(தொகுப்பிலிருக்கும் 9வது கதை)
நள்ளிரவில் தன் மனைவியையும் மகனையும் கையெட்டும் தூரத்திலிருந்த அரசையும் துறந்து, இந்த உலகமெனும் சாம்ராஜ்யம் ஒளிர்ந்து பிரகாசிக்க, அரண்மனையை விட்டு வெளியேறினான் இளவரசர் சித்தார்த்தன். அன்றைக்கு ஆஷாட பௌர்ணமி. உத்தர ஆஷாட பௌர்ணமி. எச்சிலை உமிழ்வதுபோல் அனைத்தையும் அவர் துறந்தார்.
சந்தகன் என்ற பாதுகாவலன் சித்தார்த்தரைத் தொடர்ந்து வந்தான். லாயத்தில் இருந்த கந்தகன் என்ற அவரது வெள்ளைக் குதிரையில் ஏறிக்கொண்டார். அரண்மனையிலிருந்து வெளியேறிய அவருக்கு முன்னால் அறுபதாயிரம் தேவர்கள் தீச்சுடர்களை ஏந்திச் சென்றனர். அவருக்கு இடது புறத்திலும் வலது புறத்திலும் பின் தொடர்ந்தும் இவ்வாறாக அறுபதினாயிரம் பேர் சுடர்களை ஏந்தி வந்தனராம்.
இப்படிப் பரிவாரங்கள் தொடர மதிப்புடன் பயணித்த சித்தார்த்தர் அன்று இரவில் மட்டுமே மூன்று ராஜ்ஜியங்களைக் கடந்தார். 150 கி.மீ பயணம் செய்த பின்னர் அநோமா என்ற நதிக்கரையை அடைந்து நின்றனர். சித்தார்த்தர் ஆற்றங்கரையில் நின்றபடி சந்தகனைப் பார்த்துக் கேட்டார்.
‘இந்த நதியின் பெயரென்ன சந்தகா?’
‘இளவரசே, இந்த நதியின் பெயர் அநோமா’.
‘அப்படியா? எனில் நாம் இந்த உலகத்தைத் துறப்பதும் இந்த நதியின் பெயரான அநோமா என்பது போல் புகழ்பெற்ற துறவு என்று அழைக்கப்படும்’. சொல்லிக்கொண்டே கௌதமர், அங்கவடியிலிருந்த பாதத்தைக் குதிரையின் வயிற்றுப்புறம் தட்டி குதிரைக்குச் சமிக்ஞை தந்தார்; ஏறத்தாழ ஐந்நூறு அல்லது அறுநூறு கெஜம் அகலமிருந்தது அந்த நதி; குதிரை நதியைத் தாண்டி எதிர்க் கரையில் நின்றது.
குதிரை மீதிருந்து இறங்கிய சித்தார்த்தர் வெள்ளித் தகடு போலிருந்த மணல் வெளியில் நின்றார். சந்தகன் பக்கம் திரும்பி, ‘நல்லது உன் உதவிக்கு நன்றி சந்தகா. இப்போது நீ திரும்பி நம் நகருக்குப் போகலாம். உன்னுடன் கந்தகனையும் அழைத்துச் செல். எனது ஆபரணங்களையும் வாங்கிச் செல். நான் துறவியாகப் போகிறேன்’.
‘இளவரசே, நானும் உங்களுடன் துறவியாக விரும்புகிறேன்’.
‘நீ துறவியாவதற்கு அனுமதியில்லை சந்தகா. நீ திரும்பிச் செல்ல வேண்டும். ‘ஊரில் எல்லோருக்கும் நீ தகவல் கூறவேண்டும் அல்லவா?’
சந்தகன் மூன்று முறை வேண்டிக்கொண்டும் அதை சித்தார்த்தர் மறுத்தார். அதன் பின்னர் ஆபரணங்களையும் குதிரை கந்தகனையும் அவனிடம் ஒப்படைத்தார்.
பின்னர், ‘என்னுடைய இந்தக் கற்றை முடி, துறவிக்கு ஏற்றதல்ல. அதுபோல் வருங்கால புத்தரின் முடியை வேறு எவரும் வெட்டுவதும் சரியல்ல. எனவே முடியை நானே என் கத்தியால் வெட்டிக்கொள்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டார். இடுப்பிலிருந்து கத்தியை உருவி வலது கையில் பிடித்து பின்னலாகப் போட்டிருந்த முடியையும் தலைக் கிரீடத்தையும் இடது கையால் பிடித்துக்கொண்டு வெட்டி எறிந்தார்.
முடி இரண்டு அங்குலம் மட்டுமே நீளம் இருக்கும்படி குறைத்தார். அவர் வாழ்ந்த காலம் வரையிலும் அவரது தலைமுடி அந்த அளவில்தான் இருந்தது. தலையையோ தாடியையோ அதன் பின்னர் அவர் வெட்டவோ மழிக்கவோ தேவையேற்படவில்லை.
சித்தார்த்தர் தனக்குள் சொல்லிக்கொண்டார்: ‘நான் புத்தனாக ஆவேன் என்றால், நான் வீசியெறியும் இந்த முடியும் கிரீடமும் காற்றிலேயே நிற்கட்டும்; இல்லையெனில், தரையில் விழட்டும்’.
வானத்தை நோக்கி அவற்றைப் பிடித்தபடி முடியையும் கிரீடத்தையும் ஒன்றாக வீசி எறிந்தார். அவை கீழே விழவில்லை. மீண்டும் சித்தார்த்தர் இப்படி நினைத்தார்: ‘நான் அணிந்திருக்கும் வாராணசி பட்டினால் தயாரிக்கப்பட்ட இந்த ஆடையும் ஒரு துறவி உடுத்தக்கூடியது அல்லவே’.
அவருடைய சிந்தனையைப் பத்து ஆற்றல்கள் கொண்டவரான காசப்ப புத்தரின் காலத்தில் போதிசத்துவருக்கு நண்பராக இருந்த கடிகார தேவன் அறிந்தார். ‘இன்று என்னுடைய நண்பர் பெரும் துறவை மேற்கொள்ள இருக்கிறார். நான் அங்கு உடனடியாக விரைந்து சென்று துறவிக்குத் தேவையானவை அனைத்தையும் அளிப்பேன்’.
சிரத்தையுடன் இயங்கும் ஒரு துறவியின் உடைமைகளான மூன்று வஸ்திரங்கள், பிக்ஷை சேகரிப்பதற்கான பாத்திரம், சவரக் கத்தி, ஊசி, இடுப்புக் கச்சை, நீர் வடிகட்டி ஆகிய இந்த எட்டு அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் சென்று அவருக்கு அளித்தார்.
வெளித்தோற்றத்தில் ஓர் அருகரைப் போன்று உடையணிந்த கெளதமர் துறவுக்குரிய புனிதமான துகிலையும் ஏற்றார். அதன் பின்னர் சந்தகன் அருகில் சென்ற கௌதமர், கபிலவஸ்துவுக்குச் செல்லுமாறு பணித்தார். அவருடைய பெற்றோர்களைப் பார்த்து, தான் பாதுகாப்புடன் இருப்பதாக அவர்களுக்கு நம்பிக்கையூட்டும்படி வேண்டினார். அதன் பின்னர் சந்தகன் கெளதமரை மரியாதையுடன் வணங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
ஞானத்தைத் தேடி பல பிரதேசங்களில் சஞ்சரித்த கௌதமர் இறுதியில் ஞானம் பெற்று புத்த நிலையை அடைந்தார். பின்னர் சங்கம் நிறுவுகிறார். விரிந்து பரவுகிறது அந்த அமைப்பு.
ஜேதவனத்தில் அமைந்திருந்த மடாலயத்தின் தம்ம அரங்கில் பத்து விதமான ஆற்றல்கள் கொண்ட கௌதம புத்தரின் பெரும் துறவைப் பற்றி வியந்தும் புகழ்ந்தும் துறவிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த புத்தர் தனக்குரிய இருக்கையில் அமர்ந்தார்.
‘துறவிகளே, நீங்கள் இங்கமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் விஷயம் என்ன என்று அறிந்துகொள்ளலாமா?’
‘வேறொன்றுமில்லை, ஆசானே, நீங்கள் பெரும் துறவு நிலையை எப்படி அடைந்தீர்கள் என்பது குறித்துத்தான்’.
‘துறவிகளே, ததாகதர் கடந்த காலத்தில் துறவு மேற்கொண்டது புதிதல்ல. இதேபோன்று முற்பிறவியிலும் இந்த உலகத்தையே துறந்து சென்றவர் அவர்’.
இப்படி அவர் கூறியதும், துறவிகள் அந்த நிகழ்வை விவரிக்கும்படி அவரை வேண்டினர்.
0
விதேக நாட்டை மிதிலையைத் தலைநகராகக் கொண்டு அரசன் மகாதேவன் ஆண்டுவந்தான். நீதி தவறாமல் நேர்மையுடன் மக்களை ஆண்டு வந்தான். எண்பத்து நாலாயிரம் ஆண்டுகள் அவன் ஆட்சி செய்வான் என்று கூறினார்கள். மக்களின் அன்பைப் பெற்றவனாக வாழ்ந்த அவன் ஒருநாள் தன்னுடைய நாவிதரைப் பார்த்துக் கூறினான்: ‘என்னுடைய தலையில் எப்போதாவது நரை தென்பட்டால் உடனே என்னிடம் சொல்’.
இந்த நிகழ்வு முடிந்து எண்ணற்ற ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், மன்னனின் முடிகளில் ஒரு நரைமுடியை நாவிதர் கண்டார். உடனே அரசனிடம் அதனைக் கூறினார்.
‘அப்படியா’ என்று அதிர்ந்தான் மன்னன். ‘சரி அந்த முடியை எடுத்து என் உள்ளங்கையில் வை’ என்று அவனிடம் கூறினான்.
நாவிதரும் அந்த முடியை மட்டும் தனியே விலக்கி, தங்கத்தால் ஆன கருவியின் உதவியுடன் முடியைப் பறித்து மன்னன் கையில் வைத்தார். தனக்கு மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் இருக்கிறது என்பதை அவன் அறிவான். எனினும், அந்த ஒரே ஒரு நரை முடி அவனைக் கலக்கத்தில் ஆழ்த்தியது. தன்னுடைய தலைக்கு மேல் கால தேவன் நிற்பது போல் மிகவும் கலங்கிச் சோர்ந்து போனான்.
நரை முடியை கையிலேந்தி அவன் சுற்றியிருந்தவரைப் பார்த்து இவ்வாறு கூறினான்: ‘என் தலையில் வளரும் இந்த நரை முடி என் இளமை வாழ்க்கையை எடுத்துச் செல்கிறது; தெய்விகத் தூதர்கள் இதை அறிவிக்கிறார்கள், நான் செல்ல வேண்டிய நேரம் இது.’
‘மூடனே உன்னுடைய மரணத்தை அறிவிக்கும் நரைமுடி தலையில் தோன்றிவிட்டதே’ என்று தனக்குத் தானே கதறினான். நரைமுடியை எண்ணி எண்ணி அவன் உள்ளம் கொதித்தது. உடலில் வியர்வை பெருகி அணிந்திருந்த ஆடையும் நனைந்து போனது; அந்தக் கசகசப்பும் அவனுக்கு அருவருப்பாக இருந்தது. உடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, ‘இன்றே நான் இந்த உலகத்தையும் உறவுகளையும் துறந்து ஆசிரமத்துக்குச் செல்ல வேண்டும்’ என்று எண்ணினான்.
நாவிதரை அழைத்தான். அவனுக்குக் கிராமம் ஒன்றைத் தானமாக அளித்தான். நூறாயிரம் காசுகள் வருமானம் வரும் அளவுக்கு அந்தக் கிராமம் செழிப்பானது.
அதன் பின்னர் தனது மூத்த மகனை அழைத்தான். ‘மகனே! எனக்கு வயதாகிவிட்டது. தலையில் நரைமுடி தோன்றிவிட்டது. இறப்பு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இது. இந்த உலகின் அத்தனை இன்பங்களையும் நான் அனுபவித்துவிட்டேன். இனி தெய்விக அனுபவம்தான் எனக்கு வேண்டும். ஆகவே துறவறம் மேற்கொள்ள ஆசிரமம் ஒன்றுக்குச் செல்லப் போகிறேன். ஆகவே இந்த ஆட்சிப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்.’
அவனுடைய அமைச்சர்களும் அவனை அணுகி, காரணம் என்ன என்று கேட்டனர். மன்னனும் பத்திரமாக வைத்திருந்த நரைமுடியை அவர்களிடம் காட்டி, ‘எனக்கு வயதாகிவிட்டது. இந்த முடி என் இறப்பை முன்னறிவிக்கும் ஒன்றல்லவா. ஆகவே இவ்வுலக இன்பங்களைத் துறந்து துறவு பூணுகிறேன்’ என்றான்.
சொல்லிவிட்டு, நாட்டின் எல்லையில் இருந்த தோட்டத்தில் துறவு வாழ்க்கைக்குத் தேவையான குடிலை அமைத்துக்கொண்டான். அந்த இடத்துக்கு மகாதேவனின் மாந்தோட்டம் என்ற பெயர் அளிக்கப்பட்டது.
மகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு உடனே மாந்தோட்ட ஆசிரமத்துக்குச் சென்று வசிக்கத் தொடங்கினான். மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தான். பௌத்தம் கூறும் நான்கு தெய்விக நிலைகளை அடைந்து பரிபூரண வாழ்வை முடித்து அமைதியான ஆனந்தமான இறப்பைப் பெற்றான்.
பிரம்மலோகத்தில் சில காலம் பிறப்பெடுத்து வாழ்ந்தவன் மீண்டும் மிதிலை நகரத்திலே பிறந்தான். நிமி என்ற பெயரில் மீண்டும் ஒருமுறை மன்னனாக ஆட்சி செய்தான். அரச குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு மாந்தோட்டத்தில் மீண்டும் துறவியாகத் தவமிருந்து இவ்வுலகை விட்டு நீங்கினான்.
முந்திய பிறப்பை விவரித்த புத்தர், துறவிகளுக்கு நான்கு உண்மைகளையும் எடுத்துரைத்தார். உபதேசத்தையும் பாடத்தையும் கேட்ட துறவிகளில் சிலர் முதல் நிலையை முடித்து இரண்டாம் நிலையை அடைந்தனர்; சிலர் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலையிலும் நுழைந்தனர்.
புத்தர் அதன் பின்னர் முற்பிறவித் தொடர்புகளைச் சுட்டிக் காட்டினார்: ‘முற்பிறவியில் ஆனந்தன் நாவிதராகப் பிறந்திருந்தான். அரசனின் மூத்த மகன் ராகுலன். நான் மகாதேவ மன்னனாக அவதரித்திருந்தேன்’.
(தொடரும்)