Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #34 – ஆராமதூசக ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #34 – ஆராமதூசக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை)

பௌத்தத் துறவிகள் சுற்றுப்பயணத்தின்போது ஒரு கிராமத்துக்கு வந்துசேர்ந்தனர்; ஓரிடத்தில் மரங்களே வளர்ந்திராத பகுதி ஒன்று இருப்பதைக் கவனித்தனர். அதுபற்றி விசாரித்தனர். கிராமத்து இளைஞன் ஒருவன் மரங்களுக்கோ செடிகளுக்கோ நீர்பாய்ச்சும்போது, வேரோடு பிடுங்கி, வேரின் அளவுக்குத் தகுந்தாற்போல் நீரூற்றிக் கொண்டிருந்தான். அதனால்தான் இப்படி ஆகிவிட்டது என்று கூறினார்கள்.

முற்பிறவியில் குரங்காகப் பிறந்திருந்த அந்த இளைஞன் அப்போதும் இப்படித்தான் செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் ஊற்றும்படி தன் குரங்குப் பட்டாளத்துக்கு உத்தரவு போட்டு ஒரு தோட்டத்தையே பாழாக்கியிருக்கிறான் என்றொரு கதையை புத்தர் கூறுகிறார்.

‘தீங்குச் செய்வதில் திறமையான ஒருவருடன் சேரவேண்டாம்’ என்று உல்லாசப் பூங்கா ஒன்றையே நாசப்படுத்திய ஒருவனின் கதையைக் கோசலத்தின் கிராமம் ஒன்றில் இருக்கும்போது புத்தர் கூறுகிறார்.

பேராசான் புத்தர் சீடர்களுடன் பல இடங்களுக்கும் பயணம் மேற்கொள்வார். மக்களுக்குப் பௌத்த தம்மத்தை எடுத்துரைப்பது மட்டுமின்றி, புத்த பிக்குகளுக்கு பிக்ஷை அளித்து மகிழும் வாய்ப்பை அந்த மக்களுக்கு அளிக்கலாம் என்ற எண்ணமும் அதற்குக் காரணம். அவ்வாறு கோசல நாட்டில் பேராசான் புத்தர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அவரும் சீடர்களும் பிக்ஷை சேகரிக்கும் நோக்கத்தில் குறிப்பிட்ட கிராமத்துக்கு வந்து சேருகின்றனர்.

கிராமத்தின் பெரும் பணக்காரர் ததாகதரையும் சீடர்களையும் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிடும்படி கேட்டுக் கொண்டார். பெரும் மாளிகையில் வசிக்கும் அந்த மனிதருக்கு அந்த இடத்தைச் சுற்றி பரந்து விரிந்த அழகான தோட்டம் ஒன்றும் இருந்தது. புத்தரையும் சீடர்களையும் அவருக்குச் சொந்தமான அந்தத் தோட்டத்தில் அமரச் செய்தார், அங்கு அவருக்கும் பௌத்தச் சங்கத்தினருக்கும் விருந்தோம்பல் செய்தார். கிராமத்து மக்கள் புத்தரையும் சங்கத்தினரையும் நேரில் பார்த்ததில் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

விருந்துண்டபின், தேவையான மரியாதை செய்தபின், அந்தப் பணக்காரர் அழகான தோட்டத்தையும் அவர்களது விருப்பம்போல் சுற்றிப்பாருங்கள் என்று அழைத்துச் சென்றார். அழகிய செடிகளும் பழ மரங்களும் நிறைந்த கண்ணுக்கு நிறைவான இயற்கைக் காட்சிகளைத் துறவிகளுக்குச் சுற்றிக்காட்டினார். தோட்டத்தைச் சுற்றி நடந்த அவர்களின் பார்வையில் வெறுமையான ஓர் இடம் பட்டது. ‘அய்யா, இந்த அற்புதமான உல்லாசப் பூங்கா போன்ற தோட்டத்தில் எங்கும் ஏராளமான நிழல் தரும் மரங்களும் பழ மரங்களும் உள்ளன; ஆனால் இந்த இடத்தில் மரமோ புதரோ எதுவுமே இல்லையே. வெறுமையாக இருக்கிறதே. எதனால் இப்படி நிகழ்ந்தது?’ என்று கேட்டனர்.

‘துறவிகளே, இந்த இடத்தை ஒழுங்குபடுத்தித் தோட்டங்கள் அமைத்தபோது, இந்தப் பகுதியின் செடிகளுக்கு நீர்ப் பாய்ச்சும் பணியைக் கிராமத்து இளைஞன் ஒருவன் செய்துகொண்டிருந்தான். அந்த இளைஞன் அனைத்து இளம் மரங்களையும் பிடுங்கி, அதன் வேர்களைப் பார்த்து அவற்றின் அளவுக்கேற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நீர் ஊற்றினான். அப்படி ஊற்றுவதுதான் சரியான வழி என்று கருதினான். அதனால் சரியான அளவு நீர் கிடைக்காததாலும், மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டதாலும் அந்த இளம் மரங்கள் காலப்போக்கில் காய்ந்து பட்டுப்போயின; அதனால்தான் இந்த இடம் மட்டும் வெறுமையாக இருக்கிறது’ என்றார்.

துறவிகள் புத்தரிடம் சென்று இப்படி ஒரு செய்தி என்று அவரிடம் சொன்னார்கள். ‘ஆமாம், சீடர்களே. அவர் கூறியது சரிதான். அந்தக் கிராமத்து இளைஞன் இப்படி ஓர் உல்லாச இடத்தை நாசமாக்கியது முதல் முறையல்ல; முன்னொரு முறையும் அதாவது அவனுடைய கடந்த பிறவியிலும் அவன் அப்படித்தான் செய்தான்’ என்றார் கௌதமர்.

‘மதிப்புக்குரியவரே, எங்களால் பார்த்தறிய முடியாத அந்த நிகழ்வை எங்களுக்குக் கூற முடியுமா?’

‘அந்தக் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்’ என்று அந்த முற்பிறவிக் கதையை ஆசான் அவர்களுக்குச் சொன்னார்.

0

அந்தக் காலத்தில் வாராணசியை பிரம்மதத்தன் ஆண்டு கொண்டிருந்தான். பெரும் விழாவொன்று நகரத்தில் நடந்து கொண்டிருந்தது. கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள மக்கள் அனைவரையும் அழைக்கும்விதமாக மேள தாளங்களின் ஒலி ஆங்காங்கே இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. மக்கள் அன்றைய தினத்தை விடுமுறையாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆடல், பாடல், நண்பர்களுடன் உல்லாசமாகச் சுற்றிப் பொழுதுபோக்குதல் என்று அனைவரும் நகரத்தின் முக்கிய தெருக்களில் குவிந்து கொண்டிருந்தனர்.

நகரத்துக்கு அருகில் அரசனுக்கு ஒரு பெரும் தோட்டம் இருந்தது. பழ மரங்களும் பூச்செடிகளும் நிழல் மரங்களுமாக நிறைந்திருந்த அந்தப் பெரும் சோலையில் குரங்குக் கூட்டம் ஒன்று நெடுங்காலமாக வசித்து வந்தது. பழங்களைப் பறித்துண்ணுவதும் குட்டிகளுடன் மரத்துக்கு மரம் தாவுவதுமென அவை அந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தன.

அந்தத் தோட்டத்துக்குப் பாதுகாவலனாக ஓர் இளைஞன் இருந்தான். அந்தத் தோட்டத்தில் இருக்கும் மரங்களுக்கு நீர் ஊற்றுவதும் அவன் வேலை. நகரமே கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த அந்த நாளில், மேள தாளங்களும் இசையொலியும் அவன் காதில் விழுந்துகொண்டிருந்தன. அந்த இளைஞனுக்கு அந்த விழாவில் நேரடியாகச் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது. நிமிடத்துக்கு நிமிடம் அந்தப் பேரவா பெருகிக் கொண்டே இருந்தது. ஆனால், செடி கொடிகளுக்கு நீர் ஊற்றும் வேலை இருக்கிறதே!

அந்தப் பொறுப்பு குறித்து அவன் பெரிதும் கவலைப்படவில்லை. எனினும், விட்டுவிட்டுச் சென்றால், அரசாங்க ஊழியர்களிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்ற சிந்தனை அவனுக்குள் எழுந்தது. எனினும், கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதால் கிடைக்கும் மகிழ்ச்சியும் அனுபவமுமே அவன் கண் முன்னால் நின்றது. எப்படியாவது போகவேண்டும், என்ன செய்யலாம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டான்.

அப்போது மரங்களில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள் அவன் கண்களில் பட்டன. இவை ஆண்டு முழுவதும் இங்குதானே இருக்கின்றன. இந்த மரங்களின் பழங்களைத் தானே சாப்பிட்டு வாழ்கின்றன. அதற்குப் பிரதிபலனாக இவை ஏதாவது செய்யலாமே. ஆகவே, அவன் அந்தக் கூட்டத்துக்கு அரசன் போலிருந்த குரங்கைப் பார்த்துக் கேட்டான்.

‘குரங்கே, நீங்கள் இந்தத் தோட்டத்தில் தானே வசிக்கிறீர்கள். நான் வளர்க்கும் மரங்களின் பழங்களைத் தானே சாப்பிடுகிறீர்கள்?’

‘ஆமாம். அதற்கென்ன?’

‘எனக்கு நகரத்தில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. நான் அங்குச் செல்ல வேண்டும். எனக்காக ஓர் உதவி செய்வீர்களா?’

‘நிச்சயமாகச் செய்வோம். என்ன உதவி?’

‘நீங்கள் இந்தச் செடிகளுக்கும் இளம் மரங்களுக்கும் நீர் ஊற்ற வேண்டும். அவ்வளவுதான். இந்த நாளில் இரண்டு மூன்று முறை ஊற்றினால் போதும்.’

‘கவலையே வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்.’

ஆகா, நான் இப்போது நகரத்துக்குச் செல்வேன். கொண்டாட்டங்களில் கலந்து கொள்வேன். எனது வேலையும் இங்கு நடந்துவிடும். வாழ்க்கை அற்புதமானது, அழகானது என்று மனதுக்குள் அந்த இளைஞன் நினைத்துக்கொண்டான். நீர் ஊற்றுவதற்குத் தேவையான தோண்டிகளையும் வாளிகளையும் குரங்குக் கூட்டத்திடம் தந்துவிட்டு அவன் நகரத்துக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

அந்தக் கூட்டத்துக்குத் தலைவனாக இருந்த குரங்கு தன் கூட்டத்தினரைக் கூட்டியது. ‘நமக்கு ஒரு முக்கியமான பணி இன்றைக்கு வந்திருக்கிறது. எப்போதும்போல், நாம் புத்திசாலித்தனமாக அதைச் செய்துமுடிக்க வேண்டும்.’

‘இந்தத் தோட்டத்தின் மரங்களுக்கு இன்று நாம் தான் நீர் ஊற்றப் போகிறோம். ஆனால், வழக்கமான முறையில் அல்ல. நாம் நீரை வீணடிக்கக்கூடாது. ஆகவே நாம் முதலில் மரத்தை வேரோடு பிடுங்கவேண்டும். வேர் எந்த அளவு இருக்கிறது. பெரிதா சிறிதா நீளமானதா என்று பார்க்கவேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் நீரை ஊற்றவேண்டும். பெரிய வேராக இருந்தால் அதிகமாக நீர் ஊற்றவேண்டும். சின்னதாக இருந்தால், குறைவாக நீர் ஊற்றுங்கள். நீரைப் பகிர்ந்து பயன்படுத்தவேண்டும். நீர் தீர்ந்துவிட்டால் நீருக்கு நாம் எங்கே போவது?’

‘நல்ல யோசனை, நல்ல யோசனை. அற்புதமான யோசனை அப்படியே செய்வோம்.’

இந்த அடிப்படையில் குரங்குகள் ஒவ்வொரு மரங்களாகப் பிடுங்கி நீர் ஊற்றிக் கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக விவேகச் சிந்தனையுள்ள ஒரு மனிதன் போய்க் கொண்டிருந்தான். குரங்குகள் என்ன செய்கின்றன? அவற்றின் செயல்கள் அவனுக்கு விசித்திரமாக இருந்தன.

ஒரு குரங்கைப் பார்த்துக் கேட்டான். ‘ஏன் இப்படி மரங்களைப் பிடுங்கி நீர் ஊற்றுகிறீர்கள்?’

‘ஓ.. எங்கள் தலைவர் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறார்.’

‘அப்படியா, அந்தத் தலைவன் ஒரு முட்டாள். அதனால், அது சொல்லிய முட்டாள்தன விஷயங்களையே நீங்களும் செய்கிறீர்கள்.’

அந்த வழிப்போக்கன் இவ்வாறு நினைத்தான்: ‘இருக்கட்டும். ஆனால், அதை மட்டும் குறை சொல்லிப் பயன் இல்லை. விழாவுக்குப் போகவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய வேலையை உங்களைப் போன்ற குரங்குகளை நம்பி விட்டுவிட்டுப்போயிருக்கிறானே, அவனும் ஒரு முட்டாள்தான். புத்திசாலித்தனம் வெற்றியைக் கொண்டு வரும். முட்டாள்கள் முட்டாள்தனமான வேலையால், இதோ இந்தக் குரங்குகள் ஒரு தோட்டத்தையே நாசமாக்கியதுபோல், அனைத்தையும் வீணடித்துவிடுவார்கள். நல்லது செய்யவேண்டும் என்று நினைத்து இறங்கினாலும் அறியாமையும் முட்டாள்தனமும் தீங்கில்தான் கொண்டுபோய்விடும்.’

பின்னர் அந்தக் குரங்குத் தலைவனை அழைத்து அதனுடைய முட்டாள் செயலுக்குக் கடிந்துரைத்துவிட்டு அவன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

‘தீங்கு செய்வதில் திறமையான ஒருவனால், நல்ல முறையில் வாழும் ஒருவனைப்போல் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது. தோட்டத்தில் குரங்குகள் செய்ததுபோல், முட்டாள் நல்லதை நாசமாக்கிவிடுவான்’ என்று முடித்தார் புத்தர். ‘ஆக, இது முதன் முறையல்ல, உல்லாசப் பூங்காவை அழித்த அந்தக் கிராமத்து இளைஞன் அவனுடைய முற்பிறவியிலும் இப்படித்தான் இருந்தான்’ என்றார்.

கௌதம புத்தர் சீடர்களுக்குச் சில அறிவுரைகளும் கூறினார். ‘இந்த முட்டாள் இளைஞன் முற்பிறவியில் குரங்குகளின் தலைவனாகப் பிறந்திருந்தான். நான் அந்த விவேகம் நிறைந்த வழிப்போக்கனாக அவதாரம் எடுத்திருந்தேன்’ என்று பிறப்பின் தொடர்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *