Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #32 – கபோட ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 42வது கதை)

‘நல்லோர் அறிவுரையை ஏற்காதவர் அழிந்து போவார்’

மடத்தின் துறவி ஒருவர் பேராசையும் உணவு உண்பதில் பெருவிருப்பமும் கொண்டவராக இருந்தார். நகரத்தில் துறவிகளுக்கு ஆதரவு அளிப்போர் அனைவரையும் தேடிச் சென்று பிக்ஷை எடுப்பவராக இருந்தார். சக துறவிகள் அவருடைய இந்த நடவடிக்கைகளை விநோதமாக, அருவருப்பாகப் பார்த்தனர். ஒரு நாள் தம்ம அரங்கில் அமர்ந்திருந்த புத்தரிடம் இதைப் பற்றித் தெரிவித்தனர்.

புத்தர் அவரைப் பார்த்து, ‘இவர்கள் சொல்வது உண்மையா? நீங்கள் பெருவிருப்பம் உடையவராக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு அவர், ‘ஆமாம் குருதேவா’ என்றார்.

‘ஆமாம், நீங்கள் முற்பிறவியிலும் இப்படித்தான் இருந்தீர்கள். உங்களுடைய இந்தக் குணத்தால் உயிரை இழந்தது மட்டுமின்றி, உங்களுக்கு ஆதரவாக இருந்த, விவேகம் நிறைந்த நல்லவர்களும் அவர்களுடைய வசிப்பிடங்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டது’ என்று கூறினார்.

துறவிகள் வேண்டியதற்கு இணங்க அந்தப் பிறப்பின் கதையை புத்தர் அவர்களிடம் விவரிக்கத் தொடங்கினார்.

அப்போது காசி ராஜ்ஜியத்தை வாராணசியைத் தலைநகராகக் கொண்டு பிரம்மதத்தன் ஆண்டு கொண்டிருந்தான். போதிசத்துவர் அந்த நகரத்தில் ஒரு புறாவாகப் பிறப்பெடுத்து இருந்தார்.

அந்த நகரத்து மக்கள் பறவைகள் மீது அன்பு கொண்டவர்களாக இருந்தனர். ஆகவே பறவைகள் தங்கும் வகையில் அவர்களது வீடுகளில் கூடுகளைப்போல் வைக்கோல் நிரப்பிய கூடைகளைக் கட்டித் தொங்கவிட்டிருந்தனர். சமயத்தில் அவற்றுக்கு உணவும் அதில் வைப்பார்கள். காலையில் இரைதேடிச் செல்லும் பறவைகள் மாலையில் இந்தக் கூடுகளுக்குத் திரும்பி வந்து ஓய்வெடுக்கும்.

வாராணசி மன்னனுடைய தனாதிகாரியின் வீட்டில், அவருடைய சமையல்காரன் சமையலறையை ஒட்டியிருந்த ஜன்னலுக்கு வெளியில் இவ்வாறு ஒரு கூடையைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். போதிசத்துவரான அந்த ஆண் புறா இந்தக் கூடையைத் தனது வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்து இருந்தது. பகல் நேரத்தில் இரைதேடிச் செல்லும்; மாலையில் கூட்டுக்குத் திரும்பிவிடும். அமைதியான மகிழ்வான வாழ்க்கை.

சமையல்காரன் திறமையானவன்; ஒரு நாள் அந்தச் சமையல்காரன் புதியதாக இறைச்சி வாங்கி வந்து, உப்பு, மசாலா பொருட்களைச் சரியாகச் சேர்த்துப் பக்குவப்படுத்தினான். அதன் பின்னர் அவற்றை ஜன்னல் அருகில் சூடாறுவதற்காக வைத்தான். காற்றில் மிதந்த இறைச்சியின் மணம் தெருவில் செல்பவர்களையும் ஈர்க்கும் அளவுக்கு இருந்தது.

