(தொகுப்பிலிருக்கும் 50வது கதை)
ஜேதவனத்தில் இருந்தபோது புத்தர் கூறிய கதை இது.
தம்ம அரங்கில் கூடி சீடர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். கௌதமர் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அதன்மூலம் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்வதிலும் தன்னை இயல்பாக ஈடுபடுத்திக் கொள்கிறார் என்று தமக்குள் புத்தரின் குணங்களைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது புத்தர் அரங்குக்குள் வந்தார். எல்லோரும் அவருக்கு முகமன் கூறி வரவேற்று அவருக்குரிய ஆசனத்தில் அமரும்படி வேண்டினர். புத்தர் வழக்கம்போல், தம் சீடர்களைப்பார்த்து, சகோதரர்களே, இன்று எதைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்தீர்கள். நான் அதை அறிந்துகொள்ளலாமா என்று அன்புடன் கேட்டார். சீடர்களும் தம்முடைய உரையாடலின் விவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டனர்.
‘அன்புக்குரிய சீடர்களே, உலகத்திலுள்ள மக்களின் நன்மைக்காக இவ்வாறு புத்தர் செயல்படுவது இது முதல் முறையல்ல; கடந்த காலங்களிலும் அவர் அவ்வாறே செயல்பட்டார்’ என்று அவர் உரைத்தார். துறவிகள் உடனே அவரை நோக்கி, ‘அத்தகைய நிகழ்வை எங்களுக்குச் சொல்லுங்களேன். நாங்களும் அறிந்துகொள்கிறோம்’ என்று வேண்டிக்கொண்டனர்.
உலகின் நன்மைக்காக அவர் மேற்கொண்ட செயல்களை விளக்கமாகப் புத்தர் கூறத்தொடங்கினார்.
ஒரு காலத்தில் வாராணசியை பிரம்மதத்தன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவருடைய மனைவி, பட்டத்து ராணியின் வயிற்றில் போதிசத்துவர் மீண்டும் அவதரித்தார். பெயர் வைக்கும் நாளில் அவருக்கு இளவரசர் பிரம்மதத்தர் என்று பெயர் சூட்டப்பட்டது. தட்ச சீலத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு அவருக்குக் கல்வி அளிக்கப்பட்டது. அங்கு நன்கு கற்றுத் தேர்ந்தார். தன்னுடைய பதினாறு வயதுக்குள் மூன்று வேதங்களையும் முழுமையாக மனனம் செய்து அறிந்தார்; அறிவின் பதினெட்டுப் பகுதிகளிலும் தேர்ச்சி பெற்றார். அவரது தந்தை அவரை தன்னுடைய வாரிசாக, பட்டத்து இளவரசாக அறிவித்தார்.
அந்த நாட்களில் வாராணசி மக்கள் தெய்வங்களுக்கு அதிக அளவில் திருவிழாக்கள் நடத்துவார்கள். அந்தக் கடவுளர்களுக்கான சடங்குகளை, பூக்களும் வாசனைத் திரவியங்களும் கொண்டு மட்டும் அம்மக்கள் நடத்துவதில்லை. அந்தக் கடவுளர்களை திருப்தி செய்யும் நோக்கில் உரிய மரியாதையை, பலியிடுதல் மூலம் செய்தனர்; செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கோழிகள், பன்றிகள் மற்றும் பிற உயிரினங்களை இவ்வாறு பலியிட்டனர். குருதி பூசப்பட்ட, துர்நாற்றம் வீசும் கோரமான சடலங்களை அவற்றின் முன் படைத்து பூசனைகள் செய்வதை அவர்கள் வழக்கமாகப் பின்பற்றினர்.
போதிசத்துவர் ஒருநாள் தன்னுடைய தேரில் ஏறி, மாநகரத்தின் தெருக்களில் சுற்றி வந்தார். அவ்வாறு ஒருநாள் புறநகர்ப் பகுதியில் தேரில் வந்து கொண்டிருந்தவர் பார்வையில் இத்தகைய செயல்கள் தென்பட்டன. கருணையே வடிவான கடவுளின் பிறப்பான போதிசத்துவர் தனக்குள் இப்படி நினைத்தார்: ‘மூடநம்பிக்கையால் இந்த மக்கள் தவறான வழியில் இட்டுச் செல்லப்படுகிறார்கள்; இந்த மனிதர்கள் இப்போது வேண்டுமென்றே உயிர்களைப் பலியிடுகிறார்கள். இதைப் பார்த்து வெறுத்துப்போன பெரும்பாலான மக்கள் இப்போது சமயத்தைத் துறந்து மதமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கு நான் ஏதாவது ஒரு தீர்வு காணவேண்டும். என் தந்தைக்குப் பின்னர், அவரது வாரிசாக நான் இந்த நாட்டின் ஆட்சி பொறுப்பேற்றால், உயிர்களைப் பலியிடும் இந்தச் செயல்களுக்கு முடிவுகட்டுவேன். அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன். எந்த ஒரு மனிதருக்கும் தீங்கு விளைவிக்காமல் இந்தத் தீயப் பழக்கத்தை நிறுத்த புத்திசாலித்தனமாக ஓர் உத்தியைக் கண்டுபிடிப்பேன்’. இந்த மனநிலையுடன் இளவரசர் தனது தேரில் அரண்மனைக்குத் திரும்பி வந்தார்.
வேறொரு நாள் இளவரசர் அவ்வாறு தேரில் நகருலா செல்லும் பாதையில் புனிதமான ஓர் ஆலமரத்தின் அருகில் மக்கள் கூட்டமாக நின்றிருந்ததைப் பார்த்தார். அந்த மரத்தில் ஒரு தேவதை மீண்டும் பிறந்திருப்பதாகவும் அதைக் கொண்டாடி வழிபட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர். அந்த மக்கள் தேவதையிடம் தமக்கு மகன்களும் மகள்களும் அருள வேண்டுமென்றும், மதிப்பும் மரியாதையும், செல்வமும் கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தனர். ஒவ்வொருவரும் அவர்களது மனதிலிருக்கும் விருப்பங்களைச் சொல்லி வேண்டினர். தேரிலிருந்து இறங்கிய இளவரசர் போதிசத்துவர் மரத்தின் அருகில் சென்றார். அந்த மக்களைப் போல் தானும் வழிபட வந்திருப்பவர்போல் நடந்துகொண்டார். வாசனைத் திரவியங்களையும் மலர்களையும் அந்த மரத் தேவதைக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். அந்த மரத்தின் மீது நீரைத் தெளித்தார்; அந்த மரத்தைப் பயபக்தியுடன் சுற்றி வந்து வணங்கி வழிபட்டார். அதன் பின்னர் தேரில் ஏறி நகருக்குத் திரும்பினார்.
அன்று தொடங்கி இளவரசர் அவ்வப்போது தேரில் ஏறிச் சென்று அந்த மரத்தடிக்கு வருவதை விரும்பினார். ‘கடவுளர்களின்’ மீது உண்மையான நம்பிக்கைக் கொண்டவர் போல மரத்தை வணங்கி வழிபடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். மக்களும் அவர் அவ்வாறு அவ்வப்போது வருகை தருவதையும் தமக்குள் பேசிக்கொண்டனர்.
காலப்போக்கில், அவரது தந்தை இயற்கை எய்தினார். அவருடைய இடத்தில் போதிசத்துவர் அரியணை ஏறினார். தீயவை என்று குறிப்பிடப்படும் நான்கு வழிகளையும் அவர் தவிர்த்தார்; அரசனுக்குரிய பத்து வகை நற்பண்புகளைக் கடைப்பிடித்தார்; மக்களை அன்புடன் நேர்மையாக ஆட்சி செய்தார். அப்போது அவருக்கிருந்த பழைய விருப்பம் மனத்தில் எழுந்தது. இப்போது அவர் அரசன். ஆகவே அதை நிறைவேற்ற முடியும்.
முன்னாளில் தான் ஏற்றுக்கொண்ட உறுதியை நடைமுறைப்படுத்த போதிசத்துவர் தன் மனதில் முடிவு செய்து கொண்டார். உடனே தனது அமைச்சர்கள் அனைவரையும் வரவழைத்தார். பிராமணர்கள், உயர்குடி மனிதர்கள், மற்றும் ஏனைய குடிமக்கள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் கூட்டினார். அவர்களிடம் தான் எப்படி அரசனானேன் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். எவரும் அதற்குப் பதில் சொல்லவில்லை.
‘நான் அவ்வப்போது ஓர் ஆலமரத்தடிக்குச் சென்று அதைப் பயபக்தியுடன், வாசனைத் திரவியங்கள், மலர்களைக் காணிக்கையாகச் செலுத்தி, அந்த மரத்தை வணங்கி வருவதை உங்களில் எவராவது பார்த்ததுண்டா?’
‘ஆமாம் அரசே. நாங்கள் பார்த்திருக்கிறோம்’.
‘அப்படியா, மகிழ்ச்சி. அவ்வாறு வழிபடுகையில் அந்த மரத்தின் முன்னால் நான் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். ஒருவேளை நான் இந்த நாட்டின் அரசனாகும் வாய்ப்புக் கிடைத்தால், அந்த மரத்துக்குப் பலியிடல் ஒன்றைச் செய்வதாக உறுதி எடுத்தேன். இப்போது இறைவனின் அருளால் அரசனாகிவிட்டேன். நான் அந்த மரத்திடம் உறுதியளித்த அந்தப் பலியை அளிக்க வேண்டும். ஆகவே, நீங்கள் அனைவரும் விரைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’.
‘ஆனால், அரசே, நாங்கள் என்ன ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று நீங்கள் கூறவில்லையே.’
‘நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை என்னவென்று கேளுங்கள்: ஐந்து தீயச் செயல்களுக்கு அடிமையானவர்கள், உயிரினங்களையும் வேறு விலங்குகளையும் கொல்வதை இயல்பாகச் செய்து மகிழ்வோர்கள், நியாயத்துக்குப் புறம்பான பத்து வழிகளைப் பின்பற்றி நடப்பவர்கள் அனைவரையும் கொன்று, அவர்களுடைய சதையையும் ரத்தத்தையும், அவர்களுடைய குடல்களையும், முக்கியமான உடல் உறுப்புகளையும் அந்த ஆலமரத்தின் தேவதைக்குக் காணிக்கையாகச் செலுத்துவேன் என்று சபதம் செய்துள்ளேன்.
‘எனவே. இப்போதே நாட்டு மக்களுக்குத் தண்டோரா போட்டு இந்தச் செய்தியை அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள்; ‘நமது அரசர், அவர் அரசப் பிரதிநிதியாக இருக்கையில் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி, நன்னெறிகளையும் அரசக் கட்டளைகளையும் மீறுவோரைப் பலியிட்டு அவர்களை மரத்தேவதைக்கு அர்ப்பணிக்க விருப்பப்படுகிறார். அந்த அடிப்படையில் ஐந்துத் தீயச் செயல்களுக்கு அடிமையானவர்கள், நியாயமற்ற பத்து வழிகளில் நடப்பவர்கள் ஆயிரம் பேரை அவ்வாறு பலியிட்டு, அவர்களுடைய தசையையும் இதயங்களையும் அந்தத் தேவதை திருப்தியுறும் வகையில் அர்ப்பணிக்க முடிவு செய்திருக்கிறார்’.
நம் மாநகரத்தில் உள்ளோர் அனைவரும் அறியும்படி இதைப் பறையறைந்து அறிவித்து விடுங்கள். இந்தத் தேதிக்குப் பின்னர் என்னுடைய இந்த அறிவிப்பை மீறி நடப்போரைப் பலியிட்டு, என்னுடைய உறுதிமொழியின்படி கடவுளுக்கு அந்த உடல்களை அர்ப்பணிப்பேன் என்றும் முரசறைந்து விடுங்கள்’ என்று கூறிமுடித்தார் அரசர்.
அவரது கூற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, போதிசத்துவரான அரசர் இந்தச் சொற்றொடர்களையும் உச்சரித்தார்: ’ஒருமுறை சபதம் செய்தேன், இறைபக்தியுடன் நன்றி சொல்ல ஆயிரம் தீயவர்களைக் கொல்வேனென்று; தீமைகள் புரிவோர் மிகப் பெருங்கூட்டம். இதோ, நான், இப்போது சபதத்தை நிறைவேற்றிக் கொள்வேன்’.
அரசனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்த அமைச்சர்களும் பணியாளர்களும் வாராணசி நகரம் முழுவதும் முரசறைந்தனர்; அரசனின் செய்தியைப் பரப்பினர். அந்தப் பிரசாரத்தைக் கேட்ட மக்கள் அனைவரும் உயிருக்குப் பயந்து தமது பழைய தீய வழக்கங்களைக் கைவிட்டனர். ஓர் ஆத்மா கூட துன்மார்க்கத்தின் பக்கம் செல்லவில்லை. இதன் காரணமாகப் போதிசத்துவரின் ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு மனிதனும் நன்னெறிகளை மீறியதாகத் தண்டிக்கப்படவில்லை.
இவ்வாறு. குடிமக்களில் ஒருவருக்கும் தீங்கு விளைவிக்காமல், துன்புறுத்தாமல், தண்டிக்காமல், போதிசத்துவர் அவர்கள் அனைவரையும் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க வைத்தார். தான, தருமங்களும் வேறு பல நற்செயல்களும் செய்து காலப்போக்கில் இயற்கை எய்தி, தன்னைப் பின்பற்றுவோருடன் தேவர்களின் நகரத்துக்கு ஏகினார்.
தன்னுடைய முற்பிறப்பின் நிகழ்வுகளை இவ்வாறு சீடர்களுக்குச் சொல்லி முடித்தார் பேராசான். தொடர்புகளையும் சுட்டிக்காட்டினார். ‘புத்தரின் சீடர்கள், அந்தப் பிறவியில் எனக்கு மந்திரிகளாக இருந்தனர். நான் அப்போது வாராணசியின் அரசனாக அவதாரம் செய்திருந்தேன்.’
(தொடரும்)