Skip to content
Home » புத்த ஜாதகக் கதைகள் #35 – வேதப்ப ஜாதகம் 

புத்த ஜாதகக் கதைகள் #35 – வேதப்ப ஜாதகம் 

(தொகுப்பிலிருக்கும் 48வது கதை)

ஜேதவனத்தில் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார், புத்தர்.  சங்கத்தின் விதிகளை மதிக்காமல் விருப்பம்போல்  இருக்கும் ஒரு துறவியைப் பற்றி அவரிடம் கூறினார்கள். அவர்  உடனே,  ஆமாம் இவர் முற்பிறவியிலும் இப்படித்தான் இருந்தார்.  எச்சரிக்கை செய்த பின்னரும் அதைக் கேட்கவில்லை. அதனால் அவர் மட்டுமின்றி ஆயிரம் பேர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.   சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தக் கதையை அவர்களிடம்  கூறினார்.

0

காசி ராஜ்ஜியத்தை வாராணசியைத் தலைநகராகக் கொண்டு பிரம்ம தத்தன் என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். கிராமம் ஒன்றில் வேதப்பர் என்ற பிராமணர் வசித்து வந்தார். கல்வி கற்றவர்; வேதங்கள் அறிந்தவர்.  மந்திர தந்திரங்கள் தெரிந்தவர்.  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வானத்தில் கோள்கள் சந்திக்கும் நேரம் தெரிந்து,  மந்திரங்களை உச்சரித்து அவரால் மழையாகப் பொக்கிஷங்களைக் கொட்ட வைக்க முடியும்.  ஒரு சிறிய   சடங்கு, அதன் பின்னர் வானத்தை நோக்கி மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தால்,  தங்கம், வெள்ளி, முத்து, பவளம், மாணிக்கம், வைரம், வைடூரியம் போன்ற மதிப்பு மிக்கப்  பொருட்கள் வானத்திலிருந்து மழைபோல கொட்டும்.

போதிசத்துவர், அந்த பிராமணரின் சீடர்.  ஒருநாள் அந்த பிராமணர் ஏதோ ஒரு வேலையாக அண்டையிலிருந்த சேத்தி ராஜ்ஜியத்துக்குச் செல்லவேண்டி இருந்தது.  சீடரான போதிசத்துவரையும் தன்னுடன்  அவர் அழைத்துச் சென்றார்.

போகிற வழியில் ஒரு பெருங்காடு. காட்டுக்கு மறுபுறத்தில்தான்  அந்த ராஜ்ஜியம் இருந்தது. ஏற்கெனவே, மனிதர்கள் பயன்படுத்திய வழித்தடம் ஒன்று கண்ணில்பட்டது.  எனினும், காட்டின் வழியாகத்தான் பாதை சென்றது.  வேறு பாதை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே இருவரும்  அந்தத் தடத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினர்.

அந்தக் காட்டில் திருடர்கள் கூட்டம் கூட்டமாக வசித்தனர். வழிப்பறிக் கொள்ளைதான் அவர்களது தொழில். திருடர்களின் கண்ணில்படாமல் காட்டை அவ்வளவு எளிதாகத் தாண்டிச் செல்லமுடியாது. அப்படித் தப்பித்துச் சென்றவர்கள் மிகவும் சிலரே.

அந்தத் திருடர்களுக்கு ‘பிணை கேட்பவர்கள்’ என்ற பெயரும் உண்டு. அந்தப் பெயர் எப்படி வந்தது என்று நீங்கள் கேட்கலாம். இரண்டு பேரை அந்தத் திருடர்கள்  பிடித்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  பணம் கேட்பார்கள். இல்லை என்றால், இரண்டு பேரில் ஒருவனைத் தங்களோடு வைத்துக்கொள்வார்கள். மற்றொருவனைப் பிணைத்தொகையை, அதாவது பணம், பொருள் என்று ஏதாவது எடுத்து வர அனுப்புவார்கள்.  பிணைத்தொகை இல்லாமல் விடமாட்டார்கள். அதனால்தான்  அந்தப் பெயர்.

அப்பாவும் பிள்ளையும் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள் என்றால்,  பையனைப் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.  பணம் எடுத்துவர அப்பாவை அனுப்புவார்கள். அம்மாவும் பெண்ணும் என்றால், மகளைப் பிடித்துக்கொண்டு அம்மாவை அனுப்புவார்கள். சகோதரர்கள் என்றால், தம்பியை வைத்துக்கொண்டு அண்ணனை அனுப்புவார்கள். குருவும் சீடனும் என்றால், குருவை விடுவிக்கச் சீடனை அனுப்புவார்கள்.

நம் கதைக்கு வருவோம். ஐந்நூறு பேர் கொண்ட திருடர் கூட்டத்திடம் பிராமணரும் அவர் சீடரும் மாட்டிக்கொண்டனர்.  வேதப்பர், பிராமண குரு. அதனால்,  திருடர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். பிணைத்தொகையை எடுத்து வர சீடன் போதிசத்துவரை அனுப்பினார்கள்.

புறப்படும்போது, போதிசத்துவர் குருவைப்  பணிந்து வணங்கினார். ‘குருவே! ஒரு நாளில் அல்லது இரண்டு நாளில் நிச்சயம் திரும்பிவந்துவிடுவேன். நீங்கள் பயப்பட வேண்டாம்.  நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். சொன்ன நேரத்துக்குள் வரவில்லை என்பதற்காக ஏதாவது செய்துவைக்காதீர்கள். இன்று கிரகங்கள் சந்திக்கும்  நாள் என்று தெரிகிறது.  பொக்கிஷ மழை பொழியும் நாள். நீங்கள் பயந்து போய்,  கவனம் குலைந்து, அந்த மந்திரத்தை உச்சரித்து விடாதீர்கள். அப்படிச் செய்தால், உங்களுக்கும் திருடர்களுக்கும் பேராபத்துதான்’ என்று பணிவாகக்கூறினார்.

0

குருவிடம் இப்படிச் சொல்லிவிட்டு பிணைத்தொகை ஏற்பாடு செய்யப் போதிசத்துவர் புறப்பட்டுப் போனார். திருடர்கள் பிராமணரைக் கயிற்றால் கட்டி, குத்துக்காலிட்டு உட்கார வைத்தனர். சூரியன் மறையத் தொடங்கினான். இருட்ட ஆரம்பித்துவிட்டது.

தன்னைச் சுற்றி பயங்கரமான தோற்றங்களில் நின்று கொண்டிருந்த திருடர்களைப் பார்த்து பிராமணர் பயந்துபோயிருந்தார். உயிர் பயம். நேரம்  போய்க் கொண்டிருந்தது.  சீடன் வரத் தாமதமாகிவிட்டால் தன்னைக் கொன்றுவிடுவார்களே என்று பயந்தார். கீழ்வானில் தோன்றிய சந்திரன் வானத்தில் மெள்ள எழுந்து உலா வரத் தொடங்கினான். பிராமணர் ஆகாயத்தைப் பார்த்தார். வானத்தில், கோள்களின் பெரும் சந்திப்பு நிகழும் நேரம் நெருங்கிவிட்டது என்று அவருக்குத் தெரிந்தது. ஏதாவது செய்து விரைந்து அவர்களிடமிருந்து தப்பித்துவிடலாமா என்று நினைத்தார்.

‘நாம் ஏன் இப்படிக் கஷ்டப்படணும். மந்திரத்தை உச்சரிப்போம். பொக்கிஷ மழையை வரவழைப்போம். அதைக் கொண்டு திருடர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துவிடுவோம். திருடர்கள் விட்டுவிடுவார்கள்.  அப்புறம் விடுதலைதான்.’

உயிர் அவருக்கு முக்கியமாகப்பட்டது. அச்சத்தால்,  போதிசத்துவர் சொன்ன அறிவுரையை மீறுவதற்குத் துணிந்துவிட்டார்.

திருடர்களின் தலைவன் போல் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்தார்:  ‘அய்யா,  என்னை ஏன் பிடித்து வைத்திருக்கிறீர்கள்?

‘மதிப்புக்குரிய பிராமணரே, பிணைத்தொகை வாங்கத்தான்’ என்றான் அவன்.

‘அப்படியா. அவ்வளவுதானா உங்கள் தேவை?’ என்று கேட்டார் பிராமணர்.

‘ஆமாம்’.

‘சரி,  உங்களுக்குத் தேவையான தொகை கிடைத்தால் விட்டுவிடுவீர்களா?’

‘நிச்சயம் விட்டுவிடுகிறோம்’.

‘சரி, நான் கேட்பதைச் செய்துகொடுங்கள்; நீங்கள் கேட்டதை இப்போதே தருகிறேன்’.

திருடர் தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை. யோசித்தான். இந்தப் பிராமணர் எப்படி அந்தப் பிணைத்தொகையைக் கொடுக்க முடியும்?   தப்பித்துச் செல்ல, பொய் சொல்கிறாரா?

ஆனால், இந்தக் கூட்டத்திலிருந்து அவரால் தப்பிக்க முடியாது என்ற தைரியத்தில், ‘என்ன வேண்டும் சொல்லுங்கள், பிராமணரே’ என்றான் அவன்.

‘என் கட்டுகளை உடனே அவிழ்த்து விடுங்கள். நான் நீராட வேண்டும்.  அணிவதற்குப் புத்தாடை கொடுங்கள். பூசிக் கொள்ள நறுமணத் திரவியங்கள் ஏதாவது இருந்தால் கொடுங்கள்.  மலர் மாலை சூடிக்கொள்ள வேண்டும்.  பிறகு என்னைச் சிறிது நேரம் தனியாக விடுங்கள்’.

பிராமணர், அந்தத் திருடர்களிடம் கட்டளையிடுவதுபோல் கூறினார்.

திருடர்களுக்கு, ஒரு பக்கம் அவர் மீது நம்பிக்கை இல்லை. இவர் சொல்வது எப்படிக் கிடைக்கும்? ஏமாற்றிவிடுவாரா? சரி, கேட்டதைக் கொடுப்போம். கிடைத்தால் லாபம். இல்லையென்றாலும் அவரால் தப்பிக்க முடியாதே.

ஆகவே, வேதப்பர் சொன்னதுபோல் செய்து கொடுத்துவிட்டுத் தள்ளி நின்றுகொண்டனர்.  பிராமணர், கிரகங்கள் சேரும் நேரத்தைக் கணித்தார்.  கண்கள் வானத்தை நோக்க,  கைகள் இறைஞ்சுவதுபோல் மேல் நோக்க, பிராமணர் மந்திரங்களை உச்சாடனம் செய்யத் தொடங்கினார்.

சில கணங்களில், வானத்திலிருந்து தங்கம், வெள்ளி, வைர, வைடூரியங்கள் எனப் பொக்கிஷங்கள் மழையாகப் பொழிந்தன! திருடர்களுக்குத் திகைப்பும் மகிழ்ச்சியும். அனைத்தையும் திரட்டி, பொறுக்கி, அள்ளி, துணிகளில் மூட்டைகளாகக் கட்டிக் கொண்டனர். பின்னர் மூட்டைகளுடன் அந்தக் கூட்டம் பதுங்குமிடம் நோக்கி நடக்கத் தொடங்கியது. பிராமணரையும் விடவில்லை.  தம்மோடு அழைத்துக்கொண்டனர். அவர்களுக்குப் பின்னால் அவர் நடந்து சென்றார். எனினும், விதி வேறு மாதிரி நினைத்தது. பாதி வழியில் திருடர்களின் இரண்டாவது கூட்டம் இவர்களைச் சூழ்ந்துகொண்டது. இதிலும் ஐந்நூறு திருடர்கள்.

‘ஏன் எங்களை மறிக்கிறீர்கள்?’ என்று கேட்டான் முதல் கூட்டத்தின்  தலைவன். இரண்டாவது கூட்டத்தின் தலைவன் சொன்னான், ‘எதற்கா? எல்லாம் உங்களிடம் இருக்கும் செல்வத்துக்குத்தான்.’

‘அப்படியானால், நீங்கள், அந்தப் பிராமணரைப்  பிடியுங்கள்.   வானத்தைப் பார்த்து ஏதோ சொன்னார். உடனே மேலேயிருந்து பொக்கிஷங்கள் மழைபோல கொட்டின. மூட்டையில் இருப்பதெல்லாம்  அப்படி மேலிருந்து கொட்டியதுதான்.’

இதைக் கேட்டவுடன் அந்தத் தலைவன் முதல் கூட்டத்தைப் போகவிட்டான்.  இரண்டாவது கூட்டம் பிராமணரைப் பிடித்துக்கொண்டது.  ‘எங்களுக்கும் அதைப்போல வரவழைத்துக் கொடு. இல்லையென்றால் உன்னைக் கொன்றுபோடுவோம்’ என்று அவரைப் பார்த்துக் கூச்சலிட்டது.

‘உங்களுக்கும் அவ்வாறு வரவழைத்துக் கொடுக்க எனக்கு ஆசைதான். ஆனால்,  கிரகங்கள் சந்திக்கும் போதுதான் மந்திரத்தை உச்சரிக்கவேண்டும். பொக்கிஷங்கள் கிடைக்கும்.  இன்று அந்த நேரம் முடிந்துவிட்டது. அதற்கு இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும்’ என்றார் அந்த பிராமணர்.

‘பிராமணரே, எங்களை ஏமாற்றப் பார்க்காதீர்!’ என்று கத்தினார்கள் அந்தத் திருடர்கள். ‘அந்தக் கூட்டத்தைப் பணக்காரங்களாக ஆக்கிவிட்டீர்…, நாங்கள் ஓராண்டு காத்திருக்கவேண்டுமா? உம்மைச் சும்மா விடமாட்டோம்!’

பிராமணர் எவ்வளவோ எடுத்துச் சொன்னார். கெஞ்சினார். அந்தத் திருடர்கள்  கேட்கவில்லை. பிராமணரைக் கூர்மையான வாளால் இரண்டாக வெட்டிப்போட்டனர். உடல் பாகங்களைப் பாதையோரத்தில்  ஆங்காங்கே  தூக்கி வீசினர்.

முதல் திருடர் கூட்டத்தைப் பிடிப்பதற்காக அவர்கள் சென்ற பாதையில் விரைந்தோடினர். கொஞ்ச நேரத்தில் அவர்களைப் பிடித்துவிட்டனர். இரண்டு கூட்டங்களும் எதிரெதிராகச் சண்டை போட்டுக்கொண்டன.  ஒவ்வொருவராக  வெட்டிக் கொல்லத் தொடங்கினர். அனைவரையும் கொன்றுவிட்டு, அந்தச் செல்வத்தைக் கைப்பற்றினர்.

எனினும்,  இதோடு கதை முடியவில்லை! அந்தச் செல்வத்தை யார்  வைத்துக்கொள்வது  என்பதில் அவர்களுக்குள் சண்டை மூண்டது.  குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.  கொலை செய்தனர். இப்படியாக, கடைசியில் இரண்டு கூட்டத்தையும் சேர்ந்த ஆயிரம் பேரில் இரண்டு பேர் மட்டுமே மிஞ்சினர். மற்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

0

இப்போது அந்த இரண்டு திருடர்களும் தூரத்திலிருந்த கிராமத்தை நோக்கி மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தனர். இருவருக்கும் பசியும் தாகமும். சண்டையில் ஏற்பட்ட காயங்கள் வேறு. யாருக்கும் தெரியாமல்  காட்டில் ஓரிடத்தில் அந்த மூட்டைகளை மறைத்து வைத்தனர். அதைத் தனியே விட்டுச் செல்ல அவர்களுக்கு மனமில்லை. மறைத்து வைத்த மூட்டைகளுக்குக் காவலாகக் கத்தியுடன் ஒருவன் காவலிருந்தான்.  இரவு உணவுக்குத் தேவையான அரிசியும் மற்ற பொருட்களும் வாங்கிவர மற்றொருவன் கிராமத்துக்குச் சென்றான்.

பேராசை வேலைசெய்ய  ஆரம்பித்தது. அது, மூட்டைகளுக்குக் காவலிருந்தவனின் மனத்தில் புகுந்தது. அவன் இப்படி நினைத்தான்: ‘அவன் திரும்பி வந்தால்,  இதில் பாதியைக் கேட்பான். நான் அவனைக் கொன்றுவிட்டால் அவ்வளவும் எனக்குத்தானே.’

இவ்வாறு எண்ணியவன், வாளை உருவி கையில் பிடித்துக்கொண்டு, கிராமத்துக்குச் சென்ற திருடனின் வருகைக்காக மறைவாகக் காத்திருந்தான்.

கிராமத்துக்குச் சென்றவன் மனத்திலும் இதைப் போன்ற எண்ணங்கள் ஓடின. செல்வம் நிறைந்த மூட்டைகள் அவன் கண் முன்னால் வந்தன. நாம்  ‘எடுத்துப்போகும் சாப்பாட்டில் விஷத்தைக் கலந்துவிடலாமே. அதைத் தின்றால் உடனே அவன்  இறந்துவிடுவான். அப்புறம் எல்லாச் செல்வமும் எனக்குத்தான்.’

இப்படி முடிவு செய்தவன், வாங்கிய பொருட்களைக் கொண்டு சமையல் செய்தான்.  சமைத்து முடித்தவுடன் நன்றாகச் சாப்பிட்டான். மீதியிருந்த சோற்றில் விஷத்தைக் கலந்தான். சோற்று மூட்டையைத் தூக்கிக்கொண்டு காட்டை நோக்கி நடந்தான்.

மூட்டையைப் பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு அருகில் அவன் வந்ததும், மறைந்திருந்தவன் கையிலிருந்த வாளால் அவனை வெட்டிப்போட்டான். உடல் பகுதிகளைப் புதர்களில் மறைத்தான். மகிழ்ச்சியுடன் சோற்றை உண்டான். அந்தோ… விஷம் கலந்த சோறு அவன் உயிரையும் பறித்தது.

ஆக, இந்தச் செல்வத்தால்,  பிராமணர் மட்டுமல்ல; திருடர்கள் ஆயிரம் பேரும் மாண்டு போனார்கள்.

0

இங்கே, இவ்வாறு சம்பவங்கள் நடந்து முடிந்தன. பெருஞ்செல்வம் புதர் மறைவில்!  போதிசத்துவர் இரண்டு நாள் கழித்துப் பிணைத்தொகையுடன் திரும்பி வந்தார்.  பிராமணரைத்  திருடர்கள் பிடித்து வைத்திருந்த இடத்துக்கு வந்தார்.  எவரையும் காணவில்லை. ஆனால், ஆங்காங்கே தங்கம், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்தார். என்ன நடந்திருக்கும் என்று ஊகித்து அறிந்துகொண்டார்.

அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் பிராமண குரு அதை மீறித் தப்பு செய்துவிட்டதை அறிந்தார்.  என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள அந்தத் திருடர்கள் சென்ற பாதையிலேயே நடந்தார்.

சிறிது தொலைவு நடந்ததும், குருவின் உடல் துண்டுகளாகச் சாலையோரம் கிடந்ததைக் கண்டார். ‘அய்யோ… நான் சொல்வதைக் கேட்காமல் குருநாதர் இப்படி இறந்து போய்விட்டாரே’ என்று வருந்தினார். பின்னர், காய்ந்த சுள்ளிகளையும், மரக்கிளைகளையும் சேகரித்து, சிதை ஒன்று ஏற்பாடு செய்தார். குருநாதரை அதில் கிடத்தி தீ மூட்டி தகனம் செய்தார். காட்டு மலர்களைப் பறித்து வந்து, அவருக்கு அஞ்சலி செய்தார்.

போதிசத்துவர் அந்தப் பாதையிலேயே மேலும் நடந்தார். திருடர்கள் சண்டை போட்டுக்கொண்ட  இடத்துக்கு வந்துசேர்ந்தார். திருடர்கள் இறந்து கிடந்ததைப் பார்த்தார். மேலும் கொஞ்ச தூரம் நடந்தார். அங்கும் திருடர்களின் சடலங்கள்.

எப்படி இவர்கள் இறந்திருக்கக்கூடும் என்பதை மனதுக்குள் ஊகித்தார். எனினும்,  திருடர்கள் சிலராவது உயிருடன் இருக்க வேண்டுமே என்று நினைத்தார். அவர்கள் இந்த மோதல்களில் ஈடுபடாமல் இருந்திருக்க முடியாதே என்றும் யோசித்தார். எங்கே போயிருக்க முடியும் என்று தேடத் தொடங்கினார்.  அந்த இரு திருடர்களும் பொக்கிஷத்தைக் காட்டுக்குள் ஒளித்து வைத்த இடத்திற்கு வந்தார்.  மூட்டைகள் கிடைத்தன.  திருடன் ஒருவன் அதனருகில் இறந்து கிடந்தான்.  சோற்றுப் பாத்திரம் அவனருகில் உருண்டு கிடந்தது. ஒரு கணத்தில், என்ன நடந்திருக்கக்கூடும் என்று ஊகித்த போதிசத்துவர், அடுத்தவனைத் தேடினார். மறைவான ஓரிடத்தில் அந்த உடலும் கிடந்தது.

போதிசத்துவரின் மனதுக்குள் இந்த எண்ணங்களே ஓடின: ‘அய்யோ, என்னுடைய குரு எனது ஆலோசனையைக் கேட்கவில்லை.  சுயவிருப்பத்தால் தனது அழிவுக்கு அவரே காரணம் ஆனார். அது மட்டுமல்ல, அந்தத் திருடர்கள்  சாவுக்கும் காரணமாகிவிட்டாரே.’

‘உண்மையில் தங்களுக்கான பலனைத் தவறுதலான வழியில் அவர்கள் தேடிக் கொண்டனர். தவறான வழி எப்போதும் அழிவுக்கே இட்டுச் செல்லும். அது என் குருவாக இருந்தாலும்.’ அவர் இந்த வரிகளைத் திரும்பவும் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

‘தவறான வழியிலான முயற்சி அழிவைத்தான் தரும்; நன்மையை அல்ல’ இந்தச் சொற்களை அந்தக் காடும் எதிரொலித்தது. அவர் போதித்த உண்மையை மரங்களும் கிளைகளும் அசைந்து ஆமோதித்தன. பொக்கிஷ மூட்டைகளைத் தனது வீட்டுக்குப் போதிசத்துவர் எடுத்துச் சென்றார். வாழ்நாள் முழுமையும் தான தருமங்களிலும், நல்ல காரியங்கள் செய்வதிலும் அந்தச் செல்வத்தைச் செலவழித்தார்.

பேராசைதான் அழிவின் வேர். எவனொருவன்  தனது சொந்த நலனுக்காக, தன்னிச்சையாக, தவறான வழியில் செயல்படுகிறானோ, அவன் தன்னையும் அழித்துக்கொண்டு மற்றவர்களையும் அந்த அழிவில் ஈடுபடுத்திவிடுவான் என்று கதையைச் சொல்லி முடித்தார் ததாகதர்.

அதன் பின் விதிகளைப் பின்பற்றாமல் இருக்கும் அந்தத் துறவியைப் பார்த்து புத்தர் முற்பிறவித் தொடர்புகளையும் கூறினார்: ‘கட்டுப்பாடுகளை மதிக்காமல் இப்படி நீங்கள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வது முதன்முறையல்ல. முற்பிறவியிலும் அவ்வாறுதான் செய்தீர்கள். நல்லவர்கள் மற்றும் விவேகமானவர்களின் அறிவுரையைக் கேட்காததால் இரண்டாக வெட்டிப்போடப்பட்டு சாலையோரம் வீசப்பட்டீர்கள். மேலும் ஆயிரம் பேருடைய அழிவுக்கும் நீங்கள் ஒருவரே காரணமாக இருந்தீர்கள். சென்ற பிறவியில் வேதப்ப பிராமணராக நீங்கள் பிறந்திருந்தீர்கள்.  நான் உங்களுடைய சீடராக அவதரித்திருந்தேன். அந்தத் தவறுகளை இந்தப் பிறவியிலும் செய்யாதீர்கள்’ என்று உபதேசித்தார்.

(தொடரும்)

பகிர:
அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *