Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #31 – காண்டின ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 13வது கதை)

ஜேதவனத்தில் தங்கியிருந்தபோது இப்பிறவி நிகழ்வு ஒன்றுடன் ஒப்பிட்டு முற்பிறவி கதை ஒன்றை புத்தர் கூறுகிறார்.

துறவிகள், துறவு மேற்கொள்ளுவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை தொடர்பான பல விஷயங்கள் இப்போதும் அவர்களுடைய இந்த வாழ்வுக்குத் தடையாக இருக்கின்றன. குறிப்பாக அன்பான மனைவி.

சிராவஸ்தியில் நல்லதொரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் புத்தரைப் பற்றியும் அவர் உபதேசிக்கும் நெறிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறான். பௌத்த சங்கம் குறித்து ஆசானின் உரைகள் மூலம் அறிந்து கொண்டான். குடும்பத்தலைவனாகப் புனிதமான, முழுமையான மற்றும் தூய்மையான வாழ்க்கையை நடத்த முடியாது; ஆகவே, துறவியாக மாறி, துன்பங்களுக்கு முடிவு கட்ட எண்ணினான்.

எனவே வீட்டையும் சொத்துகளையும் மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு, ஆசான் புத்தரிடம் தன்னை சங்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டினான். புத்தரும் முறைப்படி அவனுக்கு தீக்ஷை அளித்துத் துறவியாக மடத்தில் இணைத்துக் கொண்டார். வழக்கப்படி மடாலயத்தின் பிக்குகளுடனும் போதனை செய்பவர்களுடனும் பிக்ஷை சேகரிக்கவும் சென்றார். அவர் மிகவும் இளைய துறவி என்பதால், பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிலோ மடத்தின் உணவுக்கூடத்திலோ நாற்காலி கிடைப்பதில்லை. இவரைக் காட்டிலும் மூத்தவர்களுக்கு அடுத்தே இவருக்கு மரப்பலகை போன்றவற்றில் உட்காரும் வாய்ப்பு கிடைத்தது.

அளிக்கப்படும் அன்னதானமும் அலட்சியமாகக் கரண்டியில் தூர நின்று அளிக்கப்பட்டது. நொய்க்கஞ்சிதான் அவருக்குக் கிடைத்தது. திடமான உணவு கெட்டுப்போனதாகவும், காய்கள் மிகவும் காய்ந்து போனதாகவும் இருந்தன. அவர் உயிர் வாழ இவை போதுமானதாக இல்லை.

பாத்திரத்தில் தனக்கு அளிக்கப்பட்டதை எடுத்துக்கொண்டு தான் முன்னர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்றார். மனைவி இவரை வணங்கி வரவேற்றார். பாத்திரத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, அதைக் காலி செய்தார். அதற்குப் பதிலாக நன்கு சமைத்த உணவை காய்களுடன் அளித்தாள்.

சுவையான உணவு வகைகளாலும் முன்னாள் மனைவியின் அன்பாலும் துறவி கவரப்பட்டார். மனைவியைப் பிரிந்து செல்ல மனம் வராமலேயே துறவி மடாலயத்துக்குச் சென்றார்.

இங்கே அந்த முன்னாள் மனைவி அவரது பிரியத்தைச் சோதித்துப்பார்க்க நினைத்தாள். கிராமத்தவனை அழைத்து வீட்டுக்கு வெள்ளையடித்தாள். அந்த நபர் மூலமாக வேறு சிலரையும் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு உணவு அளித்தாள். அருந்தவும் பானங்கள் தந்தாள். துறவி அவளுடைய வீட்டுக்கு வரும் நேரத்தில் அவர்களை உரையாடி, சிரித்து மகிழ்ந்திருக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

வீட்டு வாசலில், ஒரு வண்டியைக் காளைகள் பூட்டி புறப்படத் தயார் நிலையை வைத்திருக்கச் செய்தாள். சமையலறையில் பலகாரம் செய்து கொண்டிருந்தாள். அறைக்கு முன் அவள் இருப்பது தெரியாதவகையில் திரை ஒன்றைத் தொங்கவிட்டாள். கணவனாகிய துறவி வீட்டு வாசலில் வந்து நின்றார். அவரைப் பார்த்த வயதான முன்னாள் வேலைக்காரன் உள்ளே வந்து எஜமானியிடம் வாசலில் பெரியவர் ஒருவர் வந்திருப்பதாகக் கூறினான்.

‘அவரை வணங்கி, வேறு வீட்டுக்குச் செல்லும்படி கூறுங்கள்’ என்றாள் எஜமானி. அப்படி அவன் கூறியும் நகராமல் நின்றார் துறவி. மீண்டும் அவ்வாறே கூறியும் துறவி அங்கேயே நிற்பதைக் கண்டு எஜமானியிடம் அந்தத் தகவலைக் கூறினார். அவள் எழுந்து திரையை விலக்கி வெளியில் வந்து பார்த்து, ‘அய்யா, இவர் என் மகன்களின் தந்தை’ என்று திகைத்ததுபோல் கத்தினாள்.

