(தொகுப்பிலிருக்கும் 51வது கதை)
நம்பிக்கையைக் கைவிடாதீர்கள், நண்பர்களே! என்ற முழக்கத்துடன் தொடங்கும் கதை. சிராவஸ்தியின் ஜேதவனத்தின் பெரும் மடாலயத்தில் இருந்தபோது சீடர்களுக்குப் பெருமகன் சொல்கிறார். முயற்சி செய்யாமல் சோம்பியிருக்கும் துறவியை உற்சாகப்படுத்த இந்தக் கதையைக் கூறுகிறார்.
0
வாராணசியைத் தலைநகராகக் கொண்டு காசி ராஜ்ஜியத்தை பிரம்மதத்தன் ஆண்டு கொண்டிருந்தான். இந்த அரசனின் மகனாகப் போதிசத்துவர் இந்த உலகில் அவதரித்திருந்தார். மிகக் கோலாகலமாக, ஆடம்பரமாகப் பெயர் சூட்டும் விழா நடந்தது. இளவரசனுக்கு ‘சீலவன்’ என்று பெயர் சூட்டினர். இளவரசன் பதினாறு வயதிற்குள் கல்வியையும் மற்றக் கலைகளையும் கற்று முடித்தான். அவனது தந்தை இறந்த பிறகு அரசுக் கட்டில் ஏறினான். நற்குணன் என்ற பட்டத்துடன் மாபெரும் அரசனாக நாட்டை நல்ல முறையில் ஆண்டான்.
நகரத்தின் நான்கு வாயில்களிலும் தரும சாலைகளை அமைத்தான். நகரத்தின் மையத்திலும் ஒன்றைத் திறந்தான். அரண்மனை வாயிலிலும் தரும சாலை ஒன்றை அமைத்தான். மொத்தம் ஆறு தரும சாலைகள். ஏழைகள், வசதியற்றவர்கள், வழிப்போக்கர்கள், பயணிகள் இந்தச் சத்திரங்களில் தங்கி, உணவு உண்ணலாம். அவர்களுக்கு வேறு தானங்களும் வழங்கப்பட்டன.
அறிவித்தவற்றைத் தவறாமல் நிறைவேற்றினான். உண்ணாநோன்பு மேற்கொண்டான். அமைதியே வடிவாக இருந்தான். இரக்கமும் கருணையும் மிக்கவனாக இருந்தான். அதனால், அனைவரும் அவனை நேசித்தனர். நாட்டை நேர்மையுடன் ஆண்டான். குழந்தைகள் மீது அன்பு பாராட்டும் தகப்பன்போல் அனைத்து மக்களையும் ஒன்றேபோல் போற்றிப் பாதுகாத்தான்.
அவனுடைய அமைச்சர்களில் ஒருவன் அந்தப்புரப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டான்; இந்தச் செய்தி அரசனின் காதுக்கு எட்டியது. அனைவருக்கும் தெரிந்த பொதுவான பேச்சாகிவிட்டது. மற்ற அமைச்சர்களும் அந்த அமைச்சனைப் பற்றி அரசனிடம் முறையிட்டனர். நடந்த உண்மை என்னவென்று அரசனே விசாரிக்கத் தொடங்கினான்; அந்த அமைச்சன் குற்றம் செய்தது தெளிவாகத் தெரிந்தது. ஆகவே, அந்தத் துரோகச் செயல் புரிந்த குற்றவாளிக்கு உரிய தண்டனை அளிக்க முடிவெடுத்தான்.
அரசவையைக் கூட்டினான் அரசன். அந்த அமைச்சரைப் பார்த்துக் கூறினான்: ‘அறிவீனம் உன் கண்ணை மறைத்துவிட்டது. நீ குற்றமிழைத்துவிட்டாய். எனது ராஜ்ஜியத்தில் வாழ்வதற்கு உனக்கு அருகதை இல்லை. ஆகவே உன் மனைவி குழந்தைகளுடன் உடமைகளை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறு’ என்று உத்தரவிட்டான்.
இவ்வாறாக நாடு கடத்தப்பட்ட அமைச்சன் காசி ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினான். கோசல ராஜ்ஜியத்தில் குடியேறினான். அந்த நாட்டு அரசனிடம் பணியில் சேர்ந்தான், படிப்படியாக அந்த அரசனின் நம்பிக்கையைப் பெற்றான். பேரரசனின் அந்தரங்க ஆலோசகன் என்ற நிலைக்கு உயர்ந்தான்.
ஒரு நாள் கோசலத்தின் அரசனைப் பார்த்து இவ்வாறு கூறினான். ‘அரசே! காசி ராஜ்ஜியம் ஒரு சிதைக்கப்படாத அற்புதமான தேனடை. அந்த அரசன் வலிமையற்றவன். அதைத் தாக்கிக் கைப்பற்றச் சொற்பமான படை இருந்தால் போதும்; ஒட்டு மொத்த ராஜ்ஜியத்தையும் கைப்பற்றி விடலாம்.’
காசி ராஜ்ஜியம் மிகப் பெரியது என்றுதான் கோசல ராஜா கேள்விப்பட்டிருந்தான். எனவே சொற்பப் படையைக் கொண்டே அந்த நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்ற ஆலோசனை அவனை யோசிக்க வைத்தது. அந்தரங்க ஆலோசகன் சொன்னது அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அமைச்சன், தன்னைப் பொறியில் மாட்டவைக்கவந்த கூலிக்காரனோ என்று சந்தேகம் கொண்டான். ஆகவே, அவனைப் பார்த்து கோபாவேசத்துடன், ‘தேசத் துரோகியே! கூலி வாங்கிக் கொண்டு இதைச் சொல்ல வந்தாயா?’ என்றான்.
‘நான் அப்படிப்பட்டவனில்லை அரசே. நான் உண்மையைத்தான் கூறுகிறேன். என்னைச் சந்தேகப்பட வேண்டாம். வேண்டுமானால் நான் சொல்லும் உபாயத்தைக் கேளுங்கள். அந்த ராஜ்ஜியத்தின் எல்லைக்குள் இருக்கும் சிற்றூர் ஒன்றைத் தாக்குவதற்கு ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் ஒருவேளை பிடிபட்டால் அரசனிடம் அழைத்துச் செல்வார்கள். அவன் அவர்களை விடுவிப்பதுடன் அவர்களுக்குப் பொருட்களும் கொடுத்தனுப்புவான்.’
மிகத் தைரியமாக, உறுதியாக இவன் சொல்கிறானே என்று நினைத்தான் அரசன். ‘இதை உடனடியாகப் பரிசோதிப்போம்’ என்றான். அதன்படி சிறிய படை ஒன்றை அனுப்பி, காசியின் எல்லைக்குள் ஊடுருவி சிற்றூர் ஒன்றைத் தாக்கி குடிமக்களைத் துன்புறுத்தப் பணித்தான். அந்தத் துஷ்டர்கள் பிடிக்கப்பட்டு காசி அரசன் முன் நிறுத்தப்பட்டனர். அரசன் அவர்களைப் பார்த்துக் கேட்டான். ‘குழந்தைகளே! எனது குடிமக்களை ஏன் கொலை செய்தீர்கள்?’
‘எங்களுக்கு வாழ்வதற்கு வழியேதும் இல்லை. அதனால்தான் இதனைச் செய்தோம்.’
‘அதற்கு நீங்கள் என்னிடம் வரவேண்டியது தானே?’ என்று கேட்டான் அரசன். பின்னர் அவர்களை நோக்கி, ‘நீங்கள் இனிமேல் இதைப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். உங்களுக்குத் தேவையானவற்றை நானே தருகிறேன்’ என்றான்.
அவர்களுக்கு அன்பளிப்புகள் தந்த அரசன் அவர்களை விடுதலை செய்தான். அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பினான். நாடு திரும்பிய அவர்கள், அரசனைச் சந்தித்து நடந்ததைக் கூறினர். எனினும், அந்த நாட்டின் மீது படையெடுக்கும் துணிச்சலைக் கோசல அரசனுக்குத் தருவதற்கு இந்த நிகழ்வு போதவில்லை. ஆகவே, வேறொரு சிற்றூரைத் தாக்குவதற்கு மற்றுமொரு படையை அனுப்பி வைத்தான். இந்த முறை அரண்மனைக்கு அருகில், நாட்டின் மையப் பகுதியில் இருந்த சிற்றூரை அவர்கள் தாக்கினர்.
இவர்களும் பிடிக்கப்பட்டனர்; அன்பளிப்புகளுடன் அவர்களும் கோசலத்துக்கே காசி அரசனால் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிகழ்வும் கோசல அரசனுக்குப் போதிய நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஆகவே, மூன்றாவதாக ஒரு படையை வாராணசியின் வீதிகளைத் தாக்கிக் கொள்ளையடிக்க அனுப்பினான்.
முன்னர் அனுப்பியது போலவே இவர்களையும் திருப்பி அனுப்பினான் காசி அரசன். கோசல அரசனுக்கு இந்த முறை திருப்தியும் நம்பிக்கையும் வந்தது. காசி அரசன் மிகவும் நல்லவனாகத் தெரிகிறான். அந்த நாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்று முடிவெடுத்தான். அந்த நாட்டின் மீது படையெடுத்தான்.
அந்த நேரத்தில், காசி அரசனிடம் பராக்கிரமசாலிகளான வீரர்கள் ஆயிரம் பேர் இருந்தனர். இந்திரனின் வஜ்ஜிராயுதத்தைக் கண்டும் அஞ்சாதவர்கள்; இரக்கமற்ற யானையொன்றின் மோதலை எதிர்கொள்ளக் கூடியவர்கள்; அவர்களுக்கு இணை யாருமில்லை; வெல்ல முடியாத மாவீரர்கள். அரசன் ஆணையிட்டால், நாடுகளை எல்லாம் அவனது அதிகாரத்தின் கீழ், காலடியில் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள்.
கோசலத்தின் படை வாராணசியின் மீது தாக்குதல் நடத்த வருகிறது என்ற செய்தியைக் கேட்டதும் அந்த ஆயிரவர் அரசனிடம் வந்தனர். நாட்டைக் கைப்பற்றும் நோக்குடன் பிரவேசிப்பவர்களை எதிர்கொள்ளத் தங்களை அனுமதிக்குமாறு கோரினர்.
‘நமது எல்லைக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னதாகவே, அவர்களைத் தாக்கிச் சிறைபிடித்து வருகிறோம்.’
‘அப்படி ஏதும் செய்ய வேண்டாம், குழந்தைகளே. என்னால் யாரும் துன்பம் அடையக்கூடாது. அப்படி ஆசைப்படுபவர்கள், வேண்டுமானால் என்னுடையதையும் எடுத்துக் கொள்ளட்டும்.’
இவ்வாறு சொல்லி, படையெடுத்து வருவோர்க்கு எதிராகப் போரிட வேண்டாம் என்று உத்தரவிட்டான். எல்லையைத் தாண்டிய கோசல அரசன், நாட்டின் மையப் பகுதியை அடைந்தான். காசி அரசனின் அமைச்சர்கள் மீண்டும் அரசனிடம் சென்றனர், எதிர்த்துச் சண்டையிட அனுமதி தருமாறு கேட்டனர். இப்போதும் அரசன் அனுமதி தரவில்லை.
நகரத்துக்கு வெளியே முற்றுகையிட்டிருந்த கோசல அரசன், காசி அரசனுக்குச் செய்தி அனுப்பினான். அரசை விட்டுக் கொடுக்கிறாயா அல்லது போரிட வருகிறாயா என்பதே செய்தி.
‘நான் சண்டையிடப் போவதில்லை. அந்த அரசன் நாட்டை எடுத்துக் கொள்ளட்டும்.’
மூன்றாவது முறையாக அமைச்சர்கள் அரசனைத் தேடி வந்தனர். கோசல அரசனை நாட்டுக்குள் புகுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று கெஞ்சினர். அவனை எதிர் கொண்டு போரிட்டு கோட்டைக்கு வெளியிலேயே அவனைச் சிறைபிடிக்க உத்தரவு கேட்டனர்.
இப்போதும் மறுத்த அரசன், கோட்டைக் கதவுகளைத் திறக்குமாறு உத்தரவிட்டான். அமைச்சர்களும் ஆயிரம் மாவீரர்களும் புடைசூழத் தனது அரியாசனத்தில் அமர்ந்தான். கோட்டையினுள் நுழைந்த கோசல அரசன், தன்னைத் தடுப்பதற்கு எவருமே இல்லையே என்று வியந்தான். படைகளுடன் நகர் வலம் வந்த அவன், அரண்மனைக்கு அருகில் வந்தான். அரண்மனையின் பெருங்கதவுகள் விரியத் திறந்திருந்தன. பகட்டான சிம்மாசனத்தில், ஆயிரம் மாவீரர்கள் சூழ காசி அரசன் நற்குணன் அமர்ந்திருந்தான்.
‘அனைவரையும் சிறைபிடியுங்கள்’ என்று ஆவேசத்துடன் குரல் கொடுத்தான் கோசல அரசன்.
‘அவர்கள் கைகளைப் பின்புறம் கட்டுங்கள்! இடுகாட்டுக்கு இழுத்து வாருங்கள். குழிகளைத் தோண்டி அனைவரையும் கழுத்துவரை புதையுங்கள். கைகளையோ கால்களையோ அசைக்கக் கூடாது. இரவில் நரிகள் இவர்களைச் சூழ்ந்துகொள்ளட்டும். அனைவருக்கும் அவை சமாதி கட்டட்டும்.’
துஷ்ட அரசனின் உத்தரவின்படி அவனது வீரர்கள், காசி அரசனையும் அவனது அமைச்சர்களையும், மாவீரர்களையும் கயிறுகளால் கட்டினர். தரதரவென இழுத்துச் சென்றனர். இந்த நேரத்திலும் அந்தப் போக்கிரிகளுக்கு எதிராக எவ்விதக் கோப உணர்வும் அரசன் சீலவனுக்கு ஏற்படவில்லை. கயிற்றால் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட போதும் தங்கள் அரசனின் கட்டளையை மீற அவனது அமைச்சர்களில் எவரும் தயாரில்லை. அவனைப் பின்பற்றுவோர் அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்.
0
இடுகாட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட அரசன் நற்குணனும் அவனது அமைச்சர்களும் தோண்டப்பட்ட குழிகளில் நிற்கவைத்து, கழுத்துவரை புதைக்கப்பட்டனர். அரசன் நடுவிலும், அவனைச் சுற்றி மற்றவர்களும். குழிகளில் மண் தள்ளப்பட்டு அழுத்தி மிதிக்கப்பட்டது. இடுகாட்டில் நீரும் இன்றி தவிக்க விடப்பட்டனர். இப்போதும் பண்புடனும் பணிவுடனும் நடந்து கொண்டான் காசி அரசன்; எதிரியின் மீது எவ்விதக் கோபமும் கொல்லாமல் இருந்தான் தமது சகாக்களை நோக்கி புத்திமதி கூறினான். ‘அன்புக் குழந்தைகளே, உங்களுடைய இதயங்களில் அன்பும் ஈகையும் தவிர்த்து வேறொன்றும் நிரம்பாமல் இருக்கட்டும்.’
இரவு வந்தது; நரிகளும் வந்தன; மனிதர்களின் தசை விருந்தை எதிர்பார்த்துக் கூட்டமாக வந்தன. இந்த விலங்குகளின் கூட்டத்தைப் பார்த்தவுடன் அரசனும் அவனது சகாக்களும், ஒன்றாகச் சேர்ந்து, பயங்கரமான உரத்த சப்தத்தை எழுப்பினர். நரிகள் பயந்து திரும்பி ஓடின. சிறிது தூரம் ஓடிய நரிகள் திரும்பிப் பார்த்தன; தங்களுக்குப் பின்னால் எவரும் வரவில்லை என்று அறிந்து கொண்டன. அவை மறுபடியும் இவர்களை நோக்கி ஓடிவந்தன.
இவர்கள் போட்ட இரண்டாவது உரத்த சப்தம் நரிகளை முன்போலத் துரத்தியது. எனினும் அவை மீண்டும் திரும்பி வந்தன. மூன்றாவது முறையாகத் திரும்பிய அவை, தங்களைத் தொடர்ந்து மனிதன் எவனும் துரத்தவில்லை என்பதைத் தெரிந்துகொண்டன. ஆகவே தங்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்டன. ‘சாவதற்கு விதிக்கப்பட்ட மனிதர்கள் இவர்கள்’. ஆகவே மீண்டும் வேகமாகச் சப்தம் எழுப்பியபோது, பயந்து வாலைச் சுருட்டிக்கொண்டு அவை ஓடவில்லை.
திரும்பி வந்தவை, ஒவ்வொன்றும் தமக்கான இரையை முடிவு செய்திருந்தன. தலைவன் போன்ற நரி, அரசனை நோக்கி நகர்ந்தது. மற்றவை அரசனின் சகாக்களை நோக்கி நகர்ந்தன.
தன்னை நோக்கி வந்த நரியை உற்றுக் கவனித்தான் அரசன். அதன் அசைவுகளை நோட்டம் விட்டான். கடியை வாங்கிக் கொள்பவன் போல் தன் கழுத்தை உயர்த்தி வைத்துக்கொண்டான். நரி இவன் கழுத்தைக் கவ்வ அருகில் வந்ததும், அரசன் விரைந்து தனது வாயை அகலத் திறந்து நரியின் கழுத்தைத் தனது பற்களால் இடுக்கியால் பிடிப்பதுபோல் கவ்விக்கொண்டான்! இறுக்கமான பிடி/ அரசனுடைய பற்களின் பிடியிலிருந்து நரியால் தன்னுடைய கழுத்தை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. சாகப்போகிறோம் என்றஞ்சிய நரி, அச்சத்தால் பெரிதாக ஊளையிட்டது. அந்த வேதனைக் குரலைக் கேட்டதும் நரிகளின் கூட்டம், தங்கள் தலைவன் எவரிடமோ மாட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைத்தன. தம் இரையை நோக்கி மேலும் நெருங்க மனமில்லாது, தயங்கின; பின்னர் உயிருக்குப் பயந்து கலைந்து ஓடின.
அரசனின் பற்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, பிடிபட்ட நரி வெறியுடன் குதித்தது; முன்னும் பின்னும் வேகமாக அசைந்தது; கால்களை அழுத்தி விடுவித்துக் கொள்ள முயன்றது. அதனால் அரசனின் கழுத்தருகில் இருந்த மண் தளர்ந்து பள்ளமாகியது. மண் சிறிது சிறிதாக அகன்று இறுக்கம் தளர்ந்தது. இதன் பின்னர், நரியைத் தப்பித்துப் போக அனுமதித்த அரசன், தனது அசுர பலத்தைப் பயன்படுத்தி, முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாக அசைந்து, தன்னைச் சிறிது சிறிதாக விடுவித்துக்கொள்ள முயன்றான். முதலில் தன் கைகளை விடுவித்துக் கொண்டான். பின்னர் தன்னைப் புதைத்திருந்த குழியின் விளிம்புகளில் கைகளை ஊன்றி, தன்னை மேலே இழுத்துக் கொண்டான்.
காற்றின் முன் கலைந்துபோன மேகம் போல் குழியிலிருந்து மேலே வந்தான். பிறகு, தனது சகாக்களைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பினான். ஒவ்வொருவராக விடுவிக்கத் தொடங்கினான். விடுதலையடைந்த சகாக்களின் துணையுடன் புதைகுழிகளில் இருந்து மற்றவர்களையும் வெளியில் கொண்டு வந்தான். அவனது அமைச்சர்களும் வீரர்களும் இவ்வாறு குழிகளிலிருந்து விடுதலை அடைந்தனர்.
0
புதைகுழிகளிலிருந்து இந்த மனிதர்கள் வெளிவந்த நிலையில், பிணம் ஒன்று எப்படியோ அது புதைக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியில் வந்திருந்தது. இரண்டு பூத கணங்கள் அந்தப் பிணத்தை எப்படிப் பிரித்துக் கொள்வது என்று சண்டை தமக்குள் போட்டுக்கொண்டிருந்தன.
‘நம்மால் இதைப் பிரித்துக்கொள்ள முடியாது. இந்த அரசன் நற்குணன் நீதிமான். நமக்காக இதைப் பிரித்துக் கொடுப்பான். நாம் அவனிடம் செல்வோம்,’ என்று முடிவெடுத்தன. ஆகவே, பிணத்தின் கால்களைப் பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு அங்கு நின்றிருந்த அரசனிடம் வந்தன.
‘அரசே, இந்தப் பிணத்தை எங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுங்கள்’
‘நிச்சயமாகச் செய்கிறேன், நண்பர்களே’ என்றான் அந்த அரசன். ‘ஆனால், நான் அசுத்தமாக இருக்கிறேனே. நான் முதலில் குளிக்க வேண்டும். என்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.’
உடனடியாக அந்தப் பூதங்கள் மாயச் சக்தியால் நறுமணமூட்டிய நீரை அதிகாரம் பறிக்கப்பட்டிருந்த அந்த அரசனுக்குக் கொண்டு வந்தன. அவன் குளித்து முடித்தான். அவன் அணிவதற்குப் புதிய ஆடைகளைக் கொண்டுவந்து அவன் முன் வைத்தன. அவற்றை அவன் அணிந்தான்.
அடுத்ததாக, மாட்சிமை தாங்கிய அரசனுக்கு ஐந்து வகை வாசனைத் தைலங்கள் அடங்கிய பெட்டி ஒன்றை எடுத்து வந்தன. அவனுக்குப் பிடித்த வாசனை தைலத்தை அவன் பூசிக்கொண்டான். அடுத்து அந்தக் குட்டிச்சாத்தான்கள் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு வந்தன. அப்பூக்களை அவை தங்கப் பெட்டியில் எடுத்து வந்தன. மலர்களால் அரசன் தன்னை அலங்கரித்துக் கொண்டான்.
அரசன் மலர்களைச் சூடிக் கொண்டதும், அந்தப் பூதங்கள் அரசனைப் பார்த்து, தங்களுக்கு வேறு ஏதேனும் கொண்டு வரட்டுமா என்று கேட்டன. தான் பசியோடிருப்பதாக அரசன் கூறினான், உடனே அவை அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றன. அதிகாரமிழந்த அந்த அரசனுக்கு, அனைத்துவிதமான, நன்கு தயாரிக்கப்பட்ட சுவையான பதார்த்தங்களைக் கொண்டு வந்தன.
இப்போது அந்த அரசன், சுத்தமாகக் குளித்துச் சிறப்பாக உடையணிந்து, நறுமணத் தைலங்கள் பூசி தன்னை முறையாக அலங்கரித்துக் கொண்டான். அறுசுவை உணவை உண்டிருந்தான். சாப்பிட்டு முடித்திருந்த அரசன் அருந்தத் தங்கக் கிண்ணத்தில் நறுமணம் மிக்க நீரை அளித்தன. கையலம்ப தங்கப் பாத்திரம் ஒன்றையும் மறக்காமல் ஏந்தி நின்றன. அரசன் நீரை அருந்தி, வாய் கொப்பளித்து, கையலம்பியதும், வாசனை மிக்க தாம்பூலத்தை எடுத்து வந்தன.
மாட்சிமை தாங்கிய அரசன் வேறு ஏதாவது கட்டளை இட்டால் செய்வதற்குத் தயாராக இருப்பதாக அவை கூறின. உடனே அரசன், ‘உங்களது மாய சக்தியால், நயவஞ்சக அரசனின் தலையணையின் அருகில் இருக்கும் என்னுடைய ராஜ உடைவாளை எடுத்து வாருங்கள்’ என்று உத்தரவிட்டான். உடனடியாக, அந்த உடைவாள் இவனிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.
பின்னர், அந்தப் பிணத்தைத் தூக்கி நேராக நிறுத்திய அரசன், மேலிருந்து கீழாக அதை இரண்டாக வெட்டினான். இரண்டு பூதங்களுக்கும் அளித்தான். பின்னர், அந்த வாளைச் சுத்தம் செய்து, உறையில் செருகிக் கொண்டான்.
வயிறு நிறையச் சாப்பிட்ட பூதங்களுக்கு மனமும் நிறைந்தன. மகிழ்ந்து போன அவை, நன்றியுடன் அரசனைப் பார்த்து, அவனுக்குத் தாங்கள் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.
‘உங்களது மாயச் சக்தியால், அந்த நயவஞ்சக அரசன் இருக்கும் அறையில் என்னைக் கொண்டு விடுங்கள். ஏனைய அமைச்சர்களையும் அவரவர் வீட்டில் திரும்பக் கொண்டு விடுங்கள்.’
‘நிச்சயமாக, அரசனே’ என்றன பூதங்கள். சொன்னதுபோலவே செய்தும் முடித்தன.
0
அந்த நேரத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த கோசல அரசன், காசி ராஜனின் அறையில் ராஜ மஞ்சத்தில் படுத்துறங்கிக் கொண்டிருந்தான். வெற்றி மயக்கத்தில் நன்கு தூங்கிக் கொண்டிருந்த அந்த நயவஞ்சகனின் மார்பில் வாள் முனையால் தட்டி எழுப்பினான் நற்குணன். பதறி எழுந்த அந்த நயவஞ்சக அரசன், விளக்கொளியில் தன் படுக்கையருகே அந்த அரசன் நற்குணன் நிற்பதைப் பார்த்துத் திகைத்தான்.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு படுக்கையில் எழுந்து அமர்ந்தான். நற்குணனைப் பார்த்துப் பேசினான். ‘அய்யா, இது இரவு நேரம். வெளியில் காவலர்கள் இருக்கிறார்கள். கதவுகள் சாத்தப்பட்டிருக்கின்றன. யாராலும் உள்ளே நுழைய முடியாத நிலையில் எப்படி என் படுக்கையருகே வந்தீர்கள், ராஜ உடையணிந்து கையில் வாளுடன்?’
அப்போது அந்த அரசன் தான் தப்பித்து வந்த கதையை விவரமாகக் கூறினான். அந்த வஞ்சக அரசனின் மனம் நெகிழ்ந்து போனது; மிகவும் வருந்தினான். ‘ஓ அரசனே! இயற்கையான மனிதக் குணங்கள் என்னிடமும் இருக்கின்றன. உனது நற்குணங்களை நான் அறிந்திருக்கவில்லை; ஆனால், மனிதச் சதையும் இரத்தமுமே உணவாகக் கொள்ளும் அந்தக் கொடிய, குரூரம் மிக்கப் பூதங்களுக்கு உன்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது. இத்தகைய அசாதாரணமான நற்குணங்கள் கொண்ட உனக்கு எதிராக இனிமேல் எந்தச் சதித்திட்டமும் தீட்ட மாட்டேன்.’
இவ்வாறு கூறி, நாம் இனி நண்பர்கள் என்று சத்தியம் செய்தான். வாளின் மேல் ஆணையிட்டு இதைக் கூறினான். காசி அரசனின் மன்னிப்பை இறைஞ்சினான். பின்னர், ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் அந்த அரசனைப் படுத்துக் கொள்ளுமாறு வேண்டினான்; அருகிலிருந்த சிறிய மஞ்சம் ஒன்றில் படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் அதிகாலையில், சூரியன் உதித்ததும் பறையறிவிப்போனை அழைத்தான். அவனது படையில் இருந்த அனைவரையும், தளபதிகள் முதல் வீரர்கள் வரை, உடனே அரண்மனைக்கு வெளியில் கூடும்படி அறிவிக்கச் சொன்னான். அவர்கள் கூடியதும், அரசன் நற்குணனின் செயல்களைப் புகழ்ந்து பேசினான். முழு நிலவை, வானத்தில் மேலும் உயரத்தில் வைப்பதுபோல் அவன் பேச்சு இருந்தது. அவர்களுக்கு முன்னால், மீண்டும் ஒருமுறை காசி அரசனின் மன்னிப்பை வேண்டினான்; பறித்துக் கொண்ட ராஜ்ஜியத்தைத் திரும்ப ஒப்படைத்தான்.
‘இனிமேல் என் பணி உம் நாட்டிற்கு எதிராக இருப்போரை அடக்கி வைப்பது; உங்களது நாட்டை நீங்களே ஆட்சி செய்யுங்கள். உங்கள் நாட்டைப் பாதுகாக்கும் வேலை இனி என்னுடையது’ என்றும் கூறினான். அது மட்டுமின்றி, காசி அரசன் குறித்து அவதூறான செய்திகளைக் கூறிய அந்தத் துரோகி அமைச்சனுக்கு மரண தண்டனையும் விதித்தான். பின்னர் தன்னுடைய வீரர்களையும் யானைகளையும் அழைத்துக் கொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்.
0
மானின் கால்கள் போன்ற அழகிய கால்களைக் கொண்ட தங்கச் சிம்மாசனத்தில் அமர்ந்து வெண்கொற்றக் குடையின் கீழ் மாட்சிமையுடனும் கம்பீரத்துடனும் அரசன் நற்குணன் ஆட்சி செய்தான். கிடைத்த மகிமையைப் பற்றி தனக்குத்தானே சிந்தித்துக் கொண்டிருந்தான்: ‘விடா முயற்சியுடன் போராடவில்லை என்றால் அனுபவிக்கும் இந்தச் சிறப்பான தருணம் கிடைத்திருக்காது; எனது அமைச்சர்களும் ஆயிரம் வீரர்களும் உயிருடன் இருந்திருக்க முடியாது. இழந்த இந்த ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெற்றேன். என்னை நம்பியவர்களின் உயிரையும் காப்பாற்றினேன். இடையறாமல், அஞ்சா நெஞ்சுடன் உண்மையாகப் போராட வேண்டும். விடா முயற்சியால் கிடைக்கும் பலன் மிக அற்புதமானது.’
அவன் உதிர்த்த சொற்கள் இவை:
‘என் சகோதரனே, முயற்சி செய்; எக்கணமும்
நம்பிக்கையின் மீது உறுதியாக இரு;
மனவலிமை தளராமல் சோர்ந்துபோகாமல் இருக்கட்டும்;
இதோ, சந்தித்த துயரங்கள் கடந்து போயின.
மனத்தின் ஆசையை அடக்கி ஆண்டவன் நான்.’
நல்ல மனதுடன் செய்யப்படும் விடா முயற்சி நிச்சயம் பலனைத் தரும் என்று போதிசத்துவர் அறிவித்தார். வாழ்நாள் முழுவதையும் இவ்வாறு நல்ல காரியங்கள் பல செய்தபின் இறந்து போனார். அதன் பின்னும் செய்த நற்செயல்களால் அவர் போற்றப்பட்டார்.
0
கடந்த பிறப்புக்கும் இந்தப் பிறப்புக்கும் உள்ள தொடர்பையும் கௌதம புத்தர் விவரித்தார். ‘மோசமான அந்த அமைச்சரே, தேவதத்தன்; அந்த ஆயிரம் வீரர்களும் புத்தரின் சீடர்கள், அந்த அரசன் நற்குணன், நானே’ என்றார்.
(தொடரும்)