(தொகுப்பிலிருக்கும் 43வது கதை)
துறவி ஒருவர் மடத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படியாமலும் பிடிவாதக்காரராகவும், தம் விருப்பப்படி நடப்பவராகவும் இருந்தார். அவருடைய நடவடிக்கைகள் சரியில்லை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லியும் அந்த விமர்சனங்களை ஏற்க மறுப்பவராக இருந்தார். அவருடைய சக துறவிகள், அவரை மாற்ற முயற்சி செய்கின்றனர். அவருக்கு அந்த விஷயத்தில் உதவி செய்யலாம் என்று அவரை புத்தரிடம் அழைத்துச் செல்கின்றனர்.
நற்பேறுடைய ஆசான் புத்தர் அந்தத் துறவியைப் பார்த்து, இந்தத் துறவிகள் சொல்வது உண்மைதானா, துறவியே?’ என்று கேட்கிறார். ‘தலைக்கனம் பிடித்தவராக, பிடிவாதம் நிறைந்தவராக, மற்றவர் கூறும் அறிவுரைகளை மறுப்பவராக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே.’
‘ஆமாம் குருவே. அவர்கள் கூறுவது தவறு; நான் சிந்திப்பதும் செய்வதும் சரி என்று கருதுகிறேன். செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறேன். ஆகவே, அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை.’
‘துறவியே நீங்கள் இவ்வாறு நடந்துகொள்வது முதன் முறையல்ல. இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் நீங்கள் எடுத்திருந்த பல பிறவிகளிலும் இதுபோல் தான் நடந்துகொண்டீர்கள். உண்மையில் சென்ற பிறவியில் இவ்வாறு நீங்கள் பிடிவாதமாக இருந்ததனால், பாம்பு கடித்து இறக்கும் நிலை உங்களுக்கு ஏற்பட்டது.’
அப்போது காசி ராஜ்ஜியத்தை வாராணசியைத் தலைநகராகக் கொண்டு பிரம்மதத்தன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்த நகரத்தின் பெரும் பணக்கார குடும்பம் ஒன்றில் போதிசத்துவர் பிறந்தார். வளரும் பருவத்தில் தன்னைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்தார். மிகப் பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்திருந்த உடன் பிறந்தவர்கள் இன்பங்களைத் தேடுவதிலும் அவற்றை அனுபவிப்பதிலும் தம் வாழ்நாளைக் கழித்தனர். செல்வமும் அதிகாரமும் இன்பத்தைப் பெறுவதற்கான வழிகளாக இருப்பதை அவர் கவனித்தார்.
எனினும், அந்த வாழ்க்கை முறையும் எளிதாக அவர்களுக்குக் கிடைக்கும் இன்பங்களும் பேராசை, மோசமான ஆளுமைப் பண்புகள், கோபம், தனக்கு முக்கியத்துவம் அளித்துக் கொள்ளுதல் மற்றும் மேலும் பல பிரச்னைகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பதையும் அவர் அவதானித்தார். அந்த அதிகாரமும் செல்வமும் தான் மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவன், உயர்ந்தவன் என்ற சுய-முனைப்புக்கும், அப்படி நினைப்பதற்கும் வழிவகுத்தன. அது இயல்பாக மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாக எண்ணும் மனப்போக்குக்கும் இட்டுச்சென்றது; அவர்களைத் தவறாகப் பயன்படுத்தவும் காயப்படுத்தவும் வழிவகுக்கிறது. எனினும், இந்த விஷயங்களை எவரும் பொருட்படுத்துவதில்லை. ஒரு கட்டத்தில் காலம் அழைக்கையில் அனைவரும் இறந்து போகிறார்கள்; பெற்றிருந்த தற்காலிக விஷயங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு எதையும் எடுத்துச் செல்லாமல்தான் போகிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்தும் சிந்திக்கவும் செய்த போதிசத்துவர் ஆசைகளைத் துறக்க முடிவு செய்தார். அனைத்தையும் துறந்து தீட்சை பெற்று ஒரு துறவியாக இமயமலைப் பகுதியில் வசிக்கத் தொடங்கினார். இந்த உலகில் எது உண்மை, எது நிலைத்திருப்பது என்பது குறித்துச் சிந்தித்தார்; அந்த விஷயங்கள் மீதே தனது தியானத்தைத் தொடர்ந்தார். பல நாட்கள் தவத்திற்குப் பின்னர் ஆன்மிக வெளியில் பெரும் முன்னேற்றங்களை அடைந்தார். காலப்போக்கில் அவரது புகழ் அப்பகுதியில் பரவியது. சீடர்கள் அவரை நோக்கி வந்தனர். தம் அறிவை அவர்களுடன் பகிர்ந்துகொண்ட போதிசத்துவர் விரைவில் ஐந்நூறு துறவிகளுக்கு ஆசிரியராக, பாடசாலை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.
பாடசாலையில் துறவிகளுக்குக் குடில்கள் தனித்தனியாக அமைந்திருந்தன. வனப்பகுதி என்பதால், ஒரு நாள் அப்பகுதியில் அலைந்து திரிந்து கொண்டிருந்த குட்டி கட்டுவிரியன் பாம்பு ஒன்று ஒரு குடிசைக்குள் நுழைந்துவிட்டது. குட்டிப் பாம்பு மிகச் சிறியதாகவும் அழகாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது; அதனால், அந்தக் குடிலுக்குள் வசித்த துறவிக்கு அதன் மீது விநோதமானதொரு பிரியம் ஏற்பட்டுவிட்டது. அந்தத் துறவி அந்தக் குட்டிப் பாம்பைத் தனது குழந்தையைப்போல் நேசித்தது அனைவருக்கும் விசித்திரமாக இருந்தது; துறவி அதன் மீது கொண்டிருந்த இரக்கத்தால், மூங்கில் மரத் துண்டு ஒன்றில் அதை அதை அடைத்து வைத்தார். மூங்கிலில் அது வளர்ந்ததால், அதனை வேளுகன் என்று பெயர் சொல்லியும் அழைக்கத் தொடங்கினார். அந்தத் துறவிக்கு அந்தப் பாம்பின் மீது இருந்த பாசத்தால், துறவியை வேளுகனின் அப்பா என்றும் சொல்லத் தொடங்கினர்.
அதற்குச் சிறிய எலிகள், அது உண்ணும் ஊர்வன போன்றவற்றைப் பிடித்து அவ்வப்போது உணவாக அளித்து வந்தார். இவையனைத்தும் அந்தக் குடிலுக்குள்ளேயே நடந்தது என்பதுடன் இப்போது சற்று வளர்ந்துவிட்ட பாம்பு பொதுவெளியில் உலவாத காரணத்தால் எவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. எனினும், போதிசத்துவருக்கு அவர் இவ்வாறு ஒரு பாம்பைச் செல்லப் பிராணியாக வளர்ப்பது தெரிந்தது.
போதிசத்துவர் அந்தத் துறவியை அழைத்து ‘நீங்கள் ஒரு பாம்பை வளர்ப்பது அறிந்தேன். அந்தச் செய்தி உண்மையா?’ என்று கேட்டார். துறவியும் மறுக்காமல், ‘அது உண்மைதான் குருவே. அழகான அந்தப் பாம்பின் பெயர் வேளுகன்’ என்று சொன்னார்.
உடனே போதிசத்துவர் அவரிடம், ‘சீடரே, ஒரு பாம்பை வளர்ப்பது நல்லதல்ல. பாம்பு இயல்பாகவே ஆபத்தானது. இயற்கையான அதன் குணத்தின்படி தான் நடந்து கொள்ளும். அதை நாம் மாற்ற முடியாது. அதுவும் விரியன் பாம்பை ஒருபோதும் நம்ப முடியாது. ஆகவே, இனியும் நீங்கள் அதை இங்கே வைத்திருக்க வேண்டாம்’ என்று கூறினார்.
‘குருவே என் வேளுகன் அப்படிப்பட்டவனல்ல. நான் அவனைக் குட்டியிலிருந்தே வளர்த்து வருகிறேன். அவன் மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன். தினந்தோறும் இரையளித்து அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறேன். என்னுடன் நட்போடு அமைதியாகவே இருக்கிறான். என்றைக்கும் அவன் சீற்றமுடன் நடந்து கொண்டதில்லை. அவன் எனக்கு ஆபத்தை விளைவிக்க மாட்டான். ஓர் ஆசிரியருக்கு மாணவனைப்போல எனக்கு மிகவும் பிரியமானவன். அவனின்றி என்னால் வாழ முடியாது.’
‘உங்கள் விருப்பம் அதுவாக இருக்கட்டும். எனினும், அதனால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஆகவே காட்டில் விட்டுவிடுங்கள்.’
நல்லெண்ணத்துடன் போதிசத்துவர் எச்சரித்தாலும் அப்படி அவர் மறுத்துவிட்டதும், போதிசத்துவர் அவருக்கு அறிவுரை கூறிப் பயனில்லை என்பதை உணர்ந்தார். அறிவுரை கூறுவதை நிறுத்திவிட்டார்.
எனினும், குருநாதரின் அறிவுரையையும் எச்சரிக்கையையும் அந்தத் துறவி பொருட்படுத்தவில்லை. தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று அந்தச் செல்லப் பிராணியைக் குடிலில், மூங்கில் குழாயில் பாதுகாத்து வைத்திருந்தார்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு பாடசாலையில் இருந்த துறவிகள் அனைவரும் பழங்கள் சேகரிக்கும் பணிக்குச் செல்லவேண்டிய பருவம் வந்தது. அனைத்து வகையான பழங்களும் இயற்கையாக நன்கு காய்த்திருக்கும் வளமான வனப்பகுதிக்கு அவர்கள் செல்வார்கள். கூடைகளில் பழங்களைச் சேகரிப்பார்கள். முடிந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அங்கேயே தங்கி கூடைகளை நிரப்பிக்கொண்டு பாடசாலை இருந்த நகரப்பகுதிக்கு வருவார்கள்.
வேளுகாவின் அப்பாவுக்கு விருப்பமில்லை. எனினும், அந்தப் பாம்பை, அதனுடைய மூங்கில் வீட்டில் விட்டுவிட்டு பாடசாலையின் விதியை ஏற்று பழங்கள் சேகரிக்கும் பணிக்குச் சென்றார். அவர் மனம் முழுவதும் வேளுகனின் மீதே இருந்தது. ஒரு நாளில் முடிந்துவிடும் என்று நினைத்தார். ஒரு நாள் இரண்டு நாளாயிற்று. பாம்பு அடைபட்டு இருக்கிறதே. அதற்கு இரை கிடைக்காதே என்ற நினைப்புதான் அவருக்கு. மூன்று நாட்களுக்குப் பின்னர்தான் அவர்கள் பாடசாலைக்குத் திரும்பினர்.
குடிலுக்கு உடனே ஓடிய அவர் வேளுகனுக்கு ஏதாவது இரையளிக்கவேண்டுமே என்ற ஆர்வத்தில் மூங்கில் குழாயை எடுத்து, பாம்பின் நிலையைப் பார்க்க, அதை மூடியைத் திறந்தார். கையை அதற்குள் நீட்டி ‘மகனே, வெளியில் வா, நீ பசியோடியிருப்பாய். உனக்கு இரையளிக்கிறேன்’ என்று குனிந்து பேசினார்.
ஆனால், மூன்று நாள் பசியில் கோபத்துடன் இருந்த பாம்பு வேகமாகச் சீறிக்கொண்டு வெளியில் பாய்ந்து துறவியின் கழுத்தில் கடித்தது. விஷம் பாய்ந்த துறவி அந்த இடத்திலேயே இறந்தார். துறவியின் அலறல் குரல் கேட்டு அனைவரும் வருவதற்குள்ளாக, அரவம் செய்யாமல், குடிலை விட்டு வெளியேறி வனத்தில் புகுந்து கொண்டது.
வேளுகாவின் அப்பாவின் அலறலைக் கேட்டு குடிசைக்குள் ஓடி வந்த ஏனைய துறவிகள் உயிரற்ற உடலைத்தான் பார்த்தனர். விரைந்து சென்று போதிசத்துவரிடம் தகவலைக் கூறினர். அவர் உடனே நல்ல முறையில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.
போதிசத்துவர், தனது சீடர்களைப் பார்த்து, ‘மாணவர்களே, வேளுகனின் அப்பா, நம் அறிவுரையை ஏற்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவருடைய அந்தக் குணத்துக்கு அவருடைய உயிரையே விலையாகத் தர வேண்டியதாயிற்று’ என்று கூறிவிட்டு நன்னெறிகளை அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். தமக்குள்ளும் தெய்வீகமான நிலைகள் நான்கையும் வளர்த்துக் கொண்டார். இறப்பின் பின்னர் பிரம்ம உலகத்தில் அவர் மீண்டும் அவதரித்தார்.
தம்ம அரங்கில் கூடியிருந்த சீடர்களுக்குத் ததாகதர் இவ்வாறு இந்தப் பிறப்பின் கதையைக் கூறி முடித்தார். மேலும் புதிய நெறிகளையும் அவர்களுக்குப் போதித்தார். பிடிவாத குணம் நிறைந்த அந்தச் சீடரைப் பார்த்து, ‘துறவியே நீங்கள் உங்கள் விருப்பப்படிதான் நடந்து கொள்வீர்கள் என்பது இது முதன்முறையல்ல; கடந்த பிறவிகளிலும் நீங்கள் இப்படித்தான் நடந்துகொண்டீர்கள்; அந்தப் பண்பின் காரணமாகப் பாம்பின் விஷத்தால் உங்களுக்கு மரணம் நேர்ந்தது’ என்று கூறினார். தவற்றை உணர்ந்து கொண்ட அந்தத் துறவிக்கும் கூடியிருந்த மற்றவர்களுக்கும் தேவையான உபதேசங்களையும் அளித்தார்.
தனது பாடத்தை முடித்தவுடன் பேராசான் தொடர்புகளைச் சுட்டிக்காட்டினார். ‘அந்தப் பிறவியில் வேளுகனின் அப்பாவாக இந்தப் பிடிவாதக்காரத் துறவி பிறந்திருந்தார், நீங்கள், சீடர்களின் குழு அப்போது என் மாணவர்களாக இருந்தீர்கள். நான் போதிசத்துவரெனும் குருவாக அவதரித்திருந்தேன்.’
(தொடரும்)