(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 2ம் பகுதி)
பத்துவிதமான ஆற்றல்கள் பெற்றிருந்த காஸப்ப புத்தரின் காலம். ஒரு கிராமத்தில் இருந்த மடத்தில் துறவி ஒருவர் வசித்தார். மடத்தையும் அவரையும் அந்தப் பகுதியின் கிராமத்தலைவர் பராமரித்து வந்தார். துறவியின் நடவடிக்கைகள் முறை பிசகாமலிருந்தன. நல்லொழுக்கங்களைப் பின்பற்றி வாழ்ந்தார். உள்முகப் பார்வை நிறைந்தவராக இருந்தார்.
அருகரான மூத்த பிக்கு ஒருவர் அந்தக் கிராமத்துக்கு அருகில் வசித்தார். தனது சகாக்களுடன் சமத்துவம் பேணி வாழ்ந்தார். இந்தக் கதையின் காலத்தில் ஒருநாள் அவர் துறவி இருந்த கிராமத்துக்கு முதல்முறையாக விஜயம் செய்தார். கிராமத் தலைவர், அருகரின் நடத்தையையும் தோற்றத்தையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அருகரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவருடைய பிக்ஷைப் பாத்திரத்தை கையில் ஏந்தி அனைத்து மரியாதையுடன் அவரைச் சாப்பிடும்படி வேண்டினார்.
அதன் பின்னர் அருகர் தம்மம் குறித்து சிறிய உரை ஒன்றையும் ஆற்றினார். அந்தக் கிராமத்தவருக்குப் பெருமகிழ்வு. உரையின் முடிவில், அவரருகில் சென்று பணிவுடன் வணங்கி தனது வேண்டுகோளை முன்வைத்தார்: ‘ஐயா, இந்த ஊரில் இருக்கும் மடத்திலேயே நீங்கள் தங்கலாம். வேறு ஊருக்கு இப்போது பயணம் செய்யவேண்டாம்; உங்கள் உரையை மேலும் கேட்க விரும்புகிறேன். இன்று மாலையில் நான் அங்கு வந்து உங்களைச் சந்திக்கிறேன்.’
அருகர் அந்த மடாலயத்துக்குச் சென்றார். நுழைவாயிலில் நின்றிருந்த துறவிக்கு வணக்கம் செலுத்தி, மரியாதையுடன் அங்குத் தங்குவதற்கு இடம் கேட்டு, அவர் பக்கத்தில் அமர்ந்தார். துறவி அவரை அன்புடன் வரவேற்றார்.
‘நீங்கள் நீண்ட தூரத்திலிருந்து வருவது போல் தெரிகிறது அய்யா. பிக்ஷையாக ஏதாவது உணவு கிடைத்ததா’ என்று கேட்டார்.
‘ஓ… ஆமாம் கிடைத்ததே’ என்றார் அந்த மூத்த பிக்கு.
‘எங்கே கிடைத்தது, அருகரே?’
‘ஏன், உங்கள் கிராமத்தில்தான். மடத்துக்கு அருகிலிருக்கும் கிராமத் தலைவர் என்னை தன் வீட்டுக்கு அழைத்து அன்னமிட்டார்.’
இதைக் கேட்டதும் அந்தத் துறவி, தலையில் உஷ்ணம் ஏறுவதுபோல் உணர்ந்தார். ‘கிராமத்தலைவரா? அவருக்கு இந்த அருகரைப் பிடித்துப் போய்விட்டால், அவருடைய உதவியும் மற்ற சேவைகளும் எனக்கும் மடத்துக்கும் கிடைக்காமல் போய்விடுமே’ என்று நினைத்தார்.
அருகர் தனக்கான அறையைக் காட்டச் சொன்னதும், எந்திரம் போல் அவருக்குத் தங்குமிடத்தைக் காட்டினர். புதியவர், தான் படுப்பதற்கு அறையைத் தயார் செய்துவிட்டு, பாத்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு மேலாடையை நீக்கிப் பத்திரமாக மடித்துவைத்து தியானத்தில் அமர்ந்தார். உள்முகப் பார்வையில் ஆனந்தமாக மூழ்கினார். பௌத்த நெறிகள் காட்டிய பாதையில் பேரானந்தத்தை அனுபவித்தார்.
மாலையில் அருகரைப் பார்க்கக் கிராமத் தலைவர் வந்தார். அவருடைய பணியாளர்கள் பூக்களும் வாசனைத் திரவியங்களும் விளக்குகளும் அதற்கான எண்ணையும் எடுத்துக் கொண்டு வந்தனர். மடத்தின் வாசலில் நின்றிருந்த துறவி இவை நமக்குத்தான் என்று எண்ணினார். மாறாக, தலைவர் இவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, புதியதாக ஒரு விருந்தினர், அருகர் வந்தாரா என்று வினவினார். ஆமாம் வந்திருக்கிறார் என்று கூறியதைக் கேட்டு, அவருக்கு அறை ஏதாவது கொடுக்கப்பட்டதா? எந்த அறை என்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டார்.
அருகரின் அறைக்குச் சென்று, அவரை மரியாதையுடன் வணங்கிய தலைவர், கொண்டு வந்த பொருட்களை அவருக்கு அர்ப்பணித்தார். அதன் பின்னர் பெரியவரின் அருகில் அமர்ந்து அவருடைய உபதேசங்களையும் கேட்டார். குளிர்ந்த அந்த மாலை நேரத்தில் அந்தக் கிராமத் தலைவர் ஸ்தூபிக்கும் போதி மரத்துக்கும் தனது காணிக்கைகளைச் செலுத்தினார். அவற்றுக்கு முன் விளக்கு ஏற்றி வைத்தார். மூத்த பிக்குவையும் மடத்தின் துறவியையும் வணங்கி, மறுநாள் அவருடைய வீட்டுக்கு உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்து, விடைபெற்றுச் சென்றார்.
துறவி மனம் உடைந்துபோனார். யோசனையில் ஆழ்ந்தார்: ‘இந்தக் கிராமத்தலைவர் மீது எனக்கிருக்கும் செல்வாக்கை நான் இழக்கும் நிலை உருவாகும் போலிருக்கிறது. அருகர் இங்கு தொடர்ந்து தங்கினால், எனக்கு மதிப்பு இருக்காது. ஆதரவும் கிடைக்காது’.
மன அமைதி இழந்த அவர், இங்கு அருகரை நல்லபடியாகத் தங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தார். அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்.
மடாலயத் துறவி மறுநாள் காலையில் எழுந்து மடத்தின் மணியை முதலில் வேண்டா வெறுப்புடன் மெதுவாகத் தட்டினார். பின்னர் புதியவர் தங்கியிருந்த அறைக்குச் சப்தம் எழுப்பாமல் நடந்து சென்றார். விரல் நகத்தால் சுரண்டுவதுபோல் அறைக்கதவை ஒரு முறை தட்டினார். அருகர் எழுந்திருக்கவில்லை. வந்தது போலவே சப்தமின்றி மடத்தைவிட்டு வெளியில் வந்தார். மகிழ்ச்சி தனக்குள் பரவுவதை உணர்ந்தார். தனது திட்டத்தை வெற்றிகரமாக நடத்துகிறோம் என்று திருப்தியுற்றார்.
பின்னர் தனியாகவே கிராமத்தலைவரின் வீட்டுக்குச் சென்றார். அவரிடமிருந்து பிக்ஷை வாங்கிக் கொண்ட வீட்டுக்காரர் அவரை உட்காரச் சொல்லி, கிராமத்துக்கு வந்திருக்கும் புதியவர் உங்களுடன் வரவில்லையா எனக் கேட்டார். துறவி குழப்பமடைந்ததுபோல் நடித்தார்.
‘உங்கள் நண்பரைப் பற்றி எனக்குத் தெரியாது’ என்றார் துறவி. ‘மடத்தின் மணியை வேகமாக அடித்தேன்; அவர் அறையின் கதவையும் தட்டினேன்; எனினும் அவரை என்னால் எழுப்ப முடியவில்லை. நேற்றைய தினம் இங்கு அவர் சாப்பிட்ட சுவையான அருஞ்சுவை உணவு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அதன் விளைவாக அவர் இன்னமும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை என்று ஊகிக்கிறேன்.’
கிராமத்தலைவர் இந்தத் துறவிக்கு உணவளித்து உபசரித்தார். பின்னர், உடல்நிலை சரியில்லாமல் மடத்தில் இருப்பதாக துறவி கூறிய புதியவருக்கும் உணவை ஏற்பாடு செய்து இந்தத் துறவியிடம் அளித்தார். வேண்டா வெறுப்புடன் அதை வாங்கிக் கொண்டார் துறவி. இந்தத் தருணத்திலும் தலைவரின் கவனம் அருகரின் மீதுதான் இருக்கிறது. அவருக்கு உணவு எடுத்துச் செல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே என்று கோபம் கொண்டார்.
‘இந்தச் சுவையான உணவை அவர் தொடர்ந்து சாப்பிட்டால் இங்கிருந்து அவர் போக மாட்டார். கிராமத்தலைவரின் ஆதரவை நாங்கள் இருவரும் பங்கிட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும். அதை அனுமதிக்கக் கூடாது. ஆகவே இந்த உணவு அவருக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும். யாரும் அறியாமல் இந்த உணவை எறிந்துவிட வேண்டும். நீரில் வீசினால் யாராவது கண்டுபிடித்துவிடுவார்கள். யாருக்காவது சாப்பிடுவதற்குக் கொடுத்தாலும் தெரிந்துவிடும். தரையில் வீசி எறிந்தாலும், சாப்பிடும் காக்கைகளால் வெளியில் தெரிந்துவிடும். என்ன செய்யலாம்? ‘
தன்னுடைய சிந்திக்கும் ஆற்றல் முழுவதையும் அவர் பயன்படுத்தினார். வரும் வழியில் வயலில் குப்பை எரிந்து கொண்டிருந்தது. அருகில் சென்றவர், அதன் கங்குகளை ஓரமாக ஒதுக்கி நடுவில் இந்த உணவுப் பொட்டலத்தை வைத்தார். அது எரிந்து சாம்பலான பின்னர் மடத்துக்கு வந்தார்.
இதற்கிடையில் மடத்தில் தங்கியிருந்த அந்த அருகர், எழுந்து, குளித்து, துவைத்த ஆடை அணிந்து பிக்ஷைக்குச் செல்லும் நேரம் வரும் வரை காத்திருந்தார். துறவியைக் காணவில்லை; நேற்றே துறவியின் முகம் போன போக்கையும், நடத்தையில் கண்ட வேறுபாட்டையும் அவதானித்திருந்தார். அருகருக்கு துறவியின் எண்ணங்கள் புரிந்திருந்தன. ‘இந்தத் துறவிக்கும் அவரை ஆதரிக்கும் கிராமத்தலைவருக்கும் அல்லது சங்கத்துக்கும் இடையில் நான் ஒருபோதும் நிற்க மாட்டேன் என்பதை இந்தத் துறவி ஏன் உணரவில்லை. இவர் இன்னும் மோசமான செயல்களில் இறங்கி, தீ வினைப்பயனைச் சேர்த்துக்கொள்வதற்கு நாம் காரணமாக இருக்கவேண்டாம்’. இந்த முடிவுடன் பிக்ஷைப் பாத்திரத்துடன் வேறு இடம் நோக்கிச் சென்றுவிட்டார்.
மடத்துக்குத் திரும்பிய துறவி, புதியவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று அறிந்து கொள்ள அவர் தங்கியிருந்த அறையின் பக்கம் சென்று கதவைத் தட்டினார்.
அருகர் அங்கு இல்லை.
(தொடரும்)