(தொகுப்பிலிருக்கும் 58வது கதை)
இந்தக் கதையும் தேவதத்தன் புத்தரைக் கொல்லும் ஒரு முயற்சியை ஒட்டிக் கூறப்படும் ஒன்றுதான். அந்த முற்பிறவியைக் கதையை, தன்னைக் கொல்ல முயன்று விவேகத்தால் தான் தப்பித்த கதையைக் கௌதமர் கூறுகிறார். சீடர்கள் அந்தப் பழைய நிகழ்வை அவர்களுக்குக் கூறும்படி கேட்கிறார்கள். வேணுவனத்தில் அவர் தங்கியிருந்தபோது இந்தக் கதையைச் சொல்கிறார்;
கடந்தகாலத்தில் பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். தேவதத்தன் அந்தப் பிறவியில் ஒரு வானரமாகப் பிறந்திருந்தார். இமயமலையின் அடிவாரத்தில் ஒரு வனத்தில் பிறந்த அவர் அங்கிருந்த வானரங்களுக்கு அரசனாக இருந்தார். அந்த வானர அரசனுக்கு ஓர் அச்சம் இருந்தது. தனது வானரக் கூட்டத்தின் ஆண் வானரங்களால் தன்னுடைய தலைமைப் பதவிக்கு ஆபத்து வருமோ என்று சந்தேகம் கொண்டது. அதனால், அந்த வனத்தில் அதனுடைய ஆட்சிப் பகுதியில் பிறந்த ஆண் வானரங்கள் அனைத்துக்கும் தன்னுடைய பற்களால் கடித்து விதை நீக்கம் செய்தது. அதனால், அவை வலிமையற்றவை ஆகிவிடும் என்று நினைத்தது.
இப்போது அந்த அரசனின் மனைவியாக இருந்த வானரம் கர்ப்பம் தரித்திருந்தது. போதிசத்துவர் அந்த வயிற்றில் அவதரித்திருந்தார். அந்தத் தாய் வானரத்துக்கு அரசனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. தன் மகனை, தன்னுடைய சந்ததியைக் காப்பாற்ற நினைத்தது. ஆகவே, ஒரு நாள் அந்த வனத்தை விட்டு, அந்தக் கூட்டத்தை விட்டுச் சொல்லிக் கொள்ளாமல், எவரும் அறியாமல் வேறு இடத்துக்குச் சென்று வாழ்ந்தது.
உரிய காலத்துக்குப் பிறகு போதிசத்துவர் உலகில் பிறந்தார். நன்கு வளர்ந்து, புற விஷயங்களைப் பார்த்து அறிந்து புரிந்துகொள்ளும் வயதை அடைந்தார். அற்புதமான வலிமை இயல்பில் கிடைக்கப்பெற்றிருந்தார். ஆகவே, ஒருநாள் தன்னுடைய அம்மாவிடம் தந்தையைக் குறித்து விசாரித்தார்.
‘அம்மா, என் தந்தை யார்? அவரை நான் பார்க்க முடியவில்லையே’.
‘அன்புக்குரிய மகனே, அவர் மற்றொரு மலையடிவாரத்தில், அங்கு இருக்கும் வனத்தில் வசிக்கிறார். அவர் அந்த வனத்திலிருக்கும் வானரக் கூட்டத்தின் தலைவர்’ என்றது தாய்.
‘சரியம்மா, நாம் ஏன் அவருடன் வசிக்கவில்லை’.
‘மகனே, அவர் தன் பதவிக்கு மற்ற வலிமையுள்ள ஆண் வானரங்களால் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார். அதனால், பிறக்கும் ஆண் வானரங்கள் அனைத்துக்கும் தனது பற்களால் கடித்தே விதை நீக்கம் செய்துவிடுகிறார். உனக்கும் அவர் அவ்வாறு செய்துவிடுவார் அல்லது கொன்றுவிடுவார் என்று பயந்துதான் நான் இங்கு வந்துவிட்டேன். இங்குதான் நீ பிறந்தாய். நீ அந்த வானரக் கூட்டத்தின் தலைவனாக வேண்டியவன். ஆனால், இன்னும் காலம் வரவில்லை. நாம் இப்போது அங்குப் போகவேண்டாம்’.
‘இல்லை, அம்மா, நீ அஞ்ச வேண்டாம். எது நடந்தாலும் பரவாயில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நாம் அங்கு போவோம். என்னை அங்கு அழைத்துச் செல்’ என்று மகன் அம்மாவிடம் வேண்டினான்.
ஆகவே, அம்மா, தன்னுடைய அன்புக்குரிய மகனை, வயது முதிர்ந்த அப்பாவிடம் அழைத்துச் சென்றாள். தன் மனைவியைப் பார்த்ததும், இவன் தன்னுடைய மகன் என்று உறுதியாக வானர ராஜன் அறிந்து கொண்டான். உள்ளுக்குள் மீண்டும் அச்சம் புகுந்து கொண்டது. தன்னைப் பதவி நீக்கம் செய்யத் தனது வாரிசே வந்து விட்டானே என்று நினைத்தான். எனினும் அதை அவன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
‘மகனே, வருக. நன்கு வளர்ந்த நிலையில் உன்னைப் பார்ப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. அருகில் வா’ என்று உற்சாகக் குரலில் கூவியபடி, மகனை இழுத்து அணைத்துக் கொண்டான். அப்படியே, கொறடால் இறுக்கிப் பிடிப்பதுபோல் மகனை நசுக்கிவிட முயன்றான். ஆனால், நல்ல உடல் வலுவுடன் இருந்த போதிசத்துவரை அவ்வாறு இறுக்கி நசுக்கிக் கொல்ல முடியவில்லை. ஆனால், மகனோ, தன் தந்தையைப் பாசத்துடன் கட்டிப் பிடிப்பதுபோல் இறுக்கினான். முதிய வானரத்தின் விலா எலும்புகள் உடைந்து போகும் அளவுக்கு வலிமையான பிடி. அப்பா, ‘ஆகா, என்ன வலிமை உனக்கு’ என்று சிரித்தபடி பிடியிலிருந்து விலகிக் கொண்டார்.
‘என்னுடைய மகன் நன்கு வளர்ந்துவிட்டான். வலிமை மிக்கவனாகவும் இருக்கிறான். இவன் இன்னும் வளர்ந்துவிட்டால், என்னை நிச்சயம் கொன்றுவிடுவான். என் இடத்தை எடுத்துக்கொண்டுவிடுவான்’ என்று அந்த வயதான அரசன் நினைத்துக் கொண்டான். அவனை எப்படியாவது தந்திரம் செய்து கொன்றுவிட வேண்டும். என்ன செய்வது?
அங்கே அருகில் ஏரி ஒன்று இருப்பது அவன் நினைவுக்கு வந்தது. அந்த ஏரியில் ராட்சசன் ஒருவன் வசிக்கிறான். ஏரிக்குள் இறங்கும் எவரையும் அவன் பிடித்துப் புசித்துவிடுவான். ஆகவே, மகனை எப்படியாவது அந்த ஏரிக்குச் சென்று வரும்படிச் செய்துவிட்டால், அவன் திரும்பிவர மாட்டான்.
மகனை அழைத்தான். ‘மகனே எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. நீ இப்போது இங்கு வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இந்த வானரக் கூட்டத்தை வழிநடத்தும் தலைமைப்பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டு நான் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்வேன். இன்று நான் உன்னை அரசனாக்கிவிடுவேன். நீ ஒரு காரியம் மட்டும் செய்ய வேண்டும். நம்மிடம் ஒரு வழக்கம் இருக்கிறது. அருகிலிருக்கும் ஏரியிலிருந்து பூக்களைப் பறித்து எடுத்துவர வேண்டும். இரண்டு விதமான அல்லிப் பூக்கள், மூன்று விதமான நீலத் தாமரைப் பூக்கள், ஐந்துவிதமான வெண்தாமரைகள் அங்கே பூத்திருக்கும். நீ அங்கே சென்று நான் சொல்லும் இந்தப் பூக்களை விரைந்து பறித்துவா’ என்று கூறினான்.
‘அப்படியே பறித்து வருகிறேன் அப்பா’ என்று சொல்லிவிட்டு போதிசத்துவரான அந்த மகன் வானரம் ஏரிக்குப் புறப்பட்டது.
போதிசத்துவர் ஏரிக்குச் சென்று அந்தச் சூழலைக் கவனமாக ஆராய்ந்தார். அவருக்கு ஏனோ பெரும் சந்தேகம். கரையில் காலடித் தடங்களைப் பார்த்தார். அனைத்தும் ஏரியை நோக்கி, நீர்ப் பகுதியை நோக்கித்தான் இறங்கின. ஒன்றுகூடத் திரும்பிக் கரையை நோக்கி வராததுபோல் தோன்றின. ஆகவே ஏரிக்குள் ஏதோ அமானுஷ்யமான ஒன்று, ஒரு ராட்சசன் இருக்கலாம் என்று நினைத்தார்.
‘அவர் கையால் என்னைக் கொல்ல முடியவில்லை; அதனால், இங்கே இந்த ராட்சசன் அவன் கைகளால் என்னைக் கொல்லட்டும் என்று அனுப்பியிருக்கிறார். ஆனால், நான் நீருக்குள் இறங்காமலேயே அவர் கேட்ட பூக்களைப் பறித்துச் செல்வேன். எனினும் அவர் விரும்பியதுபோல் இறந்து போகமாட்டேன்.’
ஆகவே அந்த வானரம் ஏரியின் உலர்ந்த கரைப் பக்கம் சென்றது. சற்றுப் பின்பக்கம் நகர்ந்து, மீண்டும் முன்னால் ஓடி வந்து நீர்ப் பகுதியைப் பெரும் தாவாகத் தாண்டி எதிர்க் கரையில் குதித்தது. அப்படி நீருக்கு மேலாகத் தாவிப் பறக்கும் போதே, வளர்ந்து, நீர் மட்டத்துக்கு மேல் நீட்டிக் கொண்டிருந்த இரண்டு பூக்களைப் பறித்துக் கொண்டது. பின்னர், முன்னம் செய்ததுபோல் அங்கிருந்து இந்தக் கரையின் பக்கமாகப் பெருந் தாவாகத் தாவியது. இந்த முறையும் எந்தப் பூக்கள் வேண்டுமோ அவற்றில் இரண்டு மூன்றைப் பறித்துக் கொண்டது.
இப்படி மேலும் இரண்டு மூன்று முறைகள் தாவித் தாண்டிக் குதித்து, பறிக்க முடிகிற அளவுக்குப் பூக்களைப் பறித்து ஒரு கரையில் சேகரித்துக் கொண்டது. கவனமாக ராட்சசன் வசித்த நீரின் மேல் பகுதியை அது தவிர்த்தது.
நீருக்குள் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராட்சசனுக்கு ஒரே வியப்பு. ‘நீண்ட காலமாக நான் இந்த ஏரியில் வசிக்கிறேன். பல பேரைச் சாப்பிட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட அறிவை, புத்திசாலித்தனத்தை மனிதர்களிடமும் பார்த்ததில்லை. இந்த வானரத்துக்கு இருக்கும் சாமர்த்தியம் வியப்பைத் தருகிறது. தனக்கு வேண்டிய பூக்களை எல்லாம் இந்த வானரம் பறித்துக் கொண்டது. ஆனாலும், என்னுடைய எல்லைக்குள் அதைப்பிடிக்கும் தூரத்துக்குள் வரவே இல்லை’.
ஆகவே, வியப்புடன், நீரைப் பிளந்துகொண்டு மேலே வந்து ஏரியை விட்டு நீங்கி, போதிசத்துவர் நின்ற இடத்துக்கு வந்தான் அந்த ராட்சசன். ‘வானரங்களுக்கு அரசனாகும் தகுதி கொண்டவன் நீ. ஆகவே உன்னை அப்படியே அழைக்கிறேன். வானர ராஜனே… எதிரிகளை வெல்வதற்கு ஒருவனுக்குத் தேவையான குணங்களும் திறன்களும் உன்னிடம் இருக்கின்றன.
‘வானர ராஜனே, உன்னைப்போல்,
சாமர்த்தியம், வீரம், விவேகம் என்ற மூன்றையும் பெற்றவன்
தன் எதிரிகளை வெற்றி கொள்வான்.’
பாராட்டி, புகழ்ந்து முடித்து, போதிசத்துவரைப் பார்த்து ராட்சசன், அந்தப் பூக்களை ஏன் சேகரிக்கிறாய் என்று கேட்டது. அதற்கு அவர், ‘என் தந்தை என்னை வானரக் கூட்டத்தின் தலைவனாக்க விரும்புகிறார். இவற்றைப் பறித்து வரச் சொன்னதால் சேகரித்து எடுத்துச் செல்கிறேன்’ என்றார்.
‘உனக்கு இணையாக எவருமில்லை எனுமளவுக்கு விவேகமும் வீரமும் நிறைந்த நீ இவற்றைக் கைகளில் எடுத்துச் செல்லலாகாது. உனக்காக நான் அந்தப் பூக்களை எடுத்து வருகிறேன்’ என்று சொல்லிய ராட்சசன் அந்தப் பூக்களைத் தன் இரு கைகளிலும் பெருமையுடன் ஏந்திய படி போதிசத்துவர் முன்னால் நடக்க, பின்தொடர்ந்து வந்தான்.
இவர்களை, போதிசத்துவரின் அப்பாவான அந்த வானரம் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டது. தன்னுடைய திட்டம் தோற்றுவிட்டதை அறிந்துகொண்டது. ‘ராட்சசனுக்கு இரையாகிவிடுவான் என்று என் மகனை அங்கு அனுப்பினேன். அவனோ உயிருடன் திரும்பி வருவது மட்டுமின்றி, அந்த ராட்சசனே நான் பறித்துவரச் சொன்ன பூக்களை கைகளில் பணிவுடன் ஏந்தி வருகிறானே! நான் அழிந்தேன்’.
அதிர்ச்சியில் ஆகா நான் வீழ்ந்தேன் என்று கூவிய அந்த வானரத்தின் இதயம் சுக்கு நூறாக வெடித்தது. அந்த இடத்திலேயே இறந்து போனது. வானரக் கூட்டம் மகிழ்ந்தது. ஒன்று கூடிய அவை, போதிசத்துவரைத் தமது புதிய ராஜாவாக்கின.
பாடமும் அதைத்தொடர்ந்து உபதேசமும் முடிந்தது. சென்ற பிறவியிலும் தேவதத்தனின் முயற்சி இவ்வாறு தோற்றுப்போனது என்று கூறிய ததாகதர், ‘வானர அரசனாக தேவதத்தன் பிறந்திருந்தார். நான் அவர் மகனாக அவதரித்திருந்தேன்’ என்று தொடர்புகளையும் விளக்கினார்.
(தொடரும்)