(தொகுப்பிலிருக்கும் 56வது கதை)
‘மகிழ்ச்சியான இதயம் கொண்டவன்’
சிராவஸ்தி நகரத்தில் ததாகதர் இருந்தபோது சங்கத்தின் சகோதரர் ஒருவர் குறித்து இந்தக் கதையைக் கூறினார். ஒருநாள் அந்த நகரில் கௌதமர் தம்மம் குறித்து உரை நிகழ்த்தினார்; அதைக் கேட்டு உளம் மகிழ்ந்து அதில் ஈடுபாடு கொண்டான் சிராவஸ்தி நகரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன். அவர் எடுத்துரைத்த மதிப்பு மிக்க சமய நெறிகளின்பால் தன் கவனத்தைக் குவித்தான்.
ஆகவே, புத்தரின் முன்னிலையில் அவன் தன்னை சங்கத்தில் இணைத்துக்கொண்டான். நெறிகளை உபதேசிப்பவர்களும் ஆசிரியர்களும் அந்த இளைஞனுக்கு அறநெறிகள் பத்தையும் சங்கத்தின் விதிகளையும் கற்பிக்கத் தொடங்கினர். அடுத்தடுத்து, ஒன்றன் பின் ஒன்றாக இடைவெளியின்றிக் குறுகிய கால அறநெறிகள், நடுத்தரக் கால நெறிகள், நீண்டகால நோக்கில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை விளக்கி உரைத்தனர். பாதிமோக்கம் (Pātimokkha) விளக்கும் சுய-கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அறநெறி; புலன்களின் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அறநெறி; குற்றமற்ற வாழ்க்கையில் ஊன்றியிருக்கும் அறநெறி; சங்கத்தின் உறுப்பினர்களான சீடர்கள் அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இருக்கும் அறநெறி போன்றவை உபதேசிக்கப்பட்டன.
அவன் இளைஞன். இன்னும் வாழ்க்கையில் பக்குவப்படாதவன். இப்படி நினைத்தான்: ‘பின்பற்ற வேண்டிய அறநெறிகளும் கட்டுப்பாடுகளும் ஏராளமாகவும் கடுமையானதாகவும் இருக்கின்றன; உறுதியேற்றால் அனைத்தையும் முழுமையாக என்னால் நிறைவேற்ற முடியாது; நிச்சயம் தவறிவிடுவேன். ஆனால், இவற்றைக் கடைப்பிடிக்காமல் சீடனாக எப்படி இருப்பது? அதனால் என்ன நன்மை? எனவே, இந்த அமைப்பைவிட்டு விலகி, லோகாயத உலகத்துக்குத் திரும்பி, ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டு, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது, தானங்கள் அளிப்பது, வேறு நற்செயல்களில் ஈடுபடுவதே சிறந்த வழி’.
இந்த எண்ணத்துடன் அமைப்பின் மூத்தவர்களைச் சந்தித்தான். ஒரு சாதாரணக் குடும்பத்தலைவனாக, பௌத்த நம்பிக்கையின் மீது பற்றுள்ளவனாக வாழ விரும்புகிறேன். இந்தத் துறவியாடையையும் பிட்சைப் பாத்திரத்தையும் சங்கத்திடம் ஒப்படைக்க விரும்புகிறேன் என்றான்.
‘சரி, அது உன் விருப்பம். ஆனால், குறைந்தபட்சம் புத்தரைச் சந்தித்து அவரிடம் விடைபெற்றுச் செல்வது நல்லது’ என்றனர். அதுமட்டுமின்றி, தம்ம அரங்கில் வீற்றிருந்த ஆசான் முன்பாக அந்த இளைஞனையும் அழைத்து வந்து நிறுத்தினர்.
‘சகோதரர்களே, அவருக்கு விருப்பம் இல்லாத நிலையில், இந்தச் சகோதரரை என்னிடம் எதற்கு அழைத்து வந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா’ என்று சீடர்களைப் பார்த்து கௌதமர் வினவினார்.
‘பேராசானே, நமது சங்கத்தின் அறநெறி விதிகள் அவரால் கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாகவும் சிரமமாகவும் இருக்கின்றன என்கிறார். அதனால், துறவியாடையையும் பிட்சைப் பாத்திரத்தையும் திரும்பவும் ஒப்படைக்க விரும்புகிறார். ஆகவே, அவரை நாங்கள் உங்களிடம் உங்களுடைய அறிவுரைக்காகவும் ஆலோசனைக்காகவும் அழைத்து வந்தோம்’ என்றனர் சீடர்கள்.
‘அப்படியா? எனில், அவருக்கு மன அழுத்தம் ஏற்படும் அளவுக்கு அதிகமான உபதேசங்களை ஏன் செய்கிறீர்கள்? அவரால் முடிந்ததைத்தானே அவர் செய்ய இயலும். அதற்கு மேல் இயலாதே’ என்று புத்தர் தன் சீடர்களைக் கடிந்து கொண்டார். ‘இந்தத் தவற்றை இனியும் செய்ய வேண்டாம். இவருடைய விஷயத்தில் என்ன செய்ய முடியும் என்பதை என்னிடம் விட்டுவிடுங்கள்’ என்றார் புத்தர்.
பின்னர், அந்த இளம் சீடன் பக்கம் திரும்பி அன்புடன் கேட்டார். ‘சகோதரனே, அருகில் வாருங்கள். உம்முடைய பிரச்னையை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பின்பற்ற வேண்டிய நெறிகளும் கட்டுப்பாடுகளும் அதிகமிருப்பதாகக் கருதுகிறீர்களா? கடைப்பிடிக்க முடியாதென்று கவலை கொள்கிறீர்களா? சரி உங்களால், எவ்வளவு இயலும்? மூன்று விதிகள்… ?’
‘ஆமாம், ஆசானே. ஏற்கிறேன்.’
பின்னர் புத்தர் அந்த இளம் சீடரிடம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று தார்மீக விதிகளை மட்டும் விளக்கமாக உபதேசித்தார். பேச்சு, சிந்தனை, செயலில் நீங்கள் தீமை செய்வதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார். இந்த எளிய விஷயத்தை ஏற்றுப் பின்பற்றுவது அவருக்கு எளிதாகத் தோன்றியது. மகிழ்ச்சியுடன் தனது ஆசிரியர்களுடன் அங்கிருந்து அகன்றார்.
அவர் அந்த மூன்று விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தார். தனக்குள் இவ்வாறு நினைத்துக்கொண்டார். ‘எனக்குப் போதித்தவர்கள் ஒட்டுமொத்த அறநெறிகளையும் ஒரே நேரத்தில் எனக்குக் கூறினர். புத்தர் நிலையை அடையாதவர்கள் அவர்கள்; என்னால் கிரகித்துக் கொள்ளும் அளவு மட்டுமே சொல்லி எனக்குப் புரிதலை ஏற்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் விவேகம் பெற்றவரும் உண்மையின் கடவுளுமான புத்தர், அந்த நிலையை அடைந்தவர் என்பதால், இவற்றுக்கெல்லாம் அடிப்படையான இந்த மூன்று விதிகளை மட்டுமே, அனைத்துத் தார்மிக நெறிகளையும் அதில் அடக்கி எனக்கு உபதேசித்து, புரியவைத்தார். பேராசான், உண்மையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்’ முழு மகிழ்ச்சியுடன் அவற்றைக் கடைப்பிடித்து உள்ளுணர்வை வென்ற இளைஞன் சில நாட்களுக்குப் பின்னர் அருக நிலையை அடைந்தார்.
சங்கத்தின் சோதரர்கள் இதை நேரிடையாகப் பார்த்திருந்தனர் என்பதால் மிகவும் வியந்தனர். தம்ம அரங்கத்தில் தினந்தோறும் அவர்கள் கூடுகிற நேரத்தில் இதைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். அறநெறிகளைக் கடைப்பிடிக்கச் சிரமப்பட்டு, லோகாயத வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல இருந்த சகோதரருக்கு அனைத்து நெறிகளையும் உள்ளடக்கிய மூன்று அறநெறி விதிகளை மட்டுமே உபதேசித்ததையும், அவற்றைப் புரிந்துகொண்ட அந்த இளைஞனும் உள்ளுணர்வைப் பெற்று அறிவொளியை, அருக நிலையை எய்திய நிகழ்வையும் பேசிக்கொண்டே இருந்தனர். புத்தர் எவ்வளவு அற்புதமான ஆத்மா என்று உத்வேகத்துடன் பேசினர்.
அவ்வாறு ஒருநாள் அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் புத்தர் தம்ம அரங்கில் நுழைந்தார். அவருக்கென இருந்த இருக்கையில் அமர்ந்தார். பின்னர் அங்கு நடந்த உரையாடலைப் பற்றி விசாரித்தார்; தானும் கலந்து கொள்ளலாமா என்று வினவினார். சீடர்கள் அந்த இளைஞன் பெற்றிருக்கும் மேனிலையை எடுத்துச் சொல்லி வியந்து பேசினர். அவர்கள் பேசுவதைக் கேட்டார் கௌதமர், ‘அன்புக்குரிய சீடர்களே’ என்று உரையாடலைத் தொடங்கினார்.
‘சின்ன பகுதிகளாகப் பிரித்துச் சுமக்கத் தொடங்கினால் பெரிய சுமையும் இலேசாக மாறிவிடும் என்பது அறியாதவர்களா நீங்கள்? ஒட்டு மொத்தமாகப் பார்க்காமல் பிரச்னைகளைத் தனித்தனியே பிரித்துத் தீர்வுகளை நோக்கினால், அவற்றை எளிதாகத் தீர்க்க முடியும். இப்படித்தான் கடந்த காலத்தில் விவேகமும் புத்தியும் நிறைந்த நல்லவர் ஒருவருக்குத் தங்கக் கட்டி ஒன்றைப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது. எனினும், அளவில் பெரியதாக இருந்ததால், அதை அவரால் தோண்டி எடுத்து வீட்டுக்குக் கொண்டுபோக முடியவில்லை. அதன் பின்னர், அதைத் துண்டுகளாக வெட்டி எடுத்து, அந்தப் பொக்கிஷத்தை வீட்டுக்குக் கொண்டுசென்றார்’ என்றார். அந்தக் கதையைச் சீடர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களிடம் விவரித்துச் சொன்னார்.
0
ஒரு காலத்தில் வாராணசியை பிரம்ம தத்தன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய ராஜ்ஜியத்தில் கிராமம் ஒன்றில் விவசாயியாக போதிசத்துவர் அவதரித்திருந்தார். அவருக்கு நில புலன்கள் இருந்தன. ஒரு நாள் அவர் தன்னுடைய வயலில் உழுது கொண்டிருந்தார்.
அந்த இடத்துக்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த பெரும் பணக்கார வணிகர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் பெரிய தங்கக்கட்டி ஒன்றை வயலில் புதைத்து வைத்தார். ஆனால், விரைவில் இறந்துபோனார்.
வயலில் உழுதுகொண்டிருந்த போதிசத்துவரின் ஏர்க்காலில் ஏதோ தட்டுப்பட்டது. பெரிய மரத்தின் வேர் நீண்டிருக்கலாம் என்று எண்ணி அதை வெட்டுவதற்காக, உழுவதை நிறுத்திவிட்டு அந்த இடத்தை அவர் அகழ்ந்து பார்த்தார். வியப்பைத் தரும் வகையில் அது மரத்தின் வேரல்ல. பெரிய தங்கக் கட்டி. நான்கு முழ நீளமும், அவருடைய தொடை அளவுக்கு கனமும் கொண்டதாக அது இருந்தது. அவருக்கு ஒரே திகைப்பு.
அந்த இடத்தை மேலும் அகழ்ந்து, அந்தத் தங்கக் கட்டியின் மீதிருந்த மண்ணை எல்லாம் நீக்கினார். பிறகு மீதி உழவை முடித்தார். சூரியன் மலை வாயிலில் இறங்கியதும் ஏரை நிறுத்தி மாடுகளை அவிழ்த்து வீட்டுக்கு விரட்டினார். பிறகு அந்தக் கட்டியை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக, தங்கத்தை நிலத்திலிருந்து அகற்றுவதற்கு முனைந்தார். ஆனால், அதன் அதிக எடை காரணமாக அவரால் அதை நகர்த்தவே இயலவில்லை. ஆக, என்ன செய்யலாம் என்று அதன் அருகில் அமர்ந்து யோசித்தார்.
கிடைத்திருக்கும் இந்தப் பொக்கிஷத்தால் என்ன நன்மை? நல்ல வாழ்க்கையை வாழ்வதற்குப் போதிய செல்வம் கிடைக்கும், எதிர்காலத்துக்குக் கொஞ்சம் தங்கத்தைப் பொக்கிஷமாகப் புதைத்து வைக்கலாம்; வணிகம் செய்வதற்குப் போதிய பணம் கிடைக்கும்; தருமக் காரியங்களும் நற்செயல்களும் செய்ய முடியும். இவ்வாறு எண்ணியவர், அதன் படி அந்தத் தங்கக் கட்டியை வயலிலேயே நான்கு பகுதிகளாக வெட்டித் துண்டுகளாக்கினார். சிறு பகுதிகளாக அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரப்படுத்துவது அவருக்கு எளிதாக இருந்தது. அவருடைய சுமை, கவலை எளிதானது.
அவரது உபதேசமும் பாடமும் முடிந்தன. பேராசான் புத்தர் இந்த வரிகளைப் பாடலாக அவர்களிடம் உச்சரித்தார்:
மகிழ்ச்சி இதயத்தை நிரப்பி, மனதையும் நிரப்புகையில்,
அமைதியை வெற்றிகொள்ள நேர்மையை ஏற்கையில்
வாழ்க்கையில் அங்கனமே நடப்பவன் வெற்றி பெறுவான்
பிணைக்கும் சங்கிலிகள் அனைத்தும் உடைந்துபோகும்
புத்த நிலைக்கு இணையான அருக நிலையை அடையும் எல்லை வரையிலும் கௌதம புத்தர் தம்ம உரையொன்றையும் நிகழ்த்தினார். அதன் பின்னர் இப்பிறப்பு முற்பிறப்புத் தொடர்புகளையும் அவர் விளக்கினார்: ‘விவசாயியாக வயலில் தங்கக்கட்டியை அகழ்ந்தெடுத்த போதிசத்துவராக நான் தான் அவதரித்திருந்தேன்.’
(தொடரும்)