அந்த வீட்டின் அருகில் பறந்த கொண்டிருந்த காகம் ஒன்று இந்த மாமிசத்தின் வாசத்தால் ஈர்க்கப்பட்டுக் கீழிறங்கியது. ஜன்னல் அருகில் அமர்ந்து அந்த உணவைப் பார்த்து ஏங்கியது. அற்புதமாக இருக்கும் இந்த மாமிசத்தைச் சுவைக்க வேண்டுமே. ஆனால், எப்படி? தந்திரம் என்ன செய்யலாம் என்று ஜன்னலின் அருகிலேயே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தது.

காலையில் இரை தேடிச் சென்றிருந்த புறா வீடு திரும்பியது. சமையலறை அருகில் இருந்த தனது கூடையில் அமர்ந்து கொண்டது. இதைப் பார்த்ததும் காக்கைக்கு மகிழ்ச்சி. ‘ஆகா, இந்தப் புறாவின் மூலமாக நான் நினைத்ததைச் சாதித்துக் கொள்வேன்’.

மறுநாள் அதிகாலையில் புறா வெளியில் புறப்படும் சமயம் அந்த வீட்டுக்கு அருகில் வந்து காத்திருந்தது. போதிசத்துவர் எனும் புறா இரை தேடிப் புறப்பட்டதும் அதைத் தொடர்ந்து இதுவும் பறந்தது. புறா செல்லும் இடங்களுக்கு எல்லாம் அதன் நிழல்போல் இதுவும் தொடர்ந்தது. அது அமர்ந்தால், அமர்ந்தது; பறந்தால், பறந்தது. இதைப் பார்த்து வியந்த புறா அதைப் பார்த்து,

‘நண்பனே, காலையிலிருந்தே உன்னைப் பார்க்கிறேன்; கூட்டிலிருந்து நான் புறப்பட்டதிலிருந்து நீ என் பின்னால் வந்து கொண்டிருக்கிறாயே. என்ன காரணம்?’ என்று கேட்டது.

‘உம்முடைய நடத்தையும் ஆளுமையும் என்னைப் பெரிதும் வசீகரித்துவிட்டன. மதிக்கத் தோன்றுகிறது. உம் அருகிலேயே இருந்து இவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.’

புறா அதை நம்பவில்லை. எனினும், ‘காக்கையே, உனது உணவுப் பழக்கமும் என்னுடையதும் முற்றிலும் வேறானது. நாம் ஒன்றாக வசிப்பது முற்றிலும் இயலாதது’ என்று கூறியது.

‘புறாவே, நீவிர் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனக்குரிய உணவை நான் தேடிக்கொள்வேன். உங்களோடு வருவேன், உமக்கான உணவை நீவிர் தேடும். எனக்கு வேண்டியதை நான் தேடிக்கொள்வேன்.’

‘எனில், நீ மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஊக்கத்துடன் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல; எப்போதும் நல்லொழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் என்னோடு நீ வரலாம்.’

‘அப்படியே நடப்பேன்.’

அதன்பின்னர், புறா தனக்குத் தேவையான விதைகளையும் கொட்டைகளையும் தேடத் தொடங்க, காக்கையோ அருகில் கிடந்த சாணத்திலிருந்து புழுக்களைத் தேடியது.

மாலையில் போதிசத்துவர் வீடு திரும்புகையில் காக்கையும் அதனோடு பறந்து வந்தது; சமையலறை ஜன்னல் அருகில் புறாவுடன் அமர்ந்தது. அதைப் பார்த்த சமையல்காரனுக்கு வியப்பு. புறா அழைத்துவரும் விருந்தாளி நல்ல பண்புள்ளதாக இருக்கும் என்று எண்ணினான்; அதனால், அதற்கும் உடனடியாக மற்றொரு கூடையை, புறாக்கூடையின் அருகிலேயே தொங்கவிட்டான். அன்றிலிருந்து, புறாவும் காக்கையும் அருகருகே வசித்தன.

தனாதிகாரியின் வீட்டில் மீன் ஏராளம் இருந்தது. சமையல்காரன் மீன் சமைப்பதில் வல்லவன். அவன் மீன்களை வெளியில் எடுத்துக் காற்றாட ஜன்னல் அருகில் தொங்கவிட்டிருந்தான். அதைப் பார்த்தவுடன் பேராசைப் பிடித்த காக்காவுக்கு ஆவல் அதிகரித்தது. எப்படியாவது மீன் சாப்பிட வேண்டும் என்று நினைத்தது. ஆகவே மறுநாள் வெளியில் போகாமல் கூடையிலேயே இருக்க முடிவு செய்தது; காலையில் எழுந்திராமல் படுத்தே கிடந்தது.

இரைக்கு புறப்பட்ட புறா, காக்கையைப் பார்த்து, ‘காக்கையே, இரையெடுக்க வரவில்லையா?’ என்று அழைத்தது.

‘புறாவே, நீவிர் செல்லும், என்னால் இன்று வரவியலாது. எனக்கு வயிறு சரியில்லை’ என்றது.

வியந்த புறா, ‘காக்கையே, நான் இதுவரையிலும் காக்கைகளுக்கு வயிறு வலி என்று கேள்விப்பட்டதே இல்லையே. சமையலறையில் தொங்கும் மீனைச் சாப்பிட நீ திட்டம் போடுகிறாய் என்று நினைக்கிறேன். மனிதர்களின் உணவு உனக்கு ஒத்துவராது. ஆகவே, அதற்காக இப்படி நடந்து கொள்ளாதே. அந்த ஆசையை விட்டுவிடு. அதனால் நீ அனுபவிக்கப் போகும் வேதனையை யோசித்துப் பார். என்னுடன் உணவு தேட வா’ என்று மீண்டும் அழைத்தது.

‘இல்லை, உண்மையிலேயே என்னால் முடியவில்லை.’

‘சரி, உன் செயலின் பலனை நீ அனுபவிப்பாய். ஆனால், பேராசைக்கு அடிபணியாதே. உறுதியாக இரு’ என்று அன்றைய இரையைத் தேடி புறா பறந்துவிட்டது. மற்றவரின் அறிவுரையைக் கேட்டு நடக்க விரும்பாதவர்களின் மனத்தை மாற்ற முயல்வதில் பயனில்லை என நினைத்துக் கொண்டது.

சமையல்காரன் அன்று மீன்களை வகை வகையாகச் சமைத்தான். வேக வைத்துச் சமைத்தவுடன், பயன்படுத்திய பாத்திரத்திலிருந்து நீராவி வெளியேறும் வகையில் அவற்றின் மூடியைக் கொஞ்சம் திறந்தாற்போல் வைத்துவிட்டு அதன் மீது அரிகலன் ஒன்றைக் கவிழ்த்து வைத்தான். பின்னர் சமையலறைக்கு வெளியில் காற்றோட்டமான இடத்தில் நின்று முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

சமையல்காரன் வெளியில் சென்றுவிட்டதை அறிந்த காகம் சப்தம் செய்யாமல் தன் கூடையிலிருந்து வெளியில் வந்தது. ஜன்னலின் வழியாகச் சமையலறைக்குள் நுழைந்தது; ‘இப்போது சாப்பிட வில்லை என்றால் எப்போதும் இல்லை. ஆனால், ஒரே கேள்வி தான். சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சியை எடுப்பதா அல்லது ஒரு பெரிய மீனை எடுப்பதா? இறைச்சித் துண்டுகளை முழு வயிறு சாப்பிட நேரம் ஆகும். ஆகவே பெரிய மீனை எடுத்துச் செல்லலாம். நமது கூடையில் உட்கார்ந்து சாப்பிடலாம்’ என்று முடிவு செய்தது. ஆகவே பறந்து தாவி மீன் பாத்திரத்தை மூடியிருந்த வடிகலன் மீது அமர்ந்தது. ஆனால், இதன் எடை தாங்காமல், அந்தப் பாத்திரம் நழுவி பெரும் சத்தத்துடன் கீழே விழுந்தது.

‘என்ன சத்தம்?’ என்றபடி உள்ளே ஓடிவந்தான் சமையல்காரன். காக்கையைப் பார்த்து விட்டான். உடனே ஜன்னலையும் சமையலறையின் கதவையும் சாத்தினான். ‘இந்தத் திருட்டுக் காக்கை என் எஜமானருக்குச் சமைத்த உணவைச் சாப்பிட வந்திருக்கிறதா?’ என்று கோபத்துடன் கத்தினான். ‘அயோக்கியக் காக்கையே, உனக்குக் கூடை கட்டித் தொங்கவிட்டேன். அன்புடன் நடத்தினேன். என்னிடமே திருட வந்துவிட்டாயா?’ என்று சொல்லிக் கொண்டே, காக்கையைப் பிடித்தான்.

அதன் கழுத்தை இறுக்கியபடி, இறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்து எறிந்தான். புளிப்பு மோரில் உப்பு, சீரகம், இஞ்சிச் சாற்றைக் கலந்தான். அதைக் காக்கையின் மீது ஊற்றினான். பின்னர் காக்கை மீது காரமான ஊறுகாயைத் தடவினான். அதன் பின்னர், கூடைக்குள் வீசி எறிந்தான். காகம் வலியிலும் எரிச்சலிலும்,வேதனையிலும் துடித்தது. மீனும் இல்லை; இறைச்சியும் இல்லை; வலிதான் மிச்சம்.

மாலையில் போதிசத்துவரான காகம் திரும்பி வந்தது; காகத்தின் அவலமான நிலையைப் பார்த்தது: ‘அடடா! பேராசை கொண்ட காகமே, நீ என்னுடைய அறிவுரைகளைக் கேட்கவில்லை. உன்னுடைய பேராசைதான் உனக்கு இந்தத் தீங்கைத் தந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இனி அந்தச் சமையல்காரன் என்னையும் நம்ப மாட்டான். அனைத்துப் பறவைகளுக்கும் நீ அழிவைக் கொண்டு வந்துவிட்டாய்’ என்று கூறியது.

காகம் இறந்து போனது, சமையல்காரன், அதையும் பறவைக்கான கூடைகளையும் கழற்றிக் குப்பைக்குழியில் வீசினான். அந்தக் காக்கையால் மற்ற பறவைகளுக்கும் கெடுதல் நேர்ந்தது. கூடைகள் கட்டுவதை அம்மக்கள் கைவிட்டனர்.

‘அவர்தம் நலனில் அக்கறை கொண்டு போதனை செய்தாலும், அவர்களின் அறிவுரையை ஏற்காதவன், புறாவின் அறிவுரையைக் கேளாமல் இறந்துபோன காக்கையைப் போல் எதிரிகளின் கைகளில் விழுவான். சரி. இனிமேல் நானும் இங்கு வசிக்க முடியாது’ என்று கூவியபடி போதிசத்துவரான புறா அங்கிருந்து பறந்து சென்றது.

கதையைக் கூறி முடித்தார் ததாகதர்: ‘துறவியே, இப்போது இருப்பது போலவே நீங்கள் அப்போதும் உணவு மீது பெருவிருப்பத்துடன் பேராசை கொண்டிருந்தீர்கள்; உங்களிடம் இருந்த அந்தப் பேராசை குணத்தால் நல்லவர்களும் அவர்களுடைய வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.’

அதன் பின்னர், பேராசான் நான்கு நன்னெறிகளையும் போதித்தார். அந்தத் துறவியும் அருக நிலையின் இரண்டாவது பாதையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடிந்தது.

‘இந்தத் துறவிதான் அப்போது பெருவிருப்பம் கொண்ட காகமாகப் பிறந்திருந்தார்; நான் விவேகம் நிறைந்த புறாவாக அவதரித்திருந்தேன்’ என்று முற்பிறவியில் யார், யாராகப் பிறந்திருந்தனர் என்று தொடர்புகளையும் புத்தர் சுட்டிக்காட்டினார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *