(தொகுப்பிலிருக்கும் 57வது கதை)
தேவதத்தன் புத்தரைக் கொல்வதற்கு முயற்சி செய்கிறார் என்பது செய்தி.
மூங்கில் வனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது இந்தக் கதையைத் துறவிகளுக்கு அவர் சொன்னார். தம்ம அரங்கில் கூடியிருந்தபோது, தேவதத்தனின் கொலை முயற்சி குறித்து சீடர்கள் தமக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். இவற்றைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்து தமது இருக்கையில் அமர்ந்த கௌதமர், ‘சகோதரர்களே, இதை நீங்கள் பொருட்படுத்திப் பேசவேண்டாம். உமக்குள் விவாதிக்கவும் வேண்டாம். இப்படி என்னைக் கொல்வதற்கு அவர் முயல்வது முதல் முறையல்ல; கடந்த பிறவியிலும் இதையே செய்தார். எனினும் அந்தத் தீய வழியில் அவரால் வெற்றிபெற இயலவில்லை.’
சீடர்கள் அவரிடம் அந்த நிகழ்வை அவர்களுக்கு விளக்கிக் கூறும்படிக் கேட்கின்றனர். கடந்த பிறவியில் வானரமாக அவதரித்திருந்த நேரத்தில் தேவதத்தன் முதலையாகப் பிறந்திருந்ததையும், அப்போது அவரைக் கொல்வதற்கு வந்தவரை ஏமாற்றி, எப்படித் தப்பித்தார் என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார்.
பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது. மீண்டும் பிறவி எடுத்திருந்த போதிசத்துவர் அந்த முறை வானரமாக அவதரித்திருந்தார். முழு வளர்ச்சியில் அந்த வானரம் ஒரு பெண் குதிரைக் குட்டியின் அளவுக்குப் பெரிதாக இருந்தது; மட்டுமின்றி அளவற்ற வலுவுடன், ஒரு யானையின் பலத்துடன் இருந்தது. அந்த வானரம் ஓர் ஆற்றின் கரையில் வனத்தில் தனியாக வசித்தது. அந்த ஆற்றின் நடுவில் ஒரு தீவு இருந்தது. அதில் ஏராளமான மரங்கள் இருந்தன. மா, பலா என்று பலவிதமான பழ மரங்கள் இருந்தன.
அந்தத் தீவுக்கும் கரைக்கும் நடுவில், ஓடிக்கொண்டிருந்த நீரில் சில பாறைகள் நீருக்கு மேலாக நீட்டிக்கொண்டிருக்கும். போதிசத்துவரான வானரம் ஆற்றில் நீர் ஓரளவுக்குக் குறையும்வரையிலும் காத்திருக்கும். அதன்பின்னர், கரையிலிருந்து ஒரு பாறைக்குத் தாவும். அதிலிருந்து மற்றொரு தட்டையான பாறை. அங்கிருந்து ஒரு பெரிய நீளமான தாவல். தீவை அடைந்துவிடும். அந்த அளவுக்கு அதற்கு வலு இருந்தது.
தீவில் காய்த்து, பழுத்துத் தொங்கும் பழங்களை வயிறு நிரம்பச் சாப்பிடும். மரங்களில் இங்குமங்கும் தாவி விளையாடும். ஓய்வெடுக்கும். மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் வந்தது போலவே, மீண்டும் கரையிலிருக்கும் தனது வசிப்பிடத்துக்குத் திரும்பிவிடும். வானரத்தின் வாழ்க்கை இப்படியே நிம்மதியாகப் போய்க்கொண்டு இருந்தது.
அதே நேரத்தில் அந்த ஆற்றில், தீவுக்கு அருகில் ஒரு முதலையும் அதனுடைய துணையும் வசித்து வந்தன. அந்தப் பெண் முதலை அப்போது கருவுற்று, தன்னுடைய வயிற்றில் குட்டி முதலை ஒன்றைச் சுமந்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் அந்த வானரம் கரையிலிருந்து பாறைகளில் தாவி தீவுக்குச் செல்வதையும், பழங்களைச் சாப்பிட்டபின் திரும்பவும் அதுபோல் தாவி கரைக்குச் செல்வதையும் நீரில் மிதந்தபடியே இந்த முதலை பார்த்துக் கொண்டிருந்தது. வானரத்தை இரையாகக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அந்தப் பெண் முதலைக்கு உருவாகியது, அது ஓர் ஏக்கமாகவே வளர்ந்து விட்டது.
ஆகவே ஒரு நாள் தனது ஆண் துணையிடம் தன்னுடைய ஆசையை வெளியிட்டது. எப்படியாவது அந்த வானரத்தைத் தனக்காகப் பிடித்துத் தருமாறு கேட்டது. அதன் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் என்று ஆண் முதலை உறுதியளித்தது. வானரம் தாவிக் குதிக்கும் ஒரு பாறையின் அருகில் சென்று என்ன செய்யலாம் என்று யோசித்தது; மாலை அதன் வசிப்பிடத்துக்குத் திரும்பிச் செல்லும் போது அந்த வானரத்தைப்ப் பிடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தது.
ஆகவே, வானரம் முதல் தாவலில் காலடி வைக்கும் அந்தப் பாறையின் மேல் ஆண் முதலை படுத்துக்கொண்டது. வானரம், பாறை என்று நினைத்துத் தன் முதுகில் தாவும். அப்போது வாயைத் திறந்து விரைந்து பிடித்துவிடலாம் என்று எண்ணியது. ஆக படுத்தபடி, வானரம் திரும்பும் நேரத்துக்காகக் காத்திருந்தது.
பகல் முழுவதும் தீவில் அலைந்து திரிந்து, பழங்களைச் சாப்பிட்ட வானரம் கரையிலிருந்த தனது மரத்துக்குத் திரும்புவதற்காக, தீவின் கரையில் நின்று வழக்கமாக அது தாவும் பாறையைப் பார்த்தது. அந்த வானரத்திடம் ஒரு வழக்கம் இருந்தது. தினந்தோறும் ஆற்று நீரின் அளவையும் பாறை வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் உயரத்தையும் காலை மாலை என்று இருவேளைகளிலும் பார்த்து, அதன் பின்னர்தான் தாண்டுவதற்கு முயற்சி செய்யும்.
இன்றைக்கும் வழக்கம்போல் அந்த வானரம் நீர் மட்டத்தைப் கவனித்தது. பாறையைப் பார்த்தது. ஆற்றின் நீர் மட்டம் மாறாமல் இருந்தது. ஆனால், அந்தத் தட்டையான பாறை, வழக்கத்தைக் காட்டிலும் நீருக்கு வெளியில் அதிகமாக உயர்ந்து நின்றது. இதைக் கண்ட வானரம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தது. ஏன் பாறை தண்ணீருக்கு வெளியே இவ்வளவு உயரமாக நிற்கிறது என்று ஆச்சரியப்பட்டது.
ஆகவே, தன்னுடைய எதிரிகள் யாராவது அதில் பதுங்கியிருக்கலாம் என்று நினைத்தது. ஒருவேளை தன்னைப் பிடிக்க முதலை அதில் படுத்திருக்குமோ என்றும் சந்தேகித்தது. சரி, என்னவாக இருந்தாலும் இதைச் சோதித்துப் பார்த்துவிடுவோம் என்று, ஒரு தந்திரம் செய்தது.
ஆகவே, ஒரு நண்பனிடம் பேசுவதுபோல், பாறையை நோக்கி, ‘அன்பு நண்பா பாறையே’ என்று குரல் கொடுத்தது.
பாறை பதிலளிக்கவில்லை; அமைதியாக இருந்தது. மீண்டும் ஒருமுறை, ‘நண்பா, பாறையே’ என்று வானரம் குரல் கொடுத்தது. ‘என்ன நீ இன்றைக்கு எனக்குப் பதில் குரல் கொடுக்கவில்லை? ஏதாவது கோபமா?’
முதலைக்கு வானரத்தின் தந்திரம் புரியவில்லை. அது விரித்த வலையில் விழுந்தது. ‘இந்தப் பாறை வானரத்திடம் தினமும் பேசும் போலத் தெரிகிறது. ஆகவே நான் பாறை பேசுவதுபோல் வானரத்திடம் பேசுகிறேன்’ என்று தன்னுடைய குரலை மாற்றிக் கொண்டு, ‘ஆகா, அன்பான வானரமே, சொல் என்ன விஷயம்?’ என்று பேசியது.
வானரத்துக்கு முதலைதான் பாறையின் மேல் படுத்திருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. எனினும், ‘யார் நீ. இந்தக் குரல் என் நண்பன் பாறையின் குரல்போல் இல்லையே?’ என்று பதில் வினா எழுப்பியது.
‘ஆமாம். நான் பாறை இல்லை. முதலை’.
‘சரி எதற்காக நீ பாறை மேல் படுத்திருக்கிறாய்?’
‘உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்குத்தான்’.
வானரத்துக்கு அதன் நிலைமை புரிந்துவிட்டது. மீண்டும் கரைக்குச் செல்ல வேண்டுமானால், பாறையில் குதித்துத் தான் தாண்டிச் செல்லவேண்டும். ஆனால், பாறைமேல் முதலை படுத்திருக்கிறது. சரி வேறு வழியில்லை அதை ஏமாற்றித்தான் காரியம் சாதிக்க வேண்டும். ஆகவே, முதலையைப் பார்த்துக் குரல் கொடுத்தது. ‘சரி முதலையாரே. எனக்கு வேறு வழியில்லை. உம்மிடமிருந்து தப்ப முடியாதென்று நினைக்கிறேன். ஆகவே நானே மனமொப்பி உனக்கு உணவாகிவிடுகிறேன். நீர் வாயைத் திறந்தபடி வைத்துக்கொள்ளுங்கள். நான் எப்போதும் தாவுவதுபோல் தாவி, உங்கள் வாயில் குதிக்கிறேன்’.
முதலைக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியும். வானரம் தனக்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டதே. ஆனால், முதலைக்கு இயல்பில் ஒரு குறைபாடு உண்டு. அதாவது, அவை வாயைத் திறக்கும்போது, அவற்றின் கண்கள் தன்னியல்பாக மூடிக்கொள்ளும். அந்த முதலைக்கு அது அப்போது தோன்றவில்லை. தனது வாயைத் திறந்தபடி வானரத்தின் பாய்ச்சலை எதிர்பார்த்திருந்தது.
ஆனால், புத்திசாலி வானரமோ எப்போதும்போல் தாவியது. பாறையில் மேல் அல்ல. பாறைமேல் படுத்திருந்த முதலையின் தலையின் மீது. முதலைக்கு, தன் மேல் யாரோ குதித்த உணர்வு எழுந்தது. ஆனால், யார் எப்படி என்று அது சுதாரித்துக்கொள்ளும் முன்பாக, வானரம் விரைந்து அடுத்து ஒரு மின்னல் வேகத் தாண்டலில் கரைக்கு வந்துச் சேர்ந்துவிட்டது.
அதனுடைய தலையில் குதித்து, அடுத்த விநாடி தாவியதும் தான், முதலைக்கு வானரத்தின் தந்திரம் புரிந்தது. வானரம் தன்னை நன்கு ஏமாற்றிவிட்டதை அறிந்தது. ‘என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். இந்த உலகில் புத்தியும் விவேகமும் உள்ளவர்களை எதிரிகளால் வெல்ல இயலாது. அந்தக் குணங்கள் உன்னிடம் இருக்கின்றன’.
இந்த வரிகளையும் மீண்டும் அது உரைத்தது: ‘வானர ராஜனே, உன்னைப்போன்று, சத்தியம், அறிவு, துணிவு, தருமம் தொலைநோக்குப் பார்வை, முயற்சி, சூழலுக்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளுதல் போன்ற குணங்களைக் கொண்டவன் தன்னுடைய எதிரிகளை வெல்வான்’.
இவ்வாறு வானரத்தை மனமார பாராட்டிய முதலை, தன்னுடைய துணை என்ன சொல்லப் போகிறதோ, என்ன சமாதானம் சொல்வது என்று யோசித்தபடி வசிப்பிடத்துக்கு நீந்திச் சென்றது.
கதையைச் சொல்லி முடித்த புத்தர், ‘துறவிகளே, தேவதத்தன் இப்படித்தான் சென்ற பிறவியிலும் நடந்துகொண்டார். இது அவருக்கு முதன் முறையல்ல’ என்றார். அதன் பின்னர் அவர்களுக்குக் கதை தொடர்பான தம்ம நெறிகளையும் விளக்கி உபதேசமும் செய்தார்.
‘அந்தப் பிறவியில், தேவதத்தன், நான் கூறியதுபோல், ஆண் முதலையாகப் பிறந்திருந்தார். சின்கா மானவிகா என்ற அந்தப் பெண்தான் அதனுடைய துணை முதலை. நான், அந்த வானர ராஜனாக அவதரித்திருந்தேன்’ என்று தொடர்புகளையும் விளக்கினார். (சின்கா, புத்தரால் தான் கருவுற்றேன் என்று பொதுவெளியில் பொய்க்குற்றம் சாட்டியவள்).
(தொடரும்)