்தான்.
எனினும், காலப்போக்கில் சங்கத்தின் நெறிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து, தேவையான நிலைகளை அடைந்து அறிவொளி பெற்று லோசகா அருக நிலையைப் பெற்றார். அப்போதும் அவருக்கு இந்த நிலைதான்.
காலத்தின் முழுமையில் இந்த உலகத்தில் அவரின் வாழ்வு நிறைவுற்றது. இறக்கும் நாள் நெருங்கியது. தம்மத் தலைவர் சாரிபுத்தர் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது லோசகாவின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்தறிந்தார். ‘லோசகா இன்று இறந்துவிடுவார்; இன்றைக்காவது அவர் போதுமான அளவு சாப்பிட முடிகிறதா என்று பார்க்கிறேன்’.
ஆகவே லோசகாவை அழைத்துக்கொண்டு சிராவஸ்தி நகருக்குள் பிக்ஷை சேகரிக்கச் சென்றார். லோசகா அவருடன் இருந்ததால், அவர் பிரபலமாக இருந்த அந்த நகரிலும் சாரிபுத்தருக்கு பிட்சைக் கிடைக்கவில்லை; மரியாதையுடன் அவரை நோக்கி மக்கள் வணக்கம் செலுத்தினர். பிக்ஷைக்காக அவர் கை நீட்டியது வீணானது. லோசகாவின் வினைப்பயன் மிகவும் தீவிரமாக இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.
எனவே துறவி லோசாகாவை மடாலயத்துக்குத் திரும்பும்படி சொன்னார். மடத்தில் அனைவரும் அமர்ந்திருக்கும் இடத்தில் காத்திருக்கும்படி கூறினார். போதுமான உணவு கிடைத்ததும் அதனை லோசகாவுக்கு அளிக்கும்படி சொல்லிக் கொடுத்தனுப்பினார். எனினும், அதை வாங்கி வந்தவர்கள், லோசகாவை மறந்து அவர்களே உணவைச் சாப்பிட்டுவிட்டனர்.
சாரிபுத்தர் மடத்துக்குத் திரும்பினார்; உள்ளே நுழையும்போது, லோசாகா அவரை நோக்கிச் சென்று வணங்கினார்.
‘துறவியே, நான் கொடுத்தனுப்பிய உணவு கிடைத்ததா?’ என்று கேட்டார் சாரிபுத்தர்.
‘உரிய நேரத்தில் எனக்குத் தேவையான உணவு கிடைத்துவிடும், அய்யா’.
இந்தப் பதிலைக் கேட்டுப் பதற்றமடைந்தார் சாரிபுத்தர். தான் அனுப்பிய உணவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்துகொண்டார். மதியம் கடந்த நேரம். எப்படியாவது இவருக்கு உணவு கிடைக்கச் செய்ய வேண்டுமே!
‘துறவியே இங்கே இருங்கள். எங்கேயும் போக வேண்டாம்’ என்று சொல்லிய சாரிபுத்தர் கோசலத்தின் அரசன் பாசநேதியின் மாளிகையை நோக்கி நடந்தார். வரவேற்ற அரசன், மதிய உணவு நேரம் கடந்துவிட்டதே. அரிசிச் சோறு இல்லையே என்று சொல்லி, பிக்ஷைப் பாத்திரம் நிறைய நான்கு வகை இனிப்பு உணவுகளை நிரப்பி அனுப்பினான்.
மடத்துக்குத் திரும்பிய சாரிபுத்தர், லோசகாவைச் சாப்பிட அழைத்தார். அவர் முன் நின்று கொண்டு, ‘துறவி திஸ்ஸாவே என் பாத்திரத்திலிருந்தே எடுத்துச் சாப்பிடுங்கள். நான் நின்று கொண்டும், நீங்கள் அமர்ந்தும் சாப்பிடவேண்டும். இல்லையேல், பாத்திரத்திலிருக்கும் உணவு மறைந்துபோய்விடும்’ என்று கூறினார். வெட்கப்பட்ட துறவி லோசகா, மறுத்தார்.
‘ஐயா, என் ஆசான் நீங்கள். கருணை என்பதற்கு அப்பாலும் எனக்கு நிறைய செய்துள்ளீர்கள். நான் உங்களை மேலும் சிரமப்படுத்த விரும்பவில்லை.’
‘ உங்களைப் போன்று விடாமுயற்சியுடன் முறையாகப் பயிற்சி செய்தவருக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சாப்பிடுங்கள்’.
‘மதிப்புக்குரியவரே, உங்கள் விருப்பம் அதுவானால், அப்படியே செய்வேன்’.
அவர் மீதான பெரும் மதிப்புடன், சாரிபுத்தரின் பாத்திரத்திலிருந்து நேரடியாக உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார். கண்கள் மிளிர உணவுண்ணும் அவரைப் பரிவுடன் பார்த்தபடி, வயிறு நிறைய அவர் சாப்பிடும் வரையிலும் பாத்திரத்தைக் கையிலேந்தியிருந்தார் சாரிபுத்தர்.
வாழ்க்கையில் முதல்முறையாக வயிறு நிரம்பிய உணர்வு எப்படி இருக்கும் என்பதை லோசகா அன்று உணர்ந்தார். அவருடைய தகுதிகளாலும் நல்வினைப் பயன்களாலும் உணவு சாரிபுத்தரின் பாத்திரத்திலிருந்து மறையவே இல்லை. லோசகா அன்று இரவு இறந்து போனார். அவருடைய பிறவிகளும் முற்றுப்பெற்றன.
0
அப்போது புத்தர் ஜேதவனத்தில் தங்கியிருந்தார். புத்தர் அருகிருக்க லேசகாவின் சிதைக்கு எரியூட்டப்பட்டது. அவருடைய அஸ்தி சேகரிக்கப்பட்டு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.
லோசகாவின் இறுதிச் சடங்கு முடிந்து துறவிகள் அனைவரும் தம்ம மண்டபத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர்: ‘துறவிகளே, லோசகாவை துரதிர்ஷ்டம் துரத்தியது. அவருக்கு எதுவும் நிறைவாகக் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும், நிறைவேறா தேவையுடன் வாழ்ந்த, கெடுவாய்ப்பும் நிறைந்த அவர் எப்படி அருகநிலை அடைய முடிந்தது?’ என்று பேசிக் கொண்டனர்.
அந்த அரங்கத்துக்குள் அப்போது புத்தர் நுழைந்தார். தன் இருக்கையில் அமர்ந்து, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டார்; அவர்கள் தமது கேள்வியை அவர் முன் வைத்தனர். ‘துறவிகளே, அவர் இவ்வாறு குறைவாக பிக்ஷையும், ஆதரவையும் பெறுவதற்கும், அப்படியிருந்தும் அருகநிலையை அடைவதற்கும் அவருடைய வினைப்பயனே காரணமாக அமைந்தன. கடந்த பிறவியில், மற்றவர்களுக்கு அளிக்கப்படுவதைத் தடுத்து அவர்கள் பயன்பெறாமல் செய்தவர் அவர்’.
‘எனினும், துயரங்களைப் பற்றியும் வாழ்க்கை நிலையாமை குறித்தும் தியானித்து அவற்றை உணர்ந்து கொண்டதும், அனைத்து விஷயங்களில் இருந்தும் தன்னை அவர் விலக்கி வைத்துக்கொண்டதும் அவரை அருக நிலைக்கு உயர்த்தின’.
இவ்வாறு சொல்லிமுடித்த கௌதம புத்தர் லோசகாவின் முற்பிறவிக் கதையையும் கூறத் தொடங்கினார்.
(தொடரும்)