(தொகுப்பிலிருக்கும் 55வது கதை)
‘ஐந்து ஆயுதங்கள் ஏந்திய இளவரசன்’
ஒரு புத்தத் துறவிக்கும் அதற்கான பயிற்சியில் இருப்பவருக்கும் தேவையான குணங்களை விவரிக்கும் வழிமுறையாகச் சில நேரங்களில் போர்க்கலைப் படிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் அரசனுடன் உரையாடுகையில், ஒரு ராஜாவுக்கு அவனுக்காக யுத்தம் செய்வதற்குத் திறன்மிக்க நல்ல வீரர்கள் தேவைப்படுவதுபோல, புத்தருக்கும் அவரது நெறிகளை ஆதரித்துப் பிரசாரம் செய்ய நல்ல துறவிகள் தேவை என்று புத்தர் கூறுகிறார்.
மற்றோரிடத்தில் ஒரு சீடனின் மனம் நன்கு வலுப்படுத்தப்பட்ட கோட்டைபோல் இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஞானம் பெற்ற இரவில், புத்தராகவிருந்த கௌதமர் அவருடைய கேடயமாகவும் ஆயுதமாகவும் பூரணத்துவ நிலை இருக்குமெனக் கூறுகிறார். இந்தக் கதையில், போர்க்கலைச் சொற்கள், நகைமுரணாக என்றாலும், ஆன்மிகத்தையும் தார்மிக நெறிகளையும் விளக்கப் பிரயோகப்படுகின்றன. உடல் வலிமையைக் காட்டிலும் மனத் துணிவே முக்கியமானது என்பதைக் கதை கூறுகிறது. அவன் கல்வியும் பயிற்சியும் பெற்ற தட்சசீலத்துக் குருகுலத்தின் ஆசிரியர் இந்தக் கதையில் இளவரசனுக்கு ஐந்து விதமான ஆயுதங்களை அளிக்கிறார். அவற்றில் ஒன்று, விவேகம் நிறைந்த அறிவு.
ஜேதவனத்தின் மரங்களடர்ந்த பூஞ்சோலையில் தங்கியிருந்தபோது, தனது செயல் முனைப்பைக் கைவிட்டுச் சோர்ந்து முடங்கியிருந்த துறவிக்கு இந்தக் கதையைப் பேராசான் சொல்கிறார். அதற்கு முன்னர், தம்ம அரங்கில் உரையாடலில் ஈடுபட்டிருந்த பிக்குகள், கௌதமரிடம் இந்தத் துறவியைப் பற்றிக் கூறுகின்றனர். புத்தர் அவரிடம், ‘பிக்குவே, இவர்கள் சொல்வது உண்மையா?’ என்று வினவுகிறார். அவரும், ‘ஆமாம், குருநாதரே’ என்று பதிலுரைக்கிறார்
‘பிக்குவே, இலக்கை அடைய விடா முயற்சி தேவை. முற்காலத்தில் விவேகம் மிக்கவர்கள் அப்படித் தீவிரமான விடா முயற்சி மூலமே சிறப்பை அடைந்திருக்கிறார்கள்’ என்று சொல்லி, தொடர்ந்து அந்த முற்காலத்துக் கதையை அவர்களுக்குக் கூறுகிறார்.
0
அப்போது பிரம்மதத்தன் வாராணசியை ஆண்டுகொண்டிருந்தான். அரசனுடைய முதன்மைப் பட்டத்து ராணியின் வயிற்றில் போதிசத்துவர் அவதாரம் செய்திருந்தார். குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவை மிகச் சிறப்புடன் அரசன் நடத்தினான். பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த அந்த நிகழ்வுக்கு வந்திருந்த நூற்றெட்டு பிராமணர்களிடம் பெற்றோர்கள் தம் மகனுடைய எதிர்காலம் குறித்துக் கேட்டனர். குழந்தையின் அங்க லட்சணங்களையும் உடலில் இயற்கையாக்க் காணப்பட்ட அடையாளங்களையும் பார்த்து, எதிர்காலத்தைக் கணிப்பதில் வல்லமை பெற்றவர்கள் அந்த பிராமணர்கள்.
குழந்தையைப் பார்த்து அவர்கள் வியந்து போயினர்; குழந்தையின் சிறப்பை அரசனிடம் விளக்கியுரைத்தனர்: ‘பேரரசே, நம் இளவரசர், பெருஞ்சிறப்பும் நல்வாய்ப்பும் பெற்றவராக இருக்கிறார். தங்களுக்குப் பின்னர் இவர்தான் அரியணை ஏறுவார். புத்திசாலியாகவும், மனிதர்களில் மிகச் சிறந்தவராக, ஐந்து ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரிடுவதில் திறன் பெற்றும், இந்த ஜம்பு தீபத்தில் அவரைக் காட்டிலும் திறமையானவர் எவரும் இல்லை என்றும் உணர்த்துவார்’.
அவர்கள் முன்னறிந்து கூறிய விவரங்களைக் கேட்டு மகிழ்ந்த பெற்றோர் அவர்களுக்குப் பொன்னும் பொருளும் தந்தனர். தம் மகனுக்கு, ‘ஐந்து ஆயுதங்கள் ஏந்துபவன்’ என்று பெயர் சூட்டினர்.
இளவரசன், விவேகத்துடன் சிந்தித்து முடிவெடுக்கும் வயதை அடைந்தான். கல்வி பயின்றான். பதினாறு வயது அடைந்துவிட்ட மகனிடம் போர்க்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அரசனுக்கு அந்தத் திறமை கண்டிப்பாகத் தேவை என்றான் அரசன்.
‘தந்தையே, நான் எங்குச் சென்று, யாரிடம் கற்றுக்கொள்ளவேண்டும்?’
‘மகனே, காந்தார ராஜ்ஜியத்தின் தட்ச சீல நகரத்தில் ஒரு புகழ்பெற்ற கடிகை இருக்கிறது. போர்க்கலையில் புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீ பயின்றால் சிறப்பாக இருக்கும்’.
‘அப்படியே செய்கிறேன், தந்தையே. நாளையே புறப்படுகிறேன்’.
‘அவருக்குத் தரவேண்டிய தட்சிணையையும் எடுத்துச் செல்’ என்று சொல்லி ஆயிரம் நாணயங்கள் அடங்கிய பை ஒன்றையும் மகனிடம் கொடுத்து, அரசன் வாழ்த்தி அனுப்பினான்.
தட்ச சீலம், ஜம்புத்தீபத்தின் வடமேற்கில் இருக்கிறது. வாராணசியிலிருந்து வெகு தூரம். பல நாட்கள் பயணத்துக்குப் பின் அந்த நகரை அடைந்து குருகுலத்தைத் தேடி, வந்த ஆசிரியரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அந்த ஆசிரியரும் மிகவும் பொறுப்புடன் இளவரசனுக்கு வாள் வீச்சு, வேல் வீச்சு, விற்பயிற்சி, மல் யுத்தம், கதாயுதப் பயிற்சி என்று தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லித் தந்தார்.
கல்வி முடிந்ததும், இளவரசன் தன் மாநகரத்துக்குப் புறப்பட ஆசிரியரிடம் விடை பெற்றான். ஆசிரியர் இவனை வாழ்த்தியதுடன் அவனுக்கு ஐந்து வகை ஆயுதங்களையும் பரிசாக அளித்தார். ஐந்து ஆயுதங்களுடன் வாராணசியை நோக்கிப் புறப்பட்டான் அவன். வழியில் ஒரு பெரும் காடு. அந்தக் காட்டில் யட்சன் ஒருவன் வசித்தான். அவனுக்கு சிலே சலோமா (ரோமப்பிடியன்) என்ற பெயர்.
இளவரசன் காட்டுக்குள் நுழைய இருந்த நேரத்தில் அதன் விளிம்பினருகில் சென்று கொண்டிருந்த ஒருவன், இவனைப் பார்த்து விசாரித்தான். காட்டின் வழியாக, தான் வாராணசிக்குச் செல்வதாக இளவரசன் அவனுக்குப் பதிலளித்தான். அந்த மனிதன், ஐயா இளைஞனாக இருக்கிறீர். இந்தக் காட்டில் மனிதனைச் சாப்பிடும் யட்சன் ஒருவன் வசிக்கிறான். ஆகவே, நீர் இந்த வழியாகச் செல்லவேண்டாம், வேறு வழியைத் தேடிச்செல்லும் என்று எச்சரித்தான்.
எனினும் இளவரசன், தன் மீதும், வைத்திருந்த ஆயுதங்கள் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தான். ஆகவே, காட்டுக்குள் சென்ற பாதையில், அச்சமேதும் இல்லாத சிங்கம் போல் பயணத்தைத் தொடர்ந்தான்.
அவன் காட்டின் மையப்பகுதியை அடைந்துவிட்டான். அப்போது அந்த யட்சன் அவன் முன் திடீரென்று தோன்றினான். அவன் ஒரு பனைமரத்தின் உயரம் இருந்தான்; கூரைவேய்ந்த வீடு அளவுக்குத் தலை பெரிதாக இருந்தது. கிண்ணங்கள் அளவுக்குக் கண்களும் வாயின் இருபக்கமும் பெரும் வாழைப் பழத்தின் அளவுக்குப் பற்களும் இரண்டு தந்தங்கள் போல் நீட்டிக்கொண்டிருந்தன. வெண்மையான முகம், திரண்ட வயிறு, உடல் முழுக்க முகம் தவிர்த்து அடர்த்தியாக ரோமக்காடு. திடமான கைகளும் மரம் போன்ற கால்களும். இளவரசனைப் பார்த்து ‘எங்கே போகிறாய்?’ என்று கேட்டான். ‘இடத்தை விட்டு நகராதே. இன்றைக்கு நீதான் என் உணவு!’
இளவரசன் யட்சனைப் பார்த்து, ‘ மிரட்டாதே. யட்சா. உன்னைப்பற்றிச் சொன்னார்கள். ஆனால், என் மீது நம்பிக்கை எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய அம்பினால் உன்னை இந்த இடத்திலேயே அழித்துவிடுவேன். என்னைப் பற்றி அறியாமல் அருகில் வந்துவிட்டாய்’ என்று கூறினான். அத்துடன் நில்லாமல், மிகக் கொடிய விஷம் தடவிய அம்பு ஒன்றை விரைந்து யட்சனை நோக்கி எய்தான். ஆனால், அம்பு அவன் உடலினுள் செல்லவில்லை. வெளிப்புறம் இருந்த ரோமத்தில் சிக்கிக் கொண்டது. யட்சன் சிரித்தான். இளவரசன் தொடர்ந்து கிட்டத்தட்ட ஐம்பது அம்புகளைத் தொடர்ச்சியாக எய்தான். எனினும், அவை அனைத்தும் யட்சனை ஒன்றும் செய்யவில்லை. உடலினுள் துளைத்து நுழையாமல் ரோமங்களில் சிக்கியபடி தொங்கின. யட்சன் தனது உடலை அசைத்து உலுக்கினான். அம்புகள் உடலிலிருந்து உதிர்ந்து அவன் காலடியில் விழுந்தன. அவன், இளவரசனை நோக்கி நகர்ந்தான்.
சிறிதும் சோர்ந்து போகாத இளவரசன் தனது நீண்ட வாளை உருவிக்கொண்டு, யட்சன் மேல் பாய்ந்து அவனைத் தாக்கத் தொடங்கினான். முப்பத்து மூன்று அங்குல நீளமுள்ள வாள் அது. எனினும், அம்புகளைப் போலவே, அடர்த்தியான அந்த ரோமப்பகுதியைத் துளைத்து வாளால் யட்சனின் உடலைத் தொட முடியவில்லை. அவன் சிரித்தபடி இளவரசனைச் சீண்டினான்.
இப்போது, வேல்முனையால் யட்சனைத் தாக்கினான் இளவரசன். எனினும் கவசம் போன்ற ரோமப் பகுதியைக் கடந்து அதனாலும் உடலைத் தீண்டமுடியவில்லை. புதர் போன்ற முடியில் வேல் கம்பும் சிக்கிக்கொண்டது. இப்போது இளவரசன் கதாயுதத்தால் தாக்கத் தொடங்கினான். அதனாலும் எந்தப் பயனும் விளையவில்லை.
யட்சன் சிரித்தபடி, சிறுவனே, ‘என்னை உன்னால் தாக்கி வீழ்த்த முடியாது. நீ தான் என் உணவு. தாமதிக்காதே. ஆயுதங்களைப் போடு’ என்று நெருங்கினான்.
மனம் தளரவில்லை இளவரசன். யட்சனின் ரோமத்துக்கு இருக்கும் சிறப்புத் தன்மைதான் ஆயுதங்கள் பலனற்றுப் போனதற்குக் காரணம் என்பதை உணர்ந்துகொண்டான். ‘யட்சனே, நான் ஏன் போடவேண்டும். என்னைப் பற்றி இதுவரை நீ கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஐந்து ஆயுதங்களில் பயிற்சி பெற்ற இளவரசன் நான். இந்தக் காடு உன் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்தே இங்கு வந்தேன். வில், வேல், வாள் மீது மட்டும் நம்பிக்கை வைத்து நான் நுழையவில்லை. என் மீதும், என் உடல் வலிமை மீதும், என் நெஞ்சுரத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வந்தேன். இதோ என் கைகளின் தாக்குதலில் நீ தூள் தூளாகப் போகிறாய்’ என்று சொல்லியபடி யட்சனின் மீது பாய்ந்து தாக்கினான் இளவரசன்.
ஆனால், கை யட்சனின் முடியில் சிக்கிக்கொண்டது. மற்றொரு கையால் தாக்கினான். அதுவும் இப்போது மாட்டிக்கொண்டது. எனினும் மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்ட இளவரசன், ‘உன்னை விடமாட்டேன்’ என்று தன் தலையால் அவன் மார்பில் ஓங்கி முட்டினான். எனினும் அதுவும் முடிகளில் சிக்கியது. கயிற்றால் கட்டித் தொங்கவிடப்பட்டவன் போல், யட்சன் உடலில் இளவரசன் தொங்கினான். எனினும், அச்சமின்றித் தன் உடலை அசைத்து விடுவித்துக்கொள்ள முயன்றான், முடியவில்லை.
தொடக்கத்திலிருந்தே இவனுடைய செயல்பாடுகளையும் மனத்துணிவையும் பார்த்து வியந்து கொண்டிருந்தான் யட்சன். ‘இவன் ஒரு தனிப்பிறவி. சாதாரண மனிதன் அல்ல. இந்தப் பாதையில் சென்றவர்களை எத்துணையோ நபர்களைக் கொன்று தின்றிருக்கிறேன். எனினும், இவனுக்கு இணையான ஒரு மனிதனைப் பார்க்கவில்லை. இவனிடம் துளியும் அச்சத்தின் சாயல் தென்பட இல்லையே’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான். இவனைச் சாப்பிட முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தும், ‘இளைஞனே, இந்தச் சாலையில் நான் எண்ணற்றவர்களைக் கொன்று உணவாக்கிக் கொண்டுள்ளேன். நீ வித்தியாசமானவன். சாவைக் கண்டு நீ அஞ்சாமல் என்னிடம் சண்டையிடுகிறாய். சாவைக் கண்டு நீ பயப்படவே இல்லையா’ என்று கேட்டான்.
‘யட்சனே, நான் ஏன் பயப்பட வேண்டும்? நம் அனைவருக்கும் மரணம் நிச்சயம். அது விதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி எனக்குள், என் வயிற்றில் வைரத்தைப் போன்ற உறுதியான வாள் ஒன்று உள்ளது. ஒருவேளை நீ என்னைச் சாப்பிட்டால் உன்னால் அந்த ஆயுதத்தை ஜீரணிக்க முடியாது. அது உன் குடலைத் துண்டுத் துண்டாக்கிவிடும். உன் வாழ்வின் முடிவு அதுதான். நாம் இருவருமே அழிந்து போவோம். ஆகவே தான் மரணம் குறித்து எனக்கு அச்சமில்லை.’ இளவரசன், தன்னுடைய துணிவையும் அடைந்திருக்கும் விவேகமெனும் ஆயுதம் பற்றியும் அவனிடம் மறைமுகமாக இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
இதைக் கேட்டதும் யட்சன் சற்று அசைந்தான். ‘இளைஞன் சொல்வது உண்மைதான். சிங்கத்தை ஒத்த இந்த மனிதனினுடைய உடலில் மிகச் சிறிய பகுதியையும் என்னால் ஜீரணிக்க முடியாது. இவனை விட்டுவிடுகிறேன்.’
‘இளைஞனே, நீ சிங்கம் போன்ற மனிதன். நான் உன்னைச் சாப்பிட மாட்டேன். ராகுவின் வாயிலிருந்து விடுபட்ட சந்திரன் போல நீ என் கைகளிலிருந்து விடுபட்டாய். உன் ஊருக்குச் சென்று உறவினர்களுடன், நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க.’
‘யட்சனே, நானும் உன்னை விட்டுவிடுகிறேன். ஆனால், நீ தீமைகள் செய்தவன். கொடூரமான கொலைகள் செய்ததால், உன் கைகள் ரத்தக் கறை படிந்தவை. ரத்தமும் சதையும் தின்றதன் விளைவாகத்தான் நீ இந்தப் பிறவியில் யட்சனாகப் பிறந்திருக்கிறாய். தொடர்ந்து நீ இவ்வாறே செய்துகொண்டிருந்தால், இந்த இருண்மையிலிருந்து மேலும் அதிக இருட்டுக்குத்தான் செல்வாய். எனினும், இப்போது நீ என்னைப் பார்த்துவிட்டாய். இனிமேல் உன்னால் தீமை செய்ய முடியாது. உயிர்க் கொலை ஒருவனை நரகத்தில், அறிவற்ற விலங்காக, பேயாக, இறுதியில் ஓர் அசுரனின் உடலில் மறுபிறவி எடுக்க வைக்கும். மனித உருவை எடுத்தாலும் குறுகிய வாழ்நாள்தான் ’.
அதன்பின்னர், இளவரசர் ஐந்து மோசமான குணங்களைச் சொல்லி அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்ந்தால் கிடைக்கும் நன்மைகளையும், ஐந்து நன்னெறிகளையும் யட்சனுக்குக் கூறினார். நல்ல வாழ்க்கை என்ன என்பது குறித்துச் சொல்லி அந்த வாழ்க்கைக்குத் திரும்பும்படி யட்சனை ஊக்குவித்தார். தம்மம் குறித்தும் உபதேசித்தார்.
ஐந்து கட்டளைகளைப் பின்பற்ற உறுதியேற்ற யட்சனை அந்த வனத்தின் தேவதையாக நியமித்தார். அவனுக்கு அர்ப்பணங்கள் செய்யும் கடமையையும் உலகுக்கு நினைவூட்டினார். கவனமாகத் தனது பணிகளைச் செய்யும்படி எச்சரித்தார். அன்றிலிருந்து யட்சன் வனத்தின் காவலனாக, அந்தப் பாதையில் வனத்தைக் கடந்து செல்வோருக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாளனாகவும் இருந்தான்.
மக்கள் வசிக்கும் நாட்டுப்பகுதியை அடைந்த இளவரசர், மக்களுக்கு யட்சனைப் பற்றியும் நடந்தவை குறித்தும் விவரித்தார். பின்னர், தன்னுடைய குரு அவருக்கு அளித்த ஐந்து ஆயுதங்களுடன் வாராணசியை அடைந்து தாயையும் தந்தையையும் பணிந்தார். அரியணை ஏறிய பின்னர், தர்மத்தைப் பின்பற்றி, தாராள மனப்பான்மையுடன், பெருந்தன்மையுடன் நாட்டை ஆட்சி செய்தார்; பல்வேறு நல்ல செயல்களைச் செய்தார்.
இவ்வாறாக அருக நிலை எய்துவதற்கு வழிவகுக்கும் உரையொன்றை வழங்கிய ததாகதர் நான்கு உன்னத உண்மைகளை வெளிப்படுத்தினார். இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த தன்முனைப்பை இழந்திருந்த துறவி, விழிப்புற்றார். அருக நிலையையும் எய்தினார்.
பேராசான், ‘அந்தப் பிறவியில் அங்குலி மாலாவே யட்சனாகப் பிறந்தான். நான் ஐந்து ஆயுதங்கள் ஏந்திய இளவரசனாக அவதரித்திருந்தேன்’ என்று முற்பிறவித் தொடர்புகளையும் விளக்கினார்.
(தொடரும்)