(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 3ம் பகுதி)
செல்வந்தரின் வீட்டுக்கு தனியே சென்று வந்த மூத்த துறவி திரும்பிவந்து பார்த்தபோது மடாலயத்தில் புதிய துறவி இல்லை என்றதும் பதற்றத்துக்கு ஆளானார். இந்த நாட்களில் கவனிக்காமல் விட்டுப்போன பல விஷயங்களை இணைத்துப் பார்த்தார். புதிய துறவியை, தான் தரக்குறைவாக நடத்தியபோதும் சாந்தமாக அனைத்தையும் தாங்கிக் கொண்ட பொறுமை, அவர் மேல் தனக்கு ஏற்பட்ட பொறாமை, கிராமத்தலைவர் புதிய துறவி மேல் காட்டிய மரியாதை இதையெல்லாம் யோசித்து மனம் கலங்கியவர், இவர் சாதாரணத் துறவியல்ல; அருகரே. பெரும் தவறு செய்துவிட்டேனே என்று தன்னையே நொந்து கொண்டார். எனினும் நடந்தது நடந்துவிட்டது. வினைப்பயன் தன்னை விடாமல் தொடரப்போகிறது என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. அந்தத் தருணம் முதல் அவர் கொடும் இன்னல்களுக்கு ஆளாகினார். உயிருடன் இருக்கும் பேய் போல அந்த ஊரில் நடமாடத் தொடங்கினார். விரைவில் இறந்தும் போனார்.
அடுத்த பிறவியில் அவர் நரகத்தில் பிறந்தார்; அங்கேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் துன்பப்பட்டார். பெருமளவு அசுத்தங்கள் குவிந்ததன் காரணமாகத் தொடர்ந்து ஐந்நூறு பிறவிகளில் அவர் ஒரு யட்சனாகப் பிறந்தார். என்றைக்குமே அவருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைத்ததில்லை. ஒரு நாள் அவர் கழிவுகளின் எச்சத்தைச் சாப்பிட நேர்ந்தது. தொடர்ந்த அடுத்த ஐந்நூறு பிறவிகளில் அவர் நாயாகவே பிறந்தார். இங்கேயும் ஒரு நாளும் முழுமையான உணவு அவருக்குக் கிடைத்ததில்லை. ஒரே ஒரு நாள் வாந்தியாக எடுக்கப்பட்டச் சோற்றை உண்டார். வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் சாப்பிடப் போதுமானதாக அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.
அவர் நாயாகப் பிறப்பது முடிந்த பின்னருமே, காசி என்ற கிராமத்தில் ஒரு பிச்சைக்காரனின் பிள்ளையாகத்தான் அவரால் பிறக்க முடிந்தது. அவர் பிறந்த கணத்திலிருந்தே அந்தக் குடும்பம் மேலதிகமாக வறியநிலைக்குப் போனது. முன்னைப் போல எவரும் அவர்களுக்குப் பரிந்து அளிப்பது இல்லை. மிட்டவிந்தகன் என்று அந்தச் சிறுவன் அழைக்கப்பட்டான். இந்தப் பிள்ளை பிறந்த பின்னர்தான் தமக்கு இந்த நிலைமை என்று உணர்ந்த அந்தப் பெற்றோர்கள் கொடிய வறுமையைத் தாங்க இயலாமல் அழுதபடியே சிறுவனை வீட்டிலிருந்து விரட்டிவிட்டனர்: ‘சாபமாக வந்தவனே, இங்கிருந்து போய்விடு’.
ஊரைவிட்டு இவ்வாறு துரத்தப்பட்டு அலைந்து திரிந்த மிட்டவிந்தகன் வாராணசி நகரத்தை அடைந்தான். அப்போது அங்கு போதிசத்துவர் இருந்தார். அவரிடம் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் பயின்று கொண்டிருந்தனர். அக்காலகட்டத்தில் வாராணசி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது; ஏழைச் சிறுவர்களுக்கு உணவளித்து இலவசமாகக் கல்வி கற்பிக்க அம்மக்கள் உதவி வந்தனர். இந்த அடிப்படையில் விந்தகனும் போதிசத்துவரிடம் மாணவனாகச் சேர்ந்தான்.
எனினும், எப்போதும் முரட்டுத்தனத்துடன் நடந்து கொண்டான். ஆசிரியர் சொல் கேளாதவனாக சக மாணவர்களுடன் எப்போதும் சச்சரவிலும் சண்டையிலும் ஈடுபடுபவனாக இருந்தான். கண்டித்துச் சரி செய்ய இயலாதவனாக நடந்துகொண்டான். ஆசிரியரின் முயற்சிகள் தோற்றுப்போயின. விந்தகன் அந்த இடத்திலிருந்து ஓடிப்போனான். நகரத்தின் எல்லையிலிருந்த கிராமத்தில் கூலி வேலை தேடினான். அங்கு மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ஒரு பெண்ணை மணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டான்.
இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள், இவன் போதிசத்துவரிடம் மாணவனாக இருந்தவன் என்று அறிந்து அவர்களுக்கு அடிப்படையான சிலவற்றைக் கற்பிக்கும்படி வேண்டினர்; அவனுக்கு கிராமத்தில் குடிசை ஒன்றைக் கட்டி, போதுமான பணமும் தந்தனர்.
இவ்வாறு ஒரு நல்ல வாழ்க்கையை விந்தகன் வாழத்தொடங்கினான். எனினும் வினைப்பயன் அவனைத் துரத்தியது. அரசன் பல முறை வரி வசூல் என்ற பெயரில் அந்தக் கிராமத்தினரைப் பழிவாங்கினான். இயற்கையும் சும்மா இருக்கவில்லை. ஏழுமுறை அக்குடிசைகள் தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டது. ஊருக்கு நீராதாரமாக இருந்த குளமும் வற்றிப்போய்விட்டது.
அம்மக்கள் இதைப்பற்றி தமக்குள் தீவிரமாகப் பேசி விவாதித்தனர். இந்தத் திடீர் மாற்றங்கள் எதனால்? விந்தகன் இந்த ஊருக்கு வருவதற்கு முன்னால் இவ்வாறான நிலைமை இல்லையே! அவன் இங்கு வந்த பின்னர்தான் இந்தக் கொடிய நிலை! ஆகவே, விந்தகனை அங்கிருந்து அடித்துத் துரத்தினர். குடும்பத்தினருடன் ஒரு காட்டின் வழியாகப் பயணம் செய்துகொண்டிருக்கும் போது, நரமாமிசம் உண்போர் அவன் மனைவியையும் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டனர்.
அங்கிருந்து தப்பித்து ஓடிவந்த விந்தகன் பல இடங்களில் சுற்றித்திரிந்தான். கம்பீரா என்ற கடலோர நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அன்று கப்பல் ஒன்று அங்கிருந்து புறப்பட இருந்தது. கப்பலில் பொருட்கள் ஏற்றும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அந்தக் கப்பலில் பணியாளாகச் சேர்ந்தான் விந்தகன். கப்பல் ஒருவார காலத்துக்குச் சரியாகச் சென்றது. எனினும் ஏழாவது நாள், நடுக்கடலில், ஒரு பாறை மேல் ஏறியதுபோல், முன்னும் பின்னும் நகராமல் கப்பல் அப்படியே நின்றுவிட்டது.
கப்பலின் மாலுமிகள், இந்த கேட்டுக்குக் காரணம் யாராக இருக்கலாம் என்று தீர்மானிக்க முயன்றனர். அவர்களது உத்தியில் ஏழுமுறையும் விந்தகனே காரணம் என்று வந்தது. ஆகவே, விந்தகனுக்கு மூங்கில் மிதவை ஒன்றையும் துடுப்பையும் கொடுத்துக் கப்பலிலிருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் கப்பல் கடலில் தடையின்றிச் சென்றது.
மிதவைப்படகில் அலைகளின் மீது பயணத்தைத் தொடர்ந்தான் விந்தகன். காசப்ப புத்தரின் காலத்தில் அவருடைய கட்டளைகளை இவன் கேட்டிருந்தான். அவை இப்போது இவனுக்கு உதவும் சூழல் உருவானது. கடல் பயணத்தில் ஒரு நாள், நான்கு தேவதைகள் வாழும் பளிங்கு அரண்மனையை எதிர்கொண்டான். விமானபீதா என்ற அந்தத் தேவதைகள் சில நாட்கள் தண்டனையும் சில நாட்கள் மகிழ்ச்சியும் என்று வாழ விதிக்கப்பட்டவை. அவை இவனை வரவேற்று உபசரித்தன.
அவர்களுடன் இவன் ஏழு நாட்கள் மகிழ்ச்சியுடன் வசித்தான். தண்டனைக்குச் சென்றுவிட்டு இங்கேயே நாங்கள் திரும்பிவரும்வரையிலும் காத்திருக்கும்படி விந்தகனிடம் சொல்லிவிட்டு அவை சென்றன. எனினும், அவை புறப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறிய விந்தகன், கடல் நடுவில் மற்றொரு அரண்மனையை எதிர்கொண்டான். அந்த வெள்ளி அரண்மனையில் எட்டுத் தேவதைகள் வசித்தன.
இங்கும் அதே நிலைமைதான். ஏழு நாட்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்குப் பின்னர் தேவதைகள் தண்டனைக்குச் சென்றபின்னர். அங்கிருந்து புறப்பட்ட விந்தகன் பதினாறு தேவதைகள் வசிக்கும் அரண்மனைக்கு வந்தான். விலையுயர்ந்த கற்களும் ஆபரணங்களும் கொண்டு உருவான மாளிகை அது. இங்கும் முன்போலத்தான். அதன் பின்னர், தங்கத்தால் கட்டப்பட்டிருந்த அரண்மனைக்கு வந்தான். அங்கு முப்பத்திரண்டு தேவதைகள் இருந்தன. அங்கும் தேவதைகள் சொல் கேளாமல் புறப்பட்டவன், தீவுகளின் மத்தியில் யட்சர்கள் வாழும் ஒரு நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு யட்சினி ஒருத்தி வெள்ளாட்டின் வடிவம் எடுத்துச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தாள். அது அறியாத விந்தகன் அந்த ஆட்டை அடித்துச் சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் அதன் காலைப் பிடிக்கச் சென்றான். யட்சினி இவனை உதைத்து எறிந்தாள். கடலின் மேலாகப் பறந்து சென்றவன், வாராணசியின் கோட்டை அகழியின் தடுப்பு அரண்களின் மேல் விழுந்து, சரிந்து தரையில் உருண்டான்.
அந்த நாட்டு அரசனின் ஆடுகளைத் திருடுவதற்கு அகழியின் அந்தப் பகுதியைத்தான் திருடர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆட்டு மந்தைக் காவலர்கள் திருடர்களைப் பிடிக்க அந்தப் பகுதியில் மறைந்து இருந்தனர். விழுந்த இடத்திலிருந்து எழுந்த விந்தகன் ஏராளமான ஆடுகளைப் பார்த்தான். அவன் இவ்வாறு நினைத்தான்: ‘‘அந்தத் தீவில் ஆட்டின் காலைப் பிடித்தேன். அது என்னை உதைத்ததால், கடல்கள் தாண்டி இங்கு வந்து விழுந்தேன். அதுபோல் இப்போது இந்த ஆடுகள் ஒன்றின் காலைப் பிடிப்போம். மீண்டும் உதை வாங்கி தேவதைகள் வசிக்கும் அரண்மனை ஒன்றில் நாம் விழக்கூடும்’.
இப்படி நினைத்தபடி, ஓர் ஆட்டின் காலைப் பிடித்தான் . உடனே அந்த ஆடு பயத்தில் கத்தியது. மறைந்திருந்த காவலர்கள் நாலா பக்கங்களிலிருந்தும் ஓடி வந்து இவனைச் சூழ்ந்து கொண்டனர். ‘இவ்வளவு நாட்களும் ஆடுகளைத் திருடிச் சென்றவன் இவன் தானா’.
அவனைக் கயிற்றால் கட்டி அரசனிடம் இழுத்துச் சென்றனர். அந்த நேரம், தனது மாணவர்களுடன் போதிசத்துவர் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார். கயிறுகளால் கட்டியிழுத்துச் செல்லப்பட்ட விந்தகனைப் பார்த்ததும், அவன் தனது முன்னாள் மாணவன் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. காவலர்களைப் பார்த்து, ‘ இவன் எனது முன்னாள் மாணவன். எதற்காக இவனைப் பிடித்துச் செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘ஆசானே, ஆடு திருட வந்தவன். அரசனிடம் கொண்டு செல்கிறோம்.’
‘சரி, எனது வேண்டுகோளை ஏற்று இவனை என்னிடம் சேவை செய்ய அனுமதிக்கிறீர்களா?’
‘அப்படியே, செய்யலாம், ஆசானே.’
காவலர்களிடம் இருந்து விடுதலையான விந்தகனைப் பார்த்து, இவ்வளவு நாட்களும் எங்கு போயிருந்தாய், என்ன செய்தாய் என்று போதிசத்துவர் கேட்டார். விந்தகன் கடந்தகாலத்தை, அந்நாட்களில் அனுபவித்த வேதனைகளை அவரிடம் விவரித்தான்.
‘அவனுக்கு நன்மை செய்யலாம் என்று நினைத்து உதவ வந்தவர்கள் சொல்பேச்சைக் கேட்காததால், இத்தனைத் துயரங்களை அவன் அனுபவிக்க நேர்ந்தது’ என்றார் போதிசத்துவர்.
இவ்வாறு கதையைச் சொன்ன ஆசான், ‘‘‘ஒருவருடைய நன்மையை நாடுபவரின் அறிவுரையை ஏற்காதவர், அவரது நலனில் அக்கறை கொண்டவர்கள் நன்னடத்தைகளைக் கற்பித்திருந்தபோதிலும் ஆட்டின் காலைப் பிடித்த விந்தகனைப்போல் வருந்த வேண்டிய நிலைதான் ஏற்படும்’’ என்று போதித்தார்.
இப்போது மூத்தப் பிக்குவாகப் பிறந்திருந்த லோசகர் தான் முற்பிறவியில் மிட்டவிந்தகனாகப் பிறந்திருந்தார். நானே புகழ் பெற்று விளங்கிய போதிசத்துவராக அவதரித்திருந்தேன்’ என்று சொல்லிமுடித்தார்.
(தொடரும்)