வெளியில் வந்து துறவிக்கு வணக்கம் சொல்லி, பிக்ஷைப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டு உள்ளே அழைத்து உட்காரச் சொன்னாள். துறவிக்கு உணவு அளித்தாள். சாப்பிட்டு முடித்ததும் அவரை மீண்டும் வணங்கினாள் மனைவி:

‘ஐயா, நீங்கள் இப்போது துறவியாகிவிட்டீர்கள். நாம் இந்த வீட்டில்தானே இவ்வளவு காலமும் வசித்தோம்; எனினும், இப்போது எஜமானர் இல்லாத இந்த வீட்டை எப்படி ஒரு குடும்பம் என்று சொல்ல முடியும்? முடியாது, எனவே நாங்கள் கிராமப்புறத்தில் வேறு வீடு பார்த்திருக்கிறோம். இங்கிருந்து புறப்பட்டு செல்லப் போகிறோம். உங்கள் பணிகளை ஆர்வத்துடன் செய்யுங்கள்; நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.’

அந்தத் துறவி மனம் உடைந்து என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரம் அப்படியே நின்றார். பின்னர், ‘என்னால் உன்னை விட்டுப் பிரிந்திருக்கமுடியாது. நீ இங்கிருந்து போக வேண்டாம். நான் மீண்டும் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறேன். நான் சொல்லும் இடத்துக்கு சாதாரண மனிதர் அணியும் ஆடையை அனுப்பி வை. பிக்ஷைப் பாத்திரத்தையும் துறவியாடைகளையும் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்.’

அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள். மடாலயத்துக்குச் சென்ற துறவி, தனது பாத்திரத்தையும் ஆடைகளையும் திருப்பி அளித்தார். பிக்குகள் எதனால் வெளியேறுகிறாய் என்று கேட்ட கேள்விகளுக்கு, என் மனைவியை விட்டு என்னால் பிரிய முடியவில்லை; உலக வாழ்க்கைக்குத் திரும்புகிறேன் என்று பதிலளித்தார்.

அவரை ஆசானிடம் அழைத்துச் சென்றனர். கௌதம புத்தரிடமும் இதே பதிலைச் சொன்னார் அந்தத் துறவி.

நற்பேறுடையவரான புத்தர் அந்தத் துறவியைப் பார்த்து, ‘துறவியே, இந்தப் பெண்ணின் காரணமாகவே கடந்த பிறவியிலும் நீங்கள் உங்கள் மரணத்தைச் சந்தித்தீர்கள். நெருப்பில் வாட்டப்பட்டீர்கள்’ என்றார். அந்த நிகழ்வை விளக்குமாறு ததாகதரிடம் துறவிகள் கேட்டனர். அவரும் அதை விரிவாக எடுத்துரைத்தார்.

கடந்த காலத்தில் மகத ராஜ்ஜியத்தை ராஜகிருகத்தைத் தலைநகராகக்கொண்டு மன்னன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். பயிர்கள் நன்கு விளைந்திருந்தபோது அவற்றை மான்கள் நாசம் செய்தன; அதனால், அவை கொல்லப்பட்டன; விரட்டப்பட்டன; அதனால், அவை காட்டுக்குள் அடைக்கலம் பெற்றன. எனினும், பெண் மான் ஒன்று அந்த ஊரிலேயே மறைந்து வாழ்ந்தது. மனிதர்களின் தந்திரங்களை அறிந்திருந்தது. விலங்குகளை வேட்டையாடுபவர்களிடம் இருந்தும் விவசாயிகளிடம் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வது எப்படி என்பதை அறிந்திருந்தது. அதனால் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்தது

காட்டின் கலை மான் ஒன்று வாழ்ந்து வந்தது. குட்டியாக இருந்ததிலிருந்தே அந்த மான் காட்டை விட்டே வெளியில் வந்ததில்லை; காட்டுக்கு வந்த மனிதர்களை அது பார்த்ததில்லை. அதனால், மனிதச் சமூகத்திடமிருந்து விலங்குகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை அறிந்ததில்லை. அறுவடைக் காலத்தில் விவசாயிகளின் கெடுபிடி தாங்காமல் இந்தப் பெண் மான் உணவுக்காகக் கட்டை நோக்கி ஓடியது. இந்தப் பெண் மானைப் பார்த்ததுமே கலைமானுக்கு அதன் மீது காதல் வந்துவிட்டது. அறுவடைக் காலம் முழுமையும் இரண்டும் ஒன்றாகக் காட்டில் சுற்றின. ஒருமுறையும் பிரியவில்லை.

அறுவடைக் காலம் முடிந்ததும் பெண் மான் கிராமத்திற்குச் செல்வதற்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டது. ஒரு சிறிதும் சிந்திக்காமல் கலைமான் பெண் மானைத் தொடர்ந்து கிராமத்திற்குச் சென்றது. பெண் மான் அதைப் பார்த்து, ‘நீங்கள் இவ்வளவு காலமும் காட்டில் வாழ்ந்தீர்கள்; எளிமையான வாழ்க்கை உங்களுடையது. மனிதர்களைப் பற்றியோ, கிராமத்தில் அதன் சுற்றுப்புறங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து உங்களுக்குத் தெரியாது. எனவே என்னுடன் நீங்களும் வர வேண்டாம்’ என்று கூறியது. ஆனால் ஆண் மான் அந்தச் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பெண் மானின் மீதிருந்த அதீத அன்பினால், மகிழ்வான நாட்களை நீட்டிக்கும் தீவிரமான ஆசையில், ‘உன்னோடு இருக்கும்வரையிலும் எதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை; எதுவும் என்னை அச்சுறுத்த முடியாது’ என்று சொல்லி தொடர்ந்து வந்தது.

மலைகளில் இருந்து மான்கள் கிராமத்துக்கு வரும் நேரத்தைச் சரியாகக் கணித்திருந்த அந்தக் கிராமத்து மக்கள், அவற்றை வேட்டையாடச் சாலைகளில் பொறிகளை அமைத்துப் பதுங்கியிருந்தனர். மான் ஜோடி பயணித்த சாலையின் ஓரத்திலும் வேட்டைக்காரன் ஒருவன் காத்திருந்தான். மனிதர்களின் வாசம் அறிந்திருந்த அந்தப் பெண் மான், வேட்டைக்காரன் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகித்தது; ஆகவே, காட்டை நோக்கி திரும்பி வேகமாக ஓடியது. கலைமானை எச்சரிக்கவில்லை. ஆனால், அன்பின் மோகத்தில் வந்து கொண்டிருந்த கலைமானுக்கு மனித வாடை தெரியவில்லை. அது விழித்துக்கொண்டு ஓட முற்படுவதற்குள், அம்பு அதன் உடலில் பாய்ந்துவிட்டது.

வேடன் மறைவிடத்திலிருந்து வெளியில் இறந்துகிடந்த மானின் தோலை உரித்து, தசையை வெட்டி எடுத்தான். அருகில் நெருப்பை மூட்டி ஒரு தசைத் துண்டை அதில் வாட்டித் தின்றான். சுவையாக இருந்த அந்தப் பகுதியை மதுவுடன் சாப்பிட்டு முடித்து குருதி வடிந்த மானின் மீதி உடல்பகுதியைக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்காக பக்குவம் செய்து சுமந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்.

அந்த நாட்களில் போதிசத்துவர் அருகிலிருந்த மரங்களடர்ந்த ஒரு தோப்பில் தேவதையாக வசித்தார். இந்த நிகழ்வை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். ‘அப்பாவோ அம்மாவோ இதற்குக் காரணம் அல்ல; ஆசை மட்டுமே இந்த முட்டாள் மானின் அழிவுக்குக் காரணம். பேரின்பம், உணர்வின் தொடக்கமாக இருக்கிறது. ஆண்களின் வேதனைக்கு வழிவகுக்கும் அன்பெனும் அம்பு சபிக்கப்பட்ட ஒன்று; பெண்ணின் செல்வாக்குக்குத் தலைவணங்கும் முட்டாள் மனிதனும் சபிக்கப்பட்டவனே; பெண்களின் ஆதிக்கத்துக்குத் தன்னை விட்டுக்கொடுக்கும் ஆண்கள் இழிவானவர்கள்.’ அவருடன் வசித்த ஏனைய வன தேவதைகள் கைதட்டி ஆர்ப்பரித்தன; வாசனைத் திரவியங்களும் மலர்களும் அளித்து வணங்கின.

பாடம் முடிந்தது; நான்கு உண்மைகளையும் புத்தர் போதித்தார். உபதேசம் முடிந்தது, மனைவியின் மீதான பிரியத்தால் வாடிக்கொண்டிருந்த அந்தத் துறவி அருக நிலையை அடைவதற்கான முதல் பாதையில் தன்னை நிறுவிக்கொண்டார்.

அதன் பின்னர், ததாகதர் முற்பிறவித் தொடர்புகளையும் சுட்டிக்காட்டினார்: இப்போது அன்பின் வயப்பட்டிருந்த துறவிதான் அப்பிறவியில் காட்டில் வளர்ந்த கலைமான்; அவருடைய மனைவிதான், அந்தப் பெண் மான். தேவதையாக நான் அவதரித்திருந்தேன்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *