(தொகுப்பிலிருக்கும் 49வது கதை)
இந்தக் கதை ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது கூறியது.
தம்ம மண்டபத்தில் கூடியிருந்த சீடர்கள், நகரத்தில் நடந்திருந்த நிகழ்வொன்றைப் பற்றி தமக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகரில் வசித்த பணக்காரர் ஒருவரின் குடும்பம் அவர்களின் மகனுக்காகப் பெண் ஒன்றைப் பார்த்து முடிவு செய்தனர். மணவிழாவுக்கு நாள் ஒன்றையும் இரண்டு வீட்டார்களும் சம்மதித்துக் குறித்தனர். ஆனால், மணமகனின் குடும்பத்தினர், அவர்களுக்கு நெருக்கமான துறவி ஒருவரை அணுகி அந்த நாள் எப்படி என்று கேட்டிருக்கின்றனர். தன்னை முன்னமே ஏன் இவர்கள் கேட்கவில்லை என்ற கோபம் அந்தத் துறவிக்கு இருந்தது. அதனால், அந்த நாள் உகந்தது அல்ல என்று கூறிவிட்டார். அதனால் இவர்கள் பெண் வீட்டுக்கு அன்று செல்லவில்லை. அவமானத்தால் வருத்தம் அடைந்த மணமகள் வீட்டார் அந்தப் பெண்ணை வேறொரு இளைஞனுக்கு மணம் செய்துவைத்துவிட்டனர்.
இந்த உரையாடல் நடந்துகொண்டு இருக்கும்போது, பேராசான் புத்தர் அந்த அரங்கில் நுழைந்து தமக்குரிய இடத்தில் அமர்ந்தார். ‘சீடர்களே, தீவிரமாக ஏதோ உரையாடுகிறீர்கள். என்னவென்று நானும் அறிந்து கொள்ளலாமா?’
உடனே சீடர்கள், நகரத்தின் அந்த நிகழ்வு குறித்து அவரிடம் விவரித்துக் கூறினர். உடனே புத்தர், ‘சீடர்களே, இந்தத் துறவி முற்பிறவியிலும் இவ்வாறுதான் ஒரு குடும்பத்தின் உற்சாகமான வைபவத்தைக் கெடுத்தார்’ என்று கூறினார். உடனே சீடர்கள், அந்த நிகழ்வை விவரிக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டனர். கௌதமர் கூறத்தொடங்கினார்.
0
சிராவஸ்தி நகரில் வசித்த பெரும் பணக்காரர் ஒருவர் தன் மகனுக்குப் பெண் தேடினார். சற்று தொலைவில் இருந்த கிராமத்தில் அவருக்கு இணையான அந்தஸ்து உள்ள குடும்பத்தில் பெண் ஒருத்தி இருப்பதை அறிந்தார்; அங்கு சென்று தன் மகனுக்குப் பெண் தரும்படி மணமகனின் பெற்றோர் கேட்டார்.
பல விஷயங்களையும் பேசிக்கொண்ட பின்னர், நல்லதொரு நாளை மணவிழா நடத்துவதற்கு முடிவு செய்தனர். அந்த நாள், இரு வீட்டாருக்கும் சாதகமாக இருந்தது. முதல் நாள் வந்து மணம் முடித்து பெண்ணை அழைத்துச் செல்கிறோம் என்று கூறி மணமகன் வீட்டார் நகரத்துக்குத் திரும்பிச் சென்றனர்.
எனினும், பொதுவான வழக்கத்தின்படி மண விழாவை நடத்த அன்றைய தினத்தில் நட்சத்திரங்கள் சாதகமாக இருக்கின்றனவா என்று உறுதி செய்ய அவர்கள் விரும்பினர்; ஆகவே, அவர்களது குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த நிர்வாண சந்நியாசி ஒருவரை அணுகி யோசனை கேட்டனர்.
அந்தச் சந்நியாசிக்குக் கடுங்கோபம்; இவர்கள் முதலிலேயே நம்மிடம் வரவில்லை. எது நல்ல தேதி என்று கேட்கவில்லை. என்னை அவர்கள் பொருட்டாக நினைக்கவில்லை;. நாளை குறித்த பின்னரே என்னிடம் ஒப்புக்குக் கலந்தலாசிக்க வருகின்றனர் என்று கோபம் கொண்டார். ஆகவே மணமகன் வீட்டாருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.
ஐயோ… இந்த நாளில் நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை; இன்று நிச்சயதார்த்தமோ திருமணமோ நடத்தக்கூடாது. அப்படி நடந்தால், இரண்டு குடும்பங்களுக்கும் கெட்டது வந்துசேரும். நிச்சயமாக இது நல்ல நாள் இல்லை என்று கூறிவிட்டார்.
அந்தச் சந்நியாசி மீது நகரத்துக் குடும்பத்தினருக்குப் பெரும் நம்பிக்கை. அதனால், குறிப்பிட்ட அந்தத் தினத்தில் நிகழ்வை வைத்துக்கொள்ள வேண்டாம். மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துவரச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர். ஆனால், கிராமத்து மனிதர்களுக்குச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எழவே இல்லை.
இங்கே கிராமத்தில் பெண்ணின் குடும்பத்தினரும் தோழிகளும் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். பெண்ணை அலங்கரிப்பதும் வருபவர்களை உபசரிக்க விருந்து ஏற்பாடு செய்வதும் என்று தீவிரமாக இருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி நகரத்திலிருந்து பெண்ணை அழைத்துச் செல்ல எவரும் வரவில்லை. அவர்கள் வருத்தமும் கோபமும் அடைந்தனர்.
‘இன்றைய தினத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று அவர்கள்தானே முடிவு செய்தார்கள்; ஆனால், அவர்கள் வரவில்லையே. இந்த நாளின் மணவிழா கொண்டாட்டத்துக்கு நாம் பெரும் செலவு செய்துள்ளோமே. இந்தச் செலவு வீணாய்ப் போய்விடக் கூடாது. அவர்கள் நம்மை என்னவென்று நினைத்துக்கொண்டுள்ளனர். நகரத்து மனிதர்கள் என்றால் அவர்கள் எப்படியும் நடந்து கொள்ளலாமா? இதே நாளில் நம் பெண்ணை வேறொரு நல்ல பையனுக்கு மணம் செய்துவைப்போம்’.
விரும்பியபடி ஒரு நல்ல மாப்பிள்ளையை அவர்களால் உடனே கண்டுபிடிக்க முடிந்தது. ஏற்கெனவே அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கொண்டாட்ட நடைமுறைகளுடன் அந்த வைபவத்தை நடத்தி தம் பெண்ணை அந்த இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.
0
மறுநாள் நகரத்துக் குடும்பம் பெண்ணை அழைத்துச் செல்லக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தது. ஆனால், மணப்பெண்ணின் வீட்டில் ஏற்கனவே விழா நடந்து முடிந்ததற்கான அறிகுறிகளைப் பார்த்துத் திகைத்தனர்.
வீட்டுக்குள் இருந்தவர்களை அழைத்தனர். ‘இதோ நாங்கள், மணமுடித்து, பெண்ணை அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். வெளியில் வாருங்கள்’.
‘பெண்ணா? என் பெண்ணுக்கு நேற்றே திருமணம் முடிந்து விட்டதே’.
‘என்ன? எப்படி அவ்வாறு செய்ய முடியும்? என் மகனுக்குத் தானே அந்தப் பெண்ணைத் தருவதாகக் கூறியிருந்தீர்கள். அளித்த உறுதிமொழியை, சொல்லை நீங்கள் எப்படி மாற்ற முடியும்? உங்கள் சொல்லுக்கு மதிப்பு இல்லையா? உங்களுக்குக் குடும்பக் கௌரவம் என்று எதுவுமே இல்லையா?’
‘கௌரவமா? கௌரவம் பற்றி நீங்களா பேசுவது? நகரத்து மனிதர்களான உங்களுக்கு நற்பண்பு என்ற ஒன்றே இல்லை. நீங்கள் மோசமான மனிதர்கள். நீங்கள் தான் பெண்ணை இந்தத் தேதியில் மணம் முடித்து அழைத்துச் செல்கிறோம் என்று நாள் குறித்தீர்கள். ஆனால், அந்த நாளில் வரவில்லை. சொன்ன சொல்லைக் காப்பாற்றாத நீங்கள் கௌரவம் பற்றிப் பேசுகிறீர்களா?’
‘எங்கள் குடும்பத்துச் சந்நியாசியிடம் இதைப் பற்றிப் பேசினோம். அவர்தான் நாள் நன்றாக இல்லை என்றார். அதனால் தான் வரவில்லை. இப்போதுதான் வந்துவிட்டோமே. பெண்ணைக்கொடுங்கள்’.
‘இல்லை. அதை எங்களிடம் சொல்ல வேண்டாமா? இங்கிருந்து செல்லுங்கள், என் பெண்ணுக்கு நேற்றே திருமணம் ஆகிவிட்டது. சொன்ன சொல் தவறாத ஒருவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். இப்போது அவள் வேறொருவனின் மனைவி.’
இப்படி இவர்கள் வேகமாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது, அறிவு மிகுந்த இளைஞன் ஒருவன் அந்தப் பக்கமாகக் கடந்து சென்றான். நகரத்து மனிதன் போலிருந்தான். இந்த விஷயத்தில் என்னால் ஏதாவது உதவி செய்ய முடிமா என்று கேட்டான்.
இரண்டு தரப்பினரும் தம் பக்கத்து வாதத்தை அவனிடம் எடுத்துக் கூறினர். விவரங்களைக் கேட்ட அந்த இளைஞன், இந்த விஷயத்தில் நட்சத்திரங்களுக்கு என்ன வேலை? என்று அவர்களைப் பார்த்து வினவினான். ‘நம் வாழ்க்கை மீது அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நட்சத்திரங்கள் முக்கியமா? நல்லதொரு பெண் கிடைப்பது முக்கியமா? உங்களுக்கு இப்படி ஒரு பெண் கிடைப்பது நல்லது; அவள் மூலமாக அதிர்ஷ்டம் வரும் என்று ஏன் நினைக்கவில்லை. முட்டாள்கள் தாம் அதிர்ஷ்ட நாளுக்குக் காத்திருப்பார்கள். அப்படிக் காத்திருக்கும்போது, எவ்வளவு நல்ல நாட்களை அவர்கள் இழந்துவிடுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்துபோவது அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும். ஏனெனில் அவை உண்மை அல்ல.’
இவ்வாறு சொல்லி ‘அதிர்ஷ்ட நட்சத்திரத்துக்காகக் காத்திருக்கும் முட்டாளை நற்பலன் கடந்து சென்றுவிடும். பலன் தான் அதிர்ஷ்ட நட்சத்திரம். நட்சத்திரங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்?’ என்று இவர்களுக்கு அறிவுரை கூறினான்.
பெண் கிடைக்காத மன வருத்தத்தில் தமது முட்டாள்தனத்தை நொந்து கொண்டபடி நகரத்து மனிதர்கள் தலை குனிந்தபடி வெறுங்கையுடன் தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு அந்த நிகழ்வைக் கூறி முடித்தார் கௌதமர். ‘சீடர்களே நான் உங்களிடம் கூறியதுபோல் முற்பிறவியிலும் இந்த நிர்வாணத் துறவி இப்படித்தான் ஒரு குடும்பத்தின் கொண்டாட்டத்தைக் கெடுத்துவிட்டார். மனிதர்களையும் உழைப்பையும் நம்புங்கள். அதிர்ஷ்டத்தை அல்ல’ என்று உபதேசத்தையும் முடித்த ததாகதர் தொடர்புகளையும் விளக்கினார்.
‘இதோ நாம் பேசிக்கொண்டிருந்த அந்த நிர்வாணத் துறவிதான் அப்போதும் நிர்வாண சந்நியாசியாகப் பிறந்திருந்தார். அந்தக் குடும்பத்தின் கொண்டாட்ட மனநிலையைக் கெடுத்தவர். குடும்பங்களும் அதே குடும்பங்கள் தாம். நற்போதனையை உதிர்த்த அந்த விவேகம் நிறைந்த நல்ல இளைஞனாக நானே அவதரித்திருந்தேன்’.
(தொடரும